அந்திக் காற்று பகலின் புழுக்கத்தை மட்டுப்படுத்துவதாயிருந்தது. வாசல் கதவை விரியத் திறந்து வைத்து முன் நடையில் சுவரோரத்தை ஆக்கிரமித்திருக்கும் மரப் பலகையில் அமர்ந்திருக்கிறார் சங்கரசுப்பு. திறந்திருக்கும் கதவின் உபயத்தால் தெருக்கோடிவரை அவரது பார்வையின் எல்லைக்குள் அடங்குகிறது.
உள்ளிருந்து கமழும் பில்டர் காபியின் மணத்தை ‘இன்னும்... இன்னும்' என நுரையீரலை விரித்து உள்ளனுப்புகிறது அவரது நாசியின் நுகர்திறன். சாயங்காலம் வாங்கும் இருநூறு மிலி பாலில் இவருக்கொரு கும்மோணம் டிகிரி காபியும், தனக்கொரு டீத்தண்ணியும் போட்டு, மிஞ்சும் ஐம்பது மிலி பாலை உறை ஊற்றி மறுநாளுக்கான மோராக்கிவிடும் சாமர்த்தியம் வேண்டியிருக்கிறது அவரது மனைவி கமலத்துக்கு.
நுரைத்துத் தளும்பும் காபியை ஏந்திவரும் மனைவி தேவதையாகவே தெரிகிறாள். ஏதாவது வாங்கிவரச் சொல்லிப் பையுடன் தலைகாட்டும்போது மட்டும் அரக்கியாக மாறிக் காட்சியளிப்பாள் அவரது அகக்கண்ணுக்கு.
‘பணமும் பத்தாக இருக்கணும்; பிள்ளையும் முத்தாக இருக்கணும்' அவருக்கு. அதற்குத் தோதாக, கல்யாணமான புதிதில் கமலத்தின் வயிறு திறக்க வந்த ஒற்றைக் கருவும் முத்துக் கர்ப்பமாக, கருப்பை தவிர்த்து ஃபெலோபியன் டியூபில் தங்கி அற்பாயுசில் மடிந்தது. அதன் பிறகு அவர்கள் வீட்டுக் குடும்ப அட்டையில் இரண்டு நபர் மட்டுமே நிரந்தரமாகிப் போயினர்.
காபியை ஆற்றி ஆற்றி நுரை கூட்டி கடைசி சொட்டு வரை ரசித்து உறிஞ்சுகிறார். நுரைக் குமிழ்கள் அவர் வாயுள் இரகசிய சப்தமெழுப்பியபடி உடைந்து மறைகின்றன. நாவின் சுவையுணர் அரும்புகள் விரிந்து விகசித்து ‘ஆகா... ஆகா' என தேவசுகம் தருவிக்கிறது அவருக்கு.
ஒவ்வொரு மிடறுக்கும் ஒரு ஊர்க்கதை வேறு. கமலத்தின் பக்கவாத்தியமாக ‘உம்... உம்' கொட்டலுடன்... எல்லாமாக அந்த மாலைப் பொழுதை மகோன்னதமாக்கியது ‘சனா சுனா'வுக்கு.
காலியான டம்ளரோடு கமலம் உள்செல்ல, அன்றைய தினசரியை ஆறாவது தடவையாக ஒரு மேய்ச்சலுக்கு எடுக்கிறார். இப்படியாக ஒவ்வொரு நாள் செய்திகளையும் ஒன்று விடாமல் மேய்ந்து, கமலத்திடம் சொன்னது போக எஞ்சியதை பக்கத்துத் தெரு மளிகைக் கடை ராமுடுவிடம் ஒப்பித்து விடுவது வழக்கம். அந்நேரம் கடைக்கு வந்தவர்கள், தெருவில் போகிறவர்கள் அனைவரையும் தன் பேச்சில் ஈர்த்து, வாதப் பிரதிவாதங்களின் சூட்டை அதிகரிப்பதில் அலாதி சுகம். இவர் ஒரு நாள் அந்தப் பக்கம் போகாவிட்டாலும் கடை மூடிய பிறகாவது மெனக்கெட்டு வந்து நலம் விசாரித்துப் போவார் ராமுடுவும்.
பேச்சில் வெகு தாராளமாயிருக்கும் சனா சுனா, பணம் செலவழிப்பதில் மகா சிக்கனம். யாராவது அவரது சிக்கனத்தை நையாண்டி செய்வது போல் பேசினால் “ஆமாம்பா... பிள்ளைகுட்டியிருக்குறவன் தளர்ந்து போற வயசில சாய்ஞ்சிக்க வகையிருக்கு. என்னைப் போல ஆளுக்கு வடக்கே தலை வெச்சு போற வரைக்கும் உதவப் போறது சேர்த்து வெக்கற சொத்துபத்து தானே...” என்பார் சடாரென. அப்படிப் பொத்திப் பொத்தி சேகரித்ததுதான் நாலு வீடுகளும், சாப்பாட்டுக்கு பத்துமா நிலமும். அதிலும் சொந்த பயிரில்லை. குத்தகைதான். வீடுகளின் வாடகைப் பணத்திலேயே இருவருக்கும் ஆனது போக அவசர ஆபத்துக்கு சேமிப்பும் ரொக்கமாக இருக்கிறது அஞ்சலகத்தில். ருசிக்க சாப்பாடும், உண்டது செரிக்க ஊர்க்கதையுமாக தடபுடலாகக் கழிகிறது அவரது காலம்.
சமையலறையில் கமலம் தன்னொருத்திக்காக டீ போட்டுக் கொண்டிருக்க, தெருவிலொரு கண்ணும், செய்தித் தாளில் ஒரு கண்ணுமாய் வாய்க்குள் ஏதோவொரு பாடலை முணுமுணுப்பாக ஆலாபனை செய்தவாறிருக்கிறார்.
கமலம் டீ கலந்து குடித்து வரும்வரை கட்டாய இடைவேளை விட்டிருந்த கதைகள் அவரது வாய்க்குள் வரிசை கட்டி நின்று பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன. தான் பேசுவதைக் கேட்க ஆளற்ற பொழுதுகள் பெருநரகமாய்த் தோன்றும் அவருக்கு.
சூரியன் தன் கிரணங்களைச் சுருட்டிக் கொண்டிருக்கிறான். இருள் தன் ஆதிக்கத்தைப் பரப்பத் துணிய, அதைக் கட்டுப்படுத்தத் தெரு விளக்குகள் ஆயத்தமாயின.தெருவில் சற்றைக்கொரு சைக்கிளும், எப்போதேனும் ஏதோவொரு மனிதத் தலையும், குறுக்கும் நெடுக்கும் வேலையற்று அலையும் தெரு நாய்களும் சுவாரஸ்யமின்றிப் போக, இரு கண்களையும் படிப்பில் ஆழ்த்தினார். பக்கம் திருப்பும்போது அனிச்சையாக தெருவைப் பார்த்தவர், மூன்று வீடு தாண்டி வந்து கொண்டிருக்கும் நிருபமாவைப் பார்த்து விட்டார்.
“வந்துட்டாளப்பா... இனி குறைஞ்சது ஒரு மணி நேரம் கமலத்தைக் கையில புடிக்க முடியாது. நம்ம குரல் கேட்காது; உருவம் தெரியாது! கமலமும் நிருபமாவும் மட்டுமான தனி உலகத்துல வேற யாரும் சாமானியமா நொழைஞ்சிட முடியுமா...” என மனதுக்குள் சலித்துக் கொண்டார் சனா சுனா.
பட்டென எழுந்து தினசரியை மடித்து மரப்பலகையிலேயே போட்டுவிட்டு தாழ்வாரக் கொடியில் தொங்கிய காதி கதர்த் துண்டை எடுத்து மேலுக்குப் போர்த்தியபடி “ஏ... கமலம் உன் வளர்ப்பு வருது பார்... ” என்றவர், செருப்பையெடுத்து அவசரமாக கால் நுழைத்து நிருபமா வருமுன் வெளியே பாய்ந்தார். இனி குறைந்தது இரண்டு மணி நேரம் அவர் கச்சேரி ராமுடு மளிகை கடையில்.
நிருபமா, இவர்களது தெருவுக்குப் பின் தெருவிலிருக்கும் காண்ட்ராக்ட்கார விசுவநாதரின் ஒரே பெண். நகரின் பெரும்பாலான வீடுகள் அவராலேயே நிர்மாணிக்கப் பட்டதாய் இருக்கும். சனா சுனாவின் வீடுகள் உட்பட. அவரின் நாணயமும் நல்ல குணமும் வெகு சம்பாத்யத்தையும், சக மனிதர்களிடையே மரியாதையையும் பெற்றுத் தந்திருந்தது.
அவளது அம்மாவும் வேலைக்குச் செல்பவர். பக்கத்து கிராமக் கூட்டுறவு வங்கியில் காசாளர். எந்த ராசா எந்த பட்டணம் போனாலும் எட்டு மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி விடுவார் அவளது அம்மா. ஏனெனில் எட்டரைக்கு பேருந்து நிலையத்தில் கிளம்பும் அவர் செல்ல வேண்டிய கிராமத்துப் பேருந்தை விட்டால் சரியான நேரத்துக்கு வேலையிடத்துக்குச் சென்று சேர முடியாது என்பதால். ஆண்டுத் தணிக்கை நேரங்களில் அதற்கும் முன்னால் ஏழு மணி வண்டியைப் பிடிக்க வேண்டும். இரவும் நேரம் கழித்தே வரும்படி ஆகும். அப்போதெல்லாம் நிருபமா தலை வாரிப் பின்னிக் கொள்ள கமலத்திடம் தான் வருவது வழக்கம். சாதாரணமாகவே பள்ளி விட்ட பின்னும் வீட்டில் யாருமற்று பூட்டியிருந்தால் நேராக கமலம் வீட்டுக்குள் தஞ்சமாகிவிடும் அச்சின்னச் சிட்டு.
தெருப் பிள்ளைகள், உறவினர் பிள்ளைகள் அனைவரிடமும் கமலம் பிரியம் காட்டினாலும் நிருபமா மேலொரு ஆத்மார்த்தமான ஈர்ப்பு.
“அத்தை... அத்தை” என்ற மெலிந்த குயில் குரலுடன் உள்நுழைந்த நிருபமா சுவாதீனமாக அடுக்களைக்கு வந்தாள். ‘வாங்க வாங்க... செல்லம்...ஸ்கூல் விட்டாச்சா' என்று முகம் மலர முகமன் கூறியவாறு “ஏதாவது சாப்பிடத் தரவா? மதியம் சாப்பிட்டதெல்லாம் மாயமாகியிருக்குமே இந்நேரம்?” என்றவளை, “இல்லத்த... வேணாம் எதுவும்” என்றாள் சுணங்கிய குரலில் நிருபமா. “அம்மா சம்சா வாங்கி வந்தாங்க...எனக்குத் தான் சாப்பிடப் பிடிக்கலை” இப்போது தரையைத் துழாவினாள் பார்வையால்.
“பரவாயில்லையே... இன்னைக்கு அம்மா நேரமாவே வந்தாச்சா?!” என்றபடி டீயை இரு டம்ளர்களில் நிரவி ஊற்றிய கமலம், முன்னறைக்கு வந்து மின்விசிறியைப் போட்டமர்ந்தாள். இருவரிடமும் டீ குடித்து முடியும் வரை சற்று மெளனம். கடைசி மிடறை வாயில் கவிழ்த்தபடி நிருபமாவை சகஜ நிலைக்குக் கொண்டு வர ஆயத்தமானாள். இலேசான அரவணைப்பும் சின்னதொரு புன்னகையும் போதும்... இறுகியிருக்கும் முகம் தளர்த்தி அவள் மனம் திறக்க.
“இந்த விவேகானந்தா கேந்திராவிலேயிருந்து போன மாசம் எங்களுக்கு புத்தகமெல்லாம் தந்தாங்கன்னு சொன்னேன்ல...”
“ஆ...மாம். ஏதோ கட்டுரையெல்லாம் கூட எழுதித் தரச் சொன்னதா சொன்னியே..”
“அதுதான்... இன்னைக்கு காலைல இறைவணக்க நேரத்துல அந்தப் போட்டி முடிவுகளை அறிவிச்சாங்க. நாடு முழுக்க நடந்த அந்தப் போட்டியில முதல் மூணு பரிசும் எங்களுக்கில்ல. ஆனா தேர்ந்தெடுத்த முதல் நூறு பேரிலே நானும் ஒருத்தி. பாராட்டுப் பத்திரமும், ‘ஸ்ரீஇராமகிருஷ்ண விஜயம்' புத்தகமும் தந்தாங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு அந்த புத்தகம் மாசாமாசம் வீட்டுக்கே தபால்ல வந்துடுமாம்.”
“என் செல்லக் குட்டி எல்லார் முன்னாடியும் இன்னைக்கு பரிசு வாங்குச்சா!” கமலம் பாய்ந்து கட்டிக் கொண்டு தலை வருட, கதகதப்பாய் ஒடுங்கிக் கொண்டு பெருமிதப் புன்னகையை விநியோகித்தாள் நிருபமா.
டக்கென்று முகம் வாடியது. “நாடு முழுக்க நடந்த போட்டியில முதல் மூணு இடத்துல வராம நூத்துல ஒண்ணா தானே வந்திருக்கேன்னு அம்மா கோவிச்சிகிட்டாங்க” புகாரளிப்பது போல் இழைந்தது அவள் குரல்.
“அட... சரி போகுது விடு. உன் மேல அவங்க வெச்சிருக்கிற அதீத நம்பிக்கையில சொல்லியிருப்பாங்க. அடுத்த தடவை ஜமாய்ச்சுடலாம்... சரியா?”
பேசிக்கொண்டே அடுக்களையில் நுழைந்த கமலம், வரப் போகும் தேர்வு பற்றியும், அவளது சக மாணவிகள் பற்றியும் கதைத்தபடி, ஏதேதோ டப்பாக்களை எடுத்து திறந்து பார்த்து மூடினாள்.
இப்போது சமையல் மேடையில் சில டப்பாக்கள் இடம் பிடித்தன. அடுப்பில் வாணலி அமர்ந்து கொள்ள, உரையாடல் தடைபடாமல் கமலத்தின் கைகள் பரபரப்பானது. நிருபமா வகுப்பறை கலாட்டாக்களை விவரிப்பதில் ஆழ்ந்து போனாள். ஒரு மூலையில் முக்கண் இமைக்காமல் கேட்கத் துவங்கிய கல்யாணத் தாம்பூலத்தில் வந்த தேங்காயை எடுத்து தட்டித் தட்டி சிலும்பலின்றி வட்டமாய் உடைத்து வழிந்த தண்ணீரை இலாவகமாக டம்ளரில் பிடித்து நிருபமாவிடம் தந்தாள் கமலம். அனிச்சையாக அதை வாயில் ஊற்றிக் கொண்டு, முந்தாநாள் நடந்த விளையாட்டுப் போட்டியில் நிகழ்ந்த வேடிக்கைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள் நிருபமா.
அவளுக்கு அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள கமலத்தை விட்டால் ஆளில்லை. அப்பாவும் அம்மாவும் அவரவர் வேலை நேரம் போக ஓய்வெடுப்பதில் தான் முனைப்பு காட்டுவார்கள்.
சற்றைக்கெல்லாம் நிருபமா விரும்பிச் சாப்பிடும் தேங்காய் ரவை இனிப்பு உருண்டைகள் தயாராகிவிட்டன. இரவு உணவுக்கு ரவா உப்புமாவும் தேங்காய்ச் சட்னியும் செய்யச் சொன்ன ‘சனா சுனா' வருவதற்குள் மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டும்.
அதனாலென்ன? பிரியமானவர்களின் சந்தோஷத்துக்காக எவ்வளவு பிரயாசைப் பட்டாலும் தகுமே!
நிருபமா வாயில் ஒன்றை மென்மையாக திணித்தவாறு “இது பாப்புகுட்டி பாராட்டு வாங்கியதுக்கு” என்றாள் கமலம்.
“என்னத்தை... பேசிகிட்டே ஏதேதோ செஞ்சிட்டிங்க! இவ்வளவும் எனக்கா!” விரிந்த விழிகளுடன் குதூகலித்தாள் நிருபமா. உருண்டையின் சுவை அவளை இன்னுமிரண்டு தின்ன வைத்தது. ஒரு சிறிய டப்பாவில் அழகாக அடுக்கி அவள் கையில் தந்தாள்.
“ஆமா... வீட்டில அப்பாம்மாக்கு, ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ்க்கு தர வேண்டாமா...?! ஸ்வீட் எடு; கொண்டாடு!” என விளம்பரம் போல் பேசிக் காட்டிய கமலத்தை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொண்ட நிருபமா, "ப்ரியம் ப்ரியத்துக்காக மட்டுமே!" என்றாள் .
கமலம்,நிருபமா அப்படித்தான்.இருவருக்கும் தேவை இருக்கிறது.சரியாக நகர்ந்து செல்லும் கதை.நன்று.
ReplyDeleteஅழகான கதை.... படிக்க ஆரம்பித்ததிலிருந்தே அதனுடனேயே நகர்ந்து போன உணர்வு...
ReplyDeleteவாழ்த்துகள்...
அவளுக்கு அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள கமலத்தை விட்டால் ஆளில்லை. அப்பாவும் அம்மாவும் அவரவர் வேலை நேரம் போக ஓய்வெடுப்பதில் தான் முனைப்பு காட்டுவார்கள்.
ReplyDeleteசினேகம் எப்படியெல்லாம் வாய்க்கிறது அழகாய்.. பூ பூக்கிறது மனசுக்குள் வாசித்து முடிக்கும்போது.
உறவைவிட சினேகிதமே ஆறுதல் அளிக்கிறது. நல்ல பகிர்வு. vgk
ReplyDeleteமனஅழுத்தங்களைத் தீர்த்துக்கொள்ள ஒரு மருந்து நட்பு !
ReplyDeleteபிறக்காத குழந்தையை நிருபமாவில் தேடும் கமலத்தின் மனது நிஜமாகவே ஒரு தாமரைதான்.அழகான கதை சொல்லல்.நேர்த்தியான விவரிப்பு.ஒரு டிகிரி காஃபியை நுரை ததும்ப எப்படி வர்ணித்து வர்ணித்து மாய்ந்திருக்கிறீர்கள் நிலாமகள்? சபாஷ்.கமலம்மா செய்த தேங்காய் கலந்த ரவாலாடுகள் போல அப்படி ஒரு தித்திப்பு அன்பின் நிழல் பூசிய இக்கதையில்.
ReplyDeleteமிக அழகான கதை. அன்பு பொங்கி வழிகிறது கமலத்திடம். லயித்து படித்தேன்.
ReplyDeleteஅழகான ஒரு சந்தோஷத்தை கமரா எழுத்துக்களால் கச்சிதமாகக் படம் பிடித்து விட்டீர்கள் நிலா!
ReplyDeleteகச்சிதமான catch!
படிக்கப் படிக்க என்னவோ நானே அந்த வீட்டுக்கூடத்தில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பது போலொரு பிரமை. சனாசுனாவின் நாவின் சுவையுணர் அரும்புகள்வரை அழைத்துப் போய்வந்துவிட்டீர்கள். காட்சி வர்ணனைகளாகட்டும், மன உணர்வுகளாகட்டும், எடுத்தாள்வதில் பிரமிக்கவைக்கிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள் நிலாமகள்.
ReplyDelete.சில சிறுகதைகளை எளிதில் மறக்க இயலாது அந்த வகையில் உங்களின் கதையும் பாராட்டுகள்
ReplyDelete@shanmugavel
ReplyDeleteநான் நினைத்தெழுதியதை உணர வைத்தேனா?! மகிழ்வும் நன்றியும் ஐயா.
@ வெங்கட் நாகராஜ்...
ReplyDeleteநான் கூப்பிடும்போதெல்லாம் கைபிடித்து என்னுடன் வர நீங்களெல்லாம் இருப்பது நிறைவாய் இருக்கிறது எனக்கும் சகோ... நன்றி!
@??????
ReplyDelete@ ரிஷபன்...சினேகத்தின் சிகரம் உணர்ந்தவர் வாயால் இதைக் கேட்க பூக்கும் பூவில் நறுமணமும் கமழ்கிறது. நன்றி சார்.
@ வை. கோ. சார்...
ReplyDeleteவாஸ்தவம் தான் சார்.
@ ஹேமா...
ReplyDeleteவேறு போக்கிடமேது நமக்கெல்லாம்!
@ சுந்தர்ஜி...
ReplyDeleteஉங்க வருகையும் கருத்துப் பகிர்வும் தனித்தெம்புதான் எனக்கு. உங்க ஒவ்வொரு 'சபாஷ்' ம் என்னை மேலும் எழுதத் தூண்டும் ரசவாதம் நிறைந்தது ஜி!
@ சிவகுமரன்...
ReplyDeleteஆம் சிவா. நாமும் நம் இறையும் அன்பென்னும் பிடியுள் அகப்படுபவர்கள் தானே...!
@ திண்டுக்கல் தனபாலன்...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
@ மணிமேகலா...
பதிவின் நாடிபிடிக்கும் தங்கள் கருத்துரைகள் எப்போதும் போல் என்னை உற்சாகப்படுத்துகின்றன தோழி... நட்பில் மகிழ்கிறேன், நன்றி!
@ கீதா...
ReplyDeleteஉங்க வாசிப்புத் திறனும் மனம் திறந்த பாராட்டும் தனித்துவமானவை. உங்களைப் போன்றோரின் வார்த்தைகள் என்னைக் கம்பீரப் படுத்துகின்றன. நன்றி தோழி!
@ மாலதி...
ReplyDeleteஎன்னை உச்சியிலேற்றி விட்ட தங்கள் கருத்துரைக்கு எப்படி சொல்ல 'நன்றி' எனும் வெறும் சொல்லால்?!