நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பூமரப் பெண்-2

Thursday, 14 July 2011
       தங்கை சொன்னபடியே அக்கா செய்தாள். நீரூற்றியதும் அழகிய மணமிக்க மலர்கள் மலர்ந்த மரமானாள் தங்கை. மரத்துக்குச் சேதமின்றி பூக்களை மட்டும் கவனமாகப் பறித்தாள் அக்கா. பறித்ததும் மீண்டும் நீரூற்றினாள். மறுபடி தங்கை தோன்றினாள்.
         பூக்களை எடுத்துக் கொண்டு தாய்க்குத் தெரியாமல் விற்பனை செய்யப் போனார்கள் சகோதரிகள். இளையவள்தான் எப்போதும் தீர்மானிப்பவள். “அரண்மனைப் பக்கம் போகலாம்; அதிக விலை கிடைக்கும்!”
        குடிசை வீட்டிலிருந்து கதை இப்போது அரண்மனைப் பக்கம் நகர்கிறது.         அரண்மனையில் வசிப்பவர்கள் யார்? ராஜா, ராணி. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள். மூத்த பெண்ணுக்குத் திருமணமாகி    அண்டை நாடு போய்விட்டாள்.
        சகோதரிகள் நினைத்தது போலவே பூவாசம் அரண்மனையைக் கவர்ந்தது. இளவரசிக்குப் பூவின் மீது விருப்பம். இளவரசனுக்குப் பூவோடு சேர்த்து, பூ விற்கும் இளைய பெண் மீதும் விருப்பம். அவளைத் தொடர்கிறான் - இரவும் பகலும். ஒரு அதிகாலையில், அவளுடைய வீட்டு முற்றத்தில் அவள் மரமாகிப் பூப்பதைக் காண்கிறான். மதிமயங்கி வீடு திரும்புகிறான். ஆனால், அவன் ஏக்கம் அவளுக்குத் தெரியாது. அரண்மனை திரும்பியதும் யாருடனும் பேசுவதை இளவரசன் நிறுத்துகிறான். உணவை மறுக்கிறான். இது பேரத்தின் தொடக்கம். தாய் தந்தை மீதான நிர்ப்பந்தம். ராஜாவும் ராணியும் வழிக்கு வருகிறார்கள். பூக்காரப் பெண்ணை மருமகளாக்க ஒப்புக் கொள்கிறார்கள்.
        சகோதரிகள் கையில் இப்போது நல்ல காசு. அரண்மனைக் காசு. விற்பனை ஜோர். ஆனால் அம்மாவிடம் இன்னும் சொல்லவில்லை. சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இனித்து வரவேண்டிய சந்தர்ப்பம் கசந்து வருகிறது.
        பூக்காரப் பெண்ணின் தாயை அரண்மனைக்கு அழைக்கிறார் ராஜா. உன் இளைய மகளை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடு என்று விண்ணப்ப வடிவில் கட்டளை பிறப்பிக்கிறார். பயந்து தலையாட்டுகிறாள் தாய். உள்ளுக்குள் அதிர்ச்சி! அரச குமாரர்களின் அந்தப்புரங்களைப் பற்றி எந்தப் பெண்ணுக்காவது நல்ல அபிப்பிராயம் இருக்குமா...?
         வீட்டுக்கு வந்ததும் விளக்குமாறு எடுத்து ஆத்திரத்தில் மகள்களை வெளுக்கிறாள். “உங்கள எப்பிடிடீ அரச குமாரனுக்குத் தெரிஞ்சிச்சு?”
 சகோதரிகள் சேர்த்து வைத்த காசைக் காட்டி அம்மாவிடம் உண்மையைச் சொல்லுகிறார்கள். அம்மா நம்ப  மறுக்கிறாள். பெண்ணாவது மரமாக மாறுவதாவது...?!
         அம்மாவின் பொருளாதாரப் பாரத்தைக் குறைப்பதற்காக மரமாக மாறியவள் இப்போது அம்மாவை நம்ப வைப்பதற்காக மரமாக மாறிக் காட்டினாள். பார்த்த பிறகு அம்மாவுக்குத் திருப்தி. மகள் எப்படியும் பிழைத்துக் கொள்வாள்.
        திருமணம் நடக்கிறது. முதல் மூன்று நாட்களுக்கு இளவரசன் தன் புது மனைவியுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பேரத்தை ஆரம்பித்து விட்டான் என்று அர்த்தம்! மனைவி கண்ணீருடன் காரணத்தைக் கேட்டபோது சொன்னான்: “என் முன்னால் மரமாக மாறிக் காட்டு. அந்தப் பூக்களைப் பறித்து நம் படுக்கையில் பரப்பிக் கொள்வோம்.”
           அவளுக்குத் திகைப்பு. மரமாக மாறிப் பூத்ததற்கு முதலில் இருந்த நோக்கம் மாறிக் கொண்டே போகிறது. இது மூன்றாவது மாற்றம். இப்போது பாலியல் சுக நோக்கம்!
           அவள் மறுத்தபோது, அவன் தைக்கும் வார்த்தைகளில் பேசினான்: “எனக்கு இல்லேன்னா பிறகு யார் சொன்னா நீ மரமாவே?”
         அவள் பணிந்தாள். ஒருவாளித் தண்ணீரில் மரமாகி, மறுவாளித் தண்ணீரில் பெண் ஆனாள். பூக்களைத் தான் பறிக்க வேண்டும்; இலைகளைக் கிள்ளக் கூடாது; கணுக்களை முறிக்கக் கூடாது என்ற கட்டளைகளைக் கணவன் கவனமாகக் கடைபிடித்தான்.
         தினமும் பூப்படுக்கை! காலையில் அரண்மனை முற்றத்தில் வாடிய பூக்களின் குவியல். இளவரசனின் தங்கைக்கு மூக்கு வேர்த்தது. கூடவே பொறாமைப் புகையும்!
        பிறரின் ரகசியங்களைத் துருவி அறிவதில் சிலருக்கு அதீத மோகம்! சாவித் துவாரத்தின் வழியே ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டாள். தங்கை மனதுக்குள் ஒரு திட்டமும் உருவாகி விட்டது.

        என்ன திட்டமென்பதும் கதைத் தொடர்ச்சியும் நாளைய பதிவில்...

6 கருத்துரைகள்:

 1. ம்... சுவாரசியமாய்த் தொடர்கிறது உங்கள் பகிர்வும் கதையும்.... அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன் நாங்களும்....

 1. அடடா.. என்ன ஆகப் போகிறதோ.. திக் திக் திக்..
  மனிதன் மனிதனாகவே இருப்பதுதான் நல்லதோ?.. அற்புதங்களுக்கு வேலை இல்லாமல்..

 1. படித்ததில் பிடித்தது படிக்கவும் பிடிக்கிறது. அருமை. பாராட்டுக்கள்

 1. Ramani said...:

  கதை பிரமாதம்
  இது போன்ற கதைகளை கேட்டு ரசித்து
  வெகு நாட்களாகிவிட்டது
  மிகச் சரியான இடத்தில் கதையை நிறுத்தி இருக்கிறீர்கள்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

 1. மர்மக் கதை மன்னி ஆகிட்டீங்க போங்க. நடுநடுவில் வரும் உங்கள் கருத்து வாசிப்பின் பயணத்தை ஒழுங்குபடுத்துகிறது. முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 1. ஹேமா said...:

  ஆர்வமாயிருக்கிறது நிலா....அடுத்து...அடுத்து !

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar