நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

காலங்களில் ‘அவர்' என் வசந்தம் (நிறைவு பகுதி)

Tuesday, 14 December 2010
முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்- காலங்களில் ‘அவர்' என் வசந்தம் பாகம் 1

“எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர்.


ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்துகிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு)

கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100
 வயசு வாழறதை விட, விருப்பமானதைச் சாப்பிட்டு எந்த வயசிலயும் போகலாம்' அப்படீம்பார்.

இராத்திரி படுக்க ரெண்டு மணியானாலும் விடியக்காலையில 4-5 மணிக்குள்ள எழுந்திடுவார். பேராசிரியர் வேலையிலயிருந்து ஓய்வு பெற்ற பெறகும் கூட, பதிப்பிக்கிற நூல்களுக்கு அச்சுப் பிழை சரி செய்யறது, பேப்பர், இங்க் மத்த பொருட்கள் வாங்கிட்டு வரது, படிக்கிறது, எழுதுறது, தேடி வர்ற நண்பர்கள் கிட்ட பேசறதுன்னு நாள் பூரா ஏதாவது செய்துகிட்டேயிருப்பார்.

தினம் தினம் பயணத்துக்கும், புத்தகக் கட்டுகளை சுமந்து எவ்வளவு தூரமும் நடக்கவும் அசராதவர். வெளியே போனா கடைசி வண்டியாவது பிடிச்சு ஊருக்கு வந்து வீட்டில் படுத்தாத் தான் அவருக்கு நிம்மதியாயிருக்கும்.

இப்பவும் ஊருக்குப் போயிருக்கார்... வந்துடுவார்ன்னு தான் நெனைச்சு நெனைச்சு, ஒரேயடியாப் போயிட்ட துக்கத்தைக் கரைச்சுக்கறேன். சிவகங்கையில எங்க வீட்டுல 30 வருஷமா ஒரு அம்மா வேலை பாத்துச்சு. இப்பவும் நான் ஊருக்குப் போனா அப்படித்தான் சொல்லும்... “ஐயா ஊருக்குப் போயிருக்கார்ம்மா... வந்துடுவார், கவலைப் படாம இருங்க.”

கவிக்கோ விருது வாங்க சென்னை போன போது, என் தம்பி கார்த்திகேயன் வீட்டில் திருவான்மியூரில் ஒரு மாசமிருந்தோம். தினமும் சாயங்காலமானா அப்துல் ரஹ்மான், மேத்தா, இந்தியா டுடேயிலிருந்த விஸ்வநாதன் எல்லாரும் இவரைப் பார்க்க வந்துடுவாங்க. என் தம்பி, இவர், அவங்க மூணு பேர் எல்லாருமா பீச்சுக்கு வாக்கிங் போயிட்டு 8.30 மணிக்கு மேல வீடு திரும்புவாங்க. அந்த ஒரு மாசமும் என்னோடவே அதிக நேரமிருந்தார். ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் அப்ப.

இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு. அதுவும், ஜெயலலிதா கண்ணகி சிலையை பீச்சுல இருந்து அப்புறப்படுத்தினப்போ தீர்ந்துச்சு. ‘அப்படியென்ன அந்த சிலை மேல பயப்படும் படி'ன்னு கேட்டேன் அவரை. அதிசயமா, ஒரு மணி நேரத்துல சிலப்பதிகாரம் காப்பியம் முழுக்க எனக்குப் புரியுற விதமா பாடம் மாதிரி சொன்னாரு. அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது.

இப்ப, அவர் இல்லாத ஒரு குறைதான்... எது இருந்தும் அவர் இல்லாதது பெரும் குறைதான் எனக்கு.”

காலமாகிப் போன தன் வசந்தகால நினைவுகளின் அழுத்தம் அவரின் குயில் குரலை இறுகப் பிடித்து கமறச் செய்கிறது.

“உங்க அண்ணிய ரொம்ப காலமாவே நான் புரிஞ்சுகிடாமயே இருந்துட்டேன் ரவி” எனக் கும்பகோணத்தில் வைத்துக் கடைசியாகப் பார்த்த போது மீரா தன்னிடம் வருந்தியதாக ரவி சுப்ரமணியம் தன் இரங்கல் கட்டுரையில் (மீரா சிறப்பிதழ்-மண்/3, பக்கம் 47) குறிப்பிட்டிருப்பார். மீராவின் நண்பர்கள் அனைவரும் அவரது துணைவியாரை அண்ணி என்று தான் அழைப்பர்.

அதைப் படித்த போது மீராவின் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘பிரியும் வேளை வரும் வரை தன் அடியாழத்தை அன்பு அறிவதில்லை' என்ற வரிகள் நினைவை நனைத்தன.

முகில்களிடையே இருக்கும் வானவில்லாய் பிரபல மனிதர்களின் ஜொலிப்பு. அவர்களுக்கு வாழ்க்கைப் பட்ட மகராசிகளோ தத்தம் ஆசைகள், கனவுகள், தேவைகள், ஏக்கங்களைக் கனியறியும் ஆவலில் தம் பூவிதழ்களை உதிர்த்துக் காத்திருக்கும் பழமரங்கள் போலாகின்றனர்.

கணவர் பாதி குழந்தைகள் பாதி கலந்து செய்யப்பட்ட இவர்களது தினசரிப் பொழுதுகளூடே கொண்டாட யாருமற்றுப் பரண்மேலேற்றிய பழங்குப்பையாய் இவர்களுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளக் குமைச்சல்களை தமக்குள்ளேயே புதைத்துக்கொண்டு நீர்த்துப் போகச் செய்கின்றனர்.

சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுத்தலும், அர்ப்பணிப்பு உணர்வும் வெற்றிகரமான இல்வாழ்வுக்கு அத்தியாவசியமாகிறது. சாதனை மனிதர்களின் துணையாகிறவர்களுக்கு இவற்றின் சதவீதம் சற்றுத் தூக்கலாகவே இருந்தால்தான் இணைநலம் இனிதாகிறது.

“யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்” என்ற செல்லம்மா பாரதியின் வானொலியுரை (1951, திருச்சி வானொலி நிலையம்) வரும் தலைமுறைகளிலாவது மாறி ஒலிக்கட்டும்... ஒலிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடு விடைபெற்றோம்.

நவம்பர் 2010  'கிழக்கு வாசல் உதயம்' இதழில் வெளியானது. 

13 கருத்துரைகள்:

 1. Kousalya said...:

  அவர்களின் மன உணர்வுகளை மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...ஆதங்கம், ஏக்கம், இயலாமை எல்லாம் கலந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

 1. @கௌசல்யா...

  முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி...

 1. அருமையான பகிர்வு!
  இந்த ஒரு வரி போடும் .
  பாரதி எழுதிய எல்லா நூல்களையும் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் செல்லம்மா பாரதியின் அந்த வைர வரிகளை வைத்தால் போதும். தராசு சம்மாக நிற்கும்.எவ்வளவு ஆதங்கம் தான் அந்த வார்த்தைகளில்..
  well said !
  “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்”

 1. அன்புள்ள நிலா மகள்,
  “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்”
  பாரதி மனைவி சொன்ன பொன்வரிகள்.. இதே வரிகள் பாரதிதாசனின் துணைவியாரிடமும் வெளிப்பட்ட்து. “எப்பப் பார்த்தாலும் கூட்டத்தை கூட்டி வச்சு சமைன்னு சொல்வாரு.. வீட்ல அரிசி இருக்கா புருப்பு இருக்கான்னு கூட் பாக்க மாட்டாரு...” என்று புலம்பியது இன்னும்...
  கவிஞர்கள் மட்டுமல்ல எல்லா கலைஞர்களும் இப்படித்தான் என்று நினைக்கிறேன்..
  நெஞ்சைப் பிழியும் நல்ல பதிவு.. நன்றி..

 1. 80களில் புதுக்கவிதையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் மீரா.
  அருமையான பகிர்வு.

 1. “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்”////
  படிக்கும் போது சுருக்கென்றது. என் மனைவியும் ஒருநாள் இப்படித்தான் சொல்வாளோ

 1. எனக்கு என்ன தோணுகிறது என்றால், நிறைய பெண் படைப்பாளிகள் தோன்றாமல் போனதற்கு இப்படி தியாகம் செய்யும் துணை அவர்களுக்கு வாய்க்காமல் போனது தான் காரணம் என்று....!
  கணவனுக்காக தன் சுக துக்கங்களை வெளிப்படுத்தாமல் வாழுவது என்பது பெண்ணின் இயல்பாய் இங்கே வலியுறுத்தப் பட்டு விட்டது... " அவரை ஒரு மணி நேரமாவது என்னுடன் பேச வைக்க முடியவில்லையே" என்ற வரியில் தொனிக்கும் ஏக்கம் என்பது இது போன்ற தியாக பெண்மணிகள் அத்தனை பேரின் மொத்த குரலாக ஒலிக்கிறது..
  மிக தேவையான நேர்த்தியான பதிவு நிலா....

 1. அது சரி நிலா... ஏன் இரண்டு வாரமாக ஒரு பதிவையும் காணவில்லை? உடம்புக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே? பூட்டியிருக்கும் நண்பனது வீட்டை தினம் வந்து எட்டிப் பார்க்கும் குழந்தையைப் போல தினமும் வந்து உங்கள் வலைப்பூ பார்த்து திரும்பும் என் போன்றவர்களுக்காக ஏதாவது எழுதி விடுங்கள் நிலா....

 1. அழகான ஆக்கபூர்வமான தனித்துவமான பதிவு நிலா.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆத்மார்த்தமான புது வருட வாழ்த்துக்கள்.சுபீட்சம் மிக்க தாய் அமையட்டும் புது வருடம்.

 1. @ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி...

  மிக்க நன்றி!தங்களின் புரிதலில் பதிவின் பலன் தெரிகிறது.

 1. @ஆதிரா...

  முதல் வருகைக்கும் தெளிவான புரிதலுக்கும் மிக்க நன்றி ஆதிரா! மகிழ்வாய் உணர்கிறேன் தங்கள் தோழமையான வருகையில்

 1. @சிவகுமாரன்...

  வாங்க சிவா ! உங்க மனைவி இப்படிச் சொல்லாமல் பார்த்துக்க வேண்டியது அவசியம் என்பதுதானே இப்பதிவின் நோக்கமே...!

 1. @கிருஷ்ணப்ரியா...

  உங்க பார்வையும் புரிதலும் ஆணித்தரமான பேச்சும் கண்டு பிரம்மிக்கிறேன் பிரியா. கணினிக் கோளாறு காரணமாய் நீண்ட இடைவெளி

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar