பூமரப் பெண் - 4 (இறுதிப் பகுதி)

      இரவு நெருங்கியது. அவள் முனங்கல்  தூங்க வந்த அவன் காதுகளில் விழுந்தது. சிலிர்த்துப் போனான். நெருங்கி வந்தான். கண்டு உருகிக் கண்ணீர் சிந்தினான்.
        தீர்வு நெருக்கமானது. பெண்ணுக்குப் பேசச் சந்தர்ப்பம்! தன் மனதுக்கினியவனிடம் தான் பட்ட பாட்டையெல்லாம் கொட்டுவதற்கு வாய்ப்பு!       

       அவள் பேசப் பேச அவன் கேட்டான்.
         இனி என்ன செய்யலாம்?
        அவள் சொன்னாள்: “இரண்டு வாளித் தண்ணீர் கொண்டு வாங்க. நான் மந்திரம் சொல்றேன். ஒருவாளித் தண்ணிய என் மேல ஊத்துங்க. நான் மரமாவேன். மரத்தின் சிதைந்த பகுதியை எல்லாம் கவனமா சரிப்படுத்த முயற்சி செய்யுங்க. மறுபடி தண்ணி ஊத்துங்க... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!”
         சொன்னது போலவே கணவன் செய்தான். கிழிந்த இலை, முறிந்த கணு, ஒடிந்த கிளை எல்லாவற்றையும் பொறுமையாச் சரிசெய்தான். மீண்டும் தண்ணீர் ஊற்றியதும் முழுப் பெண்ணாய் பழைய வடிவில் வந்தாள் பூமரப் பெண்.
         மிச்ச காலம் பூராவும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பூமரமாகும் நிர்ப்பந்தம் அவளுக்கு ஒருபோதும் திரும்ப நேரவில்லை. தோட்டத்தில் அவளைச் சிதைத்த இளவரசியும், தோழிகளும் தண்டிக்கப் பட்டார்கள்....

        கதைகள், சம்பவங்களை முன்வைத்து பிறந்த மனிதநேய அனுபவங்களின் தொகுப்பு பூமரப் பெண்.

        கதை நிற்கிறது ஆல மரமாய்... விழுதுகளாய் விவாதங்கள் பெருகுகின்றன.
         புரிதல்- மனித உறவுகளின் அடிப்படை. கை கோர்ப்பதும் விலகுவதும் புரிதலின் வழிதான். புரிதலின் பாதைகளில் ஒன்று பேச்சு. அதுவும் மனம் திறந்த பேச்சு. பேச்சுக்களின் ஊற்று கதைகள். பூட்டிய வாய்களுக்கும் கதைகளில் திறவுகோல் உண்டு. பேச்சு விவாதமாகவும், விவாதம் மனித நேயமாகவும் மலர்வதற்கு நாம் காத்திருக்கிறோம்.
          இலையைக் கிள்ளாதே! கணுவை முறிக்காதே! எனப் பூமரப் பெண் விடுக்கும் கட்டளைகள் இன்றைய சூழலியச் சிந்தனைகளோடு பொருந்துவதாகக் காண்கிறார் ராமானுஜன்.
          பெண்ணுக்கும் மரத்துக்குமான உருவகத் தொடர்பை விளக்கும் போது, புன்னை மரத்தைத் தன் சகோதரி எனச் சுட்டிக் காட்டிப் புன்னைக்குக் கீழ் காதல் செய்வதைத் தவிர்க்க விரும்பும் சங்கத் தலைவி பற்றிய நற்றிணைப் பாடலை ராமானுஜன் கச்சிதமாய் நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறார்.
          புஷ்பம்(சமஸ்கிருதம்), பூ(தமிழ்) என்ற இரு வார்த்தைகளும் பூவையும், பெண் பருவம் எய்துதலையும் குறிப்பதை அவர் எடுத்துக் காட்டுகையில், ‘பூப்பு' குறித்த விவாதங்களும் தொடர்கின்றன.
           பூப்படைவதில் பெண்ணுக்குள்ள விருப்பம், பூப்புக்குப் பின் பெண்ணைத் தொடரும் இடையூறு ஆகிய இரு முரண்களும் கதைக்குள் பின்னிக் கிடப்பது தெரிய வருகிறது.
           மூத்த பெண்கள் இளைய பெண்களிடம் இக்கதையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் உடம்பு குறித்த, குறிப்பாகப் பூப்படைதல் குறித்த குழப்பமான உணர்வுகள், பிரக்ஞைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடியலாமென்பது ராமானுஜன் கருத்து.
          வித்தியாசமான ஆற்றல் உள்ள பெண் எங்கே பத்திரமாக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி, ராமானுஜன் பின்வருமாறு விடை காண்கிறார். “தன் சகோதரியிடத்தும், தாயிடத்தும் அவள் பத்திரமாக இருக்கிறாள். திருமணமான நாத்தனாரிடம் ஓரளவு பத்திரமாக இருக்கிறாள். ஆனால், திருமணமாகாத நாத்தனாரிடமும் புது மாப்பிள்ளைக் கணவனிடமும் அவள் பாதுகாப்புக்கு இடையூறு இருக்கிறது”
          ராமானுஜன் பேசாத கருத்துக்களும் இன்னும் இருக்கவே செய்கின்றன. உதாரணமாய், நாட்டுப் புறக் கதைகளில் எளிய கதாபாத்திரங்களின் ஆக்கப் பூர்வமான் பங்கேற்பு. வண்டிக்காரர்களும் பணிப்பெண்களும் இல்லாவிட்டால் பூமரப்பெண்ணுக்கு மீட்சி ஏது?
           அருமையான சில  மனிதர்கள் போதிய வெளிச்சம் பெறாமல் விடுபட்டுப் போகிறார்கள். பூமரப் பெண்ணின் அக்கா பாத்திரம் அத்தகையது.


        பழையபடி தொடங்கிய இடத்துக்கே வருவோம். அதிகாரத்தின் அடையாளமான பேச்சை, சக்தியின் (empowerment) கருவியாக  மாற்ற வேண்டுமானால் ஒவ்வொருவரையும் பேச வைப்பது அவசியம். ஒவ்வொருவரும் பேசுவதற்கான வாய்ப்பைக் கதைகள் வழங்குகின்றன.

        ‘பூமரப் பெண்' நூலாசிரியர் ச. மாடசாமியின் நேர்மையை நான் வியக்கிறேன். திரு. ராமானுஜன் என்பவரால் அறியப்பட்ட இக் கன்னட நாட்டுப் புறக் கதையை தான் சார்ந்த அறிவொளி இயக்கத்தில் அழகுற பயன்படுத்தியதோடல்லாமல் அறிவொளிக்காக அறிய நேர்ந்தவைகளை எல்லோரையும் போய்ச் சேர வேண்டிய நல் நோக்கத்தில் எளிய தமிழில் புத்தகமாக்கியுள்ளார்.
        இப் பதிவுகளில் எனது வேலை அந்நூலிலிருந்ததை எழுத்துருவாக்கியது மட்டுமே. எனவே, கதை பற்றிய அதன் நடை பற்றிய பெருமைகள் பாராட்டுரைகள் அனைத்தும் திரு. ச. மாடசாமி அவர்களையே சாரும்.

       இக்கதை உங்களுள் ஏற்படுத்திய தாக்கத்தையும், கதைபற்றிய மாறுபட்ட கோணத்திலான சிந்தனைகளையும் கருத்துரையாகப் பகிருங்களேன்.(முதலிலிருந்து கவனமாப் படிக்கச் சொன்ன காரணம் விளங்கிச்சா...!)
8 கருத்துரைகள்
  1. பூமரப் பெண் கதை மூலம் எத்தனை நல்ல விஷயங்களைச் சொல்லி சென்று இருக்கிறார் ஆசிரியர்.

    அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  2. கதை சொல்லாமல் சொல்லிச் செல்கிற தகவல்கள்தான் அதன் மீதான ஈர்ப்புக்குக் காரணம்.
    பழங்கதைகள் இப்படித்தான் பூடகமாய் வாழ்வியலை அடையாளம் காட்டிப் போகின்றன.. வெறும் சுவாரசியத்திற்காக வாசிக்காமல் ஊடுருவிப் பார்க்கும் மனசு வாய்த்தால் கதைகளின் பலன் பூர்ணமாய் கிட்டி விடும்.
    அறிமுகம் செய்த அழகு நடைக்கு நன்றி

    ReplyDelete
  3. ஒரு பெண் எங்கெல்லாம் பாதுகாக்கப்படுகிறாள்,யாரிடம் சிக்கினால் சிதைந்துபோவாள் என்பதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.பூமரப்பெண் மென்மையான ஒரு பூவேதான்.உங்களுக்கும் நன்றி நிலா !

    ReplyDelete
  4. நல்ல பகிர்வின் மூலம் நல்ல‌ விஷயங்கள் கிடைக்கும். நல்ல உணர்வுகள் பிறக்கும். உங்கள் பகிர்வினால் நல்லதொரு கதையைப்பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்பு நன்றி!

    தங்களை நல்லதொரு தொடர்பதிவிற்கு இன்று அழைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. கதை நிற்கிறது ஆல மரமாய்... விழுதுகளாய் விவாதங்கள் பெருகுகின்றன//

    உண்ர்ச்சிக்குவியலாய் அருமையான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. மிக நல்ல பதிவு . நிச்சயம் இந்த புத்தகத்தைப் படிப்பேன். ஏ.கே.ராமானுஜனின் பார்வை கூரியது. அதோடு ''உதாரணமாய், நாட்டுப் புறக் கதைகளில் எளிய கதாபாத்திரங்களின் ஆக்கப் பூர்வமான் பங்கேற்பு. வண்டிக்காரர்களும் பணிப்பெண்களும் இல்லாவிட்டால் பூமரப்பெண்ணுக்கு மீட்சி ஏது?'' என்ற உங்களின் கருத்து மிகச் சிறப்பு. எனக்கு உங்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. வாய்மொழிக் கதைகள் எளியவர்களின் வாழ்வை, வாக்கைப் போகிற போக்கில் ஆழமாகப் பேசி விடுகின்றன. பூமரப் பெண்ணின் திறமை பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் மட்டும் பயன்படுவதும் காணக் கிடைக்கிறது கதையில். அதோடு உன்னை எப்படி இளவரசனுக்குத் தெரியுமென்று கேட்கப்படுவதும், அடிக்கப்படுவதும் பெண்ணிடம்தான். அவள் இளவரசனை விரும்பி இருந்தால் அது இயல்பு என்பது ஒரு புறமிருக்க, கதையில் இளவரசன்தான் அவள் மேல் விருப்புற்றதாக வருகிறது. ஆக இன்னொருவர் பார்த்தாலும் அடி பெண்ணிற்குத்தானா? என்ன அவலம்? அதோடு //பூமரமாகும் நிர்ப்பந்தம் அவளுக்கு ஒருபோதும் திரும்ப நேரவில்லை// எனும்போது அந்த பெண்ணிற்கு தான் பூமரம் ஆவது குறித்துப் பெருமையோ, மகிழ்வோ இல்லையா, அது நிர்பந்த்தம் மட்டுமா என்றும் தோன்றுகிறது. கூடவே மன்னன் திரைப்படத்தில் தன் நிறுவனத்தை முதலிடம் பெற வைக்கும் திறனுள்ள விஜயசாந்தி படத்தின் இறுதியில் வேலையை விட்டுவிட்டு கணவனுக்கு டிபன் பாக்ஸ் கொடுத்துக் கையசைக்கும் காட்சி நினைவுக்கு வருகிறது! மீண்டும் இந்த பதிவிற்கு நன்றி நிலாமகள் தோழி.

    ReplyDelete
  7. /அதிகாரத்தின் அடையாளமான பேச்சை, சக்தியின் (empowerment) கருவியாக மாற்ற வேண்டுமானால் ஒவ்வொருவரையும் பேச வைப்பது அவசியம்./

    இது பற்றி என் அபிப்பிராயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

    மெளனம் என்பதும் ஒரு வகைப் பேச்சுத் தான் தோழி.

    அது புறக்கணிப்பை,எதிர்ப்புணர்வை,அடுத்தகட்ட நகர்வை,நிரந்தரமானதொரு வெறுப்புணர்வை,முக்கியமாக’ஒரு பயனும் இல்லை’என்ற ஒரு தீர்வைச் சொல்லி நிற்கும்.

    அது அகிம்சையும் அமைதியும் நிரம்பிய வழியுமாகும்.

    புத்தியுள்ளவர்கள் அவரவருடய பிரச்சினைகள் வழியாக அந்த மெளனத்தின் பாஷையை புரிந்து கொள்வார்கள்.அல்லது காலம் புரிய வைக்கும்.

    அதிலிருக்கின்ற முக்கிய தன்மை என்னவென்றால் அது காலம் எழுதிச் செல்லும் பாஷையாக இருப்பது தான். அது மிக நீண்ட பதில்.:)

    ReplyDelete
  8. வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன்
    சிறந்த ஆக்கங்களை வெளியிடும் உங்களுக்கு எனது மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.............

    ReplyDelete