நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மனங்கவர் முன்னுரைகள்...3 (மீரா)

Thursday, 4 August 2011

          “தமிழ்க் கவிதையின்...  தமிழ்க் கவிஞர்களின்... ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒளிசூடிய அடையாளம் ‘மீரா'. கவிதைப் பெருக்கில் கடல் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றும் குளமாய் தன்னைக் குறைத்துக் கொண்டவர்; இங்கிதமான காதல் தமிழிலும் அங்கதமான அரசியல் தமிழிலும் முன்னேர் நடத்திய முதல்வர்”-
இது அறிவுமதி, ‘மீரா சிறப்பிதழாய்' வெளியிட்ட தன் ‘மண்' மூன்றாமிதழில்.
            “சிவகங்கை என்ற சிற்றூரை அவர் இலக்கிய வாதிகள் வந்து செல்லும் புண்ணியதலமாக்கினார். பிறர் படைப்புகளை வெளியிடும் வெறியில் அவருடைய எழுத்துக்கள் தடைபட்டுப் போயின.” என்றவர் மீராவின் கெழுதகை நண்பர் அப்துல்ரஹ்மான்.
            பழனிபாரதி சொன்னாற்போல், ‘அன்பின் விதைகளுக்குள்ளே குறுகுறுத்த உற்சாகத்தின் தட்பவெப்பமான மீரா, ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப் பெயர்'.
            “எழுதுபவர்களின் சாலைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கியே சென்றன. இளைஞர்களை அவர் ஊக்கப்படுத்தும் விதமே அலாதியானது. பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது” இது செழியனின் அஞ்சலிச் சொற்கள்.
              “அவர் பரிவு மிக்க ஒரு பதிப்பாளர்; உயர்ந்த கவிஞர்; சிறந்த பண்பாளர் என்கிற தகுதிகளையெல்லாம் விட மேன்மையான இரண்டு உண்டு அவரிடம். ஒன்று... அவருடைய தேர்ந்த இரசனை; இரண்டு... அவரோடு நெருங்கியவர்களிடம் அவருக்கிருந்த பாசம். பலருடைய முகவரியை எழுதித் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தவர் மீரா. அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ... எனக்குப் பொருந்தும்” -கந்தர்வனின் கண்ணியச் சொற்களிவை.
             “தன்னை விமர்சனம் செய்பவர்களைக் கூட, மன்னித்து ஏற்கும் மனநிலை மீராவின் தனிச் சொத்து. ‘மரணம் ஒரு கதிர் அரிவாள் அன்று. அதுவொரு புல்வெட்டும் கத்தி' என்றார் பிரெஞ்சு எழுத்தாளர் கில்லர்பெல்லாக். பயிர் முற்றிப் பால் பிடிக்கும் வரை கதிர் அரிவாளுக்குக் காத்திருக்கத் தெரியும். புல்வெட்டும் கத்திக்கு பூ எது; புல் எது என பேதம் பார்க்கத் தெரியாது. மரணம் புல்வெட்டும் கத்தி. அது மீராவை நம்மிடமிருந்து பிரித்து விட்டது” இப்படி உருகியவர் இந்திரன்.
            “அவரது அன்பையும் அரவணைப்பையும்  நட்பையும் உரிச்சொற்களோ உவமைகளோ எடுத்துக் காட்டிவிட முடியாது. மீரா ஓர் அனுபவம். எளிமை நிறைந்த அவரது அன்பில் திளைத்தவர்கள் பாக்கியவான்கள். இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனையற்ற நட்பை இனி யாரிடம் பெறப்போகிறோம்...?!” என நெட்டுயிர்த்தவர் கலாப்ரியா.

             சி. மகேந்திரன் சொன்னது...“சாவு சிலரை மட்டும் சாகடிக்கக் கூடியது. மரணத்தை வெல்லும் வீரியம் கொண்டவர்களுமுண்டு. இவர்கள் நம்பிக்கை மிக்க நெம்பு கோல்கள். மீராவின் மரணம் துயரை வேதனையைத் தந்தாலும், எந்த நம்பிக்கை வறட்சியையும் உருவாக்கவில்லை. அவர் தனது இறுதி நாட்களில், ‘மீரா கவிதைகள்' நூலுக்கு எழுதிய முன்னுரையில்...
      
        ‘எனது கனவுகளைப் படித்து என்னைப் போல் எழுதும் புதுக் கவிஞர்களே! இதோ உங்களுக்காக என் ‘மீராவின் கவிதைகள்'. இதிலுள்ள காதல் கவிதைகளோடு நின்றுவிடாதீர்கள். சமூகம் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழினம் வீழ்ச்சியுற்றுக் கிடப்பதில் எனக்குச் சம்மதமில்லை.
            எழுந்து நில்லுங்கள்; எழுச்சி கொள்ளுங்கள்; புரட்சி செய்யுங்கள்”

        எஸ். விஸ்வநாதன் சொல்வது போல், அவருக்கு கவிக்கோ விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்ட ‘மீரா கவிதைகள்', ‘கோடையும் வசந்தமும்' ‘குக்கூ' என்ற மூன்று நூல்களும் தான் அவரது கடைசி இலக்கியப் படைப்புகள் என அவர் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பதை அந்நூல்களுக்கு அவர் எழுதியிருந்த முன்னுரை, என்னுரை, நன்றியுரை போன்றவற்றைப் படிக்கும் போது யூகிக்க முடியும். தன் வாழ்வில் தான் நேசித்த, தன்னை நேசித்த, தான் வளர்த்தெடுத்த குழந்தைகள், தன்னை வளர்த்தெடுத்த உறவினர்கள், நண்பர்கள், சக ஆசிரியர்கள், தனது தமிழ் ஆசான்கள் எல்லோரையும் அநேகமாக ஒருவர் விடாமல் நன்றியுடன் குறிப்பிட்டுப் போற்றியுள்ளதையும், மூன்று நூல்களையும் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த மூன்று ஆசிரியர்களுக்கும், பள்ளித் தோழருக்கும், அன்புச் சகோதரர் மனோகரனுக்கும், காணிக்கையாக்கி இருப்பதையும் அவரது முன்னுரை, நன்றியுரையோடு சேர்த்துப் படித்தால், தனது மரண சாசனத்தைத் தான் இந்நூல்களில் பதிவு செய்திருக்கிறார் என்பது புலனாகும். (மீரா கவிதைகள் நூலில் முன்னுரையே 21 பக்கங்கள்!)

         “அறுபதுகளில் வந்த ஈழத்து மஹாகவியின் ‘குறும்பா'க்களில் மனம் பறிகொடுத்தவன் நான். ஆங்கிலத்திலுள்ள ‘லிமரிக்ஸ்' என்னும் கவிதை வடிவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தி தமிழுக்கு அழகு சேர்த்தவர் மஹாகவி. இது போல அடி, சீர் வரையறையின்றி என் பாணியில் எழுதத் தொடங்கினேன். இதிலுள்ள கவிதைகளை வாசகர்கள் ஓடுகிற ஓட்டத்தில் படித்து தூக்கியெறிந்து விடாமல் கொஞ்சம் நிதானமாகப் படிக்க வேண்டும்.
          சரஸ்வதி பூசைக்குப் போனால் பொரிகடலை கொடுப்பார்கள். அதில் கடலையை விடப் பொரிதான் அதிகமிருக்கும். இருந்தாலும் பொரியை எடுத்தெறியாமல் கடலையுடன் சேர்த்துச் சுவைப்பது போல எல்லாக் கவிதைகளையும் சுவைக்க வேண்டும்.
           ‘குக்கூ'வில் பின்பற்றப்பட்டுள்ள இயைபுத் தொடை பல இடங்களில் செயற்கையாகப் படுகிறது என்கிறார் கவிக்கோ. நியாயமான விமர்சனம்.
             கலை(Art), செய்கலை (Craft) இரண்டுக்கும் இலக்கியத்தில் இடமுண்டு. சில கவிதைகள் முதல் வகையையும், பல கவிதைகள் இரண்டாம் வகையையும் சேர்ந்தவை. இப்படித்தான் நான் சமாதானம் சொல்ல முடியும். குழந்தைகளோடு குழந்தையாய் சில பொம்மைகளும் இருந்துவிட்டுப் போகட்டுமே!”
(குக்கூ முன்னுரையில் மீரா)

          “கழகத்தில் நானெழுதிய கவிதைகளுக்கும்(மீரா கவிதைகள்), இப்போது இதில் (கோடையும் வசந்தமும்) உள்ள கவிதைகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டிலுமே என் முற்போக்கு, அதிமுற்போக்கு அரசியல் முகங்களே தென்படுகின்றன. நடையில் வீரியக் குறைவு. வார்த்தைகளில் கலப்பு மொழி, சில இடங்களில் செயற்கைத் தன்மை இத் தொகுப்பில் காணப்படுகிறது” (கோடையும் வசந்தமும் முன்னுரை-பக்.26)

1971-ல் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் வசன கவிதைக் காவியம் வெளிவந்தது.(நானெல்லாம் பிறந்த குழந்தை அப்போது!)  கவிதை இலக்கியத்தில் மீரா அலை சுழன்று வீசியது. இந்நூலில் முன்னுரையாக ஒரு முடிவுரை எழுதியிருப்பார்... படித்தவர்கள் அத்தனை பேருக்கும் மறக்க முடியாத வரிகள் அவை.

“என் வேட்கையே...
 நீ எனக்கு காதலைத் தந்தாய்; அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது.
 நான் உனக்கு இந்த வசன காவியத்தைத் தருகிறேன்; இது ஏழையின் கண்ணீரைப் போல உண்மையானதா என்று பார்.
 என் சத்தியமே...
 என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால்  வேறு யார் புரிந்து கொள்ளக் கூடும்?
 வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன?
 என் அந்தரங்கமே...
 இதோ, என் சொல்லோவியம்... விசுவாமித்திரனைப் போல் வேண்டாமென்று சொல்லிவிடாதே.”

10 கருத்துரைகள்:

 1. கவிஞர் மீராவின் 'கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்" எழுபதுகளில் மிகவும் பிரபலமானது. அவரின் முன்னுரையும் அருமையாக இருக்கிறது. அந்த 'பொரிகடலை' உவமைகள் கூட படிக்க சுவாரஸ்யம்!

  பதிவும் அருமை!

 1. குழந்தைகளோடு குழந்தையாய் சில பொம்மைகளும் இருந்துவிட்டுப் போகட்டுமே!”
  ஆஹா.. இந்த மனசு அற்புதம்.
  நேசிக்கத் தெரிந்தவருக்குத்தான் படைப்பில் உச்சம் தொட முடியும்.
  மீரா பற்றிய பதிவு அமர்க்களம்

 1. மீராவைப் படித்ததில்லை. ஆனால் பதிப்புத் துறையில் அவரது சீரிய முயற்சிகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவரது எழுத்து குறித்தும், இயைபுத் தொடை என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்ள உங்கள் பதிவு ஒரு காரணியாக இருந்தது. நன்றி நிலாமகள்.

 1. மீரா என் கல்லூரி நாட்களில் மிகவும் பிரபலம். கவிதை பார்வையில் இருக்கிறது என்பதை உணர்த்தும் அவருடைய கவிதைகள் பல.. காலவெள்ளம் யாரை விட்டது... பதிவுக்கு நன்றி !

 1. அன்பில் ஊறவைத்த தமிழாய் மீரா இருந்திருக்கிறார் போலும்! முன்னுரைகள் அவற்றை அழகாய் முன்னிறுத்துகின்றன.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி தோழி!

 1. தங்களின் சிறப்பான இந்தப்பதிவின் மூலம் மீரா பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

  [என் நகைச்சுவைச் சிறுகதையின் முதல் பகுதியைப்படித்து விட்டு பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள். மிக்க நன்றி. இறுதிப்பகுதியும் இன்று வெளியிட்டுள்ளேன் http://gopu1949.blogspot.com/2011/08/2-of-2.html இது Just தங்கள் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் vgk]

 1. கீதா said...:

  மீரா என்னும் மாபெரும் கவிஞர் பற்றி, சகபடைப்பாளிகள் பால் நேசம் கொண்ட நல்மனிதரைப் பற்றி, வரும் தலைமுறைக்கு உற்ற தோழனாய் வழிகாட்டிய அற்புத உள்ளம்பற்றி இன்றுதான் அறிந்துகொண்டேன். உதவிய உங்களுக்கு கோடி நன்றிகள்.

 1. panner said...:

  neenga neyveliya? ungal pathivu good.nanum neyvelithan.

 1. மீரா என்னும் மாபெரும் கவிஞர் பற்றி, அறிந்துகொண்டேன்பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar