நெற்றியில் பூசி நெஞ்சில் பூசி
செவியில் பூவைச் செறுகிப் பூசை
அறையை விட்டே அசைந்து வருகையில்
முத்தையா பிள்ளை ‘முருகா!' என்றார்.
உடனே அவர்முன் ஓடோடி வந்து
“என்ன எசமான் கூப்பிட்டீர்களா?”
என்று கேட்டான் ஏவ லாளன்;
முத்தையா பிள்ளையின் முகமோ சிவந்தது!
“விடியா மூஞ்சிப் பயலே! விடிந்ததும்
பாவம் படர்ந்தஉன் முகத்தைப் பார்க்கவா
காட்டித் தொலைக்கிறாய்; கழுதையே! சனியனே!அப்பன் முருகனை அல்லவா அழைத்தேன்!
உன்னையா அழைத்தேன், உதவாக் கரையே!”
என்றார். சென்றான் ஏவ லாளன்
தலைவா ழைஇலை தன்னில் பரப்பிய
பலவிதக் காய்கறிப் படைய லோடு
நெல்லூர் அரிசிச் சோற்றில், நல்லூர்
நெய்யை ஊற்றிக் கையால் பிசைந்தே
உண்டெழுந் தருளி உதரம் தடவி
எண்ணிக்கை யற்ற ஏப்பம் இசைத்தே
ஓய்வு காண உல்லாச மாகச்
சாய்வுநாற் காலியில் திருமேனி சாய்க்கையில்
முத்தையா பிள்ளை “முருகா!” என்றார்.
உடனே அவர்முன் ஓடோடி வந்து
“என்ன எசமான் கூப்பிட் டீர்களா?”
என்று கேட்டான் ஏவ லாளன்;
முத்தையா பிள்ளையின் முகமோ எரிந்தது!
“அழுகை மூஞ்சிப் பயலே! நல்ல
நாளும் பொழுதுமாய் நாயே, என்முன்
பட்டினி படர்ந்தஉன் முகத்தை ஏனடா
காட்டித் தொலைக்கிறாய்? கழுதையே! சனியனே!
அப்பன் முருகனை அல்லவா அழைத்தேன்!
உன்னையா அழைத்தேன், உதவாக் கரையே?”
என்றார். சென்றான் ஏவ லாளன்.
உச்சி இரவு; ஒருமணி இருக்கும்.
“முருகா! முருகா! முருகா!” என்று
பிள்ளைவாள் மாடியில் பெருங்குரல் எழுப்பினார்.
கொல்லையில் அந்தக் குரல்எதி ரொலிக்கவே
ஏவ லாளன் எழுந்தான்; பின்னர்
‘என்னையா கூப்பிட்டார்; இருக்கா(து)' என்றவன்
உள்ளே போகாமல் உடம்பைச் சாய்த்தான்!
கொஞ்சநே ரத்தில் கோபத் தோடு
மடமட வென்றே மாடியை விட்டுப்
பிள்ளைவாள் வந்தார் கொல்லையை நோக்கி!
இனிதாய்த் தூங்கிய ஏவ லாளனைத்
தட்டி எழுப்பினார்; திட்டி எழுப்பினார்!
“ஏனடா பேயனே! இளிச்ச வாயனே!
திருட்டுப் பயல்கள் செல்வத்தை எல்லாம்
சுருட்டிக் கொண்டு போகையில் உன்னைக்
கூப்பிட் டேனே! குரல்கொடுத் தேனே!
ஓடிவந் தாயா ஓசையைக் கேட்டு?
தின்று கொழுத்துத் தினமும் தூங்கவா
தண்டச் சோறு? தடியனே!” என்றார்
முத்தையா பிள்ளை. “ஐயையோ! நமது
சொத்தையா திருடர் சூறை யாடினார்?
எசமான்! தாங்கள் முருகா என்றது
காதில் விழுந்தது கணீரென! நான்எழுந்(து)
ஓடி வரத்தான் எண்ணினேன்; ஆனால்
என்னையா கூப்பிடப் போகின் றீர்கள்?
அப்பன் முருகனை அல்லவா நீங்கள்
அழைத்திருப் பீர்கள்! அழைத்திருப் பீர்கள்!
என்று பேசா திருந்தேன்” என்றந்த
ஏழை முருகன் இயம்பினான்! சாவிக்
கொத்தை ஆவியாய்க் கொண்ட
முத்தையா பிள்ளையின் முகம்இருண் டதுவே!
நூற் பெயர் : மீரா கவிதைகள்
வெளியீடு : அகரம், மனை எண் 1,
நிர்மலா நகர், தஞ்சாவூர்-7.
விலை : ரூ. 60 /-
கிருஷ்ண ஜெயந்தி, காந்தி ஜெயந்தி போல் கவிஞர்களுக்கு இன்று மீரா ஜெயந்தி! ஆம்... அக்டோபர் 10 - மீரா என்றழைக்கப்படும் சிவகங்கை கவிஞர், பதிப்பாளர் மீ.ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாளுக்கான(10.10.1938)
அர்ப்பணிப்பாக வெளியிடும் பதிவாய் இதைக் கொள்ளலாம்.
அவருக்கான வலைப்பூவிற்கு செல்ல-மீரா
கண்ணுக்குத் தெரியாத முருகன்ல இருக்கிற பக்தியில கொஞ்சம் கண்ணுக்கு முன்னுக்கு இருக்கிற முருகன்ல பாசமா வச்சாலே போதுமே !
ReplyDeleteமிகவும் அழகு. மீராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுற்றி இருக்கும் மனிதர்களை மதித்தாலே போதும், எல்லா முருகனும் வருவாங்க... ஹேமா சொன்னதை இங்கு repeat...
ReplyDeleteகண்ணுக்குத் தெரிந்த கண்ணனையோ.., முருகனையோ..., குமரனையோ.., இவர்களால் மதிக்க முடியாத போது இவர்கள் அழைத்தால் இறைவன் வருவான்.... என எப்படி நம்புகிறார்கள். வந்தவன் இறைவன் என்பதை உணராத பேதமை ...
ReplyDeleteமுட்டாளின் செல்வம் எப்போதும் இப்படிதான் பறிப் போகும். நன்றி. கவிஞர் மீரா வுக்கு எம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு எழுத்தாளனை மதிக்கத் தெரிந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
கவிஞர் மீரா (மீ.ராஜேந்திரன்)வின் "கனவுகள் + கற்பனைகள் + கவிதைகள்"
ReplyDeleteபுதுக்கவிதையின் மின்னோடியெனலாம்.
ஈசல்களெல்லாம், மயில்களாக வேடமிட்டுதிரியும் கவிஞருலகில்,
பினிக்ஸ் பறவையாய் மற்ற எழுத்தாளர்களுக்காய் வாழ்ந்தவர்.
மீரா - பேரறிஞர். பகிர்வுக்கு நன்றி. அவருடைய 'குக்கூ' எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு
ReplyDelete@ஹேமா...
ReplyDeleteசரியாச் சொன்னீங்க ஹேமா... 'கண்ணுக்கு...முன்னுக்கு' ரசிச்சேன்.
பாவேந்தரின் 'சஞ்சீவி பர்வதச் சாரலும்', கவிமணியின் 'மருமக்கள் வழி மான்மியமும்' சாதித்ததை மீராவின் இந்த அங்கதம் ததும்பும் பாடல் சாதித்து விடுகிறது .
@கயல்...
ReplyDeleteமீராவுடைய கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் கிடைத்தால் வாசித்துப் பாருங்க கயல்.
@வினோ...
ReplyDeleteஆமா வினோ... மீரா தமிழ்க் கவிதையின் , தமிழ்க் கவிஞர்களின் , ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒளி சூடிய அடையாளம் என்றார் கவிஞர் அறிவுமதி, தனது 'மண் ' காலாண்டிதழின், மீரா சிறப்பிதழில். மீராவைப் படித்ததுண்டா?
@தமிழ்க் காதலன்...
ReplyDeleteவருகைக்கும், வளமையான கருத்துக்கும் மகிழ்ச்சி.
@வாசன் ...
ReplyDeleteமீராவை முற்றிலும் உணர்ந்திருக்குமொருவருக்கும் இப்பதிவு சென்றடைந்திருப்பது மனநிறைவைத் தருகிறது. "ஈசல்கள் எல்லாம் மயில்களாய் வேடமிட்டுத் திரியும் கவிஞர் உலகில் ...." நாடி பிடித்தாற்போல் சொல்லிட்டிங்க ... நன்றி!
@வேல் கண்ணன்...
ReplyDeleteஅடடா... 'குக் கூ ' தொகுப்பு நான் பார்த்ததிலையே... கவிஞரின் மகள் நெய்வேலியில் தான் வாசம். கேட்டுப் பார்க்கிறேன்.