எல்லோருக்கும் உண்டு நல்ல காலம்

பிரெஞ்ச் அரசின் இலக்கியத்துக்கான ‘ஷெவாலியே' விருதை 1998-ம் ஆண்டு பெற்ற சிறந்த மலையாளப் படைப்பாளி எம்.முகுந்தன். இவரது தேசிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தெய்வத்திண்டெ விக்ருதிகள்' நாவலின் தமிழாக்கமே இப்புதினம்.
மேலும் கேரள சாகித்ய அகாடெமி விருதும் (ஈ லோகம் அதிலொரு மனுஷ்யன்) பெற்றவர் இவர். பிரெஞ்ச் காலனியாதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த இவர் பிறந்த மய்யழி(மாஹி) பகுதியில் விடுதலைக்குப் பின்னான அரசியல் சமூகப் பொருளாதாரத் தலைகீழ் மாற்றங்கள் மற்றும் இரு தலைமுறையினரின் வாழ்க்கை முறை, அம்மக்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய கதையிது.இதே மய்யழியை மையமாகக் கொண்டு இவர் எழுதிய ‘மய்யழிப் புழையுடெ தீரங்களில்' ஆங்கிலத்தில் ‘On the Banks of Maiyazhi' என மொழிபெயர்க்கப் பட்டு 1999-ல் கிராஸ்வேர்ட் பரிசு பெற்றதை நாமறிவோம்.

இப் புதினத்தில் 40-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் அவரவர் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாரா மாற்றங்களோடு நுட்பமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. தந்தைவழி தேசப் பற்றை குறுதிக் கொடையாகப் பெற்று மய்யழி மக்களனைவரின் நலனுக்கும் தன்னாலியன்றதை செய்வதை இளமையிலிருந்து இறுதிவரை விடாத குமரன் வைத்தியன் தான் கதை நாயகனாகிறான். அவனோடு ஊடாடும் ஊராரின் மனநிலையிலும் உள்ளுணர்விலும் நல்லவனாகவே நம்பிக்கை அளிப்பவன். அம்மக்களின் மகிழ்வுகள், சலனங்கள், அவலங்கள், துன்ப துயரங்களில் காலமாற்றத்தோடு போரிட அவனும் தயங்குவதில்லை.

தன்னிரு பிள்ளைகளும் கெட்டு சீரழிந்தாலும், நல்லதை நினைக்க நன்மையே கிடைக்கும் என்ற அசையா நம்பிக்கை மேல் புகார்களற்று வாழ முடிகிறது அவனால். தன் கூரிய வாளால் மய்யழி மக்களைச் சிதைத்து ருசிக்கும் வறுமைதான் அவர்களது ஒட்டுமொத்த எதிரி. உழைப்பை நம்பி ஊரைவிட்டுப் போனவர்களால் ஜெயிக்கப் படுகிறது பஞ்சமும் பசியும். முயற்சி, மெய்வருத்தக் கூலி தருகிறது. மய்யழி ஆதித் திய்யனும், மய்யழி மாதாவும் நம்பினோர் நலனுக்கு இறங்கி வரவேயில்லை. பழைய நம்பிக்கைகளின் கட்டுக்கோப்புக் குலைந்து உடைபடுவதும், புதிய நம்பிக்கைகள் முகிழ்க்கத் துடிப்பதுமான ஊசலாட்டம் பல்வேறு பாத்திரங்கள் வாயிலாக அற்புதமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது.

முதல் அத்தியாயத்திலேயே தமிழ், தமிழர் பற்றிய தரக்குறைவான இழிவுபடுத்தும் சொல்லாடல்கள் உமித்தீ போல் நம்மைச் சுடுகிறது. மொழி இனம் சுட்டவேண்டிய அவசியமற்ற காட்சிகளில் படைப்பாளரின் எழுத்தாற்றலுக்கு பங்கமளிப்பது போல் உள்ளது அது.

பாத்திரப் படைப்புகளில் செறிவும், நனவோடை உத்தியிலான கதையோட்டமும் வாசிப்பு தளத்தில் முழுமையான பாராட்டைப் பெறுகிறது. கண்ணெதிரே நிகழ்வது போல் விவரணைகள், வாசித்து பல நாட்களானாலும் மனசை விட்டகலாத அப்பாத்திரங்களுடன் மய்யழியில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வின் உன்னதம் படைப்பாளியின் திறம் உணரச் செய்கிறது ‘முன்னறிவிப்பில்லாமல் நினைத்தபோது வந்து, மனதில் பட்டவர்களை கொண்டு போகும் மரணத்துக்கு என்ன மரியாதை?' கடுங்ஙன் இறப்பு கேட்டுக் குமரன் கலங்க நமக்கும் கசிகிறது.

‘மோகத்துக்கும் ஏமாற்றத்துக்கும் அப்பால், வருத்தத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அப்பால் என்னையும் கொண்டு செல்லுங்கள்' என சசி இறந்து பட்ட தன் அம்மாவிடம் இறைஞ்சும் போது நாமும் உருகி நிற்கிறோம்.

பணம் நிறைந்த பின்னும், தன் பால்யகாலக் குடிசையில் ஒரு இரவேனும் படுத்துறங்க விழையும் மாதவன் மனோநிலை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. இளம் பிராய வாழிடம் எல்லோர் நெஞ்சிலும் பசுமை மாறாமல் உண்டே... மூல ஆசிரியரும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது அவரது மய்யழி பற்றிய இரு புதினங்களின் பதிவில் நாமறிகிறோம்.

இதுவொரு மலையாள மொழி நூல் என்றில்லாமல் சரளமாக தங்குதடையில்லாமல் மொழியாக்கம் செய்துள்ள திரு. தி.சு.சதாசிவம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலின் பெயர்: கடவுளின் குறும்புகள்

மூல மொழி : மலையாளம்
மூல நூலாசிரியர்: எம்.முகுந்தன்
தமிழாக்கம் : தி.சு.சதாசிவம்
வெளியீடு : சாகித்ய அகாதெமி
விலை : ரூ.220/-

('திசை எட்டும்' மொழியாக்க காலாண்டிதழில் பிரசுரமானது)
9 கருத்துரைகள்
  1. நல்லதொரு நூல் அறிமுகம். படிக்கத்தூண்டும் உங்களது நடை....

    பார்ப்போம்...

    நட்புடன்

    வெங்கட்.

    ReplyDelete
  2. படிக்கத் தூண்டும் விதமாக உள்ளது.

    ReplyDelete
  3. @வெங்கட் நாகராஜ்...
    மிக்க மகிழ்ச்சி.
    நன்றி சகோ...!

    ReplyDelete
  4. @கோவை 2 டெல்லி...
    பாராட்டுக்கு நன்றி தோழி!

    ReplyDelete
  5. வாசிப்பு தருகிற அனுபவம்
    அதற்கு ஈடே இல்லை..
    நன்றி.. அறிமுகத்திற்கு.

    ReplyDelete
  6. @ரிஷபன்
    நன்றி சகோ...

    ReplyDelete
  7. நல்ல நூல் அறிமுகம்.

    ReplyDelete
  8. @தியாவின் பேனா ...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே...

    @முனைவர் இரா.குணசீலன்...
    வாங்க ஐயா! வணக்கம்!! வருகைக்கு நன்றி...

    ReplyDelete