நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

தமிழகத்தில் மொழிவிழிப்புணர்வு

Monday, 2 May 2011
தமிழுணர்வாளர் ம. பொன்னிறைவனுடன் ஒரு நேர் காணல்:
தினக்குரல் (கொழும்பு-இலங்கை)
நாள்: 20-03-2011.
நேர்கண்டவர்: கே.ஜி. மகாதேவா

கேள்வி:
     தமிழ் மொழி ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது என எப்படிக் கருதுகிறீர்கள்?

பதில்:
     ஆறு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழும்போது தமிழுக்கு எப்படி அழிவு வருமென்று கேட்கிறார்கள். இது ஒரு தப்புக் கணக்கு. தமிழ்த்தாயின் தலைக்கு மேல், ஒரு ஆயுதம் விழும் நிலையில் இருக்கிறது.
அதன் இலக்கு எத்தனை ஆண்டுகள் என்பது தெரியாது. ஆனால், உலக மொழிகளுக்கு இதுவரை என்ன நடந்தது, ஏன் அழிந்து போயின, அழிந்துபோன இஸ்ரேலிய நாடு அறுபது ஆண்டுகளுக்குப் பின் எப்படி மீண்டது, அவர்களது ஹிபுறு மொழி எப்படித் துளிர்விட்டது என்பதை எல்லாம் நமது மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஈழத்தில் இனம் அழிக்கப்படுகிறது. இனத்தை அழித்தால் மொழியும் ஒழிந்துவிடும்.

     சிங்கப்பூரில் இன்று என்ன நடக்கிறது? தமிழ்ப் பத்திரிகைகளும், சங்கங்களும் இருந்தால் போதுமா? தமிழ்ப் பிள்ளைகள் விரும்பிக் கற்கும் மொழி தமிழ் அல்ல! அதேநேரம், வீட்டில் தமது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை, வீட்டுக்குள் வரும் குழந்தைகளின் நண்பர்களுடன் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதை அங்குள்ள தமிழ்ப் பெற்றோர் விரும்புகின்றனர்; பெருமைப் படுகின்றனர்; புளகாங்கிதமடைகின்றனர்.

     மொரிஷியஷில் பெயர்தான் கந்தையா. தமிழ், சுத்தமாகத் தெரியாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் வீடுகளில் கோலோச்சுவது நிச்சயம் தமிழ் அல்ல. அந்தந்த நாட்டின் தேசிய மொழிதான். பேச்சுத் தமிழும் குறைந்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது என்ற நிலைப்பாடும் வந்தால், தாய்மொழியை எவ்விதம் பாதுகாக்கப் போகின்றீர்கள்?

     பிள்ளைகள் ஏதோ ஒரு நாட்டு தேசிய மொழியைப் பேச, பயில, தொடர்பு கொள்ள பெற்றோர் மட்டும், ‘நாங்கள் தமிழை மறக்கவில்லை... தமிழில் தான் தினமும் பேசுகின்றோம்' என்று வாதாடுவது தர்க்க ரீதியாக இல்லை. தமிழ்மொழிப் பாடங்களை தமிழ்ப் பிள்ளைகள் கற்க வேண்டும். நமது இலக்கியங்களை அவர்களுக்கு போதிக்க வேண்டும். இதிகாச புராணங்களை, அவற்றின் பெருமைகளை, தத்துவங்களை, வாழ்க்கை நெறிகளை கதைவடிவில் புரிய வைக்க வேண்டும். அதுவும் பிள்ளைகள் விரும்பிக் கேட்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். ‘எப்படி' என்பதை விட்டு, ‘எப்படியும்' எனும் புரியும் தன்மையை தோற்றுவிப்பது பெற்றோரின் பெரும் கடமையாகும்.

     இன்றைய தலைமுறையில் பெற்றோர் கவனமெடுத்து, நமது தமிழ்மொழியின் சிறப்பை தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து தமிழ்மொழிவாழ் மக்களாக அரவணைக்காவிட்டால் நமது சமூகத்துக்கு மிகப்பெரிய துரோகம் செய்த பழியை சுமக்க நேரிடும்! மொழியியல் வல்லுநர்களின் கூற்றுப்படி உலகம் முழுவதுஇன்று ஆறாயிரம் மொழிகள் பேசப்படுவதாகவும் இன்னும் நூறு ஆண்டுகளில் இத்தொகை வெறும் அறுநூறாகி விடும் என்றும் தெரியவருகிறது. ஐ.நா. சபையும் இதனை ஏற்று விரைவில் அழியப் போகும் மொழிகளில் தமிழும் இருக்கிறது என்று பயமுறுத்துகிறது. இன்றைய தமிழின் நிலை இப்படியே நீடித்தால் ஐ.நா. எச்சரிக்கையைப் புறக்கணிக்க முடியாது.

     “தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது? தமிழ் பயிற்றுவிக்கும் தமிழ்ப் பாடசாலைகள் மிகவும் குறைவாகி விட்டது. இளைய தலைமுறையினரும் முழுப் பாடங்களையும் தமிழில் கற்க விரும்புவதில்லை. உயர் கல்வியிலும் முழுப் பாடங்களும் தமிழில் கிடையாது. பிற மாநிலத்தவர்கள் தமிழ்மொழியை விரும்பி ஏற்கும் நிலை கூட இங்கு இல்லை. ஆங்கில ஊடுருவல் அல்லது கலப்பு இல்லாமல் தமிழகத்தில் தமிழ் பேசப்படுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் பேசப்படுவது தமிழா என்று கூட சிந்திக்காமல் கதைக்கப்படுகிறது. வேற்றுமொழி அல்லது வட்டார ஆதிக்கத்தினால் இந்தப் பழக்கம் வழமையாகிவிட்டது. இம்மாதிரியான சூழல் நமது தாய்மொழிக்கு ஏற்படும் எதிர்கால ஆபத்தை உணர்த்துகிறது.

நன்றி: சங்கமித்ரா, பெரியார் தமிழ்ப் பேரவை.

8 கருத்துரைகள்:

 1. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் என் குழந்தைகளை தமிழ் வழியில்தான் படிக்க வைக்கிறேன். இதை இத்தனைத் திறோடு நான் திரும்பத் திருமப பதிவதற்கு ஒரே காரணம்தாந் - யாரேனும் எடுத்துக் கொள்ள மாட்டார்களா என்பதே.பொன்னிறைவன், மகாதேவா ஆகியோருக்கும் , ஒரு நல்ல நேர்கானலை பார்க்க கொடுத்தமைக்காக நிலாவுக்கும் என் நன்றிகள்.

 1. தமிழில் போதனை மட்டும் இதற்குத் தீர்வாகாது. தமிழில் பேசுவதும் உரையாடுவதும் இழிநிலை-அவமானத்துக்குரியது என்றெண்ணும் போக்கு மாறாத வரையிலும், ஊடகங்களில் தவறான உச்சரிப்போடு பேசப்படும் தமிழை ஆதரிக்கும் வரையிலும், பத்திரிகைகளில் நம் கலாச்சாரம் மரபு குறித்த உண்மையான அக்கறையோடு எழுத்துக்கள் எழுதப்படாத வரையிலும் தமிழின் மீதான அக்கறை பெருமை கொள்ளாது.

  ஒரு மொழி செம்மொழி ஆவதும் செம்மொழி மாநாடு நடத்துவதும் மாத்திரம் தமிழின் பெருமை மீட்கப்படாது.வீடுகளிலும் பொதுவிடங்களிலும் அதன் கௌரவமும் பயன்பாடும் மீட்கப் படவேண்டும்.

  இது தனிமனிதனில் தொடங்கி தலைவன் வரைக்கும் ஏற்படவேண்டிய மாறுதல்.

  ஒரு மொழியை வளர்க்க யாரும் தேவையில்லை. அதை அழிக்க நாம் போதும்.

 1. vasan said...:

  ஒரு ம‌ரபின் பெருமையைச் சிதைத்தால் ம‌ட்டுமே புதிய‌ வ‌ழக்க‌த்தை ஊன்ற‌ முடியும். ம‌லைக்காடுக‌ளை அழித்து, ம‌ண்ணைச் ச‌ரிக்காம‌ல் தேயிலையை ப‌யிரிட்டிருக்க‌ முடியாதுதானே?
  இன்று ம‌லைச்ச‌ரிவுக‌ள் ந‌ட‌ப்ப‌த‌ன் மூல‌ம் அவைதான். அத் போல‌வே, அடிமை நாட்டில் ந‌ம் மொழியை அழித்து ஆங்கில‌ தேயிலையை ந‌ட்ட‌‌ன‌ர். அவ‌ர்க‌ள் போன‌பின்பும் அதையே வ‌ள‌ர்த்துக் கொண்டு, ந‌ம் ம‌ண்ணின் ம‌ர‌ங்க‌ளை (மொழியை) புற‌க்க‌ணித்தே வ‌ருகிறோம். இன‌ம் காக்க‌ மொழிதான் ஆதிமூல‌ம். உல‌கிலுள்ள எல்லா முக‌ம‌திய‌ மக்க‌ளையும், அவ‌ர்க‌ளின் மொழி இணைத்து காக்கிற‌து. இரானிய‌ ஹ‌மீது, ம‌ல‌யாள முக‌ம‌துட‌ன் தாராளமாய் க‌தைக்க‌ முடியும். ந‌மக்கோ இல‌ங்கை த‌மிழ‌னிட‌ம் கூட‌ இய‌ல்பாய் பேசவிய‌லாது.

 1. kannan said...:

  அவசியமான ஒரு தலைப்பு. நமது சாபக்கேடு, "தமிழ் தமிழ்" என்று மேடையில் முழங்குவோர் கூட சரியான தமிழை பேசுவதில்லை. நாங்கள் வாழ்வது வெளிநாடு. குழந்தைகள் தமிழை பள்ளியில் கற்கவில்லை. இருப்பினும், தமிழைப்பற்றி அதிகம் பேசி அவர்களது மனதில் தமிழ் ஒரு சிறந்த மொழி என்ற ஒரு எண்ணத்தை ஏற்ப்படுதிக்கொண்டு இருக்கிறேன். எனது மகள் தொலைக்காட்சியில் வரும் தமிழ் எழுத்துக்களை தன்னார்வம் கொண்டு படிக்கிறாள். நல்ல கருத்தாழம் மிக்க பழைய தமிழ் திரை இசை பாடல்களின் அர்த்தங்களை அறிந்து தமிழின் இனிமையை அறிய முற்படுகிறாள் . இந்த முயற்சி வரவேற்க தக்கதல்லவா? பட்டுக்கோட்டை "திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று பாடியது போல, தமிழர்களாய் பார்த்து தமிழுக்கு அழகு சேர்க்க வில்லை என்றால், தமிழில் நிலையும், தமிழ் விரும்பிகளாகிய நமது நிலையும் கவலைக்குரியதுதான்.

  நன்றி நிலாமகள்...

 1. வல்லது வாழும் நிலா!

  மாற்றங்களை அனுசரித்து போகும் வரை எதற்கும் இறப்பில்லை.

  தமிழ் ஏடுகளில் இருந்து தாள் கண்டுபிடிக்கப் பட்ட போது தாளுக்கு மாறி,இப்போது கணணியிலும் கொலு வீற்றிருக்கிறதே!

  காலம் சிறு வட்டத்தில் இருந்து தமிழையும் தமிழனையும் உலகளாவ எடுத்துச் சென்றிருக்கிறது.

  புதிய மண்!புதிய முளை!!

  வல்லது வாழும்!

 1. இதனைத் தான் ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என புலம்பினானா, பாரதி?

 1. வல்லான் வகுத்ததே வாய்க்கால்.அவசியமான ஒரு தலைப்பு. நமது சாபக்கேடு,

 1. மொழியைக் காக்க வேண்டும்.. அதேபோல தமிழ் பேசும்.. தமிழ் வளர்த்த மனிதரிடையே சாதி, மதம் பேசி வெறுப்பு வளர்க்கும் போக்கும் களையப்பட வேண்டும்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar