தாய்மை நனைந்த தருணங்கள்


பேருந்து வேகத்தில்
தூக்கத்தில் சாமியாடும் தோழனை
ஆதரவாய்த் தோளில் சாய்த்துக்கொள்ளும்
நண்பனின் பரிவில்...

மிதிவண்டி சக்கரத்தில்
முந்தானை மாட்டி
தடுமாறி விழுந்த பெண்ணுக்கு
பாதையோர குடிசைவாசி
மாற்றுத் துணி தந்து
துணிவூட்டி வீடனுப்பும்
பெருந்தன்மையில்...

பிதுங்கும் கூட்டத்தில்
சிணுங்கும் குழந்தையோடு
கால்மாற்றித் தவிக்கும் சபிரயாணிக்கு
எழுந்து இடமளிக்கும்
கிராமத்து ஆசாமிகளின்
இரக்க மனசில்...

தெருமுனையில் கிழிந்த பாயில்
கிடந்துழலும் தொழுநோயாளிக்கு
தன் சோற்றைப் பகிர்தளிக்கும்
சக பிச்சையாளனின் பாசத்தில்...

அம்மாவின் இடத்தை இட்டு நிரப்ப
எல்லோரும் அம்மாவாகின்ற
தாய்மை தெறிக்கும் தருணங்கள் உன்னதம்!
4 கருத்துரைகள்
  1. உண்மைதாங்க....

    ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  2. இம்மாதிரி கவிதை வாசிக்கிற தருணங்களில் கூட..உன்னதம்!

    ReplyDelete
  3. மிக்க நன்றி கமலேஷ்..


    மிக மிக மகிழ்வடைகிறேன் தங்கள் பாராட்டில்.... நன்றி சகோதரர்.

    ReplyDelete