தானம்



குச்சி வீடும் காரை வீடும்
மச்சு வீடும் எதிரொலித்தது
நல்ல காலம் பொறக்குது!

குறி சொன்ன வாயும்
குடுகுடுப்பை ஆட்டிய கையும்
அலுத்துப் போன கோடங்கியொருவன்
தளர்வாய்ச் சாய்ந்தான்
ஊர்ப் பொது மரத்தடியில்...

அன்றைய வரும்படி
அரை வயிறு உணவும்
ஐந்தேகால் ரூபாயும் தான்.
இல்லத்தரசிகளின் பெரிய மனசால்
நிரம்பிவழிந்தது தோல்பை
பழந்துணிகளால்...

போடவும் மூடவும் துணிகளற்று
கந்தல் துணியில் விரைத்து அலறும்
தன் பிள்ளைகள் நினைவோடு
எடுத்து உதறிப் பார்க்கிறான்
ஒவ்வொன்றாக...

சாயம் போன
பொத்தான் அறுந்த
காலர் நைந்த
சுருங்கிக் கிழிந்த
துணிகளில் கண்டேன்
மனிதம் சுருங்கி
மங்கிப் போனதை...!
4 கருத்துரைகள்
  1. //சாயம் போன
    பொத்தான் அறுந்த
    காலர் நைந்த
    சுருங்கிக் கிழிந்த
    துணிகளில் கண்டேன்
    மனிதம் சுருங்கி
    மங்கிப் போனதை...!//

    ஹும் மனிதம் இந்த துளியாவாது இருக்கிறதே..

    நல்லா எழுதியிருக்கீங்க சகோதரி..

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க தம்பி, கையூட்டு கேட்கும் இடங்களில் எல்லாம் விட்டெறிந்து வேலையை முடிக்கும் நாம் எளியோர்க்கு இறங்குவதில் ஏகப்பட்ட கணக்கு பார்ப்பது ஏனோ என்ற ஆதங்கத்தில் எழுதினேன்

    ReplyDelete
  3. குஜராத் பூகம்பம் சமயத்தில் இங்கு அத்தனை பேரும் கொடுத்த துணிகள்..ஹார்லிக்ஸ் போன்ற பாக்கட்டுகள் எல்லாம் கலெக்டர் ஆபீஸ் முன்பு குவிக்கப்பட்டு வீணடிக்கப்பட்டன.. படத்துடன் செய்தி பத்திரிக்கையில். நம்மிடம் மனிதம் இன்னும் சாகவில்லை.. ஆனால் நம்பிக்கைத் துரோகம்தான் சங்கடப்படுத்துகிறது..

    ReplyDelete
  4. விநியோகிக்கும் இடத்திலிருந்த மனிதர்களின் பிழையோ... இதையும் சுருக்கம் எனலாமா...?

    ReplyDelete