கவிதையாவது கழுதையாவது

 கலாசாரப் பொருளாதாரச் சீரழிவுகள் சாமான்யன் வாழ்வை அசாதாரணமாக்கி, சிரமத்துக்குள்ளாக்கி விட்ட காலம் இது. சாதியம், வறுமை, பொருளாதாரப் பாகுபாடு போன்றவை ஆவேசம் கிளப்பியபடி... கைக்கும் வாய்க்கும் எட்டாமல் கழுத்தை நெரிக்கும் வாழ்க்கைச் சுமையில் கவிதையாவது கழுதையாவது...
ஆவேசமும், அறச்சீற்றமும், சமூகத்தைப் புரட்டும் முனைப்பும் கண்மணி ராசாவின் கவிதைகளில் விரவிக் கிடப்பது
 நிறைவாய் உள்ளது. அன்பும் பாசமும் பூக்களை வாரியிறைக்க, அவலமும் சோகமும் செவிட்டில் அறைகின்றன.

69-ம் 27-ம் தர

உங்களுக்குக் கசக்கிறது

நாங்களாவது தருகிறோம்

வாருங்கள்

வீதி கூட்ட

மயிர் திருத்த

மலம் சுமக்க

காலணி தைக்க-எங்கள்

காலனியில் வசிக்க!

------------------

சாணிப்பால் ஊற்றி

சவுக்கால் அடித்தான்

என் பூட்டனை உன் பூட்டன்.

காலில் செருப்பணிந்தால்

கட்டி வைத்து உதைத்தான்

என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு என

பகடி செய்து ஏசினான்

என் அப்பனை உன் அப்பன்

‘உங்களுக்கென்னப்பா?

சர்க்காரு வேலையெல்லாம்

உங்க சாதிக்குத்தானே'-என

சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!

ஒன்று செய்

உன்னை அறியாத ஊரில் போய்

உன்னைப் பறையனென்று சொல்!

அப்போது புரியும் என் வலி

-இக்கவிதையைப் படிக்கும் போது, சமத்துவபுரம்/ கழிவுநீர் சுத்தம் செய்ய/ அதே கருப்பன் -என்ற பாலபாரதியின் ஹைக்கூ நினைவில் நிரடுகிறது.

வருணாசிரம காலம் தொட்டு வலைத்தள காலம் வரை குப்பனும் கருப்பனும் மீட்டெடுக்க முடியாத இருள் வாழ்வை, இழி வாழ்வைக் கண்டு வெகுண்டெழுகிறார் கவிஞர்.

வாருங்கள் கவிஞர்களே

வட்டமாய் அமர்ந்து

பூக்களைப் பாடுவோம்

போராளிகளைப் பாடத்தான்

நமக்குத் தெம்பில்லையே

எனும் போது இழையோடும் நையாண்டி கலந்த ஆதங்கம் நம்மை உறுத்துவதாய் உள்ளது. அதிகாரத்துக்கு எதிராக நிற்கத் துணிவற்றோர், கழிவிரக்கமும், சுய மோகமும், களிப்பில் ஆழ்த்தும் வர்ணனைகளும் நிறைந்த ஜால வித்தைகளால் ஆண்டுக்கு மூன்று தொகுப்பு வெளியிட்டு மனிதமற்ற வியாபாரிகளாக... கண்மணி ராசாவோ தனது முதல் தொகுப்பை நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டு இனிய நண்பர் கோபால் பெருந்துணையாக நமக்களித்துள்ளார்.



மின்னுகிற கன்னமில்ல/ மீனப்போல கண்ணுமில்ல/ தேனப்போல சொல்லுமில்ல/ தேவதை போல பொண்ணுமில்ல/ ஆனாலும் ராசாத்தி/ நீதான் என் ரோசாப்பூ... ... எனும் போதும்,

ஒரு சொட்டு சூரியனா/ உன்னோட மூக்குத்தி ... ... எனும் போதும் 1938-ல் ஜெயகேசரியில் வெளிவந்த வைக்கம் முகமது பஷீரின் முதல் சிறுகதை என் தங்கம்(எண்ட சொர்ணம்) வர்ணனை போல் உள்ளது. இன்றைய ‘அங்காடித்தெரு'திரைப்படப் பாடல் ‘அவள் அப்படியொன்றும் அழகில்லை...' வரிகளையும் ஒப்பிடுகிறது மனசு.

‘அன்பே தெய்வம்'ன்னு மிஸ் சொன்னாங்க

அப்புறம் எப்படி மாமா

சாமி கண்ண குத்தும்? என்று

கேள்வி கேட்கும் சிறுமியிடம்

அந்தக் கிழட்டுச் சூரியனைப் பார்த்திருக்கிறேன்...

என்ற வரிகளில் தெறிக்கும் கூர்மையிலும்,

‘சின்ன பாப்பா தொட்டில் கூட

ஸ்ரீநகரா குளிருது

... .... அம்மா மடியில தலை வைச்சாக்கா

அடி வயிறும் குளிருது... .... ....'

என்ற வரிகளின் உவமையழகும் நுட்பமும் ,

‘செம்மண் மேனியில் காதோரம்

சின்னதாய் இருக்கும்

கரிசல் மச்சத்திலா?'

என்ற வரிகளின் நவீன வர்ணனையிலும் கவிஞரின் திறம் வெளிப்படுகிறது.

வாழ்தலின் வலி மிகுதியும் நோகடித்தாலும்

‘எப்படியேனும் வாழ்ந்துவிடு மகனே

ஏனென்றால் வாழ்க்கை அற்புதமானது'

எனத் துளியாய் நம்பிக்கை ஊட்டுகிறார் நமக்கும்.

‘எது வளைந்தாலும்

மனம் நிமிர்ந்தால்

எதிர்கொள் வாழ்க்கை இனிதாகும்'-எனும் வையவன் கவிதை வரிகளும்,

‘விரக்தியான தனிமை

முயற்சிக்கும் சிலந்தி

இன்னுமிருக்கிறது வாழ்க்கை'-எனும் பாலபாரதி கவிதை வரிகளும் நம் எண்ணத்தில் பளிச்சிடுகிறது.

‘அவலம் கண்டு நெஞ்சு பதைக்குது

கவளச் சோறும் விழுங்க மறுக்குது

பூமியெங்கும் சோகம் வெடிக்குது

தீர்வினைத் தேடி கால்கள் நடக்குது

யாரை எதையெனக் கேள்விகள் வேண்டாம்

மானுடம் மீட்கக் கவிபாடு'- என்ற வே. நெடுஞ்செழியன் கவிதைக்கிணங்க கண்மணி ராசாவின் கவிதைத் தொகுப்பு ‘கவிதையாவது கழுதையாவது' பரிபூரணமான ஆவேசமும் சமூக அக்கறையும் ததும்பி நிற்கிறது.

நூற்கட்டமைப்பும், கவிதைகளுக்குத் தக்க புகைப்படங்களின் பின்னணியும் காண்போரைக் கவரும் லாவகம் பெற்றுள்ளது.

வகைப்பாடு : கவிதைத் தொகுப்பு
படைப்பு : ராசை. கண்மணி ராசா
வெளியீடு : ‘களம்'
53.ஏ.கே.டி.ஆர். காய்கனி வளாகம்,
இராசபாளையம்-626117
விலை : ரூ.30/-
4 கருத்துரைகள்
  1. எல்லோருக்கும் தெரிந்தவர்களை விமர்சிப்பது எளிய செயல்.தேடலும் சுய உள்ளுணர்வும் நிறைந்த வாசிப்பே சரியான எழுத்தைத் தேர்வு செய்யவும் நல்ல வழித்துணையாகவும் உதவுகிறது.ராசை.கண்மணி ராசாவின் எழுத்தும் சுயம்புவாகத்தான் இருக்கிறது. நீங்கள் அடையாளம் காட்டிய கவிதைகளும் அதையே சொல்கின்றன. எழுதியவருக்கும்-அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அதுசரி.நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நிறைய புத்தகம் வாங்கினதா நெய்வேலில எல்லாரும் பேசிக்கிட்டிருக்காங்களே அது நிஜமா?

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஜி...! அடுத்த நூல் விமர்சனம் புத்தம் புதியதிலிருந்து ... சரியா...

    ReplyDelete
  3. # வட்டமாய் அமர்ந்து
    பூக்களைப் பாடுவோம்
    போராளிகளைப் பாடத்தான்
    நமக்குத் தெம்பில்லையே #

    வெட்க்கிக் கொள்கிறேன்..

    ஒரு புத்தக வாசிப்பானுபவத்தை நயம் பட சொல்லி இருக்கேங்க..
    ஒரு கவிஞன் (அ) எழுத்தாளன்., வாசகனுக்கு சொல்லும் நீதி (அ) குறிப்புகளுக்கு சமமானதும், நிகரானதுமானது;
    படைப்புகளை அலசுதலும் ஆராய்தலும்.. உங்களோட மதிப்பீடு நல்லா இருக்கு படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது..
    நன்றியும் வணக்கங்களும்..
    நல்ல நட்பை எதிர் பார்கிறேன்..

    sankar.mech@gmail.com

    ReplyDelete
  4. @சிவாஜி சங்கர்...
    வாங்க சிவாஜி... முதல் வருகைக்கும் உளப்பூர்வமான பாராட்டுக்கும் நன்றியும் மகிழ்வும் நண்பா...!

    ReplyDelete