தொடர்பதிவின் கண்ணியில் என்னையும் இணைத்த ‘முத்துச்சிதறல்' திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
புத்தக வாசிப்பின் மீதான நேசிப்பு நாளுக்கு நாள் வயதுக்கு நிகராய் கூடியபடியே தானிருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கப் பழகிய காலத்தில் கிடைத்ததைப் படித்ததுண்டு... எல்லா வேலைகளையும் ஏறக்கட்டி, கூட்டுக் குடும்பத்தின் எல்லோரும் தூங்கிய பிறகு, ‘ராணி' போன்ற வாராந்திரிகளை படுக்கையில் படுத்தபடி படிப்பாங்க எங்கம்மா. மின்சாரம் நின்றால் உதவ தினசரி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘பெட்ரூம் லைட்' எனப்படும் கண்ணாடி போட்ட சின்ன சிமினி விளக்கு வெளிச்சத்தில்! . தாழ்வாரத்தில் உடன் படுத்திருக்கும் மற்றவர்கள் தூக்கம் கெடாதிருக்க மின் விளக்கு அணைக்கப் பட்டிருக்கும்... மறுநாள் அம்மா வைத்த இடம் தேடி, நேரம் தேடி புரிந்தோ புரியாமலோ படித்து வைத்ததுண்டு. நம்மாலும் படிக்க முடிகிறதே என்ற குதூகலத்தின் எச்சத்துடன்.
பிந்தைய நாட்களில் செல்வம் மாமா வாரம் தவறாமல் வாங்கி வரும் குமுதம், கல்கண்டு, துக்ளக் இவற்றையும் அவரது பையை ஆராய்ந்து படித்து விடும் வழக்கம். மளிகைக் கடையிலிருந்து பொருட்கள் கட்டி வரும் பேப்பர்கவர்களைப் பிரித்து முதலும் முடிவுமற்ற கதைகளை, செய்திகளை படித்து முன்னும் பின்னும் கற்பனையில் அவதானிப்பது சுவையான பொழுது போக்கு அப்போதெல்லாம். வீட்டை ஒட்டியிருக்கும் சீமான் மளிகைக் கடையில் கவர் செய்ய வைத்திருக்கும் புத்தகங்களைக் கேட்டும் படித்திருக்கிறேன்.
சாப்பிடும்போதும் தூங்கப் போகும் போதும் படித்தேயாக வேண்டும். புதிதாக ஒன்றும் கிடைக்க வில்லையானால் படித்ததையே பலதடவை படித்ததுண்டு. அப்புறம் எதிர் வீட்டு வைத்தியநாதன் அண்ணன் தயவில் புவனகிரி கிளை நூலகத்திலிருந்து சுஜாதா புத்தகங்கள்.(அவர் சுஜாதா பிரியர்) ,
அப்புறம்,பதின்வயது துப்பறியும் நாவல்கள் புற்றீசலாய் புறப்பட்ட காலம். ஒன்று விடாமல் வாங்கியோ, நட்பு வட்டத்தில் பகிர்ந்தோ பயண நேரப் படிப்பு. துரித வாசிப்பு பழகியது அதில்தான்.
அப்புறம், நர்மதா, மணிமேகலை போன்ற பதிப்பகங்களிலிருந்து வி.பி.பி. முறையில் புத்தகங்களை வாங்குவது... குறியாமங்கலம் கிராமத்திலிருந்து நகரை ஒத்த நெய்வேலிக்குத் தாவச் செய்தது திருமண பந்தம்.
இலக்கிய ஈடுபாடுள்ள துணைவர் வாய்க்கப் பெற்றதும், இருவருமாகத் தேடித் தேடி வாங்கியடுக்கி உள்ளவற்றை, வாங்க இருப்பவற்றை வாழ்வின் எஞ்சிய நாட்களில் படித்துவிடுவோமா என்ற பிரமிப்பு இப்போது எங்கள் நூலக அறையைக் காணும் போதெல்லாம்...!
பதிவின் முன்னுரை இத்துடன் நிற்க.
எந்தவொரு படைப்புக்கும் ஒரு முன்னோட்டம் அவசியமாகிறது. தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும்படியும், விருந்தில் முதலில் பரிமாறும் இனிப்பு நாவின் சுவையரும்புகளைத் தூண்டித் தயார்ப்படுத்துவது போலவும், நூற்பொருளைப் பற்றிய சுருக்க விளக்கமாகவும், கச்சேரி தொடக்கத்தில் பாகவதர் தொண்டையை செறுமிக் கொள்வது போலவும் உள்ளது முன்னுரை / முகவுரை / நூன்முகம் / தோற்றுவாய் இன்ன பிறவாய் கூறப்படுபவன நூலாசிரியருடையது. அணிந்துரை, தந்துரை, பதிப்புரை, சிறப்புரை எல்லாம் மற்றவர்களின் தட்டிக் கொடுத்தல், போர்த்தி விடுதல், சமயங்களில் குட்டும் வைத்தல்.
முன்னுரையிலிருந்து படிக்கத் தொடங்குதல் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் வண்டியேறுதல் போல். வாழைப் பழத்தை நாம் உரித்தே சாப்பிடுவது வழக்கம். அதிலும் சில வகைகளில் தோலின் உள் உரிப்பு தனிச் சுவையல்லவா!
முதலில் எனது ஆதர்ச எழுத்தாளரான வண்ணதாசனும் அவரது படைப்புலகமும்!