நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

நீங்க போனதுண்டா இங்கே?

Thursday, 9 August 2012
          இம்முறை கோடைக்கானல் பயணத் திட்டமான நான்கு நாள்கள் திட்டமிட்டபடி செம்மையாகவே எல்லாம் அமைந்தது. ஊருக்கு திரும்ப வேண்டிய முதல் நாள் இரவு தொடங்கிய மழையிலும் அதன் காரணமான மின் தடையிலும் எங்களுக்கான சோதனை ஆரம்பமானது.
           தங்கியிருந்த இடத்தில் எடுத்துச் சென்றிருந்த மெழுகு வர்த்திகள் மற்றும் டார்ச் லைட் துணையிருக்க தூக்கம் தழுவிய நேரம். பெரிய நாத்தனார் மகள் எழுந்து போய் பாத்ரூமில் வாந்தி எடுத்தாள். அடுத்த அரை மணியில் மறுபடியும். கையிலிருந்த முதலுதவி மருந்துகள் பலனளிக்கவில்லை. மணி 12.30

          திடீர்ப் பயணமாததால் வழக்கமாக நாங்கள் தங்குமிடத்தில் இடமில்லாமல் புதிய இடத்தில் ஏற்பாடு செய்த பதட்டத்தில் தங்குமிடத்தின் பாதுகாப்பாளரின் தொடர்பு எண் வாங்கிக் கொள்ளாதது உறைத்தது. மருத்துவமனை எங்கிருக்கிறதென்று தெரியாமலும், வெளியே கொட்டும் மழையாலும் என் கணவர் தீவிரமாக யோசித்து, 108 அவசர சேவைக்கு தொடர்பு கொண்டார். சென்னை மையத்துக்கு போன அழைப்பை அக்கறையோடு ஏற்று அங்கிருந்தவர்கள் நாங்கள் இருக்குமிடத்தை அடையாளம் கேட்டுக் கொண்டு கொடைக்கானல் மையத்துக்கு தகவல் சொல்லி வண்டி அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
           தூங்கும் முன் வயிறு வலியோடு நான் தந்த ஹோமியோபதி முதல் உதவி மருந்து உட்கொண்டு சிரமத்தோடு கண்ணயர்ந்திருந்த எங்கள் மகள் எழுந்து போய் வாந்தி எடுத்தாள். அவசர ஊர்தி வாசலில் வந்து ஒலியெழுப்பியது.
           நாத்தனார் மகள், எங்கள் மகள், நாத்தனார், என் கணவர் மற்றும் நான் ஆகியோர் கைவசம் ஓரிரு சால்வைகளும், (இந்த சீசன் குளிர் தெரியாததால் நாங்கள் யாரும் ஸ்வெட்டர் அணிந்திருக்கவில்லை)தண்ணீர் பாட்டில்களும் எடுத்துக் கொண்டு அவசரமாகக் கிளம்பியபோது இரவு மணி 1.30. மழை தூறல் நிற்கவில்லை. ஓடும் அவசரத்திலும் இரு மெழுகு வர்த்திகளையும் டார்ச்சையும் எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டேன். தீப்பெட்டியும் தான். மாமியார் எழுந்து கதவை மூடிக் கொண்டார். சின்ன நாத்தனாரை மாமியாருக்கு பேச்சுத் துணைக்கு எழுப்பி விட்டோம். பெரிய நாத்தனார் மகனும் சிபியும் தூக்கத்தில்.
           நடுராத்திரியில் அவசர ஊர்தியில் வலுத்த மழையில் உடம்பு சரியில்லாத பிள்ளைகளோடு சென்ற அந்தப் பயணம் அன்று பகலில் குதூகலமாக கொடைக்கானலை சுற்றி வந்த பயணத்துக்கு முற்றிலும் முரணாயிருந்ததை சிந்தித்தபடி தலைகால் புரியாத தெருக்களில் ஓட்டுநரை மட்டும் நம்பி போய்க் கொண்டிருந்தோம்.
 கொடைக்கானல் அரசு மருத்துவமனை மகளீர் பிரிவின் வாசலில் வண்டி நின்றது. இறங்கியதும் இரு பிள்ளைகளும் மறுபடி வாந்தி.
          கும்மிருட்டில் திறந்து கிடந்த மருத்துவமனை வாயிலில் கேட்பாரின்றி நுழைந்தோம். அவசர ஊர்தி ஓட்டுநர் மனிதாபிமானத்தோடு செவிலியர் அறைக்கதவைத் தட்டி “கேஸ் வந்திருக்கு” என்றார். ஆற அமர வெளிவந்த இரு பெண்களில் ஒருவர் புடவை கட்டி மேலே ஸ்வெட்டர் போட்டிருந்தார். ஒருவர் சுடிதாரும் ஸ்வெட்டரும். தூக்க கலக்கத்துடன் விசாரித்தனர். அவர்களைத் தாண்டி தூங்கி வழிந்து கொண்டிருந்தது வார்டில் மின் விளக்கு. படுக்கைகளில் நோயாளிகள் உறக்கத்தில்.
          இன்ஜெக்ஷன் போட்டு மாத்திரை தர்றேன். உங்க இடத்துக்கே வண்டி வரவழைச்சு போயிடுங்க. இது சுடிதார் பெண். அவசர ஊர்திக்கு கொண்டு வந்து விட மட்டும்தான் அதிகாரமாம். அதுவும் அரசு மருத்துவமனையில் மட்டுமே விடுவார்களாம். நாம் என்னத்தைக் கண்டோம்...?  மருத்துவமனைக்குள் ‘ஙொய்' என்று சைரன் போல் ஒரு ஒலி தொடர்ச்சியாக. அங்கிருந்த யாரும் அதை சட்டை பண்ணவில்லை. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும் தண்ணீர்க் குழாயில் கசியும் சொட்டின் மெல்லிய டிப் டிப் ஒலியுமே என்னை சங்கடப்படுத்தும்... இந்த விடாத சைரன்...
           வண்டி வரவழைச்சா? இந்த அர்த்த ராத்திரியில் யாரைக் கூப்பிடுவது?
         “உங்களுக்கு என்ன வேணும்?” சப்தம் போட்டார் சுடிதார் பெண்.
          “விடியும் வரையில் உங்களால் ஆன மருத்துவ உதவியை தாங்க. விடிந்தவுடன் யாரையாவது கூப்பிட்டு எங்காவது காட்டிக் கொள்கிறோம். நாங்க வெளியூர். இங்கே அதிகம் புரியாது” என்றோம் தன்மையாக.
         “இப்படித் தான் சொல்வீங்க. விடிஞ்சதும் சொல்லாம கொள்ளாம லெட்ஜர்ல க்ளோசிங் சைன் கூட போடாம போயிடுவீங்க. அப்பறம் நாங்க கிடந்து அவஸ்தை படணும்...” பொரிந்தார் அப்பெண்.
         ஏதும் பேசாமல் அரையிருட்டில் இன்ஜெக்ஷனும் மாத்திரைகளும் தேடிக் கொண்டிருந்தார் புடவை கட்டிய பெண். இவர் செவிலிப்பெண் என்றும் சவுண்ட் பார்ட்டி டாக்டர் என்றும் தோன்றியது எனக்கு.
          நாங்க க்ளோசிங் சைன் போட்டுவிட்டு சொல்லிக் கொண்டே போவோமென வாய்மொழியாக உறுதியளித்தோம்.
           “பெட் இல்ல... சாயந்திரம் தான் இருபது கேஸ் வந்துச்சு...” தணியாமல் கடுப்படித்துக் கொண்டே இருந்த அப்பெண் என் கணவர் சற்று எகிறவும் தணிந்தார். அட்மிட் செய்ய சம்மதித்தார். “பெட் இல்லைன்னீங்க?” என்றதற்கு, “அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை?”
           “மேம், அந்த சைரன் சப்தம் நின்னுடுச்சு...” இது நான்.
           “ம்ம்... இன்னும் கொஞ்சம் நேரத்துல கரண்ட் போயிடும்.” சாவதானமாக சொல்லியபடி தன்னறையிலிருந்த எமர்ஜென்ஸி லைட்டை கையிலெடுக்கவும் அழுது வடிந்து எரிந்து கொண்டிருந்த பல்ப் மண்டையை போடவும் சரியாக இருந்தது.
          அட ராமா... இம்மாம் நேரம் கத்தியது இன்வெர்ட்டரா?
 பின்கட்டுக்கு சென்ற அவரை பின் தொடர்ந்தோம் நாங்கள். என் மகள் சுரண்டினாள் என்னை. “சிஸ்டர், பாத்ரூம் எங்க இருக்கு?” இது நான்.
          “வாசல் பக்கம் ரைட் சைடுல ஒரு வழி போகும் பாருங்க.” ஆண்கள் பிரிவின் கம்பவுண்டரை பெயர் சொல்லி அழைத்தார். “லைட் எரிய வைக்க முடியுமா?” கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்த அவர், உதட்டைப் பிதுக்கினார்.
          கையிருப்பில் இருந்த டார்ச்சை உயிர்ப்பித்து நானும் மகளும் தட்டுத் தடுமாறி அந்த ஒற்றை பாத்ரூம் சென்று வந்ததை தனி அத்தியாயமாகவே விவரிக்கலாம். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ‘ஐயோ பாவம்'! நாங்கள் திரும்புவதற்குள் வார்டிலிருந்தவர்கள் எந்த வெளிச்சமுமின்றி சரளமாக வந்து வழியிலேயே வேலையை முடித்து சரசரவென போனதை கண்டபோது சூழல் நமக்குதான் புதிதென புரிந்தது.
          பின் அறைக்கு வந்து சேர்ந்தோம். நாத்தனார் பெண்ணுக்கு அங்கிருந்த  ஒற்றைக் கட்டிலில் படுக்க வைத்து ட்ரிப்ஸ் போட்டுக் கொண்டிருந்தார் சு(டுமூஞ்சி)டிதார் பெண். “என்ன பார்க்கிறே, ஏறிப் படு” என ஒரு அதட்டல் என் மகளிடம். எங்கே படுப்பதென விழித்தாள் அவள். “இந்த பக்கம் தலை வைச்சி படு. தள்ளிப் படும்மா”
           அவள் கால்மாட்டில் தலை வைத்து இவள் படுக்க, அவள் நகர்ந்தாள் கட்டிலோரம். இவளுக்கும் ட்ரிப்ஸ் போடப்பட்டது. “குளிரும். ஜுரம் வந்திடும் பயப்படாதீங்க. அதுக்குத்தான் மெதுவா வெச்சிருக்கேன்...”இதற்குள் அப்பெண் வைத்திருந்த எமர்ஜென்ஸி லைட் கண் மூடிவிட்டது. ‘ப்ச்' கொட்டியபடி எங்களிடமிருந்த டார்ச்சை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
           கைப்பையிலிருந்த மெழுகு வர்த்தியை ஏற்றி கதவருகே வைத்தேன். உள்ளறையை எட்டிப் பார்த்த போது அது லேபர் ரூம் என்பதும் இது பிரசவத்துக்கு முன்னும் பின்னும் படுக்க வைக்கும் கட்டில் என்பதும் புரிந்தது. என்ன கொடுமை சரவணா?!
           இவரை அனுப்பி டார்ச்சை மீட்டேன். இருந்த துளி இடத்தில் கட்டிலின் இருபுறமும் இவரும் நாத்தனாரும் ஆளுக்கொருவர் கையைப் பிடித்தபடி. எடுத்து சென்ற சால்வைகளை இருவருக்கும் போர்த்தி விட்டோம். நிற்க அலுத்து வாசல் பக்கம் பார்வையை பதித்தபடி நான்.
           ஆண்கள் பிரிவு கம்பவுண்டர் கரிசனமாக இரு கம்பளிகள் கொண்டுவந்து தந்தார். “நல்லா போர்த்தி வெச்சுகுங்க. குளிரும்.” அவர் சொன்னது போல் விடியலில் குளிர் காற்று எங்களுக்கே சகிக்க முடியாமலிருந்தது. உடைந்த கண்ணாடி ஜன்னல் வழியே புஸ் புஸ் என குளிர் காற்று! நாத்தனார் பெண்ணுக்கு உடம்பெல்லாம் உதறுகிறது. ஊசி போடவே டபாய்க்கும் இருவரும் ட்ரிப்ஸ் போடப்பட்டு பிணைக் கைதிகளாய். “எப்ப எடுப்பீங்க, வலிக்குது, எடுக்க சொல்லுங்க” அணத்தல் தாங்கலை.
          மனசு கேட்காமல் போய் கதவைத் தட்டினால் புண்ணியவதிகள் எழுந்து வராமலேயே “அப்படித்தாம்மா இருக்கும்... சொன்னேன்ல” என்கிறார்கள். சற்றைக்கெல்லாம் ட்ரிப்ஸ் இறங்கும் குழாயிலிருந்து நீர் கசிந்து கையடியில் வைத்திருந்த துண்டு நனைந்தது. முதலில் பனியென்றிருந்தோம். நகர்த்தி வைத்தும் நனையவும் கூர்ந்து கவனித்தால் ட்ரிப்ஸ் குழாயும் ஊசி இணைக்கப் பட்ட குழாயும் இணையுமிடத்தில் நிஜமாகவே கசிகிறது. மருந்தே உள்ளே செல்லாமல் எதற்காக இப்பிள்ளைகளை இப்படிப் போட்டு வைத்திருக்க வேண்டும்? போய் கூப்பிட்டால், “அது அப்படித் தாம்மா... எல்லா ட்யூபுமே அப்படித்தானிருக்கு என்ன செய்யச் சொல்ற?” என்கிறார் அலட்சியமாய். திரும்பத் திரும்ப கேட்ட பின் கடுப்பாக கூட வந்து “பாதியளவு மருந்து போகுதில்ல... பிறகென்ன?”
           “அப்ப, கழட்டிடுங்க.”
           “நீங்க சொன்னா போடணும், எடுக்க சொன்னா எடுக்கணுமா? அதெல்லாம் முடியாது. ட்ரிப்ஸ் முடிஞ்சாதான் எடுப்பேன்.”
          “மருந்தே உள்ளே போகாம என்னத்துக்கு இந்த வைத்தியம்?”
          “அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.”
        வாசலில் வண்டி வந்து நிற்கும் சப்தமும் அறைந்து கதவை மூடும் சப்தமும். ஆச்சு... இருபத்தி நாலாவது கேஸ் வந்தாச்சு போலிருக்கு.
          ஒரு கர்பிணியும் ஒரு முதிய பெண்மணியும் கைகளில் கனத்த பைகளுடன் ஒரு நடுத்தர வயது ஆணும்.
           அப்பெண்மணி சென்று அறைக்கதவைத் தட்டுகிறார். கர்பிணியின் பெயர் சொல்லி பிரசவ வலி வந்துடுச்சும்மா, கொண்டுட்டு வந்துருக்கோம் என்கிறார். கதவைத் திறக்காமலேயே “பாத்ரூம் போயிட்டு வரச் சொல்லுங்க” என்று குரல் மட்டும்.
          மாதாந்திர வருகையின் பழக்கத்தில் அப்பெண்ணும் தடுமாறாமல் இருட்டில் சென்று மீள்கிறார். எனக்கு தான் குகை போலும் அவ்வழியையும் கதவில்லா அவ்வறையின் அபாயத்தையும் நினைத்து பகீரிட்டது. மேலும், எங்கள் பிள்ளைகளை சினிமாவில் பார்ப்பது போல் பாய் விரித்து தரையில் போட்டு விடுவார்களோ என்ற பயமும் எழுந்தது.
          நல்லவேளை. வார்டு தாண்டி உள்ளறையில் இன்னொரு லேபர் ரூம் இருக்கிறது போல. அங்கே சென்றனர் அந்தப் பாடாவதி எமர்ஜென்ஸி லைட்டோடு. வார்டில் நோயாளிகள் மின்சாரம் பற்றிய கவலையற்று அசந்து கிடக்கிறார்கள்.
        வழிநடையில் அந்த நடுத்தர ஆண் நிற்க, பேச்சுக் கொடுத்தேன். “ரொம்ப தூரத்திலிருந்து வர்றீங்களா? இந்த டாக்டரம்மா கிட்ட தான் மாசா மாசம் காட்டினீங்களா?”
          “பக்கம் தாம்மா. டாக்டரம்மா ராத்திரியில இருக்க மாட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் டாக்டரில்லையே...”
          “அட! அந்த சுடிதார் போட்ட பொண்ணு டாக்டரில்லையா... நர்ஸா?!”
 சிறிது நேரத்தில் உள்ளறையில் குழந்தை அழும் சப்தம். இருட்டிலும் அந்த ஆணின் நிம்மதி முகம் பளீரிடுகிறது. “பிரைவேட்டில் போனா இந்த சுகபிரசவத்துக்கே முப்பது ஆயிடும்மா” என்கிறார் என்னிடம்.
          எங்கள் பிள்ளைகளுக்கு ட்ரிப்ஸ் முடியும் தறுவாயில் இருக்கிறது. போய் சொல்லி வந்தால் எடுத்து விடுவார்கள். போனால், அறையில் காணவில்லை. பிரசவமான பெண்ணிடம் இருக்கிறார்கள் போல. லேபர் அறைக்கு முன்னறையில் இரண்டு மூன்று பெண்கள் பிரசவித்த புத்தம்புது சிசுக்களோடு. ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்ட அவரின் தாய் ஒரு கையில் மெழுகு வர்த்தி கொண்டு மறு கையால் பேரக் குழந்தை தலையை வருடியபடி  விழித்திருக்கிறார்.
          “ட்ரிப்ஸ் முடியும் போலிருக்கு... கூப்பிடலாமா?” தயக்கமாய் நான். (எத்தனை தடவைதான் கடிபடுவது...) “போய் சொல்லுங்க” என்கிறார்கள்.
          பயத்துடன் மெல்ல சென்று மூடியிருக்கும் கதவைத் திறக்கிறேன். ஒருக்களிக்கும் போதே காடா விளக்கின் துணையுடன் சுடிதார் பெண் பிரசவமான பெண்ணுக்கு தையல் போட்டுக் கொண்டிருப்பது தெரிய சத்தமின்றி மூடிவிட்டு ஆண்கள் பிரிவு கம்பவுண்டரை அழைத்து வந்து ட்ரிப்ஸை எடுக்கச் செய்தேன். ஏனோ அச்சுடிதார் பெண்ணின் சிடுசிடுப்பு தாண்டி அவர் மேல் கனிவு பிறந்தது என்னுள்.

11 கருத்துரைகள்:

 1. என்ன நடக்கும்.... என்ன நடக்கும்... என்னும் கேள்வியில்.... முடிவில் சுபம்....

  வாழ்த்துக்கள்... நன்றி...

 1. ஒரு நரகத்துக்குப் போய்வந்த அவதியை உணர்கிறேன் உங்கள் எழுத்தின் மூலம். படிக்கும் எனக்கே இப்படி உள்ளதே.. அரசு மருத்துவமனையின் அவசர, அத்தியாவசிய வசதிகளற்றக் கொடுமையை அனுபவித்த உங்களுக்கும், அதுவே வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி உயிர்களுக்கும் உண்டான, உண்டாகும் வேதனையை என்னவென்று சொல்வது?

  இறுதிவரிகளில் கசிந்த தாய்மை உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நிலாமகள். எனக்கும் மனம் நெகிழ்ந்துபோனது.

 1. சிடுசிடுப்பு தாண்டி அவர் மேல் கனிவு பிறந்தது என்னுள்.

  அத்தனை சிரமத்தையும் நிம்மதியாக்கிய வரிகள் !

 1. ஒரு அரசு மருத்துவ மனையின் இரவை இதற்கும் மேல் காட்சிப்படுத்தியிருக்க முடியாது.

  மரத்துப் போன நோயாளிமக்கள், அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள்.

  இதையும் விட மோசமான சூழ்நிலைகளில் மென்மையான வார்த்தைகளில் ஆறுதல் கொடுக்க வேண்டிய மருத்துவமனைதான் இன்றைக்கு எப்படி உருக்குலைந்து நிற்கிறது?

 1. அனேகமாக எல்லா அரசு மருத்துவ மனைகளிலும் நடக்கும் நிகழ்வுகள் தாம் இவை!அதுவும் பிரசவத்துக்கு வந்திருக்கும் பெண்களை, அவர்களின் உயிர் போகும் வலிக்கு நடுவே, இதயமே இல்லாமல்‌ பெண் மருத்துவரும் நர்ஸுகளும் வார்த்தைகளால் கொல்லும் கொடுமை இருக்கிறதே, அதையெல்லாம் என்னவென்று சொல்லுவது?

  அருமையான பதிவு!

 1. அட ..படிக்கும் போதே இவ்வளவு பயங்கரமாய் இருக்கே!!!

 1. ஹேமா said...:

  அந்த இரவின் அவஸ்தையை மனம் படபடக்க அனுபவிச்ச மாதிரி இருக்கு நிலா.நம் நாடுகள் எப்போதான் மனிதாபிமானதோடு முன்னேறப்போகுதோ....கடவுளே !

 1. என்னவென்று சொல்ல.. படிக்கப் படிக்க.. அந்த நிமிட சங்கடங்கள் புரியப் புரிய.. கடவுளே..
  அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் மருத்துவமனைகளின் மீது எந்த நம்பிக்கையில் நோயாளிகள் செல்வது..

 1. சுகன் மொழியில் சொல்ல வேண்டும் எனில் அது அப்படித்தான் நிலா. ஈரம் எங்கும் இருக்கவே. நமக்கு தட்டுப்படுவதில்லை பல நேரங்களில். நல்லா இருக்காங்களா?

 1. கடசி வரி எடுத்துக் கொண்டு போய் விடுகிறது அத்தனை உபாதைகளையும். அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் அதனதன் தாற்பரியங்கள் இல்லையா நிலா.

  நல்லதொரு அனுபவப் பகிர்வு.

 1. அரசு மருத்துவமனைகளின் நிலை இதுதான் சகோ. நீங்கள் கொடைக்கானல் மருத்துவமனை நிலை சொன்னீர்கள் - இங்கே நமது தேசத்தின் தலைநகர் அரசு மருத்துவமனையின் நிலையே அது தான். போதிய வசதிகள் இல்லாது, இருக்கும் ஒரு படுக்கையில் ஒரு கர்ப்பிணி, அன்று தான் பிரசவம் ஆன ஒரு பெண், அவரது ஒரு நாள் குழந்தை மூன்று பேருமே ஒரே படுக்கையில் இருக்கும் நிலையைப் பார்த்திருக்கிறேன். .... கொடுமை தான்...

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar