நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

உடனுறை மருத்துவர்கள்....

Sunday, 20 March 2011
எழுபதை நெருங்கும் முதியவர் ஒருவர்... ஆரோக்கியமான மனைவி,நல்ல நிலையிலிருக்கும் தன் பிள்ளைகள் மற்றும் பிறர் பார்வையில் குறைவற்ற வாழ்வு வாழ்பவர் திடீரென மனம் துணிந்து தற்கொலையை நாடுகிறார். செய்தியறிந்து சென்று பார்க்கும்போது அறுவை சிகிச்சைக்கு அவசியமான உடல் நலக் குறைவு தந்த பயம் தான் காரணமெனக் கூறப்படுகிறது.

இன்னொருவர்... சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சிகள் மூலம் உடலையும் மனதையும் உறுதியாக வைத்திருப்பவர். காந்திய வழியில் தன் வேலைகளைத் தானே செய்யவும், பிறர்க்கான உபகாரங்களைச் செய்யவும் தயங்காதவர். தள்ளாமை நேரிட்ட முதிர்வயதில் பிறர்க்கு பாரமாகிடக் கூடாதென்ற அதே மனப் பாங்கில் தன் வியாதிகளுக்கு மருந்தெடுக்கவும் மறுத்து இறப்பை எதிர்கொள்கிறார் நெஞ்சுரமோடு.


சமீபத்திய இந்நிகழ்வுகள் என்னைச் சற்று மன உளைச்சலுக்கு ஆளாக்கின. அம்புப் படுக்கையில் மரணத்தினை எதிர்நோக்கிக் காத்திருந்த கங்கை மைந்தன் மகாபாரதத்து பீஷ்மர் நினைவிலெழுந்தார். நமது கலாச்சாரம்- பண்பாடு, குடும்ப அமைப்பு, சக மனித நேசம் எல்லாம் மங்கிக்கொண்டிருக்கிறதோ... அவரவர்க்கு அவரவர்க்கான பாடுகளும் பணத்தேவைகளும், அதற்கான துரத்தல்களுமாய் கெட்டித்துப் போய்க் கொண்டிருக்கிறதோ...

        புகார்களற்று, தம் இழப்பால் அவரவரும் சுயபரிசோதனை செய்துகொண்டு தத்தமது குற்றச் சதவீதத்தை உணரச் செய்திடும் ஓசையற்ற தண்டனையாகவே இம்மரணங்கள் எனக்குத் தோன்றின.

மனதை சமனப்படுத்த சேகரிப்பிலிருந்த நூல்களில் ஒன்றை (‘மரணம் -அப்புறம்?' -சத்குரு ஜக்கி வாசுதேவ்) வாசித்தேன்.

ஜக்கி சொல்கிறார்...

இந்த உடல் உங்களுக்குச் சொந்தமானதல்ல. வட்டியில்லாமல் வாங்கிய கடன் தான். ஒவ்வொரு அணுவையும் நீங்கள் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.


ஒருவருடைய உடல் ஏதோவொரு காரணத்தால் மேற்கொண்டு வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும் போது, அவர் அந்த உடலை விட்டுப் போக நேரிடுகிறது. பொருள்தன்மையிலான உடலும் விழிப்புணர்வான மனமும் போய்விடுகிறது.


அவர் இறக்கும் போது பயத்திலோ, பேராசையிலோ இறப்பாரேயானால், அக் கடைசி தருணத்தில் அவர் மனம் எப்படியிருந்ததோ அதுதான் அவருடைய இயல்பாக அவர் இறந்தபின் செயல்படும். இன்றிரவு தூங்கும் போது இதை முயற்சித்துப் பார்க்கலாம். தூக்கத்தில் விழும்முன், அந்தக் கடைசி வினாடிகளில் ஒரு தன்மையுடனாவது அதாவது, அன்பாக அல்லது மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால், அதே தன்மை தூக்கத்திலும் தொடர்வதைக் காணமுடியும். விழிப்பிலிருந்து தூக்கத்துக்குச் செல்லும் அந்தக் கடைசி வினாடிகளில் என்ன தன்மை கொண்டு வருகிறீர்களோ, அந்த குணம் தொடர்ந்து இருக்கும். இதேதான் இறப்பிலும் நடக்கிறது. மரணத்தின் இறுதி தருணங்களில் ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கொண்டிருந்தால், பிறகு அந்த தன்மை தொடர்ந்து இருக்கும்.


பிராரப்தா என்பது ஒரு ஆயுள் காலத்துக்கு ஒதுக்கப்பட்ட கர்மா. ஒரு பிறவிக்கென ஒதுக்கப்பட்ட கர்மாவைக் கழிப்பதைவிட அந்த பிறவியில் புதிதாகச் சேர்த்துக் கொள்வது அதிகமாயிருக்கிறது. கர்மா சேரச்சேர அதிர்வின் அளவும் கூடிக்கொண்டேயிருக்கிறது. அந்த அதிர்வு தளராதவரை உயிருக்கு அடுத்த உடல் கிடைக்காது. இன்னொரு உடலைப் பெற வேண்டுமானால் உயிர்சக்தி தளர்வடையவேண்டும்.


பிறப்பு இறப்பு சுழற்சியின் அர்த்தமற்ற தன்மையை உணர்ந்து கொள்ளும் போதுதான் நாம் முக்தி பற்றியே யோசிக்கத் துவங்குகிறோம். பிறப்பு இறப்பிலிருந்தே விடுபட விரும்புவதுதான் முக்தி என்றாகிறது.


ஒரு உயிரின் உடல்தன்மையைக் கடந்த வளர்ச்சியானது, அவர் இந்த உலகில் என்னவாக இருக்கிறார், அவர் தன்னைப் பற்றி என்ன எண்ணம் வைத்திருக்கிறார், மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. அவர் எவ்வளவு விழிப்புணர்வுடனிருக்கிறார், எந்த அளவு பொருள்தன்மையைக் கட்ந்த நிலையிலிருக்கிறார் என்பதைப் பொறுத்தே அமைகிறது.


உங்களுள் உள்ள வெற்றிடம் ஒரு காற்றுக் குமிழ் போல . கர்மா அந்தக் காற்றுக் குமிழின் சுவர். கர்மா தன் அதிர்வை இழந்தவுடன் இயற்கையாகவே வேறு உடலை எடுத்துக்கொள்ளும். நாமாக அக்காற்றுக் குமிழை உடைக்க முற்பட்டால் (விபத்து, தற்கொலை) பகுத்துப் பார்க்கும் தன்மை நீக்கப்பட்டுவிடுவதால் விழிப்புணர்வுடன் செயல்பட முடியாது. ஏதாவது காரணத்தால் இந்த உடல் உரிய காலத்திற்கும் முன்னதாக உடைந்து விட்டாலும் உயிர்சக்தி மட்டும் இன்னமும் அதிர்வுடன் இருக்கும். விபத்தில் சிக்கியோ அல்லது தற்கொலையாலோ இறந்து உடல் அழிந்தாலும் உயிர்சக்தியானது அடுத்த பரிமாணத்துக்குச் செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் சக்தியானது அதிர்வு நிலையிலிருந்து தளர்வான நிலைக்கு வரவேண்டியுள்ளது.


எனவே, ஒருவர் இந்த எல்லாச் செயல் முறைகளிலிருந்தும் உண்மையாகவே விடுதலை பெற விரும்பினால், அந்த நோக்கத்தின் அருகில் செல்ல வேறு பல வழிகள் உள்ளன.”

மன உளைச்சலின் இருட்டு சற்று மட்டுப்பட்டது.

சில நாட்களுக்கு முன் தோழர் இரா. எட்வின் தனது ‘பத்து கிலோ ஞானம்' கட்டுரை நூலை எங்களுக்கு கிடைக்கச் செய்திருந்தார். அதை எடுத்து வாசித்தபோது பலதும் ஏற்கனவே அவரது வலைப்பூவிலும் கல்கியிலும் வாசிக்கப்பட்டதே. எனினும் சிலரது எழுத்துகள் எத்தனை தடவை வாசித்தாலும் புத்துயிர்ப்பாய் இருப்பவை. மறுவாசிப்பில் ‘மரணத்தைக் கொண்டாடுவோம்...' கட்டுரை முதல் வாசிப்பாயிருந்தது. மனவோட்டத்துக்கு நெருங்கியிருந்ததால் ஆர்வமுடன் தொடர்ந்தேன். இதோ தோழரின் வார்த்தைகள்...

“மரண பயம் மனிதர்களுக்கு வேம்பினும் கொடிய கசப்புதான். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதோ, உயிர் அழியாதது என்பதோ மனிதர்களுக்கு இருக்கும் மரணம் குறித்த பயத்தைப் போக்குவதற்காக என்றே கொள்ள வேண்டும். ஆயினும், தற்கொலை செய்து கொள்பவருக்கு மரணம் குறித்த பயம் இல்லையென்று தானே பொருள்?


அல்ல. சாதாரண மனிதனுக்கு மரணம் கண்டு பயம். தற்கொலை செய்து கொள்பவருக்கோ வாழ்க்கை குறித்து பயம்.


மரணத்தை கொண்டாட நாம் கற்றுக் கொண்டால் வாழ்க்கையின் எந்த இடர் கண்டும் நம்மால் புன்னகைக்க இயலும். மரணத்தைக் கொண்டாட வேண்டுமென்று நாம் பரிந்துரைப்பதன் பொருள் இந்தப் புள்ளியிலேயே ஒரு புன்னகையோடு மரணித்து விட வேண்டுமென்பதுமல்ல. மரணம் வரைக்கும் வாழ்க்கை நிஜம். மரணம் வரைக்கும் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்திவிட வேண்டும்.


இத்தனை மருத்துவமனைகள், இத்தனை மருத்துவ வசதிகள் அனைத்துமே முற்றாய் முழுசாய் மரணத்தைத் தவிர்ப்பதற்கு உதவாது. மரணத்தை முடிந்த அளவு தள்ளிப் போடுவதற்கான நமக்கு வாய்த்த வாய்ப்புகள் அவை.


மரணம் தவிர்க்க இயலாதது. சகமனிதன் குறித்த புரிதலோடும், அக்கறையோடும், கவலையோடும், அவனுக்குமானதுமாக நம் வாழ்க்கை செலவிடப் பட்டிருக்குமானால், நமது மரணத்தையும் தாண்டி நீளும் நமது வாழ்க்கை.”


ஜக்கி போல, தோழர் எட்வின் போல பல்லாயிரம் மனநல மருத்துவர்கள் நூல்வடிவில் நம்முடனிருக்க, உளைச்சலெல்லாம் ஓடியே போகிறது.
8 கருத்துரைகள்:

 1. நம் உடல் ஒரு வாடகை வீடு.அதை நன்கு பேணி பாதுகாக்க வேண்டும். எல்லா கெட்ட பழக்கமும் தவிர்த்து, உடலையும், மனத்தையும் பேணி, நம்மால் முடிந்த வரை அடுத்தவர்க்கு உதவி செய்கிறோமோ,இல்லையோ,தொந்தரவு செய்யாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். நம் கர்ம வினைகளை கழிக்கத் தான் நாம் வந்திருக்கிறோம் என்று நினைப்பு இருந்தாலே, மரண பயத்தை வெல்லலாம்.அது மரணத்தை வென்றது மாதிரி!
  அது சரி, எத்தனை நாள் தான் வாடகை வீட்டில் குடி இருக்க முடியும்? பொறுப்பாக ‘உரியவரிடம்’ ஒப்படைக்க வேண்டாமா?

 1. மரணம் உண்மையில் மிக ஆனந்தமானது. ஆனால் அது வரும் நேரம் வரட்டும் அதுவரை கிடைத்த நாட்களை எப்படி செலவழிப்பது என்பது அதைப் போலவே ஆனந்தம். தவறான புரிதல்களினால் சிலர் தப்பான முடிவுகளுக்குப் போய் விடுகிறார்கள்.

 1. மனதுக்கு இதம் தரும் அழகான பகிர்வு தோழி.

  வலியான இதயத்துக்கு இதமான ஒத்தடம்.மனதை மெல்ல வருடிக் கொண்டு போகிறது மென் தென்றல்.

 1. நல்ல பகிர்வு. மரணம் தவிர்க்க இயலாதது. இருக்கும் வரை அடுத்தவர்களுக்கு உபத்திரவம் தராமல் உபகாரம் செய்து கொண்டு இறைவனிடம் அடிபணிந்தால் நல்லது.

 1. ஹேமா said...:

  மரணம் பற்றிய பக்குவப்பட்ட பதிவு.மரணம் நிச்சயமானாலும் வாழும்வரை நல்ல மனிதனாக, அடுத்தவர்களுக்கு உதவியாக வாழ்ந்து இறப்பதே மேல் !

 1. அவர் இறக்கும் போது பயத்திலோ, பேராசையிலோ இறப்பாரேயானால், அக் கடைசி தருணத்தில் அவர் மனம் எப்படியிருந்ததோ அதுதான் அவருடைய இயல்பாக அவர் இறந்தபின் செயல்படும்.//

  என்ன பயமுறுத்துறீங்க.

  ஆன்மிகம், மன ஒருமைப்பாடு பற்றி உள் உணர்வையும், மன அமைதி பற்றிய தேடலையும் உங்கள் பதிவு சொல்லி நிறப்தோடு வாழ்வின் இறுதி நேரங்களையும், மரணம் பற்றிய மனப் பயத்தையும் பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்- நீங்கள் படித்த புத்தகங்கள் மூலம் நிறையவே அலசியிருக்கிறீர்கள்.

  என்னைப் பொறுத்தவரை சகோதரி, துன்பத்தில் உழன்று, அல்லற்பட்டு இறப்பதை விட சந்தோசமாக இருக்கும் போதே வலிகள் ஏதுமின்றி உயிர் பிரிந்து விடும் பிரிவே மேலானது என்று கருதுகிறேன்.

 1. Harani said...:

  நல்ல பதிவு நிலாமகள்.

  அடிப்படையில் எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான். பிறப்பைக் கொண்டாடும் உரிமை கொண்ட நாம் இறப்பையும் கொண்டாடும் பக்குவம் வேண்டும். நிலையாமை என்பதுதான் உலகின் நிலைபெற்றது. திருமந்திரத்தில் திருமூலர் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, உயிர் நிலையாமை, செல்வம் நிலையாமை என்று பேசுவார். எட்வின் அவர்கள் சொன்னதுபோல இருக்கும் வரை போராடுதல், போராடி வாழ்தல் என்பதுதான் சுகமானது.
  நாம் உயிருடன் இருக்கும் தருணம் வரை நாம் இறக்கவில்லை. மரணம் இல்லை. நாம் இறந்துவிட்டாலோ நாம் மரணம் பற்றி அறிவதில்லை. பின் எதற்கு மரணம் பற்றி பயப்படவேண்டும்? என்று எங்கோ படித்த ஞாபகம்.
  பயத்தை ஒழித்தல் வேண்டும். என்னைப் பொறுத்தளவில் தற்கொலை என்பது குற்றவாளியின் தப்பித்தலைப் போலத்தான். எதிர்கொள்வதுதான் எப்போதும் சுவையானது.

  உடம்பு மயானத்திற்கு விளகேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளிவிளக்குகளை உலகில் ஏற்றவேண்டும் என்று என்னுடைய பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் ஒரு நுர்லில் குறிப்பிட்டுள்ளதை எண்ணி இருக்கும்வரை அடுத்தவருக்கும் நமக்கும் பயனாக இருப்போம். வாழ்வோம் எல்லா பயமும் ஒழித்து.

 1. வணக்கம் தோழர். வலை இத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். ஒரு மகானாய் கொண்டாடப் படுபவரோடு என்னையும் இணைத்துப் பார்க்கும் உங்கள் பெருந்தன்மைக்கு எப்படி நன்றி சொல்வேன்

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar