பறத்தல்-பறத்தல் நிமித்தம்


எழுந்தவுடன் பெருக்கி
ஈரத்துணியால் தரை துடைத்து
தெருவடைத்துக் கோலமிட்டு
துவக்கி வைத்தாள் அம்மா காலைப் பொழுதை

தேய்த்து தேய்த்து துடைத்த
தன் காலணிகள் பளபளப்பை
தள்ளி நின்று ரசித்திருந்தார்
இராணுவத்திலிருந்து மீண்டிருந்த அப்பா.

காற்றடித்து எண்ணெய் போட்டு
முன்னும் பின்னுமாக மாய்ந்து மாய்ந்து
துடைத்து வைத்த வாகனம்
காத்திருக்கு வெளிக்கிளம்ப
இவ்வீட்டு வாண்டுப் பையனோடு

கல்லூரிப் பேருந்து
தெருமுனை திரும்பும் வரை
கண்ணாடியே கதியாக
நெளிந்து வளைந்து சீவிக் கலைத்து
ஒப்பனைகள் பலசெய்து
கற்பனையில் மிதந்திருப்பான் பெரியவன்

எட்டாச்சு ஒன்பதாச்சு எல்லாரும் போயாச்சு
பத்தோடும் அழுக்கோடும்
அம்மா மல்லுக்கட்டி நிற்க

திறந்தவுடன் பறந்துவிடும்
எத்தனிப்பில்
சிறகுகளைக் கோதிக்கொண்டிருக்கின்றன
கூண்டுக் கதவருகில் குருவிகள்...
1 கருத்துரைகள்
  1. வரவுக்கு வாழ்த்துக்கள்!நல்லதொரு ஆரம்பம்.

    ReplyDelete