‘தேன்' இருக்க பயமேன்?!


         இயற்கையின் அற்புதப் படைப்பான மணம் வீசும் மலர்களிலிருந்து பெறப்படும் மகத்துவமான ஒன்று தேன். ரிக் வேதத்தில் கூட தேனின் சிறப்பு வெகுவாக சொல்லப்பட்டிருக்கிறதாம். வேதகாலத்து மகரிஷிகளின் முக்கிய பானமாக விளங்கியதும் தேன் தானாம்.
            தேனீக்கள் தம் முகத்தில் நீண்டிருக்கும் குழல்போன்ற அமைப்பை மலரில் நுழைத்து உறிஞ்சிய தேனுடன் தன் மார்பில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீரையும் சேர்த்து பக்குவப்படுத்தி தம் வயிற்றுப் பகுதியிலுள்ள பை போன்ற அமைப்பில் நிரப்பிக் கொள்கின்றன. தம் கூட்டுக்குத் திரும்பும் தேனீக்கள் சேகரித்த தேனை தம் சிறகுகளை வேகமாக அடித்து விசிறி தேனடையின் ஒவ்வொரு அறையிலும் பாதுகாக்கின்றன.
             தேனீக்கள் அடிக்கடி இடம் விட்டு இடம் மாறும் தன்மையற்றவை எனக் கண்டறிந்த மனிதர்கள் செயற்கைக் கூடுகள் வைத்து தேனீக்களை வளர்த்து பெருமளவு தேனை சேகரித்து உபயோகிக்கக் கற்றனர். கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கக் கண்டறியும் முன்பே தேனின் பயனை அறிந்து உபயோகித்துள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாம்.
            உலகிலேயே அமெரிக்காவில்தான் தேன் உற்பத்தி அதிகம். அடுத்து ஆஸ்த்ரேலியா, கனடா, ஸ்பெயின், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளைக் கூறலாம். இலங்கை மற்றும் இந்தியாவின் பல இடங்களிலும் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.
            இப்படியான தேன் சேகரிப்பவை மலைத் தேனீ, கொம்புத் தேனீ, அடுக்குத் தேனீ என மூவகையாக உள்ளன.
            
        உருவத்தில் பெரிய மலைத்தேனீ மலைகளிலும் செங்குத்தான பாறைகளிலும் தேன்கூடுகளைக் கட்டி அதிகளவு தேன் சேகரிக்கும். இவை கொடூரமானவை. எனவே பழக்கப்பட்டவர்கள் மட்டுமே பக்குவமாக இத்தேனடைகளில் தேன் எடுப்பர்.
          
         கொம்புத்தேனீக்கள் சிறிய கூடுகளையே கட்டும். மரக்கிளைகள், புதர்களில் மட்டுமே கட்டுமிவை விஷத்தன்மையற்றவை. இத்தேனடைகளிலிருந்து குறைந்த அளவே தேன் கிடைக்கும்.
            
         மரப்பொந்துகளிலும் பூமியிலுள்ள வளை போன்ற இடங்களிலும் அடுக்கடுக்காக அடைகளை அமைக்கும் அடுக்குத் தேனீக்களும் மனிதர்களுக்கு கெடுதல் செய்வதில்லை.
          
         மண் பாத்திரம், கண்ணாடிப் பாத்திரம், பீங்கான் பாத்திரம் ஆகியவற்றில் தேனை சேகரித்து பாதுகாத்து உபயோகிக்கலாம்.
            உடலுக்குப் புது உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கும் தேனை ஆரோக்கியமான சமயங்களிலும் குழந்தை முதல் முதியவர் வரை அருந்தலாம். ஒருசிலருக்கு மட்டும் தேன் ஒத்துக் கொள்ளாது. சருமத்தில் நமைச்சலை ஏற்படுத்தி கட்டிகளை உண்டாக்கும். வேறு சிலருக்கு வாந்தியும் வயிற்றுப் போக்கும், சிலருக்கு மூச்சுத் திணறலும் கூட ஏற்படலாம்.
          
         கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத் தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழுவகைத் தேன் பற்றிய குறிப்புகள் பதார்த்த குண விளக்கம் எனும் நூலில் காணப்படுகிறது.
          
         திரிதோஷங்களால் ஏற்படும் நோய்களையும் மாந்தம் மற்றும் பசியின்மையையும் நீக்க வல்லது கொம்புத்தேன்.
           நுரையீரல் தொடர்பான சளி, காசம், காய்ச்சல், உடல்தடிப்பு, அக்கிப்புண், விக்கல் போன்ற நோய்களை நீக்க வல்லது மலைத்தேன். பசி விருத்தியாகவும், குரல் வளத்தையும் அளிக்க வல்லது இது.
           உடலுக்கு உஷ்ணமூட்டி, வாந்தி, அஜீரணம், விக்கல், பசியின்மை, இருமல், சளி, காசம் போன்ற நோய்களை நீக்கக் கூடியது மரப்பொந்துத் தேன்.
 சரும நோய்களை நீக்கவும், ரணம், கரப்பான், புழுவெட்டு போன்றவற்றை ஆற்றவும் சளியை அறுத்து காச நோய்க்கு மருந்தாகவும் மனைத்தேன் பயன்படுகிறது.
           கண் தொடர்பான நோய்களைப் போக்கவும், சளித்தொல்லையை நீக்கவும், இருமல், அஜீரணம், வாந்தி போன்றவற்றையும் கட்டுப்படுத்த வல்லது புற்றுத்தேன்.
         
         புதிய தேன் சக்தி மிக்கது. உடலுக்கு வெப்பத்தையும், சக்தியையும் தரவல்லது. இரத்தத்தைச் சுத்திகரிக்க வல்லது. பசியின்மையைப் போக்கும். கபத்தை அறுத்தெடுக்கும், மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றிலுள்ள அசுத்தப் பூச்சிகளை வெளியேற்றும். ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கும். பஸ்பம், செந்தூரம், மாத்திரை, பானங்கள் போன்ற பல மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், அனுபானமாகவும் பயன்படுகிறது.
             நீண்ட நாட்களானாலும், தேனை சீரான முறையில் வைத்திருக்காவிட்டாலும் அது புளித்துப் போய் பழைய தேனாகும்.இது வாதம் மற்றும் மூல சம்பந்த நோய்களைத் தோற்றுவிக்கும். இதனை உபயோகித்தால் அஜீரணம், வாந்தி, வயிற்றில் எரிச்சல் ஆகியன ஏற்படும்.

தேனில் அடங்கியுள்ள சத்துகள்:             அயோடின், கால்சியம், கந்தகம், சோடியம், மக்னீஷியம், குளோரின், பொட்டாசியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, உப்புச் சத்து, குளூக்கோஸ், லெவுலோஸ் (Levlose) லாக்டிக் ஆசிட், டார்டாரிக் ஆசிட், சிட்ரிக் ஆசிட், ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் உயிர்ச்சத்துக்களான பி-2, பி-6,சி, மற்றும் கே போன்றவை உள்ளன.

சுத்தமான தேனை அறிய:            தேன் சுத்தமானது தானா என்றறிய மை ஒற்றும் பேப்பர் (Blating paper) மீது ஒரு சொட்டு விட்டால் பேப்பரில் ஊறாது முத்துப் போல் நிற்க நல்ல தேன் என அறியலாம். வெல்லப்பாகு காய்ச்சி கலப்படம் செய்யப்பட்டதாயின் இச்சோதனையில் தெரிந்துவிடும்.
             தேனின் மருத்துவ குணங்களை மற்றொரு பதிவில் காண்போம்...

 
11 கருத்துரைகள்
  1. தேன் பற்றி அருமையான தித்திக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தேனின் மருத்துவ குணம் ஒன்று... இரவில் சாப்பிட்டால் மருத்துவ குணம் வேறு என்று சொல்கிறார்களே... சரியா...? உண்மையான உண்மை என்ன...?

    ReplyDelete
  3. படித்தென்!

    ரசித்தேன் !!

    மலைத்தேன் !!!

    ReplyDelete
  4. தேன் பற்றீய அருமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. சுத்தமான தேனைக் கண்டறியும் வழியைப் பகிர்ந்தமைக்கு நன்றி நிலாமகள். தேனில் இத்தனை வகைகள் உண்டு என்பதை இப்போதுதான் அறிகிறேன். தொடரும் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. தேன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

    ReplyDelete
  7. தித்திக்கும் தேன் பதிவு! நெய்வேலியில் இருக்கும்போது எங்கள் வீட்டு புளிய மரத்தில் புளி சீசனில் நிச்சயம் ஒரு தேன் கூடு இருக்கும்! அந்தக் கிளையை விட்டு மற்றவைக்கு மட்டுமே ஏறி புளி உலுக்குவேன்.... நினைவுகளைக் கிளறி விட்டது உங்கள் பகிர்வு!

    ReplyDelete
  8. பார்த்தேன்,
    படித்தேன்,
    ரஸித்தேன்,
    மகிழ்ந்தேன்,
    மலைத்தேன் ...

    தித்திக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. தேனாய் இனிக்குது நிலா!

    //மகரிஷிகளின் முக்கிய பானமாக விளங்கியதும் தேன் தானாம். //
    தேன் பானமில்லை. வாய்நீறைய தேன் ஊற்றி விழுங்குதல் கூடாது. 'chok'ஆயிடும்.

    தேனை நுனி நாக்கால் நக்கித்தான் உட்கொள்ளணும்னு எங்க அம்மா சொல்வாங்க..

    இப்போ மனசுல 'தேன்'.. வர்ற பாட்டா ஓடுது.

    தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு....

    தேன் சிந்துதே வானம்.

    தேனாற்றங் கரையினிலே..

    பார்த்தேன் சிரித்தேன்.


    ReplyDelete
  10. செல் போன் கோப‌ர‌ங்க‌ளின் க‌திர் வீச்சின் வீரிய‌ம் / குழ‌ப்ப‌த்தின் கார‌ண‌மாய், தேனீக்க‌ள் வ‌ழித்த‌ட‌ம் தொலைத்து, ஆயிர‌ம‌யிர‌மாய் மாய்ந்து கொண்டிருப்ப‌தாய் செய்திக‌ளில் ப‌டித்'தேன்'. அவைக‌ளை இழ‌ப்ப‌தால், இய‌ற்கைவிதிக‌ளின் ப‌டி பூக்க‌ள் சூழ் கொள்ளாது, ம‌ர‌ம் செடிக‌ள் புதிதாய் தோன்றிப் ப‌ர‌வாம‌ல் ம‌றைந்து அழியும் அபாய‌ம் தொட‌ங்கும் என எச்சரிக்கிற‌து அந்த‌ச் செய்தி. இப்ப‌டிப்ப‌ட்ட செல் போன் அவ‌சிய‌மா? ப‌ல்லுயிர்க‌ளின், இய‌ற்கையின், பிற‌ உயிர்க‌ளின் வாழ்வாதார‌த்தை விட‌, இந்த‌ தொட‌ர்புக் க‌ருவி உய‌ர்வான‌தா? விழிப்போம், தேனை எல்லா ச‌ந்த‌தியும் சுவைக்க‌ உறுதி கொள்வோம்.

    ReplyDelete
  11. அனுபவஸ்தன் சொல்கிறேன்.
    அடல்ட்ஸ் ஒன்லி ஜோக் இல்லை.

    தேனுக்கு பல வித குணங்கள் உண்டு.

    பாலுடன் தேன். உடல் இளைக்கும் காலையில்
    பாகுடன் தேன். உடல் பெருக்கும் சாப்பிட்டபின்
    பழத்துடன் தேன். சீரணி சக்தி மிகும். இரவில்
    பொறியுடன் தேன் ( அரிசிப்பொரி) பசி குறையும்
    மிளகுடன் தேன்.. கபம் குறையும்.. இருமல் குறையும். வெறும் வயிற்றில்
    வசம்புடன் தேன் தூக்கம் வரும்.. இரவில் தூங்கப்போகுமுன்... மனைவிக்கும் கொஞ்சம் தரவும்.
    ( தூக்க மாத்திரை ஏதேனும் சாப்பிட்டால் இதை சாப்பிடக்கூடாது )

    எலுமிச்சையுடன் தேன். பித்த நீர் கட்டுப்படுத்தும். வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும்
    பாதாம்பருப்புடன் தேன். ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட். 50 வயதுக்கு மேல் ... மற்றவர்களுக்கு அனாவசிய தொந்தரவு

    பேரிச்சை, முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஒன்று நன்றாக அரைத்து வெண்னை 10 எம்.எல் கலந்து தேனுடன்
    தினம் சாப்பிட, ......
    .....ஒரு பத்து நாள் தொடர்ந்து... முதல் வாரம் ஒரு ஸ்பூன் இரண்டாம் வாரம் 2 ஸ்பூன்
    உடம்பு சும்மா கிண்ணுன்னு ஏறுது பாருங்க....

    அம்புடுதேன்.

    அம்புட்டும் லைஃப்லே தேன் தாங்க...

    ஆனா ஒண்ணு, தேன் சுத்தமா அன் அடல்டரேடட் ஆ இருக்கணும்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete