நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

எண் சொன்னால் குறள் சொல்ல முடியுமா?

Saturday, 13 July 2013


திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி - 2

நான்காம் படி: 

      தற்போது திருக்குறளின் அதிகாரத் தலைப்புகள் எண்ணுடன் தெரியும். திருக்குறள் முழுவதும் தெரியும். எண் சொன்னால் குறள் சொல்வதற்குரிய படியை இப்போது பார்க்கலாம்.
இதற்கு மீண்டும் அதிகாரத் தலைப்பு எண்களை எண்ணுடன் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
         ஒவ்வொரு அதிகாரத்திலும் முதற்குறள், கடைசிக் குறள் இவற்றை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
         முதல் அதிகாரத்திலிருந்து 133-வது அதிகாரம் வரை முதற்குறளையும் கடைசிக் குறளையும் சொல்லிப் பாருங்கள். போதுமான பயிற்சி எடுத்துக் கொள்ளவும்.
          அதாவது 411வது குறள்  என்று சொன்னால் 42வது அதிகாரமாகிய 'கேள்வி'யில் முதற்குறள் என்று கொள்ள வேண்டும். 740வது குறள் என்று சொன்னால் 74வது 'நாடு' என்ற அதிகாரத்தின் கடைசிக் குறள் என்று நினைவுக்கு வரவேண்டும்.
         இதற்கான பயிற்சியைத் தொடருங்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் பயில்வதால் நினைவாற்றலில் வலிவு ஏற்படுகிறது. அவ்வலிவை வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
        இடையில் தொய்வு ஏற்பட்டாலும் தொடர்ந்து தொய்வினை பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள வேண்டும்.

ஐந்தாம் படி:

        இப்போது அதிகாரத்தின் தலைப்புடன் 1330 குறள்களும் தெரியும். ஒவ்வொரு அதிகாரத்தின் முதல் குறளும் கடைசிக் குறளும் தெரியும். அதாவது 1,0 ல் முடியும் எந்தக் குறளைக் கேட்டாலும் உடன் விடையளிக்க இயலும். இதர எண்களுக்குரிய குறட்பாக்களை எப்படி நினைவுக்குக் கொண்டுவருவது?
இப்போது 637எண்ணுள்ள குறள் எது எனக் கேட்டால் 64வது அதிகாரம் ‘அமைச்சு' ல் 7வது குறள்.(செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து /இயற்கை அறிந்து செயல்) இத்தொடர் சிந்தனை வரவேண்டும்.
இதற்குரிய எளிய வழி, ஒவ்வொரு அதிகாரத்தின் முதற்குறள், கடைசிக் குறள் இவற்றை விரைந்து சொல்லும் ஆற்றலைப் பெற்றபின் ஒவ்வொரு அதிகாரத்தின் ஐந்தாவது குறளையும் சேர்த்து நினைவில் வைத்துக் கொள்ளப் பயிலுங்கள்.
       இப்பயிற்சியால் 1,5,0 இவற்றில் முடியும் குறட்பாக்களை எப்பொழுதும் நினைவில் இருத்தலாம். இவற்றின் உதவியுடன் பிற எண்ணில் முடியும் குறட்பாக்களை எளிமையாக நினைவுக்குக் கொண்டுவந்து விடலாம்.

ஆறாம் படி:

தற்போது 1330 குறட்பாக்களும், அதிகாரத் தலைப்பு எண்ணுடன் தெரியும். 1,5,0 இல் முடியும் குறட்பாக்களைக் கேட்டவுடன் சொல்லத் தெரியும். எந்த எண் கூறினாலும் குறளைச் சொல்வதற்குரிய பயிற்சியை இப்போது பார்க்கலாம்.
494-வது குறள் என்றால், 50-வது ‘இடனறிதல்' அதிகாரத்தில் நான்காவது குறள்.
491 ‘தொடங்கற்க' என்பது உடன் நினைவுக்கு வரும். தொடர்ந்து 492,493 சொல்லி வந்தால் 494-வது
‘எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்'
என்று கூறிட முடியும்.
1038-வது குறள் என்று சொன்னால், 104-வது ‘உழவு' அதிகாரத்தில் 8 வது குறள்.
          1035 வது குறள் ‘இரவார் இரப்பார்க்கொன்றீவர்' எனத் தொடங்கும் குறள் என்பது முன்னரே தெரியும். தொடர்ந்து சொல்லி வந்தால் 1038-வது குறள்,
‘ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு'
எனக் கூற இயலும்.

       இவ்வாறு எந்த எண்ணைக் கூறிக் குறளைக் கேட்டாலும் தற்போது கூற இயலும். இவ்வாறு முயற்சியால் பெற்ற ஆற்றலை மறதி வெள்ளத்தில் இழந்து விடலாகாது.
கைப்பொருளை எவ்வளவு பாடுபட்டுக் காப்பாற்றுகிறோமோ அவ்வாறே இவ்வாற்றலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு படுக்கப் போகும் வரை சிந்தனைக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் முதல் குறளிலிருந்து கடைசிக் குறள் வரை வரிசையாய்ச் சொல்லி முடித்திருக்க வேண்டும். இப்பயிற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஏழாம் படி:

       தற்போது உங்களுடைய ஏட்டில் 133 அதிகாரத் தலைப்புகளும் 1330 குறட்பாக்களும் எண்களுடன் முதற்சீரும் இறுதிச் சீரும் எழுதப் பெற்றிருக்கின்றன.
        தங்கள் கையில் திருக்குறள் புத்தகத்தைத் தவிர திருக்குறள் நினைவேடு ஒன்றும் உருவாகியிருக்கிறது. இந்நினைவேட்டினை கையில் வைத்துக் கொண்டு சில வரிசை எண்களைச் சொல்லி அவற்றுக்குரிய குறள்களையும் காணுங்கள். கையேட்டின் வழி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
        நண்பர்களைக் கேட்கச் செய்வது இன்னும் பயன் அளிக்கும். இதனால் எண் கூறக் குறள் கூறும் ஆற்றல் இயல்பாகவே வளரும். கேட்க நண்பர்கள் அருகில் இல்லையெனில் சாலையில் ஓடுகிற வண்டிகளில் காணப்படும் எண்கள், பிற பலகைகளில் காணப்படும் எண்கள் இவற்றைப் பார்த்தவுடன் அவ்வெண்களுக்குரிய குறட்பாக்களை நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
         உங்கள் ஊருக்கு அஞ்சல் குறிப்பெண் 621851 எனில், இவ்வொரு குறிப்பிலிருந்து 621, 851, 158,126, 261, 581, 218, 516, 625, 628 போன்ற பல எண்களை நாமே உருவாக்கி அவ்வெண்ணுக்குரிய குறட்பா எது என்பதை நினைவு படுத்திக் கொள்ளலாம். நினைவாற்றல் வளர இதுவும் ஒரு வழி.

எட்டாம் படி, ஒன்பதாம் படி, பத்தாம் படி ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி: திரு. அ . ஆறுமுகம், திருமழபாடி ,
             வெளியீடு: பாவேந்தர் பதிப்பகம், 
                                  'சீரகம்', திருமழபாடி,
                                  திருச்சி மாவட்டம்.
             வெளியான ஆண்டு : தி.பி. 2024 (1993)

8 கருத்துரைகள்:

 1. ஒவ்வொரு படியின் விளக்கம் அருமை... தொடர்க...

 1. நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்ள மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

 1. படிப்படியாய் படிக்க அருமையான பகிர்வுகள் ..
  பாராட்டுக்கள்..!

 1. நினைவாற்றலுக்கு சிறந்த பதிவு....!

 1. நல்ல வழிகள்....

  தொடர்கிறேன்.

 1. பயனுள்ள பகிர்வு நிலா.

  இப்போது சற்று முன்னர் தான் அரச வானொலியில் தமிழுக்கென ஒதுக்கியிருக்கின்ற 1 மணி நேர நிகழ்ச்சியைக் கேட்டேன். அதில் பாஸ்கர் சக்தி என்பவரின் ’மகன்’ என்ற சிறுகதை ஒலிபரப்பானது. அக் கதையின் கரு முன்னய சந்ததி எவ்வாறு எல்லாவற்றையும் மனதில் இருத்தி நினைவில் வைத்திருந்தார்கள் என்பது பற்றியும் இப்போது நாம் எல்லாவற்றையும் எப்படி மொபைலில் சேமித்து வைத்து ஞாபக சக்தியை வீண் விரயம் செய்து தொலைபேசி தொலைந்து விட்டால் மிகுந்த பதட்டப்படுகிறோம் என்பது பற்றியதாக இருந்தது.

  குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே இவற்றைச் சொல்லிக் கொடுத்தால் மிகுந்த பயனுடயதாக இருக்கும். நம்முடய ’memory card’ full ஆகி விட்டது நிலா. சேமிக்க இனி அங்கு இடமில்லை.முழுக்க முழுக்க அனுபவங்களாலும் மிச்சம் நினைவுகளாலும் நிரம்பி வழிகிறது அது.பிள்ளைகளுக்கு அது Full ஆக முதல் சொல்லிக் கொடுத்து விட வேண்டும்.:)

 1. அசத்துகிறீர்கள் நிலா...
  அது சரி, பிள்ளை வந்திருக்கிறாள், தொந்திரவு பண்ணக் கூடாதென்று நான் உங்களுக்கு பேச நினைத்தும் பேசாமல் இருக்க, நீங்கள் அவளுடன் நேரம் செலவழிக்காமல், வலை பின்னிக் கொண்டிருக்கிறீர்கள்.,..... ம்ம்ம்ம்ம்.....வெரி பேட்....

 1. ஒருநாள் ஏதோ ஒரு வேகத்தில் நமக்கு எத்தனைத் திருக்குறள்கள் மனத்தில் பதிவாகியுள்ளன என்று பரிசோதிக்க முயன்றேன். மிஞ்சிப்போனால் நூறு தாண்டவில்லை. அதுவும் எந்த அதிகாரம், எந்த எண் என்றெல்லாம் தெரியவில்லை. பல குறள்கள் சட்டென்று நினைவுக்கு வரவுமில்லை. இப்படி படிப்படியாய் மனனம் செய்திருந்தால் வரிசையாய் நினைவுபடுத்துவதோடு, இடையிலும் தேவைப்படும் குறள்களை நினைவுக்குக் கொண்டுவரமுடியும். முயற்சி செய்தால் முடியும். முயற்சி செய்யத்தான் மனத்தில் உத்வேகம் இல்லை.

  மணிமேகலாவின் மறுமொழியிலிருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டாகவேண்டும். அவர் குறிப்பிட்டதுபோல் நமக்கெல்லாம் மெமரி கார்ட் நிறைவுற்றுவிட்டது போலும்.

  பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar