பகிர்வு

 தினம்தோறும் பிச்சையில்
வயிறு கழுவும் வாழ்வு இவளுக்கு.
அடைமழையோ உடல் நோவோ ...
அத்தி பூத்தார்போல் பொங்கித் தின்பதுமுண்டு.

வெஞ்சனத்துக்கு குப்பைக் கீரையும்,
குழம்பு செலவுக்கு முந்தின நாள் வரும்படியும்,
'கோடி' வீட்டம்மாவின் இரக்கத்தில் கிடைத்த
இரண்டு பிடி நொய்யரிசியும்
இருக்கும் தெம்பில் இன்று
அடுப்பெரிக்க சுள்ளி பொறுக்கி
உலை ஏத்திட்டா பானையை...

ஒரு கொதியில் வெந்த     நொய்யரிசிச்  சோற்றை
நசுங்கிய வட்டிலில் பரப்பிவிட்டு
ஆவியடங்கக் காத்திருக்கும் ஆவலாதி வேளையில்

வந்து நின்ற பஸ்சிலிருந்து
"யக்கா... எப்படியிருக்கே..." என்ற கூவலோடு
இறங்கிய தங்கைக்காரி
பக்கத்தூருக் கோயில் வாசலில்
பிழைப்பு பார்க்கறவ...

உலைமூடியில் பகிர்ந்த சோற்றில் துவங்கியது
பயணிகள் நிழற் குடையில் குடி ஏறியவளின்
விருந்தோம்பல்...!
11 கருத்துரைகள்
  1. அன்பு மணக்கிறது..
    ஆவியடங்கக் காத்திருக்கும் ஆவலாதி வேளையில் .. என்ன ஒரு சொற்பிரயோகம்.. கவிதை முழுவதுமே பரிதலும் புரிதலும் பரிமளிக்கிறது..

    ReplyDelete
  2. விலைமதிப்பற்றது வறுமையிலும் பகிர்தல்.
    மேன்மையின் ஈரம் பரவிக்கிடக்கின்றன இடம் பொருள் பாராது மேட்டிலும் பள்ளங்களிலும். அற்புதம் நிலாமகள்.

    ReplyDelete
  3. பகிர்ந்து உண்பதில் உள்ள ஆனந்தம் உங்கள் கவிதையில் அழகாய் வடிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல கவிதை பகிர்ந்த உங்களுக்கும் எங்களது நன்றி சகோ.

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    ஏழ்மையிலும் பங்கிட்டு உண்பது ஏழையின் குணம்!

    ReplyDelete
  5. பகிர்ந்து உண்ணல்.. அருமை அருமை..

    ReplyDelete
  6. கவிதை நன்று.

    ReplyDelete
  7. /உலைமூடியில் பகிர்ந்த சோற்றில் துவங்கியது
    பயணிகள் நிழற் குடையில் குடி ஏறியவளின்
    விருந்தோம்பல்...!/
    ப‌சிய‌றிந்த‌ (அப்)பாவிம‌க்க‌ள்.
    இ(ல)ள‌க்கிய‌ க‌விதை.

    ReplyDelete
  8. அத்திப் பூத்தாற்போல பொங்கி தின்பதுமுண்டூ....கவிதையின் ஆன்மா இந்த வரிகளிலேயே அனைத்தையும் படம்பிடித்துவிடுகிறது. அருமை.

    ReplyDelete
  9. ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் நல்ல குணங்கள் கூடியிருக்கும் !

    ReplyDelete