புரியாததை புரிந்து கொள்ளவும் தெரியாததை தெரிந்து கொள்ளவும் கேள்வி கேட்பது வாடிக்கை.
முதலில் நம் ஐயத்தை தெளிவாக கேட்கத் தெரிய வேண்டும்.
யாரிடம் கேட்கிறோம் என்பது முக்கியம்.
நமக்குத் தெரிந்தது எல்லாம் அவருக்கும் தெரியும் என்றோ அதற்கு மேலும் தெரியும் என்றோ உத்திரவாதமில்லை. கேள்வியின் கோணம் புரியாமல் கோபத்தால் அடக்கியாள்வதும் தன தவறான புரிதலை உணராமல் கேட்பவரை தவறாக எண்ணுவதும் உதாசீனப் படுத்துவதும் அதிகார மனப்பான்மை.
தகுதியில் தரத்தில் அறிவில் நமக்கு மேலானவர்களிடம் கவனமாக கேட்க வேண்டும். குறைந்தவர்களிடம் இன்னும் கவனமாக.
நாம் படித்தது பார்த்தது உணர்ந்தது அனைத்தும் அவருக்கும் வாய்த்திருக்க வாய்ப்பில்லை. நமது தெரிதலுக்கான ஆவல் பற்றி அவருக்கு அக்கறையில்லை.
'தெரியவில்லை' என வெளிப்படையாகக் கூறவும் தேடிக் கண்டுபிடித்து அக்கறையாக நமக்குச் சொல்லவும் பெரும்பாலோர் விழைவதில்லை. தன் மேதமையை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதே அவர்கள் நோக்கம்.
எதிர்கேள்வி அல்லது நையாண்டி அல்லது பேச்சை திசை திருப்புவது இவை போன்ற இயலாமையின் வெளிப்பாடுகளை உணர்ந்து சரியான ஆள் தேடி நம் கேள்வியை மறுபடி மனசுக்குள் புதைக்க வேண்டும்.
சிலநேரம் இயல்பாக ஏதேனும் பிறிதொரு வகையில் நாம் எதிர்பாரா நபரிடமிருந்து கூட அக்கேள்விக்கான விளக்கம் நம்மை அடையும்.
கற்றல், கற்பித்தலில் கேள்வியின் முக்கியத்துவம் மிக அதிகம்.
நூதனமான கூர்மையான தனக்கு பதில் தெரியாத கேள்விகளை எந்த ஆசிரியரும் விரும்புவதில்லை. தயாரித்து வந்த பாடத்தில் மட்டுமே அவர்கள் சிறப்பானவர்கள்.
சமூகத்தில் சக மனிதர்கள் அனைவரிடமும் கேள்வி கேட்க வேண்டிய தருணம் ஏற்பட்டபடியே தான் உள்ளது. எப்போது, எப்படி என்பது தான் மாறுபடும்.
நன்னூல் இலக்கண நூலாசிரியர் பவணந்தியார், பொதுவியலில் அறுவகை வினா பற்றியும் எண்வகை விடை பற்றியும் எளிமையாக விளக்கியிருப்பார்.
வினா ஆறு:
1. அறிவினா - தனக்குத் தெரிந்தது , எதிரிலிருப்பவருக்கு தெரிகிறதா என சோதிக்கும் வினா. (ஆசிரியர் மாணவரிடம் கேட்பது)
2. அறியா வினா - தெரியாததை தெரிந்து கொள்ளும் நோக்கில் கேட்பது (மாணவர், மற்றவர்)
3. ஐய வினா - இதுவா அதுவா என்ற சந்தேகம் தெளியக் கேட்பது
4. கொளல் வினா - தேவைப்படுவதை வாங்கும் பொருட்டு இருக்கிறதா என வினவுவது.
5. கொடை வினா - பிறரிடம் இல்லாதவற்றை தான் தரும் பொருட்டு கேட்பது. (அந்தக் காலத்தில் கொடுப்பவர் கேட்டுக் கொடுத்தார் எத்தகைய தானமும். இன்றோ எல்லாம் கேட்டுப் பெறுவதே வழக்கமாகிவிட்டது)
6. ஏவல் வினா - தன் ஆளுமைக்கு உட்பட்டவர்களை அதட்டலுடன் வினவுதல்.
விடை எட்டு:
1. சுட்டு விடை - வழி காட்டுதல்
2. மறை (எதிர்மறுத்தல்) - கேட்பதை செய்ய மறுத்தல். 'மாட்டேன்' என்ற ஒரே சொல்லால் அடித்தல். (உண்மையை மறைத்து சொல்வதை கூட இதில் வகைப்படுத்தலாமோ ?)
3. நேர் விடை - கேட்டதுக்கு நேரிடையாக சொல்வது அல்லது ஆமோதிப்பது.
4. ஏவல் விடை - எதையாவது 'செய்' என்ற கட்டளை வினாவுக்கு 'நீயே செய்' என்பது.
5. வினா விடை - எதிர் கேள்வி கேட்பது. செய்ய மாட்டேனா? என்பது போல்.
6. உற்றது உரைத்தல் - தண்ணீரில் குளிக்கிறாயா? என்றால் நேற்று குளிர்ந்து என்பது போல்.
7. உறுவது கூறல் - கசாயம் குடிக்கிறாயா? என்றால் கசக்கும், காரமாயிருக்கும் என்பது.
8. இனமொழி - இட்லி சாப்பிடுகிறாயா? என்றால் தோசை சாப்பிடுகிறேன் என்பது. வணிகர்கள் நாம் கேட்பது இல்லையென்றாலும் மாற்றாக ஒன்று இருப்பதைக் கூறுவது போல்.
இன்றைய நம் கேள்விகளும் எண்ணற்றவை. அதற்கான பதில்களும்.
தலைப்பிலேயே - நிறைய யோசிக்க வைத்து விட்டீர்கள். நல்ல அலசல்.
ReplyDeleteதம்பி சிவகுமாரனின் வலைவழி இன்றுதான் தங்கள் தளத்திற்கு வந்தேன். இயல்பான எழுத்துகள், நல்ல நல்ல சிந்தனைகள். தொடருங்கள், தொடர்வேன். நன்றி
ReplyDelete