நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

கடும் வெயிலையும் தாங்கிப் பலனளிக்கும் திணைப் பயிர்கள்

Monday, 6 December 2010
நிச்சயதார்த்தம்... 1938-ம் ஆண்டு ‘பூலச்சாப்' எனும் இதழில் தொடர்கதையாய் வந்து, நூல் வடிவமான நாவலிது. மும்பையிலும் அதைச் சார்ந்த செளராஷ்ட்டிர தேசத்துக் கிராமங்களிலும் வாழ்ந்து வந்த குஜராத்தி மக்களின் வாழ்வியல் புனைவு.


நம் இந்திய சமூகத்தில் மிக மிக இரக்கப்படத் தக்கவர்கள், தங்களது பெண்ணிற்கு திருமணம் செய்யக் காத்திருக்கும் தந்தைமார்களே.


எங்கேயோ சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பிறந்த இடத்தின் பந்தத்தை விட்டு மும்பைக்கு வந்து, அந்நிய மண்ணில் வேரூன்றப் போராடும் வம்ச பரம்பரையற்ற, பிள்ளையில்லாத சம்பக்லால் சேத் எனும் மலட்டு மனிதனை ஆட்டிப் படைக்கும் ஆசைகளே இந்நாவலின் அடித்தளம்.

நீர்த்துப் போன மதிநுட்பமுடைய தனது தம்பி நானா சேத் மகள் சுசீலாவிற்குச் சிறு வயதில் நிச்சயிக்கப் பட்ட சுக்லாலைத் தவிர்த்து, நாகரீக தந்திரசாலி விஜயசந்திராவிற்கு மணமுடிக்க, தன்முனைப்பு எனும் கோபுரத்தில் செருக்கோடு அமர்ந்திருக்கிறார் சம்பக்லால்.

மரங்களைத் துளைத்து உட்செல்லும் ஆற்றல் நிறைந்த காட்டுச் சில்வண்டுகள் தாமரையின் இதழ்களுக்குள் சிறைப்பட்டுக் கிடப்பது போல், மும்பைப் பெண் சுசீலாவுக்கு, படாடோப விஜயசந்திராவை விடுத்து, விபரமறியா வயதில் நிச்சயிக்கப் பட்ட கிராமத்து சுக்லால் மேல் ஈர்ப்புக் குறையாமலிருக்கிறது.

செய்நேர்த்தி செய்யப்படாத தரிசு நிலங்களாய், விஜயசந்திரா, சம்பக்லால், சுசீலாவின் தாய் போன்றோரின் பாத்திரப்படைப்பு அமைந்துள்ளது.

சுயமாக வளர்த்துக் கொண்ட சாதுர்யங்களாலும், ஜைனமதக் கோட்பாடுகளைத் தவறாது கடைபிடித்து, ஆன்ம பலம் அதிகரிப்பாலும், தன் கணவர் சம்பக்லாலிடமிருந்தும், அயோக்கியன் விஜயசந்திராவிடமிருந்தும் சுசீலாவை மீட்டெடுக்கிறார் பெரியம்மா பாபிஜி. சுசீலா பெரிதும் விரும்பியேற்ற தீப்சந்த் குடும்பத்தோடும், சுக்லாலோடும் அவளை ஒன்றிணைக்கத் துணிந்தவர் அவர். உணர்வுகளையும் ஆசைகளையும் தன் ஆளுகைக்கு உட்படுத்தி, எந்தச் சபதமும் துறவும் வேண்டியிராத ஒப்புயர்வற்ற பாத்திரப் படைப்பான பாபிஜிக்கு இணையாக சுக்லால் தந்தை தீப்சந்த் பாத்திரமிருக்கிறது.

பாத்திர அறிமுகத்தில், நிச்சயிக்கப்பட்ட சுசீலாவுடனான காட்சிகளில் வர்ணிக்கப் படாத, சுசீலா குடும்பத்தினர் முன் மங்கிக் கிடந்த சுக்லாலின் மாட்சிமைகள், அவன் மேல் கபடமற்ற பாசம் வைத்த செவிலி லீனாவுடனான காட்சிகளில் வர்ணிப்பது நாவலாசிரியரின் முரண்சுவை தெரியும் படியுள்ளது.

தன் 15 வயது மகன் உயிரோடிருந்தால் சுக்லால் போன்றிருப்பானென்ற ஆழ்மன விழைவே லீனாவின் அபரிமிதமான அன்பின் அடிப்படை. வயிற்றுப் பாட்டிற்காகத் தோற்றத்தை இளமையாக்கிக் கொண்ட அவளது பாத்திரத்தின் மேல் நம் அனுதாபம் நிறையும்படி நாவலாசிரியர் வெளிப்படுத்தும் அத்தியாயங்கள் நெகிழ்வு.

மனைவியைத் தேவதையென்கிறோமா... தெய்வமென்கிறோமா... வீட்டுப் பொருட்களில் ஒன்றென்கிறோமா... அது பொருட்டல்ல; எப்படிப் பாதுகாக்கிறோம்... அன்பு செய்கிறோம் என்பதே முக்கியமென்னும் சுக்லாலின் உறவுக்காரன் பாத்திர வியாபாரி குஷால், துணிவே துணையாயிருக்கிறான். சுக்லாலைப் பாதுகாத்து, தொழில் பழக்கி, சம்பக்லால்-விஜயசந்திரா கூட்டணியைக் கிடுகிடுக்கச் செய்வதில் வெங்கலக் கடை யானை போலாகிறான்.

தக்க இடங்களில் செறிவான உவமை, உருவகங்கள், தத்துவ விசாரங்கள், அடிப்படை ஜைனமதக் கோட்பாடுகளை ஏழை வீட்டுப் பாயாசத்தில் எட்டிப் பார்க்கும் முந்திரிகளாய் (420 பக்கங்களுக்கு மேலான நாவலில் எங்கோ ஒன்றாய் )விரவியிருப்பது நாவலாசிரியர்தம் திறன் காட்டுகிறது.

உறங்கும் முன் தவறாது ஜைனர்களால் ஜெபிக்கப்படும் ஐந்தடி மந்திரம், பூமிக்கடியில் விளைபவற்றை உணவில் தவிர்ப்பது, மங்கள நாட்களில் ஓதப்படும் 'சடாரி மங்கள்', உணவருந்தும் முறைகள், ஜைன மங்கையர் சமூகப் பெரியவர்களிடம் கடைபிடிக்கும் உயரிய பண்புகள், கொடும் வறுமையிலும் தவறா விருந்தோம்பல் போன்ற அவர்களது இல்வாழ்வு நெறிகள் வாசித்தறிய ஏதுவாகிறது.

சுக்லால் ஆண்மையற்றவனென்று போலிச் சான்றுகளைக் காட்டி, மிரட்டி, சம்பக்லால் தீப்சந்த்திடம் சுசீலா-சுக்லால் நிச்சய முறிவிற்கு சம்மதம் தெரிவிக்க வைக்கிறார். கையொப்பமும் வாங்கிவிடுகிறார். பின் ஒப்பு உபசாரமாய் தன் வீட்டின் கொல்லைக் கட்டில் உணவிடச் செய்கிறார்.

உணவுப் பொருளை உதாசீனப்படுத்தக் கூடாதென்ற உயரிய பண்புடன் குலவழக்கம் மாறாது உணவருந்தி மனவெதும்பலோடு சுக்லால் இருக்கும் மருத்துவமனையை அடைகிறார் தீப்சந்த் சேத். பின், மும்பையிலிருந்து சொந்த ஊருக்குக் கிளம்ப சுக்லாலை வற்புறுத்தும் போது சொல்வார், “அன்று நான் அங்கு சாப்பிட்டது உணவு அல்ல... கொதிக்கக் கொதிக்கக் கனிந்து கொண்டிருந்த நெருப்புத் துண்டு” இதைப் படிக்கும் நம் வயிற்றிலும் தகிப்பேற்படும்.

பெற்ற பிள்ளைகளுக்காக அந்திமக் காலத்திலும் அல்லாடும் அப்பாக்களுக்கு எக்காலத்திலும் பஞ்சமில்லை போலும்! கடும் வேதனையை சகித்துச் செல்லும் அவரது போக்கு, காத்திருந்த வாகன ஓட்டிக்குத் தன் தந்தைக்குக் கடிதமெழுதிப் பல நாட்களாகியதை நினைவூட்டி உடனெழுதச் செய்கிறது. படிக்கும் நமக்கும், நமக்கான நமது பெற்றோரின் அல்லாட்டம் நினைவிலெழுகிறது.

காலணிகள் கூட அந்தஸ்தை நிர்ணயிப்பதும், அவற்றின் ஒலியை வைத்தே எந்த ஊர்க்காரரென யூகிக்கலாமென்ற சுசீலா வீட்டு வேலைக்காரனின் நுட்பம் நமக்கு வியப்பென்றால், 5 பாத்திரங்கள், 9 ரூபாய் இரண்டணாவில் வாங்க முடிந்த சாகசம், கதை நிகழ்காலம் நாற்பதுகளில் என்பதை நினைவுபடுத்தி நமது வியப்பை விரிக்கிறது. இக்காலத்துடனான விலைவாசி ஒப்பீடு தவிர்க்க முடியாமல் மனதிலெழுகிறது.

‘நமோ அரிஷன் தானம் நமோ சித்தானம்...' என தீப்சந்த் சேத், சாந்தி மந்திரங்களைத் தன் மனைவியருகே மண்டியிட்டுச் சொல்லி, இறுதி விடையளிக்கும் காட்சி, உருக்கத்தின் உச்சம்.

கடைசி மூன்று அத்தியாயங்கள் விறுவிறுப்பும் வேகமும் பாபிஜியின் விவேகமும் நிரம்பியது.

வாழ்க்கையில் தடையேயில்லாமல் எதுவும் சுமுகமாக நடக்காது. வருகிற தடைகளை மீறி, வெற்றி காண்பதில் தான் மகிழ்ச்சியிருக்கிறது. அப்போதுதான் வெற்றிக்கனி இனிக்கும். வாழ்வென்னும் மரம், மகிழ்வான திருமணமென்னும் கனியினைத் தரவேண்டுமானால், அதற்குக் குருதி, வியர்வை, கண்ணீர் அனைத்தையும் பாய்ச்சி வளர்த்தாக வேண்டும். இது பாபிஜி வாயிலாக சுக்லாலுக்கு மட்டுமல்ல.. நமக்குமான இதமான அறிவுரை.

திணைப் பயிர்கள் கடும் வெயில் தாங்கி வளர்ந்து முற்றிக் கதிர் ஈன்று, அறுவடைக்குத் தயாராவதுபோலப் பல இன்னல்களைக் கடந்து சுக்லால்-சுசீலா நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

தமிழுக்குக் கொணர்ந்த டாக்டர். மா. இராமலிங்கம்(எழில் முதல்வன்), மூல நூலுக்குச் சிறிதும் குந்தகம் வராமல், சுவை குன்றாமல், தமிழிலேயே எழுதப்பட்ட நூல் எனும் அளவிற்குத் தன் மொழியாக்கத் திறமையினைக் காட்டியுள்ளது பாராட்டற்குரிது.


நூற்பெயர்: நிச்சயதார்த்தம்
நூல்
ஆசிரியர்:   ஜாவர்சந்த் மெகானி
தமிழில்:     டாக்டர்.மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)
வெளியீடு: சாகித்திய அகாதமி,
                     குணா பில்டிங்ஸ்,
                     443.அண்ணாசாலை,
                     தேனாம்பேட்டை,
                     சென்னை-18.
விலை:       ரூ.180/-

3 கருத்துரைகள்:

 1. அற்புதமான அறிமுகம் நிலாமகள்.

  ஜவேர்சந்த் மேகாணீயை என் உருமாற்றம் இடுகையில் தவறவிட்டு விட்டேன்.

  நிகழ்காலத் தலைமுறையினர் இனிக்காண முடியாத வாழ்க்கை முறை நம் கையெட்டும் தூரத்தில் இலக்கியங்களில் பதிவாகியிருந்தும் கண்டும்காணாதவர்களாகி காலத்தை நழுவ விடுகிறோம்.

  இந்தியாவின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட கலாச்சாரங்களும் தனித்தனியான குணாதிசயங்களும் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.

  இவரின் மற்றொரு நாவல் ”சோரட், உனது பெருகும் வெள்ளம்” மற்றொரு அபாரமான நாவல். முடிந்தால் அதுபற்றி நான் எழுத முயல்கிறேன்.

 1. உங்கள் வாசிப்பின் வீச்சு அபாரம்.

 1. உங்கள் எழுத்து நடை அபாரம்.சில வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன்.மகிழ்ச்சியாக இருந்தது.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar