ஒரு கப் உற்சாகம்



ஆசிரியர்: ‘மரபின் மைந்தன்' முத்தையா
வெளியீடு: விஜயா பதிப்பகம்
விலை: ரூ. 30/-
பக்கங்கள்: 120

       சின்ன சின்ன வாக்கியங்களில் பெரிய பெரிய செய்திகள்... கையடக்க நூலில் கடலளவு வழிகாட்டல்கள்...
            'நமது நம்பிக்கை' சுய  முன்னேற்ற மாத இதழ்  ஆசிரியரான திரு.மரபின் மைந்தன் அவர்கள் ('ரசனை' இலக்கிய இதழும்) தன்  எழுத்துக்களால் எல்லோருக்கும் ஊக்கம் அளிப்பவர்.  தமிழகம் நன்கறிந்த படைப்பாளரான இவர் உலக நாடுகளை வலம்  வரும் பேச்சாளர். சமயத் தமிழ் , சமகால இலக்கியம் அனைத்திலும் ஆளுமை மிக்க சிந்தனையாளர்  விளம்பரவியல் ஆலோசகர் நிறுவனங்களுக்கு பயிற்சி தரும் வல்லுநர் வெற்றித் தமிழர் பேரவையின் பொதுச்  செயலாளர் ஈஷாவின்  தமிழாக்க நூல்களில் பெரும் பங்கு வகிப்பவர் .(சமீபத்தில் ... 'ஞானத்தின் பிரம்மாண்டம்'!)

இனி 'ஒரு கப் உற்சாகம்'   உங்களுக்கும் ....


நன்றி சொல்லுங்கள்...

        செயல்படத்தூண்டும் சவால்களுக்கு
சாதிக்கத் தூண்டும் பகைவர்களுக்கு
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு

கவனக்குறையை உணர்த்தும் தோல்விகளுக்கு
வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு
பாராட்டும்படி வளரச் செய்த பரிகாசங்களுக்கு

எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு
எப்போதும் வழிகாட்டும் எழுத்துகளுக்கு
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு

நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு
புத்துணர்வு கொடுக்கும் விடியலுக்கு
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு

... அப்படியானால் நீங்கள் ஜெயிப்பீர்கள்!

         உங்கள் மனநிறைவுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் உழைக்கிறீர்களா?
விமர்சனங்களுக்கு அஞ்சாமல் உறுதியாய் இயங்குகிறீர்களா?
சுயமாக நிதானமாக முடிவெடுக்கிறீர்களா?

பதட்டமில்லாமல் செயல்படத் தெரியுமா?
கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றுவீர்களா?
தோல்விகளுக்குப் பின்னும் துடிப்புடன் எழுகிறீர்களா?
உங்களால் முடியுமென்று உறுதியாய் நம்புகிறீர்களா?

... அப்படியானால் நீங்கள் ஜெயிப்பீர்கள்!

நிரந்தரமான மகிழ்ச்சி...

துணிவான முடிவுகளில் இருக்கிறது
பணிவான வார்த்தைகளில் இருக்கிறது
கணிவான அணுகுமுறையில் இருக்கிறது
பரிவான உதவிகளில் இருக்கிறது

கனவுகளை வரையறுப்பதில் இருக்கிறது
இலட்சியத்தை செயல்படுத்துவதில் இருக்கிறது
இழப்புகளை ஈடுகட்டுவதில் இருக்கிறது
கணிசமாக சேமிப்பதில் இருக்கிறது

புரிந்து கொள்ளுங்கள்...

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்

வாழ்வில் எளிமை விரயங்கள் தடுக்கும்
பேச்சில் இனிமை பிரிவுகள் தடுக்கும்
நேரத்தின் அருமை தோல்விகள் தடுக்கும்
வேலையில் திறமை வெற்றியைக் கொடுக்கும்


சோதனைச் சூறாவளியில்...

 அன்புள்ள உறவுகளில் ஆறுதல் தேடுங்கள்
அச்சம்தான் நம் எதிரி- அச்சத்தை உதறுங்கள்
எதிர்ப்பவர் நம் மனிதர்தான் - முடிந்தவரை மோதுங்கள்
எண்ணமே வாழ்வாகும் - நல்லதை எண்ணுங்கள்
நிச்சயம் தீர்வுண்டு - நிதானமாய் தேடுங்கள்

நீங்கள் விரும்பினால்...

பகைவர்களை மிகநல்ல நண்பர்கள் ஆக்கலாம்
பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்
எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்
வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்
மவுனத்தை பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்
வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்

எதிர்ப்புகள் என்பவை...

 எதிர்ப்பதை தவிர எதுவும் செய்யாது
கத்தும், குலைக்கும், கடிக்க வராது
சத்தம் இருக்கும், சாதிக்காது
பயத்தைக் கொடுக்கும், பாதிக்காது
வளர்ச்சிக்கு வரமாய் வாழ்கின்ற சாபம்
வெற்றிக்கு வேண்டிய கட்டாய பாடம்

இன்னும் கொஞ்சம்...

 புன்னகை செய்யுங்கள்; பரிவாய் பேசுங்கள்
திட்டமிடுங்கள்; புதுமைகள் செய்யுங்கள்
விழிப்பாய் இருங்கள்; விட்டுக் கொடுங்கள்
நம்பிக்கை கொடுங்கள்; பெறுங்கள்

நிலையான நிம்மதி...

 வேண்டாத நட்பை விலக்குவதில்
வேண்டாத குணங்களை மாற்றுவதில்
சரியான அளவு உழைப்பதில்
சீரான அளவு உண்பதில்
அமைதி தவழும் இல்லங்களில்
உதவி செய்யும் நேரங்களில்
நேர்மையாய் செயல்படும் பொழுதுகளில்
புரிந்து கொள்ளும் உறவுகளில்
வரவுக்கேற்ற செலவுகளில்

அப்ப நீங்க...?

 இன்று பலர் தங்கள் வலிமைகளை உணர்வார்கள்
இன்று பலர் புதிய முயற்சிகளில் இறங்குவார்கள்
இன்று பலர் சுய விமர்சனத்தில் தெளிவடைவார்கள்
இன்று பலர் யாருக்காவது உதவுவார்கள்
இன்று பலர் தங்கள் இலட்சியங்களைத் தொடுவார்கள்
இன்று பலர் புதிய உற்சாகம் பெறுவார்கள்.

*****இனிய புத்தாண்டு
மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்*******


5 கருத்துரைகள்
  1. //இன்னும் கொஞ்சம்...
    புன்னகை செய்யுங்கள்; பரிவாய் பேசுங்கள்
    திட்டமிடுங்கள்; புதுமைகள் செய்யுங்கள்
    விழிப்பாய் இருங்கள்; விட்டுக் கொடுங்கள்
    நம்பிக்கை கொடுங்கள்; பெறுங்கள்//

    ஒரு கப் உற்சாகம், சூப்பர் ஸ்டராங்காக இருந்தது.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு
    எப்போதும் வழிகாட்டும் எழுத்துகளுக்கு
    எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு


    நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன்..

    ReplyDelete
  3. மிக அருமை நிலா!

    இது ஒரு கப் இந்தியக் காபி மட்டுமல்ல; புது வருஷப் பிரசாதமும் தான்.

    அருமை; மிக அருமை!

    என்னருமைத் தோழிக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ’ஒரு கப் உற்சாகம்’, உண்மையில் எனக்கு உற்சாகமளித்தது.

    மீண்டும் பருக வருவேன்.

    நன்றி.

    ReplyDelete
  5. முன்னேற்ற‌த்திற்கான‌ "பாதை/வ‌ழி" யைச் சுற்றி வ‌ளைக்காம‌ல், குழ‌ப்பாம‌ல், தெளிவாய், ப‌ட‌ம் போட்டு காட்டிய‌து போல் விள‌க்கி இருக்கிற‌ர். இவர‌து வார்த்தை வ‌ழியே, பாதை தேடுப‌வ‌ர் ச‌ரியான இல‌க்கை அடைவ‌ர் என்ப‌து என் ந‌ம்பிக்கை. நல்ல‌ விச‌ய‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொண்ட‌த‌ற்கு ந‌ன்றி.

    ReplyDelete