1. மனிதனின் இலட்சியம் இன்பமல்ல... ஞானமடைதல்.
எந்த சூழலிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன். நம் ஒவ்வொரு எண்ணத்திலும் நமது குணம் படிந்திருக்கிறது. தொடர்ந்த பழக்கங்கள் மட்டுமே குணத்தை மாற்றியமைக்க முடியும். குணத்தை உருவாக்குவதிலும் செப்பனிடுவதிலும் நன்மை தீமைகளுக்கு சம இடம் உண்டு.
இன்பதுன்பம் நமது பேராசான். இன்பங்களை விடத் துன்பங்களே... செல்வத்தை விட வறுமையே... புகழ்மொழிகளைவிட ஏமாற்றங்களே மனித அக ஆற்றலை வெளிக் கொணர்கின்றன.
2.உனக்குள்ளிருக்கும் ஆன்மாவை விழித்தெழச் செய்.
ஆன்மாதான் உண்மையான மனிதன். அவன் பயமும், அழிவும், பந்தமுமற்றவன். ஆன்மாவின் எல்லையற்ற ஆற்றல் ஜடப்பொருளில் செயல்படும் போது பெளதீக வளர்ச்சி உண்டாகிறது. எண்ணத்தில் செயல்பட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகிறது. தன்னிடமே செயல்படும்போது மனிதன் தெய்வமாகிறான்.
மிக உயர்ந்த அறிவு ஆன்மீக அறிவே. புலன்வழிச் செல்லும் வாழ்வில் மரணம் தான் இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் ஒரு உடற்பயிற்சிக் கூடமெனலாம். எல்லாப் பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. செயல் புரிவதும் ஆன்மீகச் சாதனைகளுள் ஒன்று. செயலின் லட்சியமே ஆன்மாவின் வெளிப்பாடுதான்.
3.தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னையே அடக்கியாள்கிறான்
தனக்குத் தானே கட்டுப்பாடு உள்ளவன் மீது வெளியிலுள்ள எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது.
துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து முன்னேறக் கூடியது ஒழுக்கம் ஒன்றுதான்.
நல்ல பொருளாக இருந்தால் நட்பும், துன்பத்தில் இரக்கமும், நல்ல விஷயத்தில் மகிழ்ச்சியும், தீய விஷயங்களில் அலட்சியமும் கொள்ள வேண்டும்.
4.நமது வெறுப்பையும் கோபத்தையும் அடக்கும் போது அந்தளவிற்கு நல்ல ஆற்றல் சேமிக்கப் படுகிறது.
வெறுப்பும் அன்பும் டைனமோ மின்னோட்டம் போல், புறப்பட்ட இடத்தையே திரும்ப வந்தடையும். பணத்தால், பெயரால், புகழால், கல்வியால் பயனில்லை. அன்பு ஒன்றே பயன் தருவது.
அன்பின் வழியாக மட்டுமே கடமை, இனிமையானதாக இருக்க முடியும். சுதந்திர நிலையில் மட்டுமே அன்பு பிரகாசிக்க முடியும்.
அன்பு, அறம், புனிதம் இவை நம்மிடம் வளரும்தோறும் அவற்றை வெளியிலும் அதிகமாகக் காண்போம். ஒரு துளி நீர் பிரபஞ்சத்தையே தாங்க வல்லது என்ற (Hydrostatic Paradox) கோட்பாடு போன்றது இது.
நமது முன்னேற்றத்தின் ஒவ்வொரு அடியும் அன்பின் ஆற்றலாலேயே ஏற்பட்டுள்ளது. அமைதியையும், ஆசிகளையும் விளைவாகக் கொண்டுவராத அன்புச் செயல்கள் எதுவுமேயில்லை.
5.அமைதியான, மன்னிக்கக் கூடிய, சமநோக்குடைய, நிலைகுலையாத மனம் உடையவனே மிக அதிக அளவு செயல்புரிய முடிகிறது.
ஒருவன் எந்தளவிற்கு மகத்தானவனாக ஆகிறானோ அந்தளவிற்குக் கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
6.முழுத் தன்னல மறுப்புதான் எல்லா நன்னெறிகளுகக்கும் அடிப்படை.
சுயநலமின்மையின் அளவைப் பொறுத்தே வெற்றியின் அளவும் உள்ளது.சொந்த ஆசைகளால் தூண்டப் படாதவன் தான், சுயநலம் துளியும் இல்லாதவன் தான் செயல் புரிய முடியும்.
பிறருக்கு உதவுவது என்பது நமக்கே நாம் உதவுவதுதான். கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் எல்லாமே பிறருக்குக் கொடுக்கத்தான்.
எதையும் வேண்டாதீர்கள். பிரதியாக எதையும் விரும்பாதீர்கள். கொள்வதும் கொடுப்பதும் ஆனதோர் எந்திரம் மட்டுமே நீங்கள். கொள்வது கொடுப்பதற்கே.
7.எல்லையற்றதான சமுதாயத்துடன் ஒன்றி, அதன் இன்பத்தில் இன்பமும், துன்பத்தில் துன்பமுமாக மெல்ல முன்னேறுவதே தனிமனிதனின் ஒரே கடமை.
நாம் வலிமை மிக்கவர்கள். எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள்.ஏழைகளுக்காக... பாமரர்களுக்காக... ஒதுக்கப் பட்டவர்களுக்காக இரக்கப் படுவோம். எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப் படுத்தி, நற்சிந்தனைகளை நிரப்புவோம். மனித மனதின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
எழுங்கள்.... விழியுங்கள்... குறிக்கோளடையும் வரை நில்லாது முன் செல்லுங்கள்!
நூற் பெயர்: உன் எதிர்காலம் உன் கையில்!
படைப்பு : சுவாமி விவேகானந்தர்
வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
மயிலாப்பூர், சென்னை-4.
மிகச் சிறப்பான காலத்தால் அழியாத சிந்தனைகள்.அடிப்படையில் எளிதாகவும் நல்ல திசை காட்டியாகவும் விளங்கக்கூடிய தத்துவங்கள். அறிமுகத்துக்கு நன்றி நிலாமகள்.
ReplyDeleteநல்ல அறிமுகம். நன்றி சகோ.
ReplyDeleteநல்லதோர் நூல் அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDelete//முழுத் தன்னல மறுப்புதான் எல்லா நன்னெறிகளுக்கும் அடிப்படை//
ReplyDeleteஅத்தனையுமே முத்துக்கள். வாசிக்கும்போதே அதன் சாரம் மனதில் படிகிறது. மனித இயல்பு சட்டென்று எதையும் மறப்பது. இப்படி நினைவூட்டப்படும்போது அதன் தாக்கம் மீண்டும் கிட்டுகிறது.. நன்றி.
நல்ல நூல் அறிமுகத்துக்கு நன்றி நிலா..
ReplyDeleteநலமா நிலா?
ReplyDelete‘வாழ்க்கை ஒரு பரீட்சை;கடவுள் சில கட்டங்களில் சோதனைகளைத் தந்து நாம் எப்படி அதனைக் கடக்கிறோம் என்று கவனித்துக் கொண்டிருக்கிறாராம்’ என்பாள் என் ஆஃப்கானிஸ்தான் தோழி ஒருத்தி.
நல்ல சிந்தனைகள் நிலா.
ஒவ்வொரு மனிதரும் பயிற்சி
ReplyDeleteசெய்ய வேண்டிய விஷயங்கள்.
எல்லாவற்றையும் முடியாவிட்டாலும்
ஒவ்வொன்றாகவேனும்.
நன்றி நிலா.
"ஆன்மா தான் உண்மையான மனிதன்”
ReplyDeleteஎவ்வளவு சத்யமான வார்த்தை?
@சுந்தர்ஜி...
ReplyDelete@வெங்கட்...
@ஆதி...
@ரிஷபன்...
@கிருஷ்ணப் பிரியா...
@மணிமேகலா...
@சந்தான கிருஷ்ணன் ...
@ஆர். ராமமூர்த்தி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...
விபரமறிந்த வயதிலேயே விவேகானந்தரை வாசிக்கும் பாக்கியம்... எனது தாய்மாமா மகன் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் பயின்ற காலத்தில் போட்டிகளில் பரிசாக வென்ற நூல்களின் தாக்கம். தற்சமயம் சில ஆண்டுகளாக பள்ளிகளில் நடத்தப்படும் மடத்தின் கட்டுரைப் போட்டிகளுக்கு மகளின் பங்களிப்பும் வாசிப்பின் தொடர்ந்த புதுப்பித்தல்களுக்கு ஏதுவாய்... தங்கள் அனைவருக்கும் இப்பதிவு, நினைவூட்டல்களாக, நற்சிந்தனைகளின் தூண்டல்களாக அமைந்தது மிக்க மகிழ்வை தந்தது.
நல்ல வரிகள் .. வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடர்ந்து எழுத வேண்டும் . வாசிக்க நாங்கள் தயார்
ReplyDelete