நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு?

Saturday, 28 July 2012
       கொடைக்கானலின் லேக்குக்கும் பார்க்குக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி மசாலா சுண்டல், மாங்காய் பத்தை, சோளக் கதிர், பஞ்சு மிட்டாய், ஐஸ் க்ரீம் என தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு கனஜோராய் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மலர்க் கண்காட்சி மற்றும் அக்னி நட்சத்திரம் காரணமாய் மக்கள் கூட்டம் வெகு அதிகம்! அந்தி சாயும் நேரம். மதியம் அடித்த மிதமான வெயில் சரிந்து குளிர் தழுவி வீசியது மென்காற்று. 
        “அம்மாம்மா... இங்க பாரேன்... இந்த சின்னப் பையன் பஞ்சுமிட்டாய் செய்யும் லாவகத்தை...!” சிபி என்னைச் சுரண்டினான். “இப்பதான் வாங்கி சாப்பிட்டோம்” உப தகவல் வேறு! அரை ம‌ணி நேர‌மாய் என் க‌ண‌வ‌ரும் நாத்த‌னார் ம‌க‌னும் சிபியும் போட்டிங் போய்விட்டு ஷாப்பிங் சென்றிருந்த‌ எங்க‌ளுக்காக‌க் காத்திருந்த‌ன‌ர் அங்கு. என் கணவரும் மகளும் பர்ச்சேஸில் விடுபட்ட ஸ்வெட்டர் வாங்கச் சென்றனர். மரத்தடியிலிருந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்த நாங்கள் அருகிலிருந்த தள்ளுவண்டியில் ஒரு கல் மேல் ஏறி நின்று  குனிந்தவாகில் மும்முரமாயிருந்த அப்பையனைப் பார்த்தோம்.

          அந்தப் பையன் இடது கையால் ஒரு கைப்பிடியை பிடித்து சுழற்றினான். சிறு வயதில் கல் இயந்திரத்தில் தரையில் அமர்ந்து மாவிளக்கு மாவு அரைத்த ஞாபகம் எழுந்தது என்னுள். வலது கையிலிருந்த குச்சியில் வண்டியின் நடுவிலிருந்த பெரிய ட்ரம்மில் பறந்து கொண்டிருந்த நூலிழைகளை சுழற்றி சுழற்றி சேர்க்க மாயாஜாலமாய் புசுபுசுவென கூம்பு வடிவில் பஞ்சு மிட்டாய் உருக்கொண்டது. மிட்டாய் ரோஸ் கலரில் கண்ணைப் பறிக்கும் அதை எதிரிலிருந்த குழந்தையிடம் அவன் புன்னகை மாறாமல் நீட்ட, குழந்தையின் தந்தை பத்துரூபாய்த்தாளை கைமாற்றினார்.
        ட்ரம்மைத் தூக்கி அடியிலிருந்த மண்ணெண்ணெய் விளக்கை எடுத்தான்.
ஒரு வித்தியாசமான அமைப்பிலிருந்தது அது. காடா விளக்கு அளவில் இருந்தாலும் திரி நுனியிடத்தில் ‘ட'வடிவில் ஒரு தகரக் குழல் பொருத்தப் பட்டிருந்தது. விளக்கின் உடல் பாகத்தின் ஒரு புறம் கைப்பிடிக்க வசதியும் மறு புறம் ஒரு பிஸ்டன் முனையும் இருந்தது. பிஸ்டனின் அட்ஜஸ்ட்மெண்டில் பம்ப் ஸ்டவ்வில் அழுத்தம் குறைப்பது போல் சரி செய்து சிமிழின் கூர் குழாயில் எரியும் ஜ்வாலையை ஊதி விட்ட அவனை வாய்பிளந்து வேடிக்கைப் பார்த்தபடி இருந்தேன் நான். ஒரு தேர்ந்த தொழில்நுட்பக் காரனின் பார்வையோடு தீவிரமாக அதை சரிசெய்தான் அவன்.
         அதே மிட்டாய் ரோஸ் கலரிலிருந்த அவனது ஸ்வெட்டர் மாடல் சட்டையுடன், பனிக்குல்லாயற்ற தலையும் சின்ன முகமும் கூர் நாசியும் முகம் முழுக்க கசிந்த புன்னகையுமாக அச்சிறு உருவம் என்னைக் கொள்ளை கொண்டது. தன்னம்பிக்கை ஒளிவிடும் முகத்தில் புகாரின் சிறு சாயலுமில்லை, எவர் மீதும்! ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ' என்னுள்  முணுமுணுத்தேன்.
         “உன் பேரென்ன தம்பி?”
          “லோகேஷ்”  வாய் சொன்னாலும் கண்கள் கடந்து போவோரைக் கவனித்தபடியே.
         “உங்க வீடு எங்க இருக்கு?”
         “இங்க தான் பக்கத்துல” டென்னிஸ் கோர்ட்டில் பந்து இருபக்கமும் செல்லும் வேகத்தில் பதில்.
          “யார் கிட்ட கத்துகிட்ட இதை?”
           “எங்கப்பாகிட்ட தான்.”
            “இப்ப அவரெங்கே?”
           “வேற வேலையாப் போயிருக்கார். வீட்ல பொம்பளைப் புள்ளைங்களாயிடுச்சு. அவர் வேற வேலைக்குப் போறப்ப நான் இதைப் பார்த்துப்பேன்.”
         “இதுல என்னென்ன சேர்ப்பீங்க”
          “ஒரு பஞ்சு மிட்டாய்க்கு இருபத்தஞ்சு கிராம் சர்க்கரை, கொஞ்சம் கேசரி கலர்.”
         வெறும் சர்க்கரையா இப்படி உருக்கொள்கிறது...! வியந்தேன்.
          “ஸ்கூல் போகலையா நீ?”
         “ம்... போறேனே...! இப்ப லீவ்”
         “என்ன படிக்கிறே?”
         “எய்த். ஸ்கூல் நாள்ல சாயங்காலம் ஐஞ்சு மணிக்கு மேல இங்க வந்துடுவேன்.”
          “தம்பி தங்கச்சியிருக்கா உனக்கு?”
             “ம்ம்ம்... என் ஒசரம் ஒண்ணு, எனக்கு இடுப்பு ஒசரம் ஒண்ணு, அதுக்கு  கீழ ஒண்ணு. மூணு பாப்பா”
          “அவங்களும் படிக்கறாங்களா?”
          “ரெண்டு பாப்பா படிக்குது. சின்னது வீட்டில அம்மா கூட இருக்கும்.”
 தள்ளு வண்டியின் முனையில் ஒரு குச்சி கட்டி அதன் நுனியில் இரு பாக்கெட்களில் பஞ்சு மிட்டாய் அடைத்து தொங்க விடப்பட்டிருந்தது. லோகேஷின் விளம்பரப் பலகையாய். அதைக் காட்டி பாதையில் சென்ற ஒரு பெண்ணின் கையிலிருந்த குழந்தை கேட்கவும் நகர்ந்து கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பின்வாங்கிய சேலை கட்டிய அப்பெண் ‘ஒரு பஞ்சுமிட்டாய் கொடப்பா' என்றார்.
           “இதோக்கா” என்றவாறு வண்டியருகே வைத்திருந்த சர்க்கரை பாட்டிலிலிருந்து ட்ரம்மின் மையத்திலிருந்த குழலில் கரண்டியால் அள்ளிப் போட்டான் லோகேஷ். அடியிலிருந்த சிமினியை எடுத்து பிஸ்டனை இழுத்து இழுத்து அழுத்தி விடவும் காற்றழுத்தம் ஏறியதால் மங்கியிருந்த சுடர் பிரகாசமானது. அதனிடத்தில் பொருத்திவிட்டு ட்ரம்மை சரிசெய்தான். அனிச்சையாக இடக்கை பிடியை சுற்ற, வலக்கையில் வண்டியின் முனையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பையிலிருந்து ஒரு குச்சியை எடுத்து பறக்கும் சர்க்கரை இழைகளை சேகரிக்கத் தொடங்கினான். ஓரிரு நிமிடங்களில் அக்குழந்தை கைகளில் பிரம்மாண்டமாய் காட்சி தந்தது பஞ்சு மிட்டாய். சில்லரையை வாங்கி அதற்கான பையில் பத்திரப் படுத்திக் கொண்டான்.
         சிமினியை அணைக்காமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான், வேறு யாரேனும் கேட்கக் கூடுமென்ற எதிர்பார்ப்பு போலும்.
         “ராத்திரி தூங்கும் போது கை வலிக்குமாப்பா...” பேச்சைத் தொடர்ந்தேன்.
         “வலிக்காதுக்கா. மூணு வருச சர்வீஸ் எனக்கு. முதமுதல்ல கொஞ்சம் வலிச்சுது. இப்பல்லாம் வலிக்கறதில்ல.” பெருமிதமான சிரிப்பு அவன் முகத்தில்.
          காக்கி சட்டை போட்ட ஒருவர், தள்ளு வண்டியருகே வந்து, டேய், எடுறா மாப்ள சீக்கிரமா சில்லரைய...” என்றார்.
          “இப்பத்தான் உங்க கூட வர்ற இன்னொருத்தர் கிட்ட கொடுத்திட்டேன் மாமா” என்றான் லோகேஷ். தலையாட்டியபடி சென்றார்.
          ‘மாப்ள' என்றால் ‘மாமா' எனவும், ‘தம்பி' என்றால் ‘அக்கா' எனவும் பேசும் அவனது சாதுரியம் பற்றி சிலாகித்துப் பேசிச் சிரித்தனர் இதுவரை அமைதியாக எங்கள் உரையாடலை கேட்டிருந்த எனது நாத்தனார்களும், மாமியாரும்.
          “இந்த இடத்துக்கு வாடகையாப்பா?”
          “இல்லக்கா. அவிய்ங்க இங்கல்லாம் கூட்டறவங்க. இந்தக் குச்சியெல்லாம் கீழே கிடக்குமில்ல... அதனால தெனம் பத்து ரூபா தந்திடணும்.”
           பேசிக்கொண்டே இன்னொரு குச்சியெடுத்து இடது கையால் கைப்பிடியை தம் பிடித்து சுழற்றினான். எழும்பிய சர்க்கரை இழைகளை சேகரித்த போது பாதி மிட்டாயளவு தேறியது. ஏழெட்டு மிட்டாய்களுக்கு ஒருதடவை இப்படிக் கொசுறு கிடைக்கும் போல.
          “ராத்திரி வண்டிய எங்க விடுவீங்க?”
           “அந்தா... ஓரமா. ராத்திரி காவலுக்கு பார்க்குல படுக்கும் எங்கப்பா பாத்துப்பாரு.”
           சைக்கிளில் நடைபாதை வியாபாரிகளுக்கு டீ சப்ளை செய்த ஒருவர் லோகேஷிடம் ஒரு டீயை நீட்டியபடி, “எடுடா, பத்து ரூவாய” என்றவாறு அடுத்த வண்டிக்காரருக்கு டீ தரச் சென்றார்.
           “அண்ணே, இன்னிக்கு இப்ப தர்ற ஒரு டீ தான் ... ஐஞ்சு ரூவாதான் தரணும் நான்.”
            “அப்புடியே குமட்டில குத்துவேன். நான் தான் மதியம் ஒரு டீ தந்தேனே... இல்லைங்கிறே...” என்றவாறு லோகேஷ் நீட்டிய பத்துரூபாயை வெடுக்கெனப் பறித்துக் கொண்டு நடையைக் கட்டினார் டீக்காரர்.
            பின்னாலேயே ஓடிய லோகேஷ் அவரைப் பிடித்து ஏதேதோ பேசி மீதியை வாங்கி வந்து பையில் போட்டுக் கொண்டான்.
          ஆறத் தொடங்கிய டீயைக் கையிலெடுத்து “அக்கா, டீ குடிக்கிறீங்களா.. இந்தாங்க, குடிங்கக்கா” என்றவனைத் தடுத்து, “வேண்டாண்டி செல்லம், நீதான் கை வலிக்க சுத்தி சுத்தி களைச்சிருப்பே.  நான் இப்பத்தான் குடிச்சுட்டு வந்தேன்” என்றேன்.
           இளைஞர்கள் நாலைந்து பேர் சூழ்ந்தனர் லோகேஷை. கையில் வைத்திருந்த அரை மிட்டாயை முழுசாக்கியதுடன் மேலும் சில மிட்டாய்கள் விற்பனையானது அவனுக்கு.
           “லோகேஷ், நல்லா படிப்பியா? படிக்க உனக்கு நேரம் கிடைக்குமா?” பேச்சைத் தொடர்ந்தேன் நான். மகளும் கணவரும் வந்தபாடில்லை. நாத்தனார்களும் மாமியாரும் தள்ளியமர்ந்து தங்களுக்குள் கதை பேசத் தொடங்கினர்.
           “ஓ... எங்க டீச்சரெல்லாம் ரொம்ப நல்லவங்க. நல்லா நடத்துவாங்க. புரியாட்டி மறுபடியும் சொல்லித் தருவாங்க.”
           “உன் ஸ்கூல் எங்கேயிருக்கு? கிட்டயா? தூரமா? எப்படிப் போவே?”
          “செம்பகனூர் தெரியுமா?”
           “ஆமா, நாங்க மலையேறுன வழியில சில்வர் ஃபால்ஸ் தாண்டி...”
            “அதேதான்... அங்க பஸ் நிக்கும் போதே எங்க ஸ்கூல் கட்டடம் தெரியும்... பச்சைக் கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும்... பார்த்தீங்களா?”
          “அச்சச்சோ... அது லோகேஷ் படிக்கிற பள்ளிக்கூடம்ன்னு எனக்குத் தெரியாமப் போச்சே... பார்க்கலையே...”
         “திரும்பப் போகும்போது பாருங்க. பெரிய்ய ஸ்கூலு. நிறைய பேர் இருக்கறதால சைக்கிள் எல்லாம் நிறுத்த முடியாது. நான் ஸ்கூல் வேன்ல தான் போறேன்.”
          “அப்படியா... திரும்பறச்சே கண்டிப்பா பார்க்கறேன்.”
         ஆளுக்கொரு குழந்தையுடன் வந்த தம்பதியர் பஞ்சு மிட்டாய்க்காக நின்றனர். “ரெண்டு இருக்கா?” என்றார் சுடிதார் போட்டிருந்த அப்பெண்.
           “தர்றேன் மேடம்” என்றபடி அவசரமாக சர்க்கரை போட்டு, சிம்னியை தூண்டினான்.
          “இனிமேதான் செய்யணுமா? வேண்டாம்ப்பா.” நகர்ந்தனர்.
 ஏமாற்றம் இழைந்தது லோகேஷின் புன்னகையுடன்.
          “இப்படித்தான்க்கா... கூட்டமிருக்கும் போது வியாபாரம் குறையும்.” சிம்னியை வெளியே எடுத்து அதன் காற்றழுத்தத்தை குறைத்தான். அடுத்த கிராக்கி வருவதற்குள் போட்ட சர்க்கரை சூடேறி உபயோகமில்லாது விடுமோ...
           “நான் சீசன் இல்லாதப்ப இல்ல வியாபாரமிருக்காதுன்னு நெனைச்சேன்.”
           “அப்ப நின்னு நிதானிச்சு ஒரு நாளைக்கு ஒரு இடமாப் பார்ப்பாங்க. எல்லாத்தையும் பொறுமையா பார்த்து வாங்குவாங்க. கூட்டம் நெரியறப்ப தான் நிக்க நேரமில்லாம ஓடுவாங்க.”
           “முன்னாடியே செய்ஞ்சு வைக்கலாம்ல கொஞ்சமா.”
          “ஓடாதுக்கா. அமுங்கலா தெரியும். வாங்க மாட்டாங்க.”
          “ஓஹோ...”
          முரட்டு ஆசாமிகளாய் இருவர் வந்து ‘ரெண்டு பஞ்சு முட்டாய் குடுடா' என்றனர் அதட்டலாய்.
          “தோண்ணே...” பரபரப்பாய் வேலை பார்த்தான் லோகேஷ். நீட்டிய மிட்டாயை வாங்காமல் ‘இன்னும் பெரிசாக்குடா' என்றான் அதிலொருவன் கடும் குரலில்.
          பதிலில்லாமல் வாங்கி மேலும் கைப்பிடியை அழுத்தி அழுத்தி சுழற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் பறந்தவற்றை சேகரித்து நீட்டினான். காசைக் கொடுத்துவிட்டு போய்ச் சேர்ந்தார்கள். ஸ்வெட்டர் வாங்கப் போனவர்கள் வருகிறார்களா என கண்ணுக்கு எட்டிய மட்டும் பார்த்தேன்.
          “அக்கா, இங்கல்லாம் பொருள் வாங்க தனி சாமர்த்தியம் வேணும். ஐநூறு ரூபாய்க்கு ஒரு பொருள் வெலை சொன்னா தயங்காம நூறு ரூபாய்க்குக் கேட்கணும். கடைக்காரன் இறங்கி வந்தா கூடுதல் வெலை வெச்சிருக்கான்னு அர்த்தம். அதே விலையில நின்னா சரியான விலைதான்னு புரிஞ்சிக்கலாம். ஒரு கடைக்கு போனாலே அந்தக் கடை நல்லா ஓடுற கடையா இல்லையான்னு புரிஞ்சுக்கலாம். ஓட்டமிருக்கற கடையாயிருந்தா பிரகாசமாயிருக்கும், வர்றவங்க எல்லாம் ஏதாவது வாங்கிகிட்டு தான் போவாங்க. நாலு மூலையும் மங்கலா இருக்கற கடையில வியாபாரம்  டல்லடிக்கும். பொருளெல்லாம் ஓல்டு ஸ்டாக்கா இருக்கும்.”
             “அப்படியா...! ஹோம் மேட் சாக்லேட்லாம் எவ்வளவு நாள் முன்ன செய்வாங்க? சீசன் இல்லாதப்ப தங்கிடுமா?”
            “ஹோம் மேட் சாக்லேட் எல்லாம் செஞ்ச மறு நாளே வித்துடும். கடையப் பொறுத்து தான் இருக்கு. சீசன் இல்லாட்டியும்.”
          “அப்படியா...எத்தனை மணி வரைக்கும் இங்க இருப்பே... இருட்டற வரைக்குமா? கூட்டமிருக்கற வரைக்குமா?”
          “கூட்டமிருக்கற வரைக்கும்.”
         “குளிரடிக்குதே... குல்லா போட்டுக்கலையா? பழகிடுச்சா?”
         “இதெல்லாம் என்னக் குளிருக்கா? எதிர்ல நிக்கற வண்டி தெரியாம பனி மறைச்சிருக்கும். அப்ப கூட கூட்டமிருக்கற வரைக்கும் நின்னு வியாபாரம் செய்ஞ்சிருக்கேன்.”
           “ம்ஹீம்..!”
          ஒரு நடுத்தர வயது மனிதர், உடனழைத்து வந்த சிறுவன் பஞ்சு மிட்டாயைக் கை காட்ட, ‘எவ்ளோப்பா' என்றார். ‘பத்துரூவாயா!' என்றபடி நகர்ந்தார் சிறுவனை மாங்காய் பத்தை காட்டி மனசை மாற்ற முயற்சித்தபடி.
         கடைங்கள்ல சொன்ன விலை அதிகமாயிருந்தாலும் பேசாம வாங்குவாங்க. தெரு வியாபாரம்னா மட்டும்... விலைவாசி எல்லாருக்கும் தான் எட்டாத ஒசரமாயிடுச்சு.
           “லோகேஷ்க்கு பூர்வீகம் எந்த ஊர்? அப்பா பிறந்த ஊர் எது? இங்க வந்து எத்தனை வருஷமாச்சு?”
          “தாத்தா காலத்துலயே இங்க வந்துட்டோமாம். கீழ சிவகாசிப் பக்கம் தான் எங்க அப்பா பொறந்த ஊர். அம்மா ஊரும் பக்கத்துலதா.”
         “அடுத்த வருஷம் லோகேஷை இங்க பார்க்கலாமா?”
           “ஓ... எப்பயும் பார்க்கலாம்.”
          “லீவுலயும், ஸ்கூல் நாள்ல ஐஞ்சு மணிக்கு மேலயும்”
         “ஆமா.”
            “பத்தாவது பரீட்சையில உங்க ஸ்கூலிலேயே முதல் மாணவனா மார்க் எடுக்கறமாதிரி நல்லா படி என்ன...”
           நீட்டிய எனது கையை கணநேரம் தயங்கி, பற்றிக் குலுக்கினான் லோகேஷ். அப்பிஞ்சின் மென்மையான உள்ளங்கையிலும் விரல்களிலும் ஒட்டியிருந்த ரோஸ் வர்ண சர்க்கரைத் துகள்களின் பிசுபிசுப்பு என்னை வெகுவாய் உறுத்தியது. மலர்க்கண்காட்சியில் பலவண்ணங்களில் பரவசமளித்த பூக்கூட்டங்களின் அழகையும் தாண்டி.


11 கருத்துரைகள்:

 1. Ramani said...:

  நீட்டிய எனது கையை கணநேரம் தயங்கி, பற்றிக் குலுக்கினான் லோகேஷ். அப்பிஞ்சின் மென்மையான உள்ளங்கையிலும் விரல்களிலும் ஒட்டியிருந்த ரோஸ் வர்ண சர்க்கரைத் துகள்களின் பிசுபிசுப்பு என்னை வெகுவாய் உறுத்தியது. //

  இப்பதிவைப் படிக்கிற எங்களுக்குள்ளும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

 1. லோகேஸ்க்கு எத்தனை இன்னல்கள்...
  படித்து விட்டு மனம் கனத்தது...

 1. மனம் கனக்கச் செய்தது... பகிர்விற்கு நன்றி....

 1. கடைங்கள்ல சொன்ன விலை அதிகமாயிருந்தாலும் பேசாம வாங்குவாங்க. தெரு வியாபாரம்னா மட்டும்... விலைவாசி எல்லாருக்கும் தான் எட்டாத ஒசரமாயிடுச்சு.

  லோகேஷோடு கழித்த நேரம் உணர்வுகளின் கலவை.

 1. ஹேமா said...:

  மனதை நெகிழச் செய்த பதிவு நிலா.நிச்சயம் லோகேஸ் வாழ்க்கையின் மிக உயரமான நிலையில் இருப்பான் ஒருநாள்.வறுமையோடு நேர்மையும்,தன்னம்பிக்கையும் அவனிடம் நிறையவே இருக்கு !

 1. FOOD NELLAI said...:

  என்னதான் இருக்குது என்று பார்க்க வந்து, இறுதிவரை படித்துப்பார்த்து வியந்தேன். தங்கள் எழுத்து, சூழ்நிலையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

 1. /தன்னம்பிக்கை ஒளிவிடும் முகத்தில் புகாரின் சிறு சாயலுமில்லை, எவர் மீதும்!/ - இந்த ஒரு வரி போதுமாக இருக்கிறது. அச்சிறுவனை முழுமையாகக் வாசகர் கண்முன் கொண்டுவந்து நிறுத்த.

  அருமையான எழுத்தாளுமை நிலா! பாராட்டுக்கள்.

 1. /தன்னம்பிக்கை ஒளிவிடும் முகத்தில் புகாரின் சிறு சாயலுமில்லை, எவர் மீதும்!/ - இந்த ஒரு வரி போதுமாக இருக்கிறது. அச்சிறுவனை முழுமையாகக் வாசகர் கண்முன் கொண்டுவந்து நிறுத்த.

  அருமையான எழுத்தாளுமை நிலா! பாராட்டுக்கள்.

 1. படிக்க மனமிருந்தும் வாய்ப்பும் வசதியுமற்று, ஆற்றில் ஒருகாலும், சேற்றில் ஒரு காலும் வைத்தாற்போல், அறிவுப்பசிக்கும், வயிற்றுப்பாட்டுக்கும் மத்தியில் சிக்கித் தவிக்கும், பல்லாயிரம் லோகேஷ்களின் பிரதிநிதியாய் இந்த லோகேஷை அறிமுகப்படுத்திவிட்டீர்கள். நிச்சயம் வாழ்க்கையில் உயர்நிலைக்கு வருவான் என்பதை அவனுடைய பேச்சும், செயலும் உணர்த்துகின்றன. கண்கவரும் பஞ்சுமிட்டாய்க்குப் பின் எத்தனைக் கனவுகள், கதைகள்! மனம் தொட்டப் பகிர்வு நிலாமகள்.

 1. மனதை நெகிழ வைத்த பகிர்வு.... படித்துக் கொண்டே குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் லோகேஷ் நிச்சயம் நல்ல நிலைக்கு வர வேண்டும்....

  பஞ்சு மிட்டாய் என்றதும் எனக்குக் கல்லூரி நினைவு வந்துவிட்டது... மற்றொன்றும் - இங்கே தில்லியில் அதன் பெயர் “புடியா கா பால்” அதாவது ”கிழவியின் தலை முடி”... என்ன பெயரோ...

 1. உங்களது இப்பகிர்வு, நேற்றைய தினமணிக்கதிர் [04.11.2012]-ல் வெளி வந்திருக்கிறது.

  வாழ்த்துகள்!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar