நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மனங்கவர் முன்னுரைகள்...1 (வண்ணதாசன்)

Sunday, 24 July 2011
        தொடர்பதிவின் கண்ணியில் என்னையும் இணைத்த ‘முத்துச்சிதறல்' திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

          புத்தக வாசிப்பின் மீதான நேசிப்பு நாளுக்கு நாள் வயதுக்கு நிகராய் கூடியபடியே தானிருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கப் பழகிய காலத்தில் கிடைத்ததைப் படித்ததுண்டு... எல்லா வேலைகளையும் ஏறக்கட்டி, கூட்டுக் குடும்பத்தின் எல்லோரும் தூங்கிய பிறகு, ‘ராணி' போன்ற வாராந்திரிகளை படுக்கையில் படுத்தபடி படிப்பாங்க எங்கம்மா. மின்சாரம் நின்றால் உதவ தினசரி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘பெட்ரூம் லைட்' எனப்படும் கண்ணாடி போட்ட சின்ன சிமினி விளக்கு வெளிச்சத்தில்! . தாழ்வாரத்தில் உடன் படுத்திருக்கும் மற்றவர்கள் தூக்கம் கெடாதிருக்க மின் விளக்கு அணைக்கப் பட்டிருக்கும்... மறுநாள் அம்மா வைத்த இடம் தேடி, நேரம் தேடி புரிந்தோ புரியாமலோ படித்து வைத்ததுண்டு. நம்மாலும் படிக்க முடிகிறதே என்ற குதூகலத்தின் எச்சத்துடன்.
             பிந்தைய நாட்களில் செல்வம் மாமா வாரம் தவறாமல் வாங்கி வரும் குமுதம், கல்கண்டு, துக்ளக் இவற்றையும் அவரது பையை ஆராய்ந்து படித்து விடும் வழக்கம். மளிகைக் கடையிலிருந்து பொருட்கள் கட்டி வரும் பேப்பர்கவர்களைப் பிரித்து முதலும் முடிவுமற்ற கதைகளை, செய்திகளை படித்து முன்னும் பின்னும் கற்பனையில் அவதானிப்பது சுவையான பொழுது போக்கு அப்போதெல்லாம். வீட்டை ஒட்டியிருக்கும் சீமான் மளிகைக் கடையில் கவர் செய்ய வைத்திருக்கும் புத்தகங்களைக் கேட்டும் படித்திருக்கிறேன்.
            சாப்பிடும்போதும் தூங்கப் போகும் போதும் படித்தேயாக வேண்டும். புதிதாக ஒன்றும் கிடைக்க வில்லையானால் படித்ததையே பலதடவை படித்ததுண்டு. அப்புறம் எதிர் வீட்டு வைத்தியநாதன் அண்ணன் தயவில் புவனகிரி கிளை நூலகத்திலிருந்து சுஜாதா புத்தகங்கள்.(அவர் சுஜாதா பிரியர்) ,
           அப்புறம்,பதின்வயது துப்பறியும் நாவல்கள் புற்றீசலாய் புறப்பட்ட காலம். ஒன்று விடாமல் வாங்கியோ, நட்பு வட்டத்தில் பகிர்ந்தோ பயண நேரப் படிப்பு. துரித வாசிப்பு பழகியது அதில்தான்.
             அப்புறம், நர்மதா, மணிமேகலை போன்ற பதிப்பகங்களிலிருந்து வி.பி.பி. முறையில் புத்தகங்களை வாங்குவது... குறியாமங்கலம் கிராமத்திலிருந்து நகரை ஒத்த நெய்வேலிக்குத் தாவச் செய்தது திருமண பந்தம்.
             இலக்கிய ஈடுபாடுள்ள துணைவர் வாய்க்கப் பெற்றதும், இருவருமாகத் தேடித் தேடி வாங்கியடுக்கி உள்ளவற்றை, வாங்க இருப்பவற்றை வாழ்வின் எஞ்சிய நாட்களில் படித்துவிடுவோமா என்ற பிரமிப்பு இப்போது எங்கள் நூலக அறையைக் காணும் போதெல்லாம்...!

        பதிவின் முன்னுரை இத்துடன் நிற்க.

         எந்தவொரு படைப்புக்கும் ஒரு முன்னோட்டம் அவசியமாகிறது. தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும்படியும், விருந்தில் முதலில் பரிமாறும் இனிப்பு நாவின் சுவையரும்புகளைத் தூண்டித் தயார்ப்படுத்துவது போலவும், நூற்பொருளைப் பற்றிய சுருக்க விளக்கமாகவும், கச்சேரி தொடக்கத்தில் பாகவதர் தொண்டையை செறுமிக் கொள்வது போலவும் உள்ளது முன்னுரை / முகவுரை / நூன்முகம் / தோற்றுவாய் இன்ன பிறவாய் கூறப்படுபவன நூலாசிரியருடையது. அணிந்துரை, தந்துரை, பதிப்புரை, சிறப்புரை எல்லாம் மற்றவர்களின் தட்டிக் கொடுத்தல், போர்த்தி விடுதல், சமயங்களில் குட்டும் வைத்தல்.
          முன்னுரையிலிருந்து படிக்கத் தொடங்குதல் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் வண்டியேறுதல் போல். வாழைப் பழத்தை நாம் உரித்தே சாப்பிடுவது வழக்கம். அதிலும் சில வகைகளில் தோலின் உள் உரிப்பு தனிச் சுவையல்லவா!
          முதலில் எனது ஆதர்ச எழுத்தாளரான வண்ணதாசனும் அவரது படைப்புலகமும்!


        புதுமைப்பித்தன் பதிப்பகம் 2002-ம் ஆண்டில் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டிருக்கும் ‘வண்ணதாசன் கதைகள்' எனும் 117சிறுகதைகளின் தொகுப்பில்  வண்ணநிலவன் தன் அணிந்துரையில் சொல்வார்... (வண்ணதாசனை ‘அறியாப்பிள்ளை'களுக்காக இது)
       
        “அவரது மன உலகம் அன்பாலும் நெகிழ்வாலும் கட்டப்பட்டது. அவரது படைப்புலகம் கருணையும் செளந்தர்யமும் கலந்தது. குறுகலான நெருக்கடி நிறைந்த, எரிச்சலூட்டுகிற சந்தில் கூட அவரால் ஒழுங்கையும் அழகையும் தரிசிக்க முடியும். எதிர்ப்படுகின்ற மனிதர்களின் பேரில் பிரியமும் பரிவும் காட்ட முடியும்.
             அவரது கருணை அவரது படைப்புகளுக்கு எல்லையற்ற நெகிழ்வைக் கொடுக்கிறது. இலக்கியக் கருத்துத் தளத்தில் அது மனிதாபிமானமாகக் கருதப்படுகிறது. புற உலக யதார்த்தத்தையும் மனிதர்களையும் அவர் இளகிய மனதோடும், இரக்க சிந்தையுடனும் மட்டும் பார்க்கவில்லை. செளந்தர்யக் கண் கொண்டும் பார்க்கிறார். இந்த மாயக் கலவை அவரது பேனாவின் வழியே கவித்துவம் சொட்டச் சொட்ட வழிகிறது. அவரது மொழிநடையிலும் அந்த மாயக் கலவையின் சாரம் ஏறுகிறது. அவர் விவரிக்கிற யதார்த்த உலகின் வறுமை, துயரங்கள் கூட நம்மைப் பரவசங்கொள்ளச் செய்கின்றன. எவர் மீதும் எரிச்சலோ வெறுப்போ ஏற்படுத்தாத ஒரு கருணைமயமான உலகை அவரது கதைகள் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. ஏறத்தாழ இதே உலகைத் தான் தாகூரும், லா.ச.ரா.வும், கு.பா.ரா.வும், தி.ஜானகிராமனும் தங்கள் படைப்புகளில் காண்பித்தார்கள்.”
           வண்ணதாசனை அவர்தம் எழுத்தை தரிசித்தவர்கள் மேற்கண்டதை அப்படியே ஆமோதிப்பார்கள்.
          
       “சக மனிதர்கள் மீது, சக உயிர்கள் மீது கதாபாத்திரங்கள் காட்டும் அன்பு, காதல், ஸ்நேகம் ஆகிய மென்னுணர்வுகள் என்ற அடித்தளத்தின் மீது வண்ணதாசனின் உலகம் பகட்டும் ஆரவாரமுமற்ற கம்பீரத்துடன், தன்னைப் புரிந்து கொண்டு நெருங்கி வருகிறவனுக்கு தன் மேன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த வல்லது. இந்த ஸ்நேகம் எதிர்ப்பார்ப்பு அற்றது; பிரியம் பிரியத்துகாகவே என்பது போல் மனசுக்கு நெருக்கமானவை ஒரு பார்வையால், ஒரு நினைவின் அசைவால் ஒரு வார்த்தையால் கீறிவிட்டு வெள்ளமெனப் பாய்ந்து கிளம்பும் ஸ்நேகமது. வஞ்சகத்துக்கும், தடித்தனத்துக்கும், முரட்டுத் தனத்துக்குமிடையில் இவ்வுலகில் பிரியமும், வாஞ்சையும், ஸ்நேகமும் சாத்தியமென்று வண்ணதாசன் கதைகள் நிரூபிக்கின்றன” என்ற, மீட்சி இதழில் ஆர். சிவக்குமார் எழுதிய வரிகளை இந்நூலின் பதிப்புரையில் ‘சந்தியா' நடராஜன் எடுத்தாண்டிருக்கிறார்.
           
      “வெறுப்பின் தகிக்கும் குழம்புகள் வாழ்வின் முகடுகளிலிருந்து சதா வழிந்து கொண்டிருக்க, அதை அன்பு எனும் பீற்றல் துணியைக் கண்ணில் கட்டி மறைத்து பொய்யாக்கி விடுவது போலக் குற்றம் சாட்டுகிறார்கள். உலகம் வண்ணத்துப் பூச்சி மயமானது என்று யாரும் சொல்லவில்லை. வண்ணத்துப் பூச்சியே அற்றது என்றும் யாரும் சொல்ல முடியாது. முழுக்க முழுக்க நாம் அன்பற்றவர்களாகியா போனோம்? இன்னும் இல்லையே... இந்த ‘இன்னும்' என்ற வார்த்தையின் கீழ் வருபவையே என் கதைகள். என்றும் மின்சார ரயிலின் தடங்களுக்கு மத்தியிலும் எங்கோ என் தாமிரபரணி ஓடுகிறது. ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை”-இது வண்ணதாசன்.
 சூனியங்களுக்குத் தான் ஒளிவட்டம். சூரியனுக்கு எதற்கு? என்ற சந்தியா நடராஜனின் கேள்வி நமக்கும் உடன்பாடானதே.


        அடுத்து, அகரம் வெளியீட்டில் கல்யாண்ஜி(வண்ணதாசன்)யின் ‘அந்நியமற்ற நதி' கவிதை நூல் முன்னுரையில் வண்ணதாசன்...

           “எங்கே கலையும் வாழ்வும் மரபும் இன்னும் செழித்துக் கிடக்கிறதோ, எங்கே இன்னும் மனிதன் ஆழமாகவும் அகலமாகவும் அறிந்து கொண்டிருக்கிறானோ, எங்கே வெயிலில் பாறைகள் பிளந்து வெடிக்கப் போவது போல் விம்மிக் கொண்டிருக்கிறதோ, எங்கே மகுடிகள் ஊதப் படுகிறதோ, எங்கே இன்னும் ஆலம் விழுதுகள் அசைந்து கொண்டிருக்கிறதோ, எந்தப் பயணத்தில் சக பயணிகளுடன் கலந்துரையாடிச் செல்கிறார்களோ, எந்த மலையில் தீ எரிகிறதோ, எந்த ஊர்ச் செம்மண்ணில் மழை பெய்ததும் துளை துளையாக மண் புழுக்கள் வெளிவருகின்றனவோ, எங்கே பறவைகள் அடையும்படி இன்னும் குளங்களின் நடுவில் குத்துச் செடிகள் உள்ளதோ, எங்கே தோண்டினால் தண்ணீர் வருகிறதோ, எங்கே பெண் பிள்ளைகள் கூடி விளையாடுகின்றார்களோ, எங்கே குரவை சத்தம் போடுகிற தாய்மார்களுக்கு மத்தியில் புதிய குழந்தை பிறக்கிறதோ அங்கிருந்தெல்லாம் நாம் கவிதைகளை மொழிபெயர்த்து நமக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வோம்.
          வாழ்வு தானே கவிதை. வாழ்வு தானே கலை. வாழ்வு தானே எல்லாம்!
          சிக்கல்களையும் பின்னங்களையும் கரையான் புற்றுக்களையும் நண்டு அரிக்கிற வாழ்வின் நுரையீரல்களையும் மொழியின் தென்னங்கீற்றுக் குறுத்தோலைகளால் மூடி விடுவதல்ல நோக்கம். ஏற்கனவே இருக்கிற பாசாங்குக்குப் பதிலாக மற்றொரு பாசாங்கில் போயே அப்படிச் செய்வதும் முடியும். ஆனால் அந்தச் சிக்கல்களின் நுட்பமான சதவீதங்களை ஒரு கவிஞன் அறிந்தவனாக இருக்க வேண்டாமா? ஒரு பறவையின் உடலைத் தாங்கும் படி நீண்ட கால்களையும், புயல் கூடப் புரட்டித் தள்ளிவிட முடியாதபடி ஒரு பெரும் பாறைக்கு அண்டை கொடுத்தபடி ஒரு சிறுகல்லையும், ஆறிவிடும்படி நம் காயங்களையும் தந்து, இயற்கை அனைத்தையும் சமன் செய்து கொண்டே இருக்கிறது. கவிதையும் அப்படிச் சமன் செய்து கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! வெயிலும் மழையும், ஒளியும் நிழலும், வெளிச்சமும் இருட்டும் என்று எப்படிச் சொன்னாலும் இரண்டையும் சேர்த்துத் தானே மொழியின் தினங்கள். இன்னும் தீதான் தெய்வம், நீர்தான் வழ்வு.
         

        எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரியிருப்பினும், எல்லோரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்? அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம், எத்தனை ஊர், எத்தனை மண் கட்டப்பட்டிருக்கிறது?
         நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்? துருப்பிடித்த திரிசூலங்களில் குத்தப்பட்டிருக்கிற காய்ந்த எலுமிச்சைகளை நானறிந்தவன் எனில், என் உடுக்குகளையும் பம்பைகளையும் ஓரத்தில் வைத்து விட்டு, ஏன் சலவைக்கல் தியான மண்டபங்களின் ‘நீல ஓம்'களை நெற்றிக்கு மத்தியில் நிறுத்த அல்லாட வேண்டும்?”

       பதிவின் நீளம் கருதி, பிற பின்...

11 கருத்துரைகள்:

 1. முன்னுரை பற்றிய உங்கள் விளக்கம் நன்று..

  தொடர்பதிவிலேயே ஒரு தொடரும்.... :) நல்லது. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

 1. உங்களை இன்னுமொரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் என் துணைவி.

  http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html

  சமயம் கிடைக்கும் போது தொடருங்கள்.

 1. Rathnavel said...:

  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

 1. தொடர் பதிவைத் தொடரும் பதிவாக்கி நன்கு எழுதியுள்ளீர்கள்.
  தங்களின் இந்தப்பதிவின் ஆரம்ப முன்னுரையே மிக நன்றாக, மிகவும் யதார்த்த நிகழ்வுகளாக இருந்தன.

  நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

 1. Waiting for the next part

 1. வண்ணதாசனில் தோய்ந்த மனசு..
  அவசர யுகப் படிப்புக்கு அவரிடம் போக முடியாது.
  யாரும் தொந்திரவு செய்யாமல் தனிமை கிடைத்து வாசிக்க வேண்டும்..
  அவ்வப்போது நம்மை நமக்கே தரிசனம் காட்டும் வர் படைப்புகள்

 1. \\\எங்கே பெண் பிள்ளைகள் கூடி விளையாடுகின்றார்களோ, எங்கே குரவை சத்தம் போடுகிற தாய்மார்களுக்கு மத்தியில் புதிய குழந்தை பிறக்கிறதோ அங்கிருந்தெல்லாம் நாம் கவிதைகளை மொழிபெயர்த்து நமக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வோம்.
  வாழ்வு தானே கவிதை. வாழ்வு தானே கலை. வாழ்வு தானே எல்லாம்!///

  ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்
  கோற்றொடியார் குக்கூவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
  .................................................
  நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
  பாட்டினிலும் நெஞ்சைப் பறி
  கொடுத்தேன் பாவியேன்."
  -- என்கிறான் பாரதி.

  வாழ்வின் சுக துக்கங்களைப் பாடாத இலக்கியங்கள் நிலைப்பதில்லை.

  இலக்கியத்தரம் வாய்ந்த பதிவு. நன்றி

 1. “வெறுப்பின் தகிக்கும் குழம்புகள் வாழ்வின் முகடுகளிலிருந்து சதா வழிந்து கொண்டிருக்க, அதை அன்பு எனும் பீற்றல் துணியைக் கண்ணில் கட்டி மறைத்து பொய்யாக்கி விடுவது போலக் குற்றம் சாட்டுகிறார்கள். உலகம் வண்ணத்துப் பூச்சி மயமானது என்று யாரும் சொல்லவில்லை. வண்ணத்துப் பூச்சியே அற்றது என்றும் யாரும் சொல்ல முடியாது. முழுக்க முழுக்க நாம் அன்பற்றவர்களாகியா போனோம்? இன்னும் இல்லையே..."

  அருமையான வரிகள்!
  அழகான விமர்சனம்!
  அடுத்த பகுதியில் மறுபடியும் சந்திக்கிறேன்!!

 1. ஹேமா said...:

  வாசிக்க வாசிக்க தமிழ் இனிக்கிறது !

 1. மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் முழுதும் எழுதி முடித்தபின் பகிர்கிறேன். சமயங்களில் நூல்களை விட முன்னுரைகள் மிகவும் சுவராஸ்யமாகி விடுகின்றன.

 1. சாப்பிடும்போதும் தூங்கப் போகும் போதும் படித்தேயாக வேண்டும். புதிதாக ஒன்றும் கிடைக்க வில்லையானால் படித்ததையே பலதடவை படித்ததுண்டு. //
  மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar