ஆடுபுலி ஆட்டம்

மாலை நேரம்.

மருந்துக் கடையொன்றின் 'பத்துக்கு ஐந்து'  விஸ்தீரண உள்ளறை.
அறுபதைத் தாண்டிய பெண்மணியும் நடுத்தர வயதுப் பெண்ணும் கடை வாசலில் பெறப்பட்ட டோக்கன் சீட்டுடன் உள்ளே நுழைகின்றனர்.

மருத்துவர் (பலதுறைப் படிப்பாளி) நிமிர்ந்து 'சொல்லுங்க' என்கிறார்.

"இரண்டு மாசமா அடிக்கடி சளித் தொந்தரவு. ரெண்டு மூணு டாக்டர் கிட்ட காட்டி மருந்து சாப்பிட்டும் விட்டு விட்டு வருது. இப்ப காலையில எழுந்ததும் சில தும்மல்... விடியற நேரம் கொஞ்சம் வறட்டு இருமல்..."

எதிரில் அமர்ந்த பெரியம்மா சொல்ல, 'ம்...ம்...' என்றபடி ஸ்டெத்-தை தன் காதில் மாட்டி சோதிக்கிறார்.

"வேற ஏதாச்சும் தொந்தரவுக்கு மாத்திரை சாப்பிடுறீங்களா?"

"ஆமா. தினம் ஒரு சுகர் மாத்திரை கூட ஒரு பி.காம்ப்ளக்ஸ்..."

"சுகர் எவ்வளவு நாளா இருக்கு?"

"ஒரு இருபது வருஷமா... "

"சமீபமா எவ்வளவு இருக்குன்னு பார்த்தீங்களா?"

"ஒரு பத்து நாள் முன்னே... நூத்தி இருவது தான் இருக்கு."

மின்னலென உதவியாளர் உடனடி பரிசோதிக்கும் கருவியைக் கொண்டுவந்து பெரியம்மாவின் கைவிரலில் ஊசியால் கீ றி , சொட்டும் இரத்தத்தைக் கருவியில் தடவி பட்டன் அமுக்கி மருத்துவரிடம் காட்டுகிறார். கருவியின் திரையில் 141 என வரவும் மருந்துச் சீட்டில் குறித்துக் கொள்கிறார் மருத்துவர்.

"காலை நீட்டுங்க... வீங்கி இருக்கா? மரத்து போறது, எரிச்சல் ஏதாச்சும் இருக்கா ?"

"அதெல்லாம் இல்லே." கால்களை நீட்டி பாதத்தைக் காட்டியபடி பெரியம்மா.

"ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம்..."

"ஒரு பிரச்சினையுமில்ல. இந்த தும்மலும் இருமலும் தான் கொஞ்ச நாளா..."

இரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவியை கையாள்கிறார் மருத்துவர்.

160/100 என சீட்டில் குறித்தபடி, "பிரஷர் கொஞ்சம் இருக்கு. மாத்திரை போடணும். எப்பவாச்சும் மயக்கம், தலைசுத்தல் வருதா?"

"இல்லையே"

" இன்னொரு நாள் இன்னொரு தடவை பார்த்துகிட்டு அப்புறம் மாத்திரை போடத் தொடங்கலாமா...? மத்தபடி ஆக்டிவா தான் இருக்காங்க..." உடன் வந்த பெண்மணி.

"இருவது வருஷமா சுகர் இருக்கறவங்க சுகர் டெஸ்ட் மட்டும் பார்த்துட்டு நல்லா இருக்கோம்னு இருந்துடக் கூடாதும்மா. இதெல்லாமும் அப்பப்ப பார்த்துக்கணும்"

ஒரு துண்டு சீட்டில் 1. E C G ,  2. A B I  என்றெழுதி "எதிர்ல இருக்குற லேப்ல எடுத்துட்டு வாங்க" என்றவர் அடுத்த நோயாளிக்காக மணியடிக்கிறார்.

நெஞ்சு வலியில்ல. மூச்சடைக்கலை. மயக்கம் கூட இல்லை. எதுக்கு ஈ சி ஜி? மிரள்கிறார் பெரியம்மா. அதென்ன ஏ பி ஐ?

பரிசோதிக்கும் பெண்ணிடம் கேட்டுப் பார்க்கிறார்.

"ஈ சி ஜி  நார்மல்.
ஏ பி ஐ ன்னா காலிலேயும் கையிலேயும் இரத்த ஓட்டம் எப்படியிருக்குன்னு பார்க்கறது பெரியம்மா. கொஞ்சம் தான் வித்தியாசம் காட்டுது. டாக்டர் சொல்லுவார் மேற்கொண்டு"

ரூபாய் 450/-ஐக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு, ஏ பி ஐ டெஸ்ட் கவர் மூலையில் ரூ.300/- என்று குறித்து தந்துவிட்டு பரிசோதனைக் கூடப் பெண் அடுத்த சோதனைக்கு நிற்பவரிடம் போகிறார்.

மறுபடி டாக்டர்,

ஒரு ஐந்து நாளைக்கு மருந்து எழுதறேன். சுகர் மாத்திரை வேற எழுதியிருக்கேன். திரும்ப வாங்க.

"அப்ப ... இந்த தும்மல், இருமல்..."

"அலர்ஜிக்கும் ஒரு மாத்திரை எழுதியிருக்கேன்."

மருந்துக் கடைக்காரர் மாத்திரைகளை தந்துவிட்டு 550 தாங்க என்றார்.

"டாக்டர் பீசும் சேர்த்து தானே..."

"ஆமா... டாக்டருக்கு 130, சுகர் டெஸ்ட் 60, பாக்கி மாத்திரை."
வராத மயக்கம் வரும் இனி?!



9 கருத்துரைகள்
  1. ECG+ABI 450 + DOCTOR FEES 130 + SUGAR TEST 60 + TABLETS 360 ஆகமொத்தம் ரெளண்டா 1000 ரூபாய் ஆச்சுன்னு தெரியுது. போக்கு வரத்துச்செலவு, டிபன், காஃபி என மேற்கொண்டு எவ்வளவு ஆகியிருக்குமோ?

    >>>>>

    ReplyDelete
  2. //ஒரு ஐந்து நாளைக்கு மருந்து எழுதறேன். சுகர் மாத்திரை வேற எழுதியிருக்கேன். திரும்ப வாங்க.//

    தொடர்கதையா இருக்கும் போலிருக்குதே !

    //"அப்ப ... இந்த தும்மல், இருமல்..."//

    அதானே, முக்கியமா அதற்குத்தானே இங்கே வந்தார்.

    //"அலர்ஜிக்கும் ஒரு மாத்திரை எழுதியிருக்கேன்."//

    ஆஹா, அந்த ஒரு மாத்திரைக்கும் சேர்த்துத்தான் ரூபாய் 1000.

    >>>>>

    ReplyDelete
  3. //வராத மயக்கம் வரும் இனி?!//

    படிக்கும் நமக்கே மயக்கம் வருவதுபோலத்தான் உள்ளது. நல்ல சுவாரஸ்யமாகவும் இன்றைய யதார்த்தமாகவும் உள்ளது, இந்த ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

    இதைப்படித்ததும் ஏனோ நான் எழுதியதோர் நகைச்சுவைச் சிறுகதை ‘வாய் விட்டுச் சிரித்தால்’ http://gopu1949.blogspot.in/2014/07/vgk-28.html
    என் ஞாபகத்திற்கு வந்தது.

    ReplyDelete
  4. எல்லா இடமும் நிலைமை ஒன்று தான் போலும்! :)
    காலம் மாறிவிட்டது நிலா! பணத்தையும் சுயநலத்தையும் மையமாகக் கொண்ட வாழ்க்கை ஒழுங்குகள்!!

    மாற்றங்கள்.... மாற்றங்கள்.....

    ReplyDelete
  5. ஆக, கேட்ட கேள்விக்கு பதில் இல்லே...

    ReplyDelete
  6. எப்படியோ,ஒரு பதிவுக்கு வழி வகுத்து விட்டார் அந்த மருத்துவர் இல்லையா நிலா...

    ReplyDelete
  7. "வராத மயக்கம் வரும் இனி?!" - ஹா ஹா!! அதற்கல்லவா மருந்து தரவேண்டும்..காலம் வரும்.. பில்லை பார்த்து மயங்காமல் இருக்க ஒரு மாத்திரை கண்டு பிடிக்க படும்.. விரைவில்! :D

    ReplyDelete
  8. அய்யோ எனக்கு உண்மையிலே மயக்கம் வந்தது. அருமை. தொடருங்கள் தொடர்கிறேன். நன்றி. பாலமகிபக்கங்களில் நாடகம் வளர்ந்த கதை

    ReplyDelete
  9. நச்சென இருக்கு தோழர்

    ReplyDelete