மரங்களின் மக(ரு)த்துவம் வில்வம்- பகுதி:2


      நம் இந்திய ஆன்மீக வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் நம் வாழ்வியல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருப்பது கண்கூடு. அந்த வகையில் சிவ பெருமானின் அர்ச்சனைக்கு உகந்ததொரு பத்திரம் வில்வம். அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த வில்வ இலைகளை சில காலங்களில் பறிக்கக் கூடாது என்கின்றனர் ஆன்றோர். அக்காலங்களாவன:
திங்கட்கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, அம்மாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு ஆகிய காலங்கள். இக்காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் வில்வம் எடுத்து வைத்துக் கொள்ளலாமாம். பயபக்தியுடன்

படத்திற்கு நன்றி : திருமதி. சாரதா சுப்பிரமணியம்

       இந்த வில்வதள்ம் 14 இலைகளைக் கொண்டது,ஒரு ஆதீனத்தின் தோட்ட்த்தில் எடுத்தது

நன்றி: எழுத்தாளர்  பவள சங்கரி.
                http://www.vallamai.com/common/crop-bit/16864/



கண் நோய்க்கு மற்றுமொரு பக்குவம்:

      வில்வப் பழச் சதையை சுத்தப்படுத்தி 500 கிராம் அளவுக்கு ஒரு பாத்திரத்திலிட்டு, இரண்டு லிட்டர் நீர்விட்டு அடுப்பிலேற்றி கொதிக்க விடவும்.  நீர் கால் லிட்டராக சுண்டக் காய்ந்ததும் சதையைப் பிழிந்தெடுத்து கஷாயத்தை வடிகட்டிக் கொள்க. இத்துடன் 250 கிராம் சர்க்கரை சேர்த்து சர்பத் பதமாக காய்ச்சி பத்திரப்படுத்துக. வேளைக்கு இரு தேக்கரண்டி வீதம் பசும்பாலில் கலந்து மூன்று நாட்கள் குடிக்க எல்லாவிதமான கண் நோய்களும் நீங்கும்.

கண் நோய் : லேகியம்

வில்வப்பழச் சதை - 500 கிராம்
 சர்க்கரை           - 250 கிராம்
 தேன்    - 50 கிராம்
 ஏலம்    - 30 கிராம்
 சுக்கு    - 30 கிராம்
 பசும்பால்    - 250 மிலி
 பசுநெய்   - 150 மிலி

       வில்வப் பழச் சதையைச் சுத்தப்படுத்தி பசும்பால் சேர்த்து நன்கு வேக விடவும். வெண்ணெய் பதத்துக்கு வந்ததும் அத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறவும். ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு பொடித்து சேர்த்துக் கொள்க. பசுநெய்யை கொஞ்சங்கொஞ்சமாய் சேர்த்துக் கிளறி இறக்கி சற்று ஆறியதும் தேன் சேர்த்துக் கிளறி தக்க பாத்திரத்தில் சேமிக்கவும்.
 
       இந்த லேகியத்தை நெல்லிக்காயளவு எடுத்து ஒருநாளைக்கு இரு வேளை என மூன்று நாட்கள் உட்கொள்ள எல்லாவிதமான கண் நோய்களும் தீரும்.

தலை தொடர்பான பிணிகளுக்கு:

       வில்வப்பழச் சதையை சேகரித்து சுத்தப்படுத்தி நன்கு உலர்த்த வேண்டும். உலர்ந்த சதையை 500 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் நீர் விட்டு அடுப்பிலேற்றி காய்ச்ச வேண்டும். நீர் கால் லிட்டராக சுண்டக் காய்ந்ததும், சதையைக் கசக்கிப் பிழிந்து சாற்றை வடிகட்டவும்.
 
      இச்சாற்றுடன் கோஷ்டம், அதிமதுரம், சடாமாஞ்சில், ரோஜா மொக்கு, கிளியூரல் பட்டை ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து பசும்பாலில் அரைத்துக் கலக்கவேண்டும். இவற்றை நன்கு கிளறி எண்ணெய்ப் பதம் ஆனதும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
 
       இத் தைலத்தை தலைக்குத் தடவு சீவவும், நீராடவும் பயன்படுத்தினால் தலை தொடர்பான பிணிகளும் கண் நோய்களும் அகலும்.

நரம்புத் தளர்ச்சி:

       வில்வ மரப் பிசினை ஏராளமாக சேகரித்து நிழலில் நன்கு உலர்த்தவும். இடித்து தூளாக்கி, வஸ்திரகாயம் செய்து சலித்துக் கொள்க. இத்தூளில் நான்கு சிட்டிகை எடுத்து பசுவெண்ணெயுடன் சேர்த்து உட்க்கொள்க. காலை மாலை என இரு வேளையாக பத்து நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால், நரம்பு மண்டலம் வலுவடையும்.

காய்ச்சல் நீங்க:

       வில்வ வேரை எடுத்து ஒன்றிரண்டாகத் தட்டி ஒரு செப்புப் பாத்திரத்திலிட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற விடவும். அதிகாலை அந்நீரைப் பருகினால் எல்லாவிதக் காய்ச்சலும் அகலும். அதிதாகம் மட்டுப்படும்.
 வில்வ மலர், கடுகுரோகிணி, சுக்கு, வசம்பு, கண்டங்கத்தரி வேர், ஆடாதோடா இலை ஆகியவற்றை வகைக்கு முப்பது கிராம் எடுத்து நன்றாக இடித்து அரைலிட்டர் நீரூற்றி ஒரு பாத்திரத்திலிட்டு நீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்க விடவும். வடிகட்டி காலையிலும் மாலையிலும் அருந்த காய்ச்சல், உடல்வலி குணமாகும்.

        வில்வ மலரையும், துளசியிலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அத்துடன் சிறிது தேனை சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அருந்தினால் மலேரியா காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சலும் மட்டுப்படும்.

       வில்வ மலரையும் வேப்பம்பூவையும் கைப்பிடியளவு எடுத்து நெய்யில் வதக்கி அம்மியில் தேன்விட்டு அரைத்து கொட்டைப்பாக்களவிற்கு ஒரு வேளைக்கு ஒரு உருண்டையாக சாப்பிட மூன்று நாட்களில் உள்காய்ச்சல் குணமாகும்.

பசி மந்தம் நீங்க:

        வில்வ வேரை வெயிலில் காயவைத்து இடித்து சலித்து நான்கு சிட்டிகை தூளை பசுநெய்யில் குழப்பி உட்கொண்டால் பசிமந்தம் அகலும்.
 வில்வ மலரை உலர்த்திப் பொடித்து, நாள்தோறும் சிறிதளவு சாப்பிட பசிமந்தம் நீங்கும்.
கண்வலி, கண் சிவப்பு, கண் அரிப்பு:
 வில்வத் தளிரை எடுத்து பூவுடன் வதக்கி சூட்டுடன் கண் இமைகளில் ஒத்தடம் கொடுக்க குணமாகும்.
வில்வப்பூவின் வேறு பலன்கள்:
 வடை மாவில் இப்பூவை நறுக்கிப் போட்டு கலந்து வடை செய்து சாப்பிடலாம். குடல் வாயு குணமாகும்.
 வில்வப் பூ கஷாயம் பசிமந்தத்தைக் கண்டிக்கும்.

ஆஸ்துமா:

       வில்வத் தளிருடன் சிறிது துளசி, சில மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நசித்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

உஷ்ண பேதி:

      வில்வ வேர்ப்பொடி நான்கு சிட்டிகையெடுத்து தேனில் கலந்து உட்கொண்டால் உஷ்ணபேதி நிற்கும்.
உடல் அழகு பெற:

       வில்வ வேர் தூளை நான்கு சிட்டிகையெடுத்து பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளையென தொடர்ந்து பதினெட்டு நாட்கள் உட்கொள்ள உடலழகும் சருமப் பளபளப்பும் மிகும்.

தசை நோய்கள், உடல் வலி:

வில்வ வேர்         500 கிராம்
 விலாமிச்சை வேர்    200 கிராம்
 வெட்டி வேர்   200 கிராம்
 கோஷ்டம்     20 கிராம்
 அதிமதுரம்     10 கிராம்
 கிளியூரம் பட்டை          10 கிராம்
 ரோஜா மொக்கு            10 கிராம்
 பசும்பால்    300 மிலி
 நல்லெண்ணெய்   500 மிலி.

      வில்வ வேர், விளாமிச்சை வேர், வெட்டி வேர் ஆகியவற்றை நன்கு தட்டிப் போட்டு நான்கு லிட்டர் நீருடன் கலந்து அடுப்பிலேற்றிக் காய்ச்சவும்.
 
      150 மிலியாக நீர் வற்றியதும் இறக்கி, வேர்களைக் கசக்கிப் பிழிந்து சக்கையை எடுத்து விட்டு வடிகட்டவும்.
        இத்துடன் எண்ணெயைக் கலந்து கொள்க.
         மற்ற சரக்குகளை இடித்துப் பொடித்து பசும்பால் விட்டு அரைத்து எண்ணெயுடன் கலக்கவும்.
         இதை அடுப்பிலேற்றி மெழுகுப்பதம் வரும்வரைக் காய்ச்சி வடிகட்டிக் கொள்க.
       இதை தினம் தலைக்கு தடவவும், வாராவாரம் தலைக்கு தேய்த்து சிறிது ஊறி குளிக்கவும் தசைநோய்கள், உடல்வலி, நரம்பு வலி போன்றவை குணமாகும்.


8 கருத்துரைகள்
  1. தசைநோய்கள், உடல்வலி, நரம்பு வலி போன்றவை குணமாகும்.அருமையான பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. இத்தனை மருத்துவ குணங்கள் மிக்கது
    வில்வம் என்பதை தங்கள் பதிவின் மூலமாக
    தெளிவாக அறிந்து கொண்டேன்
    அரிய தகவல்களை அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிக அதிக மருத்துவ குணங்கள் கொண்ட வில்வத்தின் சிறப்பு பற்றி எழுதிய உங்களுக்கு ஒரு பூங்கொத்து. 14 இலைகள் கொண்ட வில்வதளம் - முதன் முதலில் பார்க்கிறேன்....

    ReplyDelete
  4. அழகான படங்களுடன், வில்வத்தின் பயனை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. தோழி, நம்முடய பாரம்பரியத்தில் யோகா, தியானம், ஆயுள்வேத மருத்துவம் மற்றும் ஆத்மீகம் என அருமையான பொக்கிஷங்கள் பல இருக்கின்றன. இன்றய வைத்திய முறைகள் எல்லாம் அவற்றிற்கு அருகிலும் நெருங்க முடியாது.இயற்கையான எந்த ஒரு பக்கவிளைவுகளும் தராத உடலுக்கும் மனதுக்கும் ஷாந்தி தரத்தக்க அற்புதங்கள் அதில் நிறைந்திருக்கின்றன.

    அவற்றின் சில இழைகளை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. இந்த வில்வதள்ம் 14 இலைகளைக் கொண்டது,ஒரு ஆதீனத்தின் தோட்ட்த்தில் எடுத்தது

    மகா வில்வம் என்று சொல்வார்கள்...

    ReplyDelete
  7. மரங்களின் மக(ரு)த்துவம் வில்வம்- பகுதி:2
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி:
    பறத்தல்- பறத்தல் நிமித்தம்
    எனக்கு குணமானது வில்வமும் ஒரு காரணம்.

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தகவல்கள் .நன்றி.

    ReplyDelete