நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

விருந்தாளித் தாம்பூலம்

Saturday, 19 November 2011
      தணலிடையே உடல் கருகுவதுபோல் அக்னிச் சூரியனின் தகிப்பு! மின் விசிறியின் இறைச்சலுக்கு சற்றும் பயமற்று அனல் காற்று சுழன்றடித்தது அறை முழுதும்.       வேறு வழியின்றி, முற்றத்து தொட்டித் தண்ணீரில் ஒரு வாளி மொண்டு வாசலில் விசிறி, தெருக்கதவைத் திறந்து வைத்தாள் ரம்யா. பசித்த காக்கைக் கூட்டம் படைத்த உணவெடுக்கும் வேகத்தில் ஆவியானது நீர்த்தடம். சளைக்காமல் மறுபடி மறுபடி தெளித்த நீரில் மட்டுப் பட்டு தண்மையேறியது காற்றுக்கு.  அப்பாடாவென ஆயாசப் பெருமூச்சோடு உள்நுழைந்து அவளுடன் உறவாடியது மெல்ல.
        நேற்று வேலையோடு வேலையாக தைத்து வைத்த இரவிக்கைகளையும், ஊசி-நூல்கண்டு-ஊக்கு வகையறாக்களையும் சேகரித்து வந்தமர்ந்தாள் காற்றாட.
        குழந்தைகள் கிராமத்திலிருக்கும் தாத்தா பாட்டியுடன் விடுமுறையை உற்சாகமாகக் கழிக்க, துணைவரின் பணிக்கும், உணவகச் சாப்பாடு ஒவ்வாத அவரது பிணிக்குமாய் அவளது இருப்பு இங்கே என்றானது.
       இல்லறம் பெண்களுக்கான விடுப்பை எப்போதும் எளிதாக்குவதில்லையே. நாகரீகமும் நகர நெருக்கடிகளும் உடல்சார் ‘விடாய்' காலங்களைக் கூட புறந்தள்ளி விட்டதால்  அவரவர்க்கான ஓய்வு நேரம் அவரவர் மனப்பாங்காகி விட்ட சூழல். அன்றாட அலுவல்களும், துடைக்கவும், அடுக்கவும், தைக்கவும், பின்னவுமாக வேலைக்கும் நேரத்துக்கும் எப்போதும் போல் சடுகுடு.
        சத்தமின்றி வந்து நின்ற இ-பைக்கில் காலூன்றியபடி, ‘சார் இருக்காரா?' என்றவர் கணவரின் அலுவலக சகா.

        அவசரமாய் எழுந்து, “வாங்க. உறவுக்காரங்க கல்யாணம்... விடியக்காலையே போயிருக்கார். சாயங்காலம் வந்துடலாம்... ஏதாவது சொல்லணுமா?” என்றாள்.
       “ஒண்ணுமில்ல... சீட்டு ஒண்ணு எடுத்தேன். ஜாமீன் போட சொல்லியிருந்தேன். அவசரமா இன்னைக்கே பணம் தேவைப் படுது. சரி... வேற யாரையாவது பார்த்துக்கறேன்”. உடனடியாகக் கிளம்பியது வண்டி.
        நினைவு வந்தவளாய் எழுந்து உள்சென்று இட்லிக்கு அரிசி உளுந்து ஊறவைத்து விட்டு மறுபடி காஜா எடுக்கத் தொடங்கினாள். தெருத் திருப்பத்தில் கணவரின் பால்ய சினேகிதரும், அவரது துணைவியாரும் வரும்வரை தொடர்ந்தது வேலை. வந்தவர்களை வரவேற்று அமரச் செய்து, உள்ளிருந்து தண்ணீர் செம்பும் டம்ளருமாக வந்தாள்.
        “பொண்ணு பெரியவளாயிட்டாளாமே... சொன்னாங்க”.
        “ஆமாம். அந்த சடங்குக்குதான் பத்திரிக்கை தரவேண்டி காலையிலேயே கிளம்பியாச்சு. ஒவ்வொரு இடமா பார்த்துகிட்டு வர நேரம் ஓடிட்டு இருக்கு” என்றார் வெற்று டம்ளரை அவளிடம் நீட்டியபடி. துணைவியாருடன் பரஸ்பரம் ஷேமலாபங்களைப் பகிர்ந்து கொண்டாள்.
        “வேகாத வெயில்ல வந்திருக்கீங்க. ஜீஸ் எதுனா எடுத்துட்டு வர்றேன்” நகர்ந்தவளை கைபிடித்து நிறுத்தினார் அப் பெண்மணி. “அய்யய்யோ... இவருக்கு ஆகாது. கொஞ்சம் சுவாசக் கோளாறு... சின்ன வயசிலிருந்தே... தெரியாதா?”
       “ஆமா... கேள்விப்பட்டிருக்கேன். சரி... கொஞ்சமா காபி குடிக்கலாமே... சாப்பாடு கூட தயாராயிருக்கு. சாப்பிட்டுடலாமா...?”
       “வெயில் தாங்காம இவளுக்கு உடம்பு பூரா வேனல் கட்டியாட்டம் வந்து ஒரே அவஸ்தை. ஹோமியோபதி மருந்துல தான் கொஞ்சம் குணமாகியிருக்கு. அதனால காபி, டீயெல்லாம் குறைச்சிட்டாங்க அம்மணி” குறும்பாக சிரித்தாலும், துணைவிக்கான பதிலடியும் ஒளிந்திருந்தது அவரது குரலில். தத்தம் நோய் பற்றிப் பிரஸ்தாபிக்க பெரும்பாலும் எவரும் தயாராயிருப்பதில்லை. பிறருடையதெனில் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து மேயவும் தயங்குவதில்லை. பகுத்தறிவின் கொடையில் மனித உளவியலின் விந்தை அளப்பரியது தான்.
         “இன்னும் நிறைய இடம் போக வேண்டியிருக்கு. வீட்டில் குழந்தைகளுக்கு சமைச்சு வெச்சுட்டு வந்தேன். என்ன ரகளை செய்துட்டு இருக்கோ தெரியலை... இன்னொரு நாள் சாவகாசமா வந்து சாப்பிடறோம்” எழுந்து குங்குமச் சிமிழ் திறந்து நீட்டவும் குறிப்பறிந்து எழுந்து தம் மகளின் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழை எடுத்தார் சினேகிதர்.
         சினேகிதருக்கு காபியும், துணைவியாருக்கு மோரும் தந்ததை மருந்து விழுங்குவது போல் சங்கடமாக அருந்தி விட்டுக் கிளம்பினர். பாவம்... பத்திரிகை வைக்கும் வேலை முடிந்ததும் எல்லோருக்கும் ஒன்றிரண்டு நாள் வயிற்றுக் கோளாறு வருவது சகஜம்தான். எத்தனை காபி, குளிர்பானம், சிறுதீனி அடுத்தடுத்து... எப்போதாவது வருபவர்களை ஒன்றும் தராமல் அனுப்பவும் சங்கடமாயிருக்கு.
         நாலு மணியாகியும் வெயில் குறைவதாயில்லை. ‘உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு' என்பதாய் சாப்பாடானதும் சற்று கட்டையைச் சாய்க்கும் வழக்கமுள்ள ரம்யா மின்விசிறியின் காற்று மேலும் புழுக்கமேற்படுத்த வழிந்தோடும் வியர்வையில் கடுப்பாகி மறுபடியும் வாசல் பக்கம் தஞ்சமடைந்து வெகு நேரமாயிற்று. முன்னறையில் ஒரு பேச்சு துணைபோல தொலைக்காட்சிப் பெட்டி பாடல்களை மெலிதாக இசைத்துக் கொண்டிருந்தது.
        இந்தப் பக்கம் வீடு மாற்றி சில மாதங்களாகின்றன. முன்பிருந்த வீட்டருகே அனேகம் வீடுகள். எல்லோரும் நல்ல பழக்கம். உதவி ஒத்தாசைக்காகட்டும், பேச்சுத் துணைக்காகட்டும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் கலந்து கட்டி உறவாடுவார்கள். நடுத்தர, கீழ்த்தட்டு மக்களிடம் அன்பும் பாசமும் மனிதமும் சற்றே தூக்கல் தான். நாலு காசு சேர்த்துவிட்டால் மனிதன் நிற்கும் நிலை சொல்லி மாளாது. போட்டி பொறாமைகளும், வஞ்சனை சூழ்ச்சிகளும், அகங்கார மமதைகளும் எப்படித்தான் ஒன்று சேர்ந்து ஆட்டுவிக்குமோ...!
         “நூறு ஆயுசு உங்களுக்கு! வாங்கக்கா... வாங்க! இப்பதான் முந்தைய குடியிருப்பை பத்தி நினைச்சுகிட்டிருந்தேன். என் மனவோட்டம் உங்களை இழுத்துட்டு வந்துடுச்சு போல...” எதிர்கொண்டு ஓடி தழுவிக் கூட்டி வந்தாள் வானதியக்காவை. முன்பிருந்த வீட்டுப் பக்கத்து வீடு. பிள்ளை குட்டிகளும் போதுமான வசதிகளும் நிறைஞ்சிருக்கும் எப்பவும் அவங்க மனசைப் போலவே.
         “இருக்கியோ ஊருக்குப் போயிருக்கியோன்னு சந்தேகத்தோடவே வந்தேன். வாசலில் உன்னைப் பார்த்தப்பறம்தான் நிம்மதியாச்சு”.
         “எங்கக்கா... வீட்டையும் இவரையும் விட்டுப் போறது? புள்ளைங்களைக் கொண்டு விட்டு வந்தாச்சு. போன மாசம் அந்தப் பக்கம் வந்தேன். நீங்க தான் ஊருக்குப் போயிட்டீங்க. உங்க தம்பி மருமக பிரசவத்துக்கு ஒத்தாசைக்குப் போயிருக்கிறதா மதனி சொன்னாங்க. ஊருல எல்லாரும் சொகமா? புதுப் பேரப்புள்ளை எப்படியிருக்கு? உட்காருங்க இதோ வர்றேன்” பேசியபடி தொலைக்காட்சி வாயை அடைத்து விட்டு, அடுக்களைப் பக்கம் போகிறாள்.
         “அதெல்லாம் ஆண்டவன் புண்ணியத்துல ஒரு கொறவுமில்லை. தம்பி மருமவ பாவம் தாயில்லாத பொண்ணு. தம்பி பொண்டாட்டி தனியா செரமப்படுவான்னுதான் போயிருந்தேன். ரெட்டைக் குழந்தையாப் போச்சு. நான் போனதும் நல்லதாப் போச்சு. இந்தா பாரு... ரம்யா, இங்ஙன வந்து உட்காரு. பேசிட்டுப் போலாம்ன்னுதான் வந்தேன். எனக்கொண்ணும் காபி உபசாரமெல்லாம் வேணாம்.” பின்னாலேயே வந்திழுத்தார் அக்கா.
         “ஏனக்கா... நான் நல்லாவே பழகிட்டேன். காபி மட்டுமில்ல. சமையல் கூட தினுசு தினுசா செய்யறேன் தெரியுமா... பயப்படாதீய... நல்ல காபியா தாரேன்.”
         திருமணமான புதுசில், வானதியக்கா வீட்டுக் கடைந்த மோர் தான் சாப்பாட்டுக்கு உதவும். ஒருதடவை, ஊரிலிருந்து வந்த அத்தை சாப்பிட்டு முடித்து மீதமிருந்தவற்றை பாத்திரம் மாற்றும் போது பால் சொம்பில் வைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டார். சொம்பிலிருந்த மோரை பால் என நினைத்து மாலைக் காபி கேட்ட மாமாவிற்கு சூடாக்கி டிகார்ஷன் சர்க்கரை சேர்த்து தந்ததும், ஒரு வாய் குடித்தவர் குமட்டி வாந்தியெடுத்துக் களேபரமானதும் நினைவில் வர சிரித்துக்கொண்டாள்.
        மாமாவின் வெதுவெதுப்பாய் காபி குடிக்கும் பழக்கம் தான் தவறுக்கு காரணமாகிப் போனது. பொங்கவிட்டிருந்தால் இறக்கும் முன்பே திரிந்து போயிருக்குமே...  ‘பாலுக்கும் மோருக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு வளர்ந்து வாழ்க்கைப் பட்டிருக்கிறாய்' என நொடித்துக் கொண்டார்கள் அத்தை. வானதியக்கா வீட்டு வெண்ணெய் எடுத்த மோர் அசல் பால் போலிருந்தது அனுபவம் குறைந்த ரம்யாவுக்கு வேட்டு வைக்கப் போதுமானதாயிருந்தது. வேலை பழகாமல் படிப்பை காரணம் காட்டி டபாய்த்து வந்தவளால் பாவம்... அவளது அம்மாவுக்கும் இடிசொல். எல்லாம் காலம் கடந்த ஞானோதயம்.
         அக்காவும் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டார்கள். பழைய சம்பவம் சரியானபடி ஞாபகம் வந்துவிட்டது போல...
         “அட நீயொருத்தி... கொஞ்ச நாளா உடம்பு சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்குது. வைத்தியருகிட்ட போனா, ‘அத நிப்பாட்டு, இதக் கொறை'ன்னு ஆயிரம் எடுப்பு. போற எடமெல்லாம் சொல்ல முடியறதில்ல. ‘ஏதாச்சும் சாப்பிடுங்க'ன்னு எழும்பினாலே தெறிச்சு ஓடியாந்துட வேண்டியது. பெத்த மகளாட்டமிருக்குற உன்கிட்ட என்ன சம்பிரதாயம், சங்கடம் வேண்டியிருக்கு...?” என்றபடி ரம்யாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து உட்கார வைத்துக் கொண்டார்.
          எல். ஐ. சி. பாலிசிக்கு பிரிமியம் கட்டுற மாதிரி வைத்தியருக்கும், மருந்துக் கடைக்கும் மாசப்படி அளக்கிற கதையை அக்கா நீட்டி முழக்கி புலம்பத் தொடங்கிவிட்டார். பேச்சு கொடுத்தபடியே  உளுந்தைக் கழுவி கிரைண்டரில் போட்டு, அரிசியைக் கழுவி வைத்து விட்டு வந்தமர்ந்தாள்.
        “இல்லக்கா... எங்க சின்ன வயசில எங்க வீட்டுல விடிஞ்சதிலிருந்து படுக்கப் போற வரைக்கும் யாராவது வந்தமேனிக்கு இருப்பாங்க. விடியக்காலம் கறந்த நாலு மாட்டுப் பாலும் தயிருக்கு போக காபியா மாறி செலவழிஞ்சுகிட்டே இருக்கும். உபசரிக்கிற பண்பே இப்பத்திய புள்ளைங்களுக்கு அறிமுகமில்லாம போயிடுமோன்னு தோணுது. படிச்சு தெரியறதைக்காட்டிலும் பார்த்துப் பழகறது தானே அதிகமா பதியும்!”
         “அட நீயொண்ணு... உம்பிள்ளைகளாவது வர்றவங்களை வாய் நிறைய ‘வாங்க'ன்னு கூப்பிட்டு உட்கார வைக்குதுங்க. உம்மவன் இந்நேரமிருந்தா என்கிட்ட உடம்பப் பத்தி, ஒறவைப் பத்தி, புதுசா போட்ட கன்னுகுட்டி பத்தி எம்மாம் பேச்சு பேசியிருப்பான்! எம் மவன் வயித்துப் பேரப் பிள்ளைங்க கதவை திறந்து விட்டு, ‘அம்மா உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க'ன்னு ஒரு சத்தம் கொடுத்துட்டு தன்னிடத்துக்குப் போய் பதுங்கிடுதுங்க தெரியுமா...? நீ சொல்றாப்புல பார்த்துப் பழகறது ஏராளமிருக்கு தான்.
         வர்றவங்க கூட நெதம் எத்தனைக் காபி கறந்தமேனிக்கு ரெங்கா குடிச்சாலும் உன் அப்பா, தாத்தாவுக்கு சுகருமில்ல,கொலஸ்ட்ராலுமில்ல, புண்ணாக்குமில்ல. அதுக்கு தக்க உழைப்பிருந்தது. வலுவான ஒடம்பிருந்தது.  தட்டுப்பாடில்லாம காசும் பொழங்குச்சு. இப்ப அப்படியா இருக்கு?”
        “ஆமாமா... அப்பல்லாம் இவ்வளவு வியாதிகளில்ல... இப்ப முப்பது வயசு தாண்டறதுக்குள்ள முன்னூறு வியாதிங்க. சொகுசு பெருகப் பெருக இம்சையும் அதிகமாயாச்சு. பணமிருந்தா எதையும் சாதிக்கலாம்ன்னு ஆனதில சக மனுச உணர்வுகளை நினைக்கவோ மதிக்கவோ நேரமில்லாமப் போயிடுச்சு பலபேருக்குன்னு வருத்தமாயிருக்குக்கா.” எழுந்து கிரைண்டரைப் பார்க்க, உளுந்து வழிக்குமளவு பதமாயிருந்தது. எடுத்து விட்டு, அரிசியைப் போட்டாச்சு.
        “என்னா செய்யறது?! இப்ப இங்க நான் வாறதுக்கே எம் பெரிய மவன் ஒரே சத்தம். “எதுக்கு போவணும்? காரணமில்லாம ஏன் போவணும்? சும்மாயிருக்க முடியாட்டி தோட்டத்துல போயி மொளைச்சிருக்கிற புல்லைப் பிடுங்கலாமில்ல...” ஆச்சா போச்சான்னு ஒரே அரட்டல்.
         “அடப் போடா... நீங்கள்லாம் தானுண்டு தன் வேலையுண்டுன்னு குறுகிக் கெடங்க. என் பழக்கம் மக்க மனுசாளை மறக்காமக் கொண்டாடுறது. எங்காலு கை தெம்பிருக்குற வரைக்கும் என் சுபாவப்படி இருந்துட்டுப் போறேன்... என்ன இப்பன்னு எதிர்வாதம் செய்ய வேண்டியதாச்சு... ... ஏதோ டி.வி. ஓடிச்சு. என்னால கெட்டுதா உனக்கு பார்க்க முடியாம...?”
        “பேச்சுத் தொணைக்கு யாருமில்லேன்னா சும்மா போட்டுட்டு என் வேலையைப் பார்த்துட்டிருப்பேன். யார் வீட்டுக்காவது போறச்சே டி.வி.யில ஒரு கண்ணும் வந்தவங்க பேச்சுல ஒரு காதுமா இருக்கறவங்களைப் பார்த்தா, ‘ஏன் தான் வந்தோமோ... இனி இந்தப் பக்கம் தலை வைச்சு படுக்கக் கூடாது'ன்னு தோணும். ‘தன்னைப் போல் பிறரையும் நினை'ங்கிற இயேசுவோட வாக்கை இங்கத் தான் பொருத்திப் பார்ப்பேன் நான். அதனால என்னைத் தேடி யார் வந்தாலும் மொத வேலையா டி.வி. ஓடினா நிறுத்திடறது.”
       “நல்ல பொண்ணுடியம்மா நீ... பொழுது சாயுது. நான் கெளம்பறேன் ரம்யா”.
       “இருங்கக்கா. நேத்து மாங்காய் தொக்கு போட்டேன். நம்ம மீனுக் குட்டிக்கு ரொம்ப இஷ்டமாச்சே. அத்தை தந்தேன்னு கொண்டு தாங்க.” பரபரப்பாய் உள்நுழைந்தாள்.
       “இதென்னடி ஆத்தா... ஒரு சின்ன டப்பா தருவேன்னு பார்த்தா ஒரு பையை நெறைச்சுக் கொண்டாந்துட்டே... இதுக்கும் பாடுவான் அவன். எனக்கு நாகரீகமே போதலைன்னு”.
        “இல்லக்கா.  தோட்டத்து மரத்துல பறிச்சு கல்லு போடாம பழுக்க வெச்ச மாம்பழம் கொஞ்சம். முருங்கைக் காயும் நம்ம மரத்துல காய்ச்சது தான். ஊருக்குப் போனப்ப வயல்ல விளைஞ்ச காராமணிப் பயிறு அரை மூட்டை தந்துவிட்டாங்க. அதுல கொஞ்சம் உங்களுக்கு. அண்ணேங்கிட்ட சொல்லுங்க. பிரியத்துல கொடுக்குறது இல்லாதக் குறைக்கோ, மிஞ்சிக் கெடக்கறதை ஒப்பாசாரத்துக்கு தள்ளி விடறதுக்கோ இல்லைன்னு. அக்கம் பக்கப் பழக்கம் தான்னாலும் மறக்காம வந்து பார்த்துப் போற உங்க அன்புக்கு என்னாலான மரியாதைன்னு நான் சொன்னதாச் சொல்லுங்க. அடுத்த வாரம் புள்ளைங்க ஊரிலிருந்து வந்த பின்னாடி  ஒரு எட்டு நாங்களும் அங்க வர்றோம்.”
          அக்கா தெருமுனை திரும்பும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. நமக்குப் பிரியமானவர்கள் உடலால் நம்மை விட்டுப் பிரிந்தாலும் யாராவது ஒருவர் ரூபத்தில் நமக்கான அன்பை வாரியிறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அக்காவுக்கு அவளது லிஸ்டில் அம்மாவின் இடம். அக்காவும் தெரு முனையில் திரும்பும்போது வாசலில் நிற்கும் ரம்யாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே போகிறார்கள்... அம்மா போலவே! பெருமூச்சோடு உள்நுழைந்த அம்மா பற்றிய நினைவுகள் அவளை முழுசாய் ஆக்கிரமித்தன. அந்த அசைபோடலோடு அரிசி மாவை வழித்து, கிரைண்டரைக் கழுவியாச்சு.
         இரவு ஏழு மணிபோல இவர் வந்து சேர்ந்தார். இரவு சாப்பாடு வேண்டாமென படுத்தார். கல்யாணம் முடிந்து அருகிலிருந்த சொந்த பந்தங்கள் வீடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். அங்கங்கு தனித்தனி கவனிப்பு. பிடித்தது பிடிக்காதது என்ற பேதமெல்லாம் போகுமிடத்தில் பார்க்கும் வழக்கம் இவருக்கில்லை. உபசரிப்பவர் மனம் புண்படாமலிருக்க வேண்டி சிரிப்பகலாமல் விழுங்கி விட்டு வந்து இரண்டு நாட்கள் வயிறு சரியில்லையென நெளிந்து கொண்டிருப்பது இவர் பழக்கம்.
         அவரைத் தூங்க விடாமல் புலம்பித் தீர்த்தாள் தன் ஆதங்கங்களை. பொறுமையாகக் கேட்டார்.
      இப்படியானதேன்னு புலம்பி, புறத்தியாரைக் குற்றம் சொல்லித் திரியறதை விட எப்படி சரிசெய்யலாம்ன்னு யோசிக்கறது தானே புத்திசாலித் தனம்...?!” சொல்லிவிட்டுப் புரண்டு படுத்து தூங்கியே விட்டார்.
     
         (வானதியக்கா மட்டுமல்ல... இப்போது யார் வந்தாலும் கையில் கொடுத்தனுப்ப ஏதேனும் இருப்பு வைத்துக் கொள்கிறாள் ரம்யா. அது, பிஸ்கட் பாக்கெட்டோ, பழமோ, வீட்டில் செய்த உணவுப் பண்டமோ. தோட்டத்தில் காய்த்ததோ... ஏதோ ஒன்று. குழந்தைகள் வீட்டிலிருக்கும் பொது அவர்கள் கையாலேயே தரச் சொல்லி விடுவது.
     "கல்யாணத் தாம்பூலம் மாதிரி நம்ம வீட்டில் விருந்தாளித் தாம்பூலம்" என ரம்யாவின் கணவரும் சொல்லிச் சிரிக்கத் தவறுவதில்லை. )

11 கருத்துரைகள்:

 1. nilaamaghal said...:

  @ வெங்க‌ட் நாக‌ராஜ்...

  துரித‌ வேக‌ம் என்னை ம‌கிழ‌ச் செய்கிற‌து ச‌கோ....

 1. suryajeeva said...:

  அருமையான சிந்தனை... கண்டிப்பாக நடைமுறைப் படுத்தலாம் உங்கள் அறிவுரையை

 1. விக்கிரமங்கலம் போனபோது பை நிறைய வேர்க்கடலை கொடுத்து அனுப்பிய நண்பர் நினைவில் வருகிறார்..
  இன்னமும் அந்த உபசரணை எல்லாம் ஒழிந்து போகாமல் ஜீவனோடு நிற்பது எஞ்சி உள்ள மனிதத்தின் சான்று.
  இப்படியானதேன்னு புலம்பி, புறத்தியாரைக் குற்றம் சொல்லித் திரியறதை விட எப்படி சரிசெய்யலாம்ன்னு யோசிக்கறது தானே புத்திசாலித் தனம்...
  ஞானம் மேலோங்கி நிற்கும் கதை.

 1. shanmugavel said...:

  நல்ல சிறுகதை.தொடருங்கள்,வாழ்த்துக்கள்.

 1. ஹேமா said...:

  தொடங்கி முடிக்கும்வரை எழுத்திலும் மனதிலும் ஓட்டம்.என் அத்தையின் ஞாபகத்தைக் கிளறிவிட்டது கதை !

 1. நலமா நிலா? நீண்ட விடுமுறை தந்த அனுபவக் களைப்பில் தூங்கி எழுந்த நாள் இன்று.

  இன்று புதிதாய் பிறந்தோம்!:)

  ’விடாய் காலங்கள்’- சிறப்பான அந்த சொல் வீச்சை ரசித்தேன்.

  நன்று தோழி.மீண்டும் சந்திப்போம்.

 1. கீதா said...:

  சொல்லாடல்களும், கருத்தோங்கிய களமும் மிகவும் நன்று. நாகரிக வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் இன்னும் சில மனங்கள் இப்படித்தான் உறவுகளையும் விருந்தினர்களையும் எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கின்றன. பாராட்டுகள்.

 1. தத்தம் நோய் பற்றிப் பிரஸ்தாபிக்க பெரும்பாலும் எவரும் தயாராயிருப்பதில்லை. பிறருடையதெனில் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து மேயவும் தயங்குவதில்லை. பகுத்தறிவின் கொடையில் மனித உளவியலின் விந்தை அளப்பரியது தான்.

  ஜீவனுள்ள சிறுகதைக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

 1. manichudar said...:

  சாமர்த்தியம்,அரவணைப்பும் ,புன்னகையுமாய் கமலாவின் சித்திரமும், சனா சுனவின் ரசனையும் வெகு ஜோர்.

 1. nilaamaghal said...:

  @ சூர்ய‌ஜீவா...

  ம‌கிழ்வும் ந‌ன்றியும்!

  @ ரிஷ‌ப‌ன்...

  புரித‌லுட‌னான‌ அனுச‌ர‌ணையான‌ க‌ருத்து தெம்ப‌ளிக்கிற‌து சார்.

  @ ச‌ண்முக‌வேல்...

  தொட‌ர்வ‌ருகையும் க‌ருத்தும் உற்சாக‌மூட்டுகிற‌து. ந‌ன்றி ஐயா!

  @ ஹேமா...

  ச‌ந்தோஷ‌ம் ஹேமா.
  வ‌ண்ண‌தாச‌ன் சொல்வார்,“எழுத்தும் ஒரு வித வரைதல் தான். வேகவேகமாக தன்னிச்சையாகப் பீறிடும் கோடுகளில் நான் வெவ்வேறு மனிதர்களின் சாயல்களை வரைகிறேன். உங்களுக்குப் பரிச்சயமான சாயல்களையும், பரிச்சயமான மனிதர்களையும் அந்தக் கோடுகளில் அடையாளம் காண்கின்றீர்கள். அப்படியொரு மனிதரின் சாயல் பிடிபடும் போது அந்த மொத்தக் கதையுமே உங்களுக்குப் பிடித்துப் போகிறது.”
  ச‌ரிதானே...?!

  @ ம‌ணிமேக‌லா...

  த‌ங்க‌ள் ர‌ச‌னை ம‌கிழ்வேற்ப‌டுத்துகிற‌து.உற‌ங்குவ‌து போலும் உற‌ங்கி விழிப்ப‌து போலும் இற‌ப்பும் பிற‌ப்பும் அமைவ‌தும் வ‌ர‌ம் தான்!

  @ கீதா...

  வ‌ர‌வும் தெளிவும் இத‌ம் தோழி!


  @ இராஜேஸ்வ‌ரி...

  ஆழ்ந்தாய்ந்த‌ வாசிப்பு என‌க்கும் ஊக்க‌ம‌ருந்தான‌து. ந‌ன்றி தோழி!

  @ ம‌ணிச்சுட‌ர்...

  உங்க‌ க‌ருத்தும் வெகு ஜோர்! த‌ட்டிக் கொடுத்து வ‌ள‌ர்ப்ப‌த‌ற்கு 'ந‌ன்றி' எனும் ஒற்றைச் சொல் வெகு குறைவே தோழி!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar