இனியாவின் இளஞ்சிவப்பு வானம் -சக்தி அருளானந்தம்
ஒரு பூச்செண்டு தயாரிப்பதும் ஒரு பூச்சரம் தொடுப்பதும் வேறுவேறானது. இதை நாமறிவோம். பூச்சரம் தொடுப்பவரை விட பூச்செண்டு தயாரிப்பவருக்கு அழகியல் மற்றும் கலைத்திறன் வேண்டியிருக்கிறது. அவர் வடிவுடைய பெரிய இலைகளை அடிப்படையாக வைத்து கண் கவர் வண்ணங்களும் வடிவங்களுமுடைய பூக்களை ஒழுங்கமைத்து ஒட்டுமொத்த தயாரிப்பை பளபளக்கும் தாள் சுற்றி மதிப்பு கூட்டி நம்மிடம் தரும்போது மிகுந்த மகிழ்வடைகிறோம். தருபவரையும் பெறுபவரையும் ஒருங்கே மகிழ்வூட்டுகிறது அந்த பூச்செண்டு.
தோழர் சக்தி அருளானந்தம் தன் முகநூல் பக்கத்திலும் பரவலான அச்சு இதழ்களிலும் மின்னிதழ்களிலும் தம் கவிதைகளை அவ்வப்போது பதிவிட்டு வருபவர். சிதறிக் கிடக்கும் பூக்குவியலாய் இருந்த அவற்றை தம் நான்காவது தொகுப்பாக ‘இனியாவின் இளஞ்சிவப்பு வானம்' என்றொரு தொகுப்பாக வசந்தா பதிப்பகம் மூலம் நமக்கு கையளித்துள்ளார்.
சில கவிதைகள் நயமானவை. சில ரசமானவை; சில திறமானவை; சில கணமானவை; சில அழகானவை; சில வளமானவை; சில சிந்தை கிளர்த்துபவை; சில செயலூக்கம் தருபவை... விதவித மணம்; விதவித குணம்.
“ஒரு கவிதைத் தொகுப்பைப் புரட்டுவது என்பது தாள்களைப் புரட்டுவதோ அச்சு வரிகளைக் கண்களால் தடவுதலோ இல்லை. படைப்பாளியின் எந்த உணர்வு எழுதத் தூண்டியதோ அதனைப் பற்றுவதே வாசக வெற்றி” என்பார் கவிஞர் இன்குலாப்.
இனியாவின் இளஞ்சிவப்பு வானத்தில் வலம் வந்த போது என்னுள் பளீரிட்ட நட்சத்திரங்களை உங்களுக்கும் வெளிச்சமிடுவதில் எனக்கும் பெரு உவகை.
தொகுப்பைப் புரட்டிய நான் ‘கனவு மகளும் விடுதலைக் கனவும்' கவிதையில் கண்கள் பளிச்சிட நிதானித்தேன். பெண் குழந்தையை சீராட்டி பாராட்டி தங்கக் கூண்டிலடைத்து வயிறு நிறைத்து, வளர்ந்ததும் வாலிப வயதில் தக்கதொரு மணவாளன் தேடி ஒப்படைத்து ‘அப்பாடா' என கடமையாற்றிய நிம்மதிப் பெருமூச்செறிவதும் அல்ல பெற்றோர் பொறுப்பு என்பதை கம்பீரமாக ஒலிக்கிறது கவிதை.
‘உங்கள் அதிகாரத்தின் மீதான அவள் கேள்விகள்
உங்களுக்கு எரிச்சலூட்டலாம்
உங்கள் எரிச்சலின் உச்சம்
அவள் பக்க நியாயத்தின் உயரம்'
மனித வல்லூறுகளிடமிருந்து தப்பிக்க பெண்குழந்தைகளை வலுவேற்றும் வார்த்தைகள்.
நிர்பயாக்களும் ஆசிபாக்களும் அவர் தூக்கம் தொலைத்த இரவுகளில் இக்கனவுப் பெண் கற்பனையில் கவிஞர் ஆசுவாசமடைந்திருக்கலாம்.
‘மணிசார்' கவிதையின் நாயக நாய் ஒரு அதிகாரப் பதவிக்காரனிடம் அடிபட்டு செத்தது படிப்போர் மனசைப் பிழிகிறது. நெடுநேரம் அடுத்த பக்கம் புரட்ட மனசின்றி மனக்கண்ணில் மணி சார். தெருக்காரர்களின் ஒட்டுமொத்த காவலைக் குத்தகை எடுத்தாற்போல் தன் வயிறு நிரப்பிய மிச்சம் மீதி உணவின் நன்றிக்கு பங்கம் வைக்காத மணிசார், தனக்கொரு கேடு வந்தபோது தன்னைச் சொந்தம் கொண்டாட, பாதுகாக்க ஒருவருமில்லை என்ற வேதனையில் முக்கலின்றி முனகலின்றி அடிவாங்கி உயிர்விட்டது மனசைக் கீறிவிட்டது சக்தி. நிதர்சனத்தின் கொதிப்படங்க நேரமெடுக்கிறது. உங்களின் இன்னொரு கவிதை வரிகள் உதவிக்கு வருகின்றன,
துளித்துளியாய் திரள்கிறது சோகம்
துளித்துளியாய் திரள்கிறது கோபம்
துளித்துளியாய் திரள்கிறது கண்ணீர்
இதன் கடைசி வரியான ‘துளித்துளியாய் திரள்கிறது வஞ்சம்' என்ற முடிப்பு அதனை தனிக் கவிதையாக்கி வேறொரு திறப்பைத் தருகிறது வாசகனுக்கு. ஆம். உடையும் பானையின் விரிசலின் துவக்கம் உடைந்தபோது ஏற்பட்டதா என்ன?!
இனியா பற்றிய கவிதைகளின் அவளின் ‘மெளனம்' என்னை வசீகரித்தது. சாலையோரவாசிகளின் மழைக்காலம் பற்றிய அவளது அக்கறை அக்கினிக் குஞ்சு போல மலைப்பிஞ்சு போல விதைக்குள் ஒளிந்த விருட்சம் போல அவளது உயரம் காட்டியதால்.
காலங்காலமாய் பெண் குழந்தைகள் அப்பா விரும்பிகள். ஆயிரம்தான் அம்மா உன்னதமாயிருந்தாலும் பெண்ணுக்கு அப்பா தான் முதல் நாயக பாவனை. அப்பாபோல கணவன் வாய்க்க, அப்பா போல மகன் பிறக்க, அப்பா போல் பேரன் அமைய ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாள் முழுதும் அப்பாவின் பாவனையை உடனிருத்திக் கொள்ள விரும்புவது அவளின் உரிமைக்குரிய முதல் ஆண் என்பதாலோ... ‘அப்பாவும் நானும்' கவிதை உணர்வைத் தொடும் உன்னதம்.
‘பலங்களும் பலவீனங்களும் நிறைந்தவர் தான்
எல்லா அப்பாக்களைப் போல
அவர் இருந்தபோது அவர் பலவீனங்களே
என் கண்ணில் பட்டன
எல்லாப் பிள்ளைகளையும் போல'
உங்கள் ‘தெருப்பாடகன்' கவிதையை ஒரு பதாகையாக்கி தன் முன் நிறுத்தி செவிப்புலன் இருப்போர்தம் ஆன்மாவுக்கு இசையுணவு அளிக்கும் தன்மானமிக்க இசைக்காரன் நிச்சயமாக தம் பசியாற்ற ஊதியம் பெற்று மகிழ்வான் சக்தி.
‘அவனுக்குள் இன்னும் மிச்சமிருக்கும்
இசை மொத்தமும் பெற
அவன் உயிர்த்திருக்க
அவனெதிரிலிருக்கும் தட்டில்
உங்கள் அன்பை விட்டுச் செல்லுங்கள்' என்ற முடிப்பு வரிகளுக்காக மற்றுமொரு அன்புப் பூச்செண்டு தங்களுக்கு.
‘சாம்பலுதிர்த்த தணலென / சோம்பலுதிர்த்த சூரியன் சுடர்ந்தெழுந்தான்' என்ற ‘அலையலையாக' கவிதையில் வரும் வரிகள் கவியரங்கச் சாயலில் அழகுசந்தம் சக்தி!
ஒரு இலையுதிரும் தருணம் விவரித்த'இலையுதிர்காலம்' கவிதை வெகு நயம்.
‘ஆடும் பாம்பே, இருத்தல், நிரந்தரம், துளித்துளியாய், கால மயக்கம், பிழைப்பு, நம்பிக்கை, தாகம் போன்ற நான்கைந்து வரிக் கவிதைகள் செறிவான அர்த்தத்தை உள்ளடக்கியுள்ளன.
தொலைத்து விட்ட கடலை மறந்து ஆறுகள் ஏரிகள் குளங்களை மறந்து தொட்டிக்குள் மகிழ்ந்திருக்கப் பழகிய மீன்களைப் போன்றே மனித வாழ்வும் தம் விழுமியங்கள் பலவும் அழிந்தும் மறைந்தும் இருப்பதிலும் கிடைப்பதிலும் நிறைவடையப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது எனத் தோன்றியது ‘நீந்த மறந்த மீன்கள்' கவிதையை வாசித்த போது.
“நீல மலைத்தொடர் தானே நீலமலையாக இருக்கிறது
வெண்மேகங்கள் தாமாகவே வெண்மேகங்களாக இருக்கின்றன” என்றொரு ஜென் கவிதை பேசும். ஆம். காணும் நம் கண்களுக்குத்தான் வண்ண பேதமும் எண்ண பேதமும்.
போலவே, சக்தியின் கவிதைகள் வாழ்வின் சகதியில் நாளும் மலரும் தாமரைப்பூக்கள்.
குறிப்பு:
வழமை போல் தன் ஓவியங்களால் தொகுப்பை மெருகேற்றி உள்ளமைக்கு தனித்த பாராட்டுக்கள் பெறுகிறார் மதிப்புநிறை சக்தி!
நூற்பெயர்: இனியாவின் இளஞ்சிவப்பு வானம்
ஆசிரியர்: சக்தி அருளானந்தம்
வெளியீடு வசந்தம் பதிப்பகம், தாரமங்கலம்
நூலாக்கம்: உதயக்கண்ணன்
பக்கங்கள்: 80
விலை: ரூ. 70/-