நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி-5

அவர்கள்...
உங்கள் குழந்தைகள்
ஆனால்...
உங்கள் உடமைகளல்ல.
உங்கள் வாழ்க்கை வேட்கையின் துளிர்கள்
உங்கள் மூலமாக அவர்கள் ஜனித்திருக்கலாம்
உங்களுடன் வாழலாம்
ஆனாலும் உங்கள் உடமைகளல்ல.
நீங்கள் அவர்களுக்கு அன்பைத் தரலாம்
அவர்களுக்கென தனித்தனி சிந்தனையுண்டு
அவர்கள் உடலை நீங்கள் தீண்டலாம்
அவர்களின் ஆன்மாவையல்ல
உங்களைப் போல் அவர்களை மாற்ற முடியாது
அவர்களைப் போல் நீங்கள் வாழலாம்-கனவில்!
அவர்கள் எதிர்காலத்தின் வாரிசுகள்
உங்கள் வில்லிலிருந்து புறப்படும் அம்பு அவர்கள்
மகிழ்ச்சியென்னும் இலக்கை நோக்கி
அவர்களைச் செலுத்துங்கள்
அதை நீங்கள் செய்ய முடியும்!
அதை மட்டுமே செய்ய வேண்டும்!!
                                                          
                                                             -கலீல் கிப்ரான்.


ஐந்திலேயே வளைப்போம்:

       காலங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதைகள் மாறுவதில்லை. அவர்கள் சொல்லிக் கொடுத்த பண்பு நலன்கள், நாம் எப்படி வளர வேண்டும்; எதைக் கற்று உணர வேண்டும்; நாம் நல்ல மனிதர்களாக வாழ்வது எப்படி என்பதற்கு வழிகற்களாக அமைந்துள்ளன.

சந்தோஷம்:

      குழந்தை சந்தோஷமாக இருக்கக் கற்றுக் கொடுங்கள். சந்தோஷமான அனுபவங்கள் தாராள மனமுடைய பிரசித்தி பெற்ற மனிதர்களை உருவாக்குகிறது.

அன்பு:

       நாம் நேசிக்கப்படுவதும், பிறரை நாம் நேசிப்பதும் முக்கியம். ஒப்புக்கொள்ளுதல், பாராட்டுதல், பிரியம் இவை மூன்றும் அன்பின் அடையாளங்கள். அவர்கள் மீது நாம் செலுத்தும் அன்பிற்கு நிபந்தனை இருக்கக் கூடாது.

      குழந்தையிடம் குறைபாடுகள் இருப்பினும், நம் அன்பும், அங்கீகாரமும் அவர்களுக்கு உண்டு என்பதை உணர்த்துங்கள். அவர்கள் மேல் செலுத்தும் அன்பை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிறுத்தாதீர்கள். பாசமான சிறு அணைப்பு, ஒரு முத்தம் இவைகளை அவ்வப்போது கொடுக்கலாம். பெற்றோர்களிடமிருந்து பாச உணர்வையும், தொடுவுணர்தலையும் பெற்ற குழந்தைகள் பிறருக்கு அன்பைக் கொடுக்கவும், பிறரிடமிருந்து அன்பைப் பெற்றுக் கொள்ளவும் தவறுவதில்லை.

       அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது குடும்ப வாழ்வில் அன்பிற்கு ஒரு வலிமையான உதாரணம்.

நேர்மை:
       பிறர் நம்மை நம்பும்படியாக நாம் நடந்து கொள்வது. நேர்மை, பொய் சொல்லாமை, வாக்கு தவறாமை, சொன்னதை செய்து முடித்தல், செய்த தவற்றை ஒத்துக் கொள்ளும் குணம் இவற்றை நேர்மை எனக் கொள்ளலாம்.
 நாம் வாழ்ந்து காட்டுவதன் மூலம் நேர்மையை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

தைரியம்:
        நேர்மையாக வாழும் குழந்தைக்கு தைரியம் அவசியம் தேவைப்படுகிறது.  வாழ்க்கையின் தோல்விகளையும் துயரங்களையும் தாங்கிக் கொள்ள தைரியம் உறுதுணையாக இருக்கிறது.

அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!

       பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுகள் நமக்கு இயற்கையானதே. பயம் நமக்கு பாதுகாப்பு தருவதாக இருக்க வேண்டும்(அஞ்சுவது அஞ்சாமை பேதைமை).

        குழந்தைகளின் மூன்று வயது வரை பய உணர்வு மனதில் பதிவதில்லை. ஐந்து வயதில் பதியும் பயங்களை பின்னர் எவ்வளவு முயற்சித்தாலும் நீக்க முடிவதில்லை. தினம் பயத்தோடு வாழ்வது குழந்தையின் தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் தகர்த்து எறிந்து விடுகிறது. புது சூழ்நிலைகளிலும், பிறருடன் பழகுவதிலும் பாதிப்பை உருவாக்கி விடுகிறது. நாம் பயந்திருந்தால் குழந்தைகள் அதை திகிலோடு உணர்கிறார்கள்.

        குழந்தை பயந்திருந்தால் அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.
 பெற்றோர் தங்கள் பயத்தை எவ்வாறு சமாளிக்கிறார்களோ, அதே வழியில் குழந்தைகளும் தங்களுடைய பயத்தை சமாளிக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.

        குழந்தைகளைப் பயமுறுத்தாதீர்கள். அது நிரந்தர பய உணர்வை ஏற்படுத்துகிறது. சிறு வயது பயங்களை பெரியவர்களான பின்னும் சுமந்து திரிகிறோமல்லவா!

        பயந்திருக்கும் குழந்தையை தண்டிக்கவோ, ஏளனம் செய்யவோ கூடாது.
 குழந்தை பயந்திருந்தால் அதுபற்றிப் பேசுங்கள். அது அவர்களுக்கு ஆறுதலளிக்கிறது; பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
 பயப்படுவதில் தவறில்லை; அதை நாம் வெல்ல முடியுமெனப் புரிய வையுங்கள்.

அணுகுமுறை:
        குடும்பத்தில் நிலவும் பகைமை உணர்ச்சியானது, சண்டையிடுவது அவசியமானது; பிரச்சினைகளுக்கு அதுதான் தீர்வு என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறது. வாழ்க்கையென்பது ஒரு யுத்தம்; சண்டையில்லாமல் நாம் சரிவர நடத்தப்பட மாட்டோம்; வாழ நினைத்தால் சண்டையிட வேண்டுமென்ற எண்ணங்களுடன் குழந்தைகள் வளருகிறார்கள். நம் குழந்தைகளுக்கு இச்சூழ்நிலை வேண்டுமா?

        அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் சில சமயங்களில் கருத்து வேறுபாடு எழலாம். இதனால் அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கவில்லை என்று பொருளல்ல. விட்டுக்கொடுத்தலும், பேசித் தீர்வுகாணுதலும் வாழ்க்கையின் நியதி என்பதை அவர்களுக்கு புரியச் செய்வது நமது கடமை.

         நாம் எப்படிப் பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்பதைப் பொறுத்து, குழந்தைகள் தங்கள் அபிப்ராய பேதங்களைக் கையாள்கிறார்கள். பொறுமையின்மை, கோபம், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் போன்ற உணர்வுகளை நாம் கையாளும் விதம் குழந்தைகளுக்கு ஒரு உதாரணமாக அமைகிறது. பின்னாளில் நம்மைப் போலவே அவர்களும் நடந்து கொள்வார்கள்... கோபமாகவோ, அமைதியாகவோ! நம்முடைய குழந்தைகளுக்கு நாம் நல்ல உதாரணமாக அமைவோமே....

நம்பிக்கை ஏற்படுத்துவோம்:
        குழந்தைகளின் ஆசைகளையும் எண்ணங்களையும் பொறுமையாகவும் பாசத்துடனும் கேட்டு அவர்கள் கனவுகள் நனவாவதற்கு உதவ வேண்டும். புத்தகங்கள், கலை, இசை இவற்றில் ஈடுபாடு ஏற்படுத்தலாம். கனவுத் தொழிற்சாலைகளான இவை அவர்கள் முன்னேற உதவும் நம்பிக்கைத் தூண்களாகும்.

       அவர்களுடைய முன்னேற்றத்தைக் குறித்து நேர்மையான மதிப்பீட்டை அவர்களுக்கு அளியுங்கள். அவர்களின் வெற்றி தோல்விகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

       நம்முடைய கண்ணோட்டம் வேறு; அவர்களுடையது வேறென்பதால் நம் நிறைவேறாத ஆசைகளை அவர்கள் மூலம் அடைய எண்ணுவது வீண்!
 வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் எண்ணங்களைப் பாராட்டி, மரியாதை தந்து, அவர்கள் விருப்பம்போல் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உரிமை தருவோம்... அதன்மூலம் அவர்களின் தன்னம்பிக்கை வளர்வதைக் கண்டு களிப்போம்!

விமர்சனம்:
         உலகத்தையும், மற்றவர்களையும், நம் குழந்தைகளையும் நாம் விமர்சித்துக் கொண்டேயிருந்தால், அவர்கள் மற்றவர்களையும், தங்களையும் குறை கூறக் கற்றுக் கொள்கிறார்கள். உலகிலுள்ள நல்லவைகளை விட்டுவிட்டு தவறுகளைப் பார்க்க நாம் சொல்லிக்கொடுத்தவர்கள் ஆகிறோம்.
 நாம் குழந்தைகளை விமர்சனம் செய்வது அவர்கள் நல்லபடியாக வளர வேண்டுமென்ற அக்கறையில் தான் என்கிறீர்களா... அப்படியானால் நம் விமர்சனம் அவர்களது தவறுகளைப் பற்றியே அன்றி நம் அன்பிற்குப் பாத்திரமான அவர்களைக் காயப்படுத்தும் நோக்கமல்ல என்பதை நாம்தான் உணர்த்தும்படி நடக்கவேண்டும்.

       அவர்களின் நண்பர்கள் முன்னிலையில் விமர்சிக்காமல் தவறைத் தனிமையில் கண்டிப்பது நலம்.

        ஒரு தவறு நேர்ந்தால், எப்படி நடந்ததென ஆராயவேண்டும். அதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்க முயல வேண்டும். இதுவன்றி குற்றச் சாட்டும் விமர்சனமும் ஒருபலனும் தராது.

         அதிகமான விமர்சனம் குழந்தைகளை நம்மிடமிருந்து பிரித்துவிடும் அபாயம் நிறைந்தது.

        குறை சொல்வது கஷ்டங்களை, குறைகளை, ஏமாற்றங்களைக் கூட்டிக் காட்டுகிறது; தீர்வுகளையல்ல. ‘மறந்துவிடாதே' என்று சொல்வதை விட, ‘நினைவில் வைத்துக் கொள்' என்ற நேர்மறை வார்த்தைகளில் தான் அதிக பலன் கிடைக்கும்.

சுயமதிப்பை வளர்ப்போம்:
         நல்ல சுயமதிப்பு உள்ளவர் தன்னையும், பிறரையும், சட்டத்தையும், பெற்றோரையும், நாட்டையும் மதிப்பார்கள். அவர்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். தன்னை விரும்பும் குழந்தைசுயநம்பிக்கை உள்ளவர்கள். நிலையான, சந்தோஷமான உறவுமுறைகளை உருவாக்கிக் கொள்பவர்கள். இவர்கள் வாழ்வில் தோற்பதில்லை.

         குழந்தையின் திறமையைத் தாழ்வுபடுத்தி, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசாமல் அவர்களுடைய உணர்வுகளை மதித்து, அவர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தாத வகையில் பேசி அவர்களது சுயமதிப்பை அதிகரிக்கலாம்.

         குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருப்பது சுயமதிப்பீட்டை சீர்குலைத்துவிடும். செம்மையாகச் செய்யப்பட்ட செயல்களுக்குப் பாராட்டும் பரிசும் அளிக்கலாம். சிறு தவறுகளுக்கு தண்டனையைத் தவிர்த்திடலாம்.

        சுயமாக முடிவெடுக்க அனுமதியுங்கள். யோசித்து  முடிவெடுத்தல் வெற்றியாளர்களின் தனித் தன்மை.

        புது முயற்சிகளில் ஈடுபட அனுமதியுங்கள். தோல்வி, ஏமாற்றம் அவர்களைப் பாதிக்குமெனக் கருதி அவர்களைத் தடைசெய்ய வேண்டாம்.

       கருத்து வேறுபாடுகளுக்கு அனுமதியுங்கள்.

      தெளிவாக அடையக் கூடிய இலக்குகளை நிர்ணயுங்கள்.

      சுயமதிப்புள்ளவன் வெற்றியடைவான்.

       சேர்ந்து சிரிக்க
                        துக்கம் பகிர
                       பேசிக்கொண்டிருக்க
                       யோசிக்க
                      திட்டமிட
     
      எப்போதுமிருக்கிறோம் புரிதலுடன்.
      எப்போதாவது சேர்ந்திருக்க இயலாது போனாலும்
     
      எப்போதும் இருக்கிறோம்
      குழந்தைகளிடம் மாறாத அன்பு செலுத்த...

என்ற எண்ணத்தை நம் குழந்தைகளுள் நாம்தான் விதைக்க வேண்டும்.

நன்றி: கடலூர் மாவட்ட இந்திய குழந்தைகள் நல மருத்துவக் குழுமம்
-சொல்ல இன்னுமிருக்கிறது....

11 கருத்துரைகள்
  1. சொல்ல இன்னும் இருக்கிறது...
    உண்மை
    அது பெரிய உலகம்..
    சிறுவர்களின் உலகம்..

    ReplyDelete
  2. ஐந்திலே வளைப்போம்... இது நல்ல கருத்து... ஐந்திலே வளையாதது ஐம்பதிலா வளையும்....

    ReplyDelete
  3. குழந்தை வளர்ப்பு பற்றி பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  4. குழந்தைகளின் உலகில் நாம் வாழும் கலை கைவந்துவிட்டால் குழந்தைகளின் எதிர்காலம்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிறந்த முன்னுதாரணமாய்த் திகழ்வோம். அருமையான கட்டுரை. தொகுத்து வழங்கும் விதமும் சிறப்பு. பாராட்டுக்கள் நிலாமகள்.

    ReplyDelete
  5. அருமையான பயனுள்ள பதிவு

    தொடரட்டும்

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  6. இந்த காலத்துப் பெற்றோர்கள் படித்துப் புரிந்துகொண்டு செயல்படுத்தவேண்டிய விஷயங்கள் !அருமை!!

    ReplyDelete
  7. பெற்றோர்களிடமிருந்து பாச உணர்வையும், தொடுவுணர்தலையும் பெற்ற குழந்தைகள் பிறருக்கு அன்பைக் கொடுக்கவும், பிறரிடமிருந்து அன்பைப் பெற்றுக் கொள்ளவும் தவறுவதில்லை.

    அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது குடும்ப வாழ்வில் அன்பிற்கு ஒரு வலிமையான உதாரணம்.



    அருமை. சிந்தனைக்கு உரிய பதிவு.

    ReplyDelete
  8. கலீல் கிப்ரானின் கவிதைகள் பல முறை படித்தாலும் சலிக்காத ஒன்று. ஒவ்வொரு முறையும் புதுப் புது எண்ணங்களை விளைக்கக் கூடியது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. உங்கள் வில்லிலிருந்து புறப்படும் அம்பு அவர்கள்
    மகிழ்ச்சியென்னும் இலக்கை நோக்கி
    அவர்களைச் செலுத்துங்கள்
    அதை நீங்கள் செய்ய முடியும்!
    அதை மட்டுமே செய்ய வேண்டும்!!/

    அர்த்தமுள்ள வரிகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. மிகமிகப் பயன்தரும் கட்டுரை. நிறைய செய்திகள். சொல்லும் விதமும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  11. சிறுவர்கள் பெரியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல அருமையான குறிப்புகள் இப்பதிவில் உள்ளன. அனைவரும் படிக்க வேண்டியவை

    ReplyDelete