நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

           மொழி எதுவாயினும் எச்சமூகமாயினும் பெண் ஆனவள் சந்திப்பவைகளும் சாதிப்பவைகளும் ஒருபோலவே தான் இருக்கின்றன. 2009-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘கிரவுஞ்சப் பட்சிகள்' கன்னட சிறுகதைத் தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளும் பேரளவு பேசிச் செல்பவை பெண்ணியம் நிறைந்த பெண்ணே உணரத்தக்க ஆகச் சிறந்த நுட்பமான மனவெழுச்சிகளின் தழுவல்களே.

             மூல ஆசிரியர் வைதேகி(ஜானகி சீனிவாசமூர்த்தி 1945)  கன்னடத்தில் பிரபல எழுத்தாளராக அறியப்படுபவர். தென் கன்னட மாவட்டக் குந்தாபுரத்தில் பிறந்த இவர், கதை, கவிதை, நாவல், கட்டுரை, குழந்தைகள் நாடகம், மொழிபெயர்ப்பு என எழுத்தின் சகல பாகங்களிலும் கால் பதித்து, மத்திய சாகித்ய அகாதெமி விருது, கதா மற்றும் கர்நாடக சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட 14 விருதுகள் பெற்றிருப்பவர்.

           திரை மற்றும் நாடகத் துறையில் மட்டும் இருப்பவர்களல்ல நடிப்புக்காரர்கள். இயல்பு வாழ்விலும் நம்மில் அநேகர் ஏதேனுமோர் தருணத்தில் அல்லது அனைத்து சமயங்களிலும் நடிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதை அநாயசமாக பிறவிக் கலைஞர்கள் போல் செயலாக்குபவர்களும் உள்ளனர். ‘நடிகை' கதையின் நாயகி ரத்னாவும் அப்படியான ஒரு பாத்திரமே. தன் வாழ்வின் நாலாவித துயரங்களையும் மறைத்து, சக மனிதர்களும் அதை மறக்கும்படியும் உறவினர் வீட்டு விசேடங்களில்   கூடியிருப்போரை மகிழச் செய்ய, பிறரைப்போல் பேச்சும் பாவனைகளும் செய்து சிரிப்பூட்டுகிறாள்.   அவள் வாழ்வின் அடுக்கடுக்கான சோகங்களை கதை முடியும் போது அறியும் நமக்கும் இனம்புரியாத அனுதாபம் எழும்படிச் செய்கிறார் ஆசிரியர். 

         வேலை வாய்ப்புக்காக பட்டிணம் வந்த உறவுக்காரியிடம் அனாவசியமாக பக்கத்து வீட்டு அக்கப்போர்களையும் அவர்களை சதா வேவு பார்த்து தானே கற்பிதமாக்கிக் கொண்டவற்றை பேசித் தூற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்ட சபீதாவும் ரத்னாவின் இன்னொரு பரிமாணமே. (‘சபீதா')ஆனால் தனக்கு கிடைக்காதது பிறருக்கு கிடைத்த ஆற்றாமையை பொறாமை மிக விமர்சனம் செய்யும் குரூரம் சபீதாவை நாம் அருவருக்கும்படி செய்கிறது. 

மனம் கவர்ந்தவன் ஒருவனாகவும், மணம் புரிந்தவன் வேறொருவனாகவும் அமைந்த பெண்ணின் இறுதி மூச்சு அடங்கிய தருணம் அவளைக் காண வந்த மனம் கவர்ந்தவனின் தவிப்பும் தடுமாற்றமும் இறந்தவளின் ஆன்மா சாந்தியடையும் படி இருந்தாலும், உயிரோடிருக்கும் அவள் கணவன் மற்றும் உறவினர், ஊரார் மன ஓட்டங்கள் நன்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் கதை ‘பேச்சற்ற கணம்'. 

வாய்க்கால், வரப்பு, குட்டை, தோட்டம் தாண்டிப் போய்க் கொண்டிருந்த வீட்டுக்கு பாதை செப்பனிடப்பட்டு விட்டது. நெடுநாட்கள் கழிந்து அங்கே சுலபமாகப் போய்விடும் பெண்ணொருத்திக்கு பாதையற்ற நாட்களின் சிரமங்களை விட பாதை எளிதான பின் வந்த சிக்கல்கள் புரிகின்றன. வாசலில் கிளைபரப்பி நின்ற பலா மரத்தின் இழப்பு தாங்கவொன்னாததாக இருக்கிறது. பாதையற்ற தோட்டமாக இருந்தபோது அங்கிருந்த மனிதர்களிடமிருந்த நெறியோடான வாழ்வு முறை சீர்கெடவும் காரணமாகிவிட்டது அந்தப் பாதை. (வீடு வரை பாதை) பாரம்பர்யத்தின் பலவும் நாகரீகத்தின் பெயரால் சீர்குலைந்து நிற்கும் போதெல்லாம் நமது முன்னேற்றம் குறித்த ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

        அடுத்த கதையான ‘கேள்வி'யும் சந்திப்பது இத்தகைய சிக்கலே. நாகரீக யுவதிகள் இருவர் சொற்பொழிவு ஆற்றுபவரிடம் வரம்பு மீறியதொரு கேள்வியை வைத்து அதை எதிர்கொள்கையில் ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தவர்' விந்தை மனிதரா அல்லது நாகரீகம் என்ற பெயரால் தறிகெட்டோடும் இன்றைய இளைய சமூகம் விந்தையானதா என்ற வேதனை எழுகிறது. அசட்டுத் துணிவும், அடாவடியும், சமத்துவ மாயையும் பெண்களை எந்தளவுக்கு புத்தி பேதலிக்கச் செய்திருக்கின்றன...!

           ‘புதிர்' கதையின் சுபா ஆண்ட்டி அன்று முழுக்க எங்குதான் சென்றாள் என்பது நமக்கும் புதிராகவே உள்ளது. கதையின் சுவாரஸ்யம் அதுதான். வாசிப்பவர் கற்பனைக்கு விட்ட ஆசிரியரின் சாமர்த்தியம் மெச்சத் தக்கது. எனினும் ஒரு பெண் தனக்குத் தோன்றியதை, தன் நீண்ட நாள் அவாவை நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் கைவரப் பெறுவதற்குள் அவளின் பாதி ஆயுளைக் கழித்து விடும்படி ஆகிவிடுகிறது என்பது உள்ளோடியிருக்கும் சோகம். 

          ராஜம் அத்தையின் வாழ்வில் திறக்காத பக்கங்களை திறக்க அவர் தயவில் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்த பெண்கள் கூட்டம் செய்யும் முயற்சிகள், அவர்களின் துப்பறிதல்கள் ‘திறக்காத பக்கங்கள்' கதையை மெருகூட்டுவதாய் இருக்கின்றன. தன் சோகங்களை மறைத்து பிறரின் சுகங்களை பிரதானப்படுத்தி வாழும் ராஜம் அத்தைகள் இன்றும் காணக் கிடைக்கின்றனர். அவர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்கள் மறைக்கப்பட்டு அவற்றில் நாடிவந்த மற்றவர்களின் வாழ்வு சோபிக்க ஒளி கூட்டப்படுகின்றன. நீர் தேடும் வேருக்காக நிலத்தைத் தோண்டித் துருவுவதில் பயனிருக்கலாம். துளிர்ப்பற்ற பாலையில் தோண்டுவதும் வீண் வேலைதானே.

          மனிதன் சாதாரண நிலையில் மட்டும் மனிதனாயிருக்கிறான். சித்தாந்தம், தத்துவம், வேதம், மற்றும் நீதி நியதிகளில் அடித்தளம் சிறிது அசைந்தாலும் முதலில் அவன் பலிபோடுவது பெண்ணைத்தான். அவளின் பெண்மை, மனது மற்றும் அவளின் வாழ்க்கை. அர்ஸ்நான பட்டரின் முகச்சாயம் வெளுக்கச் செய்யும் ‘கிரவுஞ்சப் பட்சிகள்' கதை உணர்த்துவதும் இதைத்தான்.
லட்சுமியம்மா நாட்டுப் பிரிவினையின் வகுப்புவாதக் கலவரத்தில் போராட்டக்காரர்களால் தூக்கிச் செல்லப்பட்டவள். சிலகாலம் அவர்களின் பிடியிலிருந்தவள் மீட்கப்படுகிறாள். ஆனால், பட்டரோ அவளை ஏற்க மயங்கி அவள் இறந்து விட்டதாக ஊரில் சொல்லி வேறு திருமணமும் செய்து கொள்கிறார். 

         தன் ஆராய்ச்சிப் படிப்புக்காக விசாகாபென் எனும் சுதந்திரப் போராட்ட தியாகியை பார்த்த அருந்ததி, அவர் வீட்டில் வேலை செய்யும் லட்சுமியம்மாவைப் பார்த்து அவரைப் பற்றி விசாரிக்க, விசாகாபென் சொன்ன தகவல்கள் தான் பட்டரின் முகத்திரையைக் கிழிப்பதாய் இருக்கிறது. தன் நீண்ட நாள் வலியை விழுங்கித் தண்ணீர் குடித்தது போல் வாழப் பழகிய லட்சுமியம்மா போல் தான் இத்தொகுப்பின் முதல் கதையின் நாயகி, பேருந்தில் தேவையில்லாமல் கடூரமாக நடந்து கொள்ளும் நடத்துநரை எதிர்கொள்கிறாள். ஆம்பிளை எனும் ஆணவத்தில் அவன் அடாவடி பேசுவதாக சக பயணிகள் நினைக்க, ‘ஆம்பிளைன்னா நல்ல வார்த்தை. இவன் ஒரு ஆளு' என்ற ஒரு பெண் பயணியின் சவுக்கடி சொடுக்கல் மூலம், பெண்கள் தங்கள் சகல துன்பங்களையும் துயரங்களையும் தாண்டி சக மனிதன் மேல் நம்பிக்கையோடிருப்பதை நூலாசிரியர் புலப்படுத்துகிறார்.

         தொகுப்பின் கதைகளின் போக்கும் நோக்கும் பெண்களின் நுட்பமான சில வலிகளைப் பற்றி பேசுவதாகவே இருக்கின்றன. தமிழில் மொழிபெயர்த்த ஜெயந்தி சாகித்ய அகாதெமியின் தென் மண்டல அலுவலகத்தில் பணி புரிபவர். சங்கரி எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுபவர். மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கும் பல மொழியாக்கங்களைத் தந்திருப்பவர் என்றறியும் போது, பல்மொழிப் புலமை பெற்ற அவரின் கூர்மதி பாராட்டும்படி உள்ளது.

நூல் பெயர்:       கிரவுஞ்சப் பட்சிகள்
கன்னட மூலம்:  வைதேகி
தமிழில்:            ஜெயந்தி 
வெளியீடு:         சாகித்ய அகாதெமி
பக்கங்கள்:         136
விலை:             ரூ.110/-

('திசை எட்டும்' இதழில் வெளியானது)


Share on:

அந்தி சாயும் நேரம்.

பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவின் ஒரு 'குளம்' வரை செல்லவிருக்கும் பேருந்து வெளியேறி வேகமெடுத்தது.

பேருந்துக்குள் பெரும்பான்மை மலையாள மொழிக் குரல்கள் அப்போதைக்கப்போது. வாக்மேன்களும், எஃப்.எம்.களும், மெலிதான சத்தத்தில் லேப்டாப் மற்றும் நவீன ரக போன்களில் ஓடும் படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் என அவரவர் தீவில் அவரவர்...

பாண்டி எல்லை முடிந்து கடலூர் எல்லை துவக்கத்தில் ஒரு பரிசோதனைச் சாவடி. வண்டியை மறித்து திடுதிடுவென உள்நுழைந்தனர் இரு காவல்துறையினர். எல்லா மின்னணுச் சாதனங்களும் ஓய்ந்தன.

விரைப்பான உடுப்பு. மிடுக்காக இருக்கைகளுக்கு மேல் திணிக்கப் பட்டிருந்த பைகளை ஒவ்வொன்றாய் கவனமாகப் பரிசோதனை செய்யப் பட்டது கடமை தவறாத அவர்களால். பூட்டப் பட்டிருந்த ஒன்றிரண்டு பைகளை திறக்குமாறு உத்தரவு. வம்படியாக ஒரு இளைஞனின் பையைக் கொட்டிக் கவிழ்த்து அவன் வைத்திருந்த ஜூஸ் பாட்டிலை திறந்து முகர்ந்து ஏமாற்றமுடன் அவனிடமே தந்தனர்.(உருமயக்கம்)

விட்டேனா பார் என பின்னிருக்கைப் பயணியின் பையில் மூன்று சரக்கு பாட்டிலைப் பிடித்து விட்டனர். சாவடியில் நின்றபடி பேருந்து சாளரத்தையே பார்த்துக் கொண்டிருந்த  மற்றொரு காவலரும் வேகவேகமாக பேருந்துக்குள் வந்தார்.

'வா' என்ற அவர்களின் ஒற்றைச் சொல்லில் சற்று கூசிப் போய் மிரட்சியுடன் பின் தொடர்ந்த அந்த நவநாகரீகப் பயணியை 'இனம் இனத்தைக் காக்கும்' என்பதாக அடுத்திருந்த இருக்கைச் சேட்டன் தாழ்ந்த குரலில் தப்பிக்கும் மந்திரம் சொல்ல,  இறங்கும் வழியில் வைத்து நடந்த பரிமாற்றத்தில் பயணி திரும்பினார் இருக்கைக்கு.

கையும் பையும் நிறைத்து இறங்கிய அவர்களின் உடுப்பு விறைப்பு இழந்தது பயணிகள் பார்வையில்.

எல்லா மின்னணுச் சாதனங்களும் உயிர் பெற்றன. ஒன்று பாடியது...

"தப்பெல்லாம் தப்பே இல்லே, சரியெல்லாம் சரியே இல்லே... தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லே, தப்பு இல்லே..."

அடப் போங்கப்பா... இதெல்லாம் ஒரு பிழைப்பா...




Share on:
மாலை நேரம்.

மருந்துக் கடையொன்றின் 'பத்துக்கு ஐந்து'  விஸ்தீரண உள்ளறை.
அறுபதைத் தாண்டிய பெண்மணியும் நடுத்தர வயதுப் பெண்ணும் கடை வாசலில் பெறப்பட்ட டோக்கன் சீட்டுடன் உள்ளே நுழைகின்றனர்.

மருத்துவர் (பலதுறைப் படிப்பாளி) நிமிர்ந்து 'சொல்லுங்க' என்கிறார்.

"இரண்டு மாசமா அடிக்கடி சளித் தொந்தரவு. ரெண்டு மூணு டாக்டர் கிட்ட காட்டி மருந்து சாப்பிட்டும் விட்டு விட்டு வருது. இப்ப காலையில எழுந்ததும் சில தும்மல்... விடியற நேரம் கொஞ்சம் வறட்டு இருமல்..."

எதிரில் அமர்ந்த பெரியம்மா சொல்ல, 'ம்...ம்...' என்றபடி ஸ்டெத்-தை தன் காதில் மாட்டி சோதிக்கிறார்.

"வேற ஏதாச்சும் தொந்தரவுக்கு மாத்திரை சாப்பிடுறீங்களா?"

"ஆமா. தினம் ஒரு சுகர் மாத்திரை கூட ஒரு பி.காம்ப்ளக்ஸ்..."

"சுகர் எவ்வளவு நாளா இருக்கு?"

"ஒரு இருபது வருஷமா... "

"சமீபமா எவ்வளவு இருக்குன்னு பார்த்தீங்களா?"

"ஒரு பத்து நாள் முன்னே... நூத்தி இருவது தான் இருக்கு."

மின்னலென உதவியாளர் உடனடி பரிசோதிக்கும் கருவியைக் கொண்டுவந்து பெரியம்மாவின் கைவிரலில் ஊசியால் கீ றி , சொட்டும் இரத்தத்தைக் கருவியில் தடவி பட்டன் அமுக்கி மருத்துவரிடம் காட்டுகிறார். கருவியின் திரையில் 141 என வரவும் மருந்துச் சீட்டில் குறித்துக் கொள்கிறார் மருத்துவர்.

"காலை நீட்டுங்க... வீங்கி இருக்கா? மரத்து போறது, எரிச்சல் ஏதாச்சும் இருக்கா ?"

"அதெல்லாம் இல்லே." கால்களை நீட்டி பாதத்தைக் காட்டியபடி பெரியம்மா.

"ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம்..."

"ஒரு பிரச்சினையுமில்ல. இந்த தும்மலும் இருமலும் தான் கொஞ்ச நாளா..."

இரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவியை கையாள்கிறார் மருத்துவர்.

160/100 என சீட்டில் குறித்தபடி, "பிரஷர் கொஞ்சம் இருக்கு. மாத்திரை போடணும். எப்பவாச்சும் மயக்கம், தலைசுத்தல் வருதா?"

"இல்லையே"

" இன்னொரு நாள் இன்னொரு தடவை பார்த்துகிட்டு அப்புறம் மாத்திரை போடத் தொடங்கலாமா...? மத்தபடி ஆக்டிவா தான் இருக்காங்க..." உடன் வந்த பெண்மணி.

"இருவது வருஷமா சுகர் இருக்கறவங்க சுகர் டெஸ்ட் மட்டும் பார்த்துட்டு நல்லா இருக்கோம்னு இருந்துடக் கூடாதும்மா. இதெல்லாமும் அப்பப்ப பார்த்துக்கணும்"

ஒரு துண்டு சீட்டில் 1. E C G ,  2. A B I  என்றெழுதி "எதிர்ல இருக்குற லேப்ல எடுத்துட்டு வாங்க" என்றவர் அடுத்த நோயாளிக்காக மணியடிக்கிறார்.

நெஞ்சு வலியில்ல. மூச்சடைக்கலை. மயக்கம் கூட இல்லை. எதுக்கு ஈ சி ஜி? மிரள்கிறார் பெரியம்மா. அதென்ன ஏ பி ஐ?

பரிசோதிக்கும் பெண்ணிடம் கேட்டுப் பார்க்கிறார்.

"ஈ சி ஜி  நார்மல்.
ஏ பி ஐ ன்னா காலிலேயும் கையிலேயும் இரத்த ஓட்டம் எப்படியிருக்குன்னு பார்க்கறது பெரியம்மா. கொஞ்சம் தான் வித்தியாசம் காட்டுது. டாக்டர் சொல்லுவார் மேற்கொண்டு"

ரூபாய் 450/-ஐக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு, ஏ பி ஐ டெஸ்ட் கவர் மூலையில் ரூ.300/- என்று குறித்து தந்துவிட்டு பரிசோதனைக் கூடப் பெண் அடுத்த சோதனைக்கு நிற்பவரிடம் போகிறார்.

மறுபடி டாக்டர்,

ஒரு ஐந்து நாளைக்கு மருந்து எழுதறேன். சுகர் மாத்திரை வேற எழுதியிருக்கேன். திரும்ப வாங்க.

"அப்ப ... இந்த தும்மல், இருமல்..."

"அலர்ஜிக்கும் ஒரு மாத்திரை எழுதியிருக்கேன்."

மருந்துக் கடைக்காரர் மாத்திரைகளை தந்துவிட்டு 550 தாங்க என்றார்.

"டாக்டர் பீசும் சேர்த்து தானே..."

"ஆமா... டாக்டருக்கு 130, சுகர் டெஸ்ட் 60, பாக்கி மாத்திரை."
வராத மயக்கம் வரும் இனி?!



Share on:
                                                
     பதினோராவது தடவையாக கைப்பேசியை உயிர்ப்பித்து  மணி பார்க்கிறேன். வண்டி வரும் தடயமில்லை. 5.35 ஆகிடுச்சு. மத்தியப் பேருந்து நிலையத்தில் 5.20 க்கு சரியா கிளம்பியிருக்கணுமே... கெளம்பறச்சே பேருந்துல தான் ஏதேனும் கோளாறோ... மந்தாரக் குப்பம் போய்விடலாமா? விருத்தாசலம் வழியா வர்ற சேலம் –சிதம்பரம் வண்டி ஏதாவது கெடைக்கலாம்.... சிதம்பரம் போயி மாயவரம் போகணும். ம்ம்ம்...
                என்னோடு புதுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் மர நிழலில் தலை நுழைத்து நிற்கும் சிலரும் பேருந்து வரும் பாதையை நோக்கிய படி மனச் சலனம் புலப்பட தவிப்புடன் நின்றிருந்தனர்.
     கிராமங்களில் குளமிருந்த காலத்தில் கும்மாளம் போடும் சிறுசுங்க  கரையேற மனசில்லாம ஆட்டம் போடுறாப்ல  சூரியன் மேற்கே வேகமா இறங்காத அழும்பினால் உடம்பு  தன் தட்பவெப்பத்தை சமன் செய்துக்க வியர்த்துக் கொட்டுது. பொழுதுக்கும் சூடேறிய தார்ச்சாலையின் வெம்மையில் காற்றும் தாகத்துல தவிக்குது. பையிலிருக்கும் தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் நாவறட்சியை பண்டமாற்றினேன்.
                இருக்கிற கவலை போதாமல், இந்நேரம் தான் புறப்படும் அவதியில் தலைவலித் தைலம் எடுத்து வைத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்து தொலைத்தது. எப்போதும் ஊர்ப்பயணத்துக்கு எடுத்துப் போகும் பையில் ஒரு தைல பாட்டில் இருக்கும். அதுவும் சாவு வீட்டுக்கு போகும் போது பணப்பை இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ தலைவலித் தைலம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன்.  இன்று வேறு பை.
                சாவு வீட்டில் ஓய்ந்து ஓய்ந்து கேட்குற ஒப்பாரி ஒலியும் பயணக் களைப்பும் தலைவலியை  தட்டியெழுப்பிடும். எந்த பயணத்துக்கும் வீட்டு வாசலைத் தாண்டும் வரைக்கும்  திரும்பி வரும் வரை தேவையான முன் தயாரிப்பு வேலைகளை செய்து முடிகும் அலுப்பு வேறு. சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே... அப்பப்பா. கடமைக்கு வற்புறுத்தி கையில் திணித்துப் போகும் மக்களை பார்த்தாலே மண்டை தெறிக்கும்.. இப்போதெல்லாம் அவங்க திணிச்சுட்டு நகர்ந்தவுடனே உட்கார்ந்த இடத்திலேயே மூலை முடுக்கில் அந்த அரைச் சூட்டுக் கசாயத்தை தள்ளிவிட்டு தப்பிக்க பழகியாச்சு.
                சரி. சிதம்பரத்தில் இறங்கியவுடன் ஞாபகமாக ஒரு தைலம் வாங்கிக்கலாம்.  இவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா கலந்த காபியை ஒரு ஆத்து ஆத்தியாவது குடிச்சிருக்கலாம்... சுட்டுகிட்ட நாக்கு முணங்கியது. எங்க கிளம்பினாலும் எந்த நேரமானாலும் ஒருவாய் காபியை ஊத்திகிட்டு தான் கெளம்பறது. பழகிப்போன பொம்பளைக் குடி. அவரோட வரும்போது சில நேரம் பேருந்து போயிட்டா அடுத்த வண்டி வர்ற வரைக்கும் நிற்கும் போது சொல்லுவார்... “அந்தக் காபியை போடாம கெளம்பி இருந்தா இந்நேரம் போயிட்டு இருக்கலாம்ல”.
                ‘வந்தாரய்யா பெருமாள்' ன்னு விஜயலட்சுமி நவநீதக் கிருஷ்ணன் பாடும் உற்சாகக் குரலில்
Share on:
புத்தக ஆக்கத்தில் இரண்டாம் கவிதைத் தொகுப்பு....
(அட்டை வடிவமைப்பு செ சிபிக்குமார்)
  இதுவொரு அறிவிப்பு மற்றும் ஆசி கோரல்...

Share on:


சந்தர்ப்பம் வரும்போது தயாராக இல்லாமல் தாமதிப்பது தோல்வியைத் தான் தரும். முதன் முதல் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்கலத்தின் முதண்மை விமானி எட்வின் சி.ஆல்ட்ரின். இவர் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண்நடையில் அனுபவம் உள்ளவர் என்பதால் முதண்மை விமானியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் கப்பல் படையில் பணிபுரிந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். நல்ல தைரியசாலி. இவர் துணை விமானியாக (கோ-பைலட்) நியமிக்கப்பட்டார்.

     விண்கலம் நிலவை அடைந்ததும் நாசா விண்வெளி மையத்திலிருந்து பைலட் (எட்வின் சி.ஆல்ட்ரின்) இறங்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது. புவி ஈர்ப்பு விசையற்ற நிலவில் புதைமணலோ, எரிமணலோ என்ற தயக்கத்தில் சில நொடிகள் எட்வின் தாமதிக்க, நாசாவிலிருந்து கோ- பைலட் இறங்க உத்தரவு வந்துவிட்டது. உலக வரலாறு ஒருநொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் ஆல்ட்ரினை இன்று யாருக்கும் தெரியவில்லை. முதலாவதாக வருபவரைத் தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல; தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கும் இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.

ஒரு நிமிடத் தயக்கம் நம் மிகப்பெரும் வெற்றியை தடுத்துவிடும் அபாயம் நிறைந்தது. நம் சாதனையை முறியடிக்கும் முதல் எதிரி நம் தயக்கம் கூச்சம் பயம் இவையே. சுருதி மீட்டுவதிலேயே காலம் போகிறதோ... என்ற தாகூரின் வரிகள் சிந்தனைக்குரியது. நாதத்தின் தரத்தை காலம்தான் கணிக்க வேண்டும்.

Share on:


சூரியப் பேரொளியில்
வானத்து நிறத்தையுடுத்தி
தகதகக்கிறது
அணைக்கட்டில் சுழித்தோடும் நதிநீர்.

பாதையில் முந்தைய நாள்
அடித்துப் பெய்த மழைச்சுவடு
சற்றுமற்று உருகிய தார்
செருப்பு தாண்டிச்  சூடேற்ற

நீர்த்தேக்க மதகுகளின் நிழல்விழும் பகுதியில்
நிற்குமென் பார்வையில்
மேம்பால ஏற்றத்தில்
மெதுமெதுவாய் ஊர்ந்திடுமோர்
ஊர்தியின் தூரக்காட்சி.

சுதந்திரதினக் கொண்டாட்டத்தில்
குழந்தைகள் குழாம் சேர்ந்தும் பிரிந்தும்
பல்லுருக் காட்டுதல் போல்
தொடுவானின் வெண்மேகங்கள்
கற்பனை கூட்ட

மதகுநிழலருகின் ஆழம்காணா நீரோட்டம்
மேற்பரப்பில் அலையடிக்கிறது சிலுசிலுப்பாய்
காற்றின் துணைகொண்டு...
சில பாய்மரப் படகுகளும் காற்றோட்டத்தில்
அசைந்தாடிச் செல்ல

எதிலிருக்கிறாய் நீ?
ஊர்தியின் எரிபொருளாகவா...
பாய்மரத் துடுப்பாகவா...
பஞ்சபூதங்களிலுமா?
தேடுமென்னுள்ளேயா..!





Share on:
அ. முத்துலிங்கம் எழுதிய ‘ஒன்றுக்கும் உதவாதவன்' தொகுப்பு யதேச்சையாக உறவுக்காரர் வீட்டில் கண்டெடுத்தேன். நானும் கணவரும் அவரது எழுத்தின் ரசிப்புக்காரர்கள். எங்களிடமுள்ள அவரது புத்தகங்களில் இத்தொகுப்பு விடுபட்டிருந்தது.

  விலை கொடுத்து வாங்கிய புத்தகங்கள் வீட்டில் குவிந்திருந்தாலும் சிலநேரம் இரவல் கேட்டேனும் படித்துவிடும் அவாவை சில புத்தகங்கள் கிளப்பிவிடும்.

எங்களுடன் வீடுவந்தது தொகுப்பு. 2011 -ல் உயிர்மை வெளியீடு.

பக்கத்திலமர்ந்து  உரையாடும் மதிநிறை நண்பனைப்போல் அவரின் எழுத்து நடை நம்மை சிநேகிக்கும். சம்பவங்களை சுவைபட ஆங்காங்கே பொடி வைத்து சொல்லி படிப்பவருக்கு பேரின்பம் தர வல்லவை அவரது படைப்புகள். நுட்பமாக அவர் சொல்லிச் செல்பவை நம்மை அசைபோட வைத்து விடும். சர்வசாதாரணமாக வாழ்வின் பெரிய பெரிய ஆழங்களை கைபிடித்து காட்டிச் செல்வதில் சமர்த்தர் அ.மு.

58 தலைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பில் ஒவ்வொன்றிலும் நமக்கொரு உணரத்தக்க வெளிச்சமிருக்கிறது. 18வதாக இடம்பெற்றிருக்கும் ‘கூஸ்பெர்ரிஸ்' பற்றி இன்றைய பதிவின் பகிர்வு.
Share on:


சதுரங்களால் சூழப்பட்ட
நம் கிராமத்து இருப்பிடங்களில்
ஏதேனுமோர்
அல்லது எல்லா மூலைகளிலும்
எப்போதேனும் வேண்டியிருக்கும்
நமதுடைமைகள் நிரம்பிக் கிடக்க...

அவற்றை இடறாதபடி
எஞ்சிய இடத்தில்
நடமாடப் பழகின
நம் சிறுபிராயக் கால்கள்...

இரண்டு அறை, மூன்று அறை கொண்ட நம்
நகரத்து வசிப்பிடங்களில்
அறைதோறும் தலைக்குமேல்
சிமெண்ட் பரண்களில்
ஏறிக்கொண்டன
என்றேனும் உதவுமென ஏறக்கட்டியவை...

பேருந்து நிலையங்கள்
திரைப்பட அரங்குகள்
வழிபாட்டுத் தலங்கள்
இன்னபிற பொதுஇடங்களிலும்
எங்கேனுமோர்
நடமாட்டமற்ற மூலைகளில்
வீடற்ற வாழ்வுற்றோரின்
உடமைகள் இடம் பிடிக்க...

நம்
மனசின் ஒரு மூலையிலோ
வீட்டின் ஒரு முடுக்கிலோ
ஒடுங்க இடமற்ற
வயசாளிகள் புகல்வதால் பெருகும்
முதியோர் இல்லங்களின்
மூலைமுடுக்கெல்லாம்
வெறிச்சிட்டுக் கிடக்கின்றன
அவர்களின்
மனத்துயரைப் பறையறிவித்து.

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • “மின்மினிகளால் ஒரு கடிதம்”- அப்துல் ரஹ்மான்
    *விளக்காக எரித்தல் விட்டிலாக எரிதல் வேறென்ன இருக்கிறது காதலில்? ^^^^^^^^^^^^^^^ *நான் தவளை என் கிணறு நீ இது என் பெருமை. ^^^^^^^^^^^^...

Blog Archive

  • ▼  2020 (1)
    • ▼  March (1)
      • வானில் சில தாமரைகள்
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    புதிய தாலாட்டு
    1 day ago
  • கீதமஞ்சரி
    மலைகளுக்கு நடுவில் மனம் மயக்கும் சோலை
    2 months ago
  • CrUcifiXioN
    Vintage collections
    4 months ago
  • முத்துச்சிதறல்
    துபாயில் ஏவுகணைகள்!!
    6 months ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    Hello world!
    8 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    சீட்டுக்கவி
    1 year ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    1 year ago
  • ஹரணி பக்கங்கள்.......
    2 years ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    6 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    6 years ago
  • Thanjai Kavithai
    8 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    8 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    9 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    9 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    9 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    9 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    10 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    10 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    10 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    11 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    12 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    13 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    14 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    15 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates