எங்களுக்கு புயலுடன் தொடங்கிய புத்தாண்டு இது. 'தானே' புயலில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறோம் ஒருவாறாய் .
'நாங்களும்' ஆண்டிறுதி முதல், ஆண்டு தொடக்கம் வரை
( 30 . 12 . 2011 - 5 . 1 . 2012 ) ஆறேழு நாட்கள் மின்தடையை அனுபவித்து வாழ்ந்தோம்.(சந்தோஷப் படுங்கள் மக்களே... தினசரி மின்தடை அனுபவித்த உங்கள் வேதனைக்கு மருந்தாய் இருக்கட்டும் இச்செய்தி.)
மனிதர்களை விடுத்து மரங்களைத் தாக்கி அழித்தொழித்தது புயல்.
கடந்த ஒரு வாரமாய் கலவர பூமியாய் காட்சியளித்தது எங்கள் ஊரின் தெருக்களும் தோட்டங்களும்.
தாறுமாறாய் வீழ்ந்து கிடக்கும் மரங்கள் ஈழத்து தமிழ் மனிதர்களாய் தோற்ற மயக்கம் தந்தன எனக்கு...
டிசம்பர் 30 , 2011 அதிகாலை தொடங்கிய 'தானே' புயலின் சேதாரங்களில் இருந்து நெய்வேலி மீண்டெழ, கட்டமைக்கப் பட்ட நகரான இவ்வூரின் நகர நிர்வாகம் சிறப்பான செயல்பாடினை செய்து வருகிறது .
புயல் பற்றிய அனுபவங்கள் அடுத்த பதிவில்...
கபீர்தாஸ் கண்ணிகள்-30
(தமிழில்: ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்)
கபீர்தாஸ் ஒரு பக்திக் கவி; பதினைந்தாம் நூற்றாண்டுக்காரர்; உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். Couplets-கண்ணிகள்-இரண்டிரண்டு அடிகளால் ஆன இவை Dohas என்றும் சொல்லப்படுகின்றன. இரவீந்திரநாத் தாகூர் கூட இவரின் சில கண்ணிகளை (காண்க: One Hundred Poem of Kabir) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கபீர்தாஸின் பஜன்கள் அளவுக்குக் கண்ணிகள் பரவலாக இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தாள்நிலம், ஏழுகடல் தான்மசி; பேனாவாய்
நீள்தருக்கள் கொண்டும் நினைஎழுதி மாலதுமோ?
கட்டிப் பனியுருகி நீரிற் கலப்பதுபோல்
ஒட்டி அவனோடும் ஒன்றாத லேபக்தி!
*
உன்னுடைய நூலகத்தை ஓடையிலே வீசியெறி!
என்னபயன் ராமனில் இன்னமும் ஆழாமல்?
கத்துகிறாய் பட்டினியில்! காதுதந்து கேட்பார்யார்?
மெத்தஒரு கர்ப்பத்தில் மேல் அவனே தாங்கலையா?
*
அன்னமும் நாரையை அல்லவா ஒத்திருக்கும்?
பின்னதோ மீன் உண்ணும்; முன்னதோ முத்துமணி!
சிந்து மழைத்துளிக்கே சிப்பி கடல்மிதக்கும்;
அந்தோ துளிகுடித்தால் ஆழி அடியொதுங்கும்!
*
பாலும் விஷமாகும் பாம்புக்கே வார்த்திட்டால்!
ஞாலத்தில் தீயவரால் நல்லதுவும் மாறிவிடும்!
“நான்” ,“எனது” விட்டுவிட்டால் நல்லவன்யார் உன்னைவிட?
ஏன், வாழ்வின் நங்கூரம் இந்த நிலைத்தமனம்!
*
தாகித்தும் சக்ரவாகம் தண்ணீர் அருந்தாமல்
வேகத் துடன்பெய்ய வேண்டும் மழைக்கடவுள்!
வட்டப்பூ வாட; உதயமோ அத்தமிக்க...
கட்டல் நொறுங்க; குழந்தையோ தான்மரிக்க...!
*
பூத்த மலரைப் பறித்தாந்தோட் டக்காரன்,
“பார்த்துக்கோ, நாளை நமதுமுறை!” மொக்குசொலும்!
எச்சரிக்கும் மண்சேறும்: “ஏ குயவா நீ
அச்சோ அழுத்தாதே வாய்ப்பு வருமெனக்கும்!”
*
ஓர்நாள் நடக்கும் இது! உன்னையும் பார்ப்பவர் ஆர்?
பாரியாளும் பேசாள்; பறக்கும் உலகமிது!
தெப்பமாய் பாம்பையெலாம் தேடிநீ கட்டிவிட்டால்
அப்போ கடல்தாண்டி அக்கரையுஞ் சேர்வாயா?
*
பா(கு)இனிப் புக்குப் பறந்த ஈ கால்,சிறகு
நோகஒட்டிக் கொண்டதே நொந்து வெளிவராமல்!
சிங்கத்தின் பிம்பம் தெரியக் கிணற்றுநீரில்
பங்கம்; விழுந்(து)இறக்க வைக்கும் முயலொன்று!
*
முந்திப்போம் ஆட்டுவழி, மந்தையே போம்,அலவா?
சிந்திப்போம் என்றிலையே... செல்லுகிறோம் ஈதேபோல்!
*
“வீழ்ந்த பிறகும் விருட்சம் உன்னோ(டு) ஒட்டுவனா?”
ஆழ்ந்த வருத்தத்தில் ஆடி இலைவீழும்!
வானகத்து வீடிருந்து வந்தான் விருந்தாளி,
கானகத்து மேற்பயணம்; காப்பாற்ற சாவுதுணை!
*
வாராப் புதையும் வடவாக் கினியாலே!
ஆரறி வார்தகிப்பை ஆர்க்கும் கடல்தவிர?
விண்ணின் நிலவொளியால் மண்தா மரைமலரும்;
அண்மையா கும்தூரம் அன்புக்(கு) உருகிட்டால்!
*
தாகம் எடுத்திட்டால் சாக்கடைநீர் ஆர்குடிப்பார்?
ஆ,கங்கை யோடுசேர்ந்தால் ஆரே குடிக்காதார்?
வீழ்த்தி விடுவான் விறகுவெட்டி என்னைவிடு;
பார்த்தானா உச்சிப் பறவை களைஎண்ணி?
*
இழித்துமே பேசலும் ஏன்கால்கீழ்ப் புல்லை;
விழியுங் கிழிபடலாம் வேகமாய்த் தானெழுந்தால்!
ஓடத்துள் நீர்வந்தால் வீட்டுக்குள் காசுவந்தால்
ஓடிவெளி ஏற்றிடுவர் உத்தமர் எல்லோரும்!
*
கானில் மலர்கள் கனிகளெலாம் ஏராளம்;
மானிடனே, தித்திப்பை விட்டேன் அலைகின்றாய்?
அன்னம் பறக்கிற(து) ஆகாயம், புல்லைவிட்டும்!
தண்ணீர் பருகும் தரைவீடு தான்மறந்தும்!
*
நீலக் கடல்வீழ்ந்த நீர்ச்சொட்டா மீண்டுவரும்?
வாலறிவன் தேடி வழியை இழந்தேனே!
வேண்டிய(து) ஆறடிதான்; விண்முட்டும் மாளிகைஏன்?
ஈண்டெதற்குப் பேராசை? ஏராளக் கர்வங்கள்?
*
பற்றோ கவர்ச்சிமிகு பாவையைப் போல்;விரட்டிச்
சற்றே துரத்திடினும் சட்டென வந்தொட்டும்!
(நன்றி: திசை எட்டும்)
கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும்
கதைகளால் விழிப்படைந்த பகல்களும்...
கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன...?
சிலருக்குப் பாட்டி...
சிலருக்கு அத்தை...
சிலருக்கு அப்பா... எனக் கதை சொல்லும் உறவுமுறை வேண்டுமானால் சமயங்களில் மாறுபடலாம்.
ஆனால், கதை கேட்டுக் கேட்டுத் தூங்கிய ஆழ்மனசில் ‘கதை'யின் மேலான ஈர்ப்பு நிரந்தரமாகிவிடுகிறது.
ஆக, நம்மில் பலருக்கு சிறுபிராயத்தில் அருகில் படுத்து, முதுகைத் தட்டி, தலையைக் கோதி, கால்களை வருடி தூக்கத் துணையாகும் உறவொன்று நீங்காமல் நிலைத்திருக்கும் மனசின் ஆழத்தில். வாழ்தலில் நிறைந்துள்ள நல்லது கெட்டதுகளை தான் சொல்லும் கதையுள் பொதிந்து கூறித் தூங்கச் செய்த அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை.
எனக்குள் விதைத்தவர்களும் துளிர்த்தபடியே ...
* * * * *
மெளனமே... மெளனமே....
வீட்டில்
பேருந்தில்
அலுவலகத்தில்
கடைத்தெருவில் என
அன்றாடங்களை நிறைக்கும்
காதடைக்கும் புறவொலிகள்...
எப்போதேனும் போக வாய்க்கும்
கேட்க,
பேசவியலா
மாற்றுத் திறனாளிகளின்
பள்ளி வளாகத்தில்
பெரும்பாலும்
மெளனத்தின் கச்சேரி...
செவிக்கினிதாய்.
*****
மெளனத்தின் பேரிரைச்சல்
போகும் போதெல்லாம்
புன்னகைத்து முதுகு தட்டுவார்
குடும்ப வைத்தியர்...
“எல்லாம் சரியாகிவிடும்.”
இதற்குப் பின்னும்
எஞ்சிய நோயை
மருந்துகள் விரட்டிவிடும்.
காலப் போக்கில்
வியாதியின் உக்கிரம்
மருந்துகளை ஏய்த்திட
மீண்டுமொரு சந்திப்பு
மருத்துவரோடு...
அறிகுறிகள், அவஸ்தைகளை
பட்டியலிட்டேன்
காலண்டர் சென்று
மீண்ட அவரின் கண்கள்
தழைந்தன தரை நோக்கி...
மிஞ்சிய நாளை எண்ணுவது போல.
உற்சாகத் தட்டலில்லை
ஒய்யாரச் சிரிப்பில்லை
அறை முழுக்க
மெளனத்தின் பேரிரைச்சல்.
துள்ளும் கன்றை
கயிறு கொண்டு கட்டுதல் போல்
எங்களிருவர் நாவை
இழுத்துக் கட்டியது
எல்லாவற்றையும் மிஞ்சிய
இறைச் செயல்.
மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு.
கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது.
“எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே மாரி கேட்கிறான்.
“இத்தோட பதினெட்டு ஆவுது... போதாது...?” காசாம்புவுக்கும் உட்கார்ந்தால் தேவலை என்ற அசதி ஒலிக்கிறது குரலில்.
“போதும் போ... பதினெட்டஞ்சி தொண்ணூறு... பேரத்துல பத்திருபது கொறஞ்சாலும் பாதகமில்ல. சுள்ளான் மண்டியில கடன் சொல்லி வாங்கியாந்த காய்கறிங்க இருவது கிலோயிருக்கு. இதுங்களை வித்து முதலாக்கி வூடு வந்து சேர்ந்தாலே போதுமாச்சே. போய் எனக்கு ஏதாச்சும் நீராகாரமிருந்தா எடுத்து வெய். அந்தக் கண்ணியோரமா துளுத்துக் கெடக்குற வல்லாரையையும், மொடக்கத்தானையும் ஆய்ஞ்சினு வாரேன். சுண்டக்காய் பறிச்சு வெச்சியா?”
அந்திக் காற்று பகலின் புழுக்கத்தை மட்டுப்படுத்துவதாயிருந்தது. வாசல் கதவை விரியத் திறந்து வைத்து முன் நடையில் சுவரோரத்தை ஆக்கிரமித்திருக்கும் மரப் பலகையில் அமர்ந்திருக்கிறார் சங்கரசுப்பு. திறந்திருக்கும் கதவின் உபயத்தால் தெருக்கோடிவரை அவரது பார்வையின் எல்லைக்குள் அடங்குகிறது.
உள்ளிருந்து கமழும் பில்டர் காபியின் மணத்தை ‘இன்னும்... இன்னும்' என நுரையீரலை விரித்து உள்ளனுப்புகிறது அவரது நாசியின் நுகர்திறன். சாயங்காலம் வாங்கும் இருநூறு மிலி பாலில் இவருக்கொரு கும்மோணம் டிகிரி காபியும், தனக்கொரு டீத்தண்ணியும் போட்டு, மிஞ்சும் ஐம்பது மிலி பாலை உறை ஊற்றி மறுநாளுக்கான மோராக்கிவிடும் சாமர்த்தியம் வேண்டியிருக்கிறது அவரது மனைவி கமலத்துக்கு.
நுரைத்துத் தளும்பும் காபியை ஏந்திவரும் மனைவி தேவதையாகவே தெரிகிறாள். ஏதாவது வாங்கிவரச் சொல்லிப் பையுடன் தலைகாட்டும்போது மட்டும் அரக்கியாக மாறிக் காட்சியளிப்பாள் அவரது அகக்கண்ணுக்கு.
‘பணமும் பத்தாக இருக்கணும்; பிள்ளையும் முத்தாக இருக்கணும்' அவருக்கு. அதற்குத் தோதாக, கல்யாணமான புதிதில் கமலத்தின் வயிறு திறக்க வந்த ஒற்றைக் கருவும் முத்துக் கர்ப்பமாக, கருப்பை தவிர்த்து ஃபெலோபியன் டியூபில் தங்கி அற்பாயுசில் மடிந்தது. அதன் பிறகு அவர்கள் வீட்டுக் குடும்ப அட்டையில் இரண்டு நபர் மட்டுமே நிரந்தரமாகிப் போயினர்.
காபியை ஆற்றி ஆற்றி நுரை கூட்டி கடைசி சொட்டு வரை ரசித்து உறிஞ்சுகிறார். நுரைக் குமிழ்கள் அவர் வாயுள் இரகசிய சப்தமெழுப்பியபடி உடைந்து மறைகின்றன. நாவின் சுவையுணர் அரும்புகள் விரிந்து விகசித்து ‘ஆகா... ஆகா' என தேவசுகம் தருவிக்கிறது அவருக்கு.
தணலிடையே உடல் கருகுவதுபோல் அக்னிச் சூரியனின் தகிப்பு! மின் விசிறியின் இறைச்சலுக்கு சற்றும் பயமற்று அனல் காற்று சுழன்றடித்தது அறை முழுதும். வேறு வழியின்றி, முற்றத்து தொட்டித் தண்ணீரில் ஒரு வாளி மொண்டு வாசலில் விசிறி, தெருக்கதவைத் திறந்து வைத்தாள் ரம்யா. பசித்த காக்கைக் கூட்டம் படைத்த உணவெடுக்கும் வேகத்தில் ஆவியானது நீர்த்தடம். சளைக்காமல் மறுபடி மறுபடி தெளித்த நீரில் மட்டுப் பட்டு தண்மையேறியது காற்றுக்கு. அப்பாடாவென ஆயாசப் பெருமூச்சோடு உள்நுழைந்து அவளுடன் உறவாடியது மெல்ல.
நேற்று வேலையோடு வேலையாக தைத்து வைத்த இரவிக்கைகளையும், ஊசி-நூல்கண்டு-ஊக்கு வகையறாக்களையும் சேகரித்து வந்தமர்ந்தாள் காற்றாட.
குழந்தைகள் கிராமத்திலிருக்கும் தாத்தா பாட்டியுடன் விடுமுறையை உற்சாகமாகக் கழிக்க, துணைவரின் பணிக்கும், உணவகச் சாப்பாடு ஒவ்வாத அவரது பிணிக்குமாய் அவளது இருப்பு இங்கே என்றானது.
இல்லறம் பெண்களுக்கான விடுப்பை எப்போதும் எளிதாக்குவதில்லையே. நாகரீகமும் நகர நெருக்கடிகளும் உடல்சார் ‘விடாய்' காலங்களைக் கூட புறந்தள்ளி விட்டதால் அவரவர்க்கான ஓய்வு நேரம் அவரவர் மனப்பாங்காகி விட்ட சூழல். அன்றாட அலுவல்களும், துடைக்கவும், அடுக்கவும், தைக்கவும், பின்னவுமாக வேலைக்கும் நேரத்துக்கும் எப்போதும் போல் சடுகுடு.
சத்தமின்றி வந்து நின்ற இ-பைக்கில் காலூன்றியபடி, ‘சார் இருக்காரா?' என்றவர் கணவரின் அலுவலக சகா.