நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பூமரப் பெண் - 3

Friday, 15 July 2011
        ஊருக்குத் தள்ளியுள்ள ஒரு தோட்டத்திற்குத் தன் தோழிகளுடன் விளையாடக் கிளம்பிய இளவரசனின் தங்கை, தன் அண்ணியையும் வற்புறுத்தி அழைத்தாள். அழைத்துப் போக அம்மா, அண்ணன் சம்மதங்களையும் செல்லங் கொஞ்சிப் பெற்றுவிட்டாள்.
         ஊர்கோடித் தோட்டத்துக்குப் போனதும், “மரமாகு! பூக்கொடு!” என்று அண்ணியைக் கட்டாயப்படுத்தினாள். கூட சேர்ந்து கூச்சலிட அவளது தோழிகள். வேறு வழியின்றி நம் கதாநாயகி சம்மதித்தாள். தொடங்கிய நோக்கத்திலிருந்து இது நாலாவது மாற்றம்! கோரிக்கை நச்சரிப்பு வடிவம் பெற்றுவிட்டது.
         அவள் பூ மரமானதும், இளவரசியும் தோழிகளும் மரத்தை மொய்த்தனர். பூமரப் பெண்ணின் கட்டளைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. பூக்களைப் பறிக்கையில் இலைகளைக் கிழித்தார்கள். கணுக்களை முறித்தார்கள். கிளைகளை ஒடித்தார்கள்.            அந்நேரம் மழை பிடித்தது. அவசரமாய் மற்றொரு வாளித் தண்ணீரை  மரத்தின் மீது ஊற்றி விட்டு ஓடி விட்டார்கள்.
         மறுபடி பெண்ணானாள். ஆனால் சிதைந்த பெண்! கை முறிந்து, கால் முறிந்து சதைத் திரளாய்- சதைப் பிண்டமாய் அடையாளம் காண முடியாதபடி ஒரு பெண்! முகம் மட்டும் சிதையாமலிருந்தது.
          வலி தாளாமல் பூமரப் பெண் முனங்கினாள். அவளால் நகரவும் முடியாது. யாருமற்ற தோட்டமது! நீண்ட நேரத்துக்கு அவள்  முனங்கல் காதுகளைச் சேராமல் காற்றிலேயே கரைந்தது.
          ஓடிய மழை வெள்ளத்திலேயே தத்தி, ஊர்ந்து அவள் சாலைக்கு வந்து விட்டாள். தற்செயலாக அந்தப் பக்கம் வந்தார்கள் சுமையேற்றிப் போகும் வண்டியோட்டிகள். முனங்கல் சத்தம் அவர்கள் காதுகளில் விழுந்தது. இறங்கி வந்தவர்கள், சிதைக்கப் பட்ட பெண்ணைப் பார்த்துத் துணுக்குற்றார்கள். துணிகளைச் சுற்றி ரணங்களை மறைத்தார்கள். அண்டை நாட்டுக்குச் செல்லும் தங்கள் வண்டியில் பாதியாகிக் கிடந்த அந்தப் பெண் உடலை ஏற்றிச் சென்றார்கள்.
         அண்டை நாட்டு அரண்மனையருகே பெண்ணைக் கிடத்தினார்கள். “இவ்வளவு தானம்மா எங்களால் செய்ய முடிந்தது! நல்லவங்க கண்ணில் கட்டாயம் படுவே. அவங்க உன்னைக் காப்பாத்துவாங்க” என்று சொல்லிச் சென்றார்கள்.
         அவர்கள் சொன்னது போலவே, அரண்மனைப் பணிப்பெண்கள் கண்ணில் அவள் பட்டாள். அவர்கள் தங்கள் ராணியிடம் ஓடினார்கள். ராணி, வேறு யாருமல்ல. இளவரசனின் மூத்த சகோதரி. திருமணமாகி வந்தவள்.
         “யம்மா! முகத்தைப் பாத்தா உங்க தம்பி பொண்டாட்டி மாதிரி தெரியுது. உடம்பு சிதைஞ்சு கிடக்கு. பாவம்மா! உள்ள கொண்டு வரவா?” கெஞ்சினார்கள் பணிப்பெண்கள். அரைமனதுடன் சம்மதித்தாள் ராணி. பணிப்பெண்கள், சிதைந்த பூமரப்பெண்ணைக் குளிப்பாட்டி, மருந்திட்டு, உணவூட்டிப் பரிவுடன் கவனித்தார்கள்.
         அங்கே, இளவரசனின் அரண்மனையில் என்ன நடக்கிறது? கூடப் போன அண்ணி ஏன் திரும்ப வரவில்லை என்ற கேள்விக்குத் தங்கை தினசரி ஒரு பொய் சொல்லித் தப்பித்து வந்தாள்.
         இன்று வருவாள், நாளை வருவாள் என்று காத்திருந்த இளவரசன் ஏறக்குறைய பைத்தியமானான். ஊர் ஊராக மனைவியைத் தேடி அலைந்தவன் தாடி, மீசையோடு ஆள் அடையாளம் தெரியாத படி உருக்குலைந்தான்.
        அங்கு சுற்றி, இங்கு சுற்றி அவனும் தமக்கையின் ஊருக்கே வந்து சேர்ந்தான். அவனையும் பணிப்பெண்களே அடையாளங் கண்டனர்.
        “உடனே கூட்டிட்டு வாங்க” என அரசி பதறிப்போய் ஆணையிட்டாள்.
        எண்ணெய்க் குளியல், விருந்து, சுகமான படுக்கையறை எல்லாம் தயாராயின. எதிலும் அவனுக்கு ஈடுபாடு இல்லை. யாருடனும் அவன் பேசுவதுமில்லை. அவனை மகிழ்விக்க தினசரி ஒரு பெண்ணை அவன் படுக்கையறைக்கு அனுப்பினாள் அரசி. ஒருவரையும் அவன் சீண்டவில்லை.
        பணிப்பெண்களே யோசனை சொன்னார்கள். “உருச் சிதைந்த அவருடைய மனைவியையே அனுப்பி வைப்போமே!” இப்போதும் அரைமனதுடன் அரசி சம்மதித்தாள்.
        சிதைந்த பூமரப் பெண் அவன் படுக்கையில் கிடத்தப்பட்டாள்.

       முடிவுப் பகுதி அடுத்த பதிவாய்...!

7 கருத்துரைகள்:

 1. பூமரப்பெண் எங்களுக்கும் படிக்கப் பிடிக்கிறது. பகிர்வுக்கு நன்றி தோழி.

 1. கதையின் போக்கு பல ஆழமான பரிமாணங்களைத் தொட்டபடி செல்கிறது. கவர்ந்திழுக்கும் நடையும் கூட.

 1. நல்ல நடை... தொடரட்டும்.

 1. ஹேமா said...:

  வித்தியாசமான கற்பனை வளம் இந்தக் கதையில் !

 1. அசலின் பிரதிபலிப்பு போல இந்த சுருக்கிச் சொல்லும் திறனிலும்.

 1. சுவாரஸ்யமாக போகிறது. முடிவுப் பகுதியைப் படிக்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.

 1. manichudar said...:

  வாசிப்பில் எளிய , வசிகரித்து வசப்படுத்தும் கதையின் பாங்கு, உணர்த்திச் செல்லும் உணர்வுகள் வலிமையானதாக இருக்கிறது, அருமையான பகிர்வு.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar