நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

தொடர்பு எல்லைக்கு வெளியே...

Tuesday, 28 September 2010
உன் ஊருக்கு அரை மணிக்கொரு பேருந்து...
உன் வீட்டில் ஆளுக்கொரு கைபேசி ...
தொலைபேசியும் உண்டு தொடர்புக்கு...
சமீபமாய் மடிக்கணினியும் வைத்திருக்கின்றனர் உனது பிள்ளைகள்...
எல்லாமிருந்தும்
தொடர்பு எல்லைக்கு அப்பால் எப்போதும் நீ...
நெருங்க விடாமல் அடைகாக்கிறாய் உன் நேசத்தை ...
அலட்சியமும் உதாசினமும் துளைத்தெடுக்கும் அம்பாய் ...
உன்னால் நிராகரிக்கப்பட்ட
எனதன்பின் உதிரம்
நம்மிடையேயான விரிசலில்
கசிந்து வழிகிறது
உச்சிவேளை வெயிற்சூட்டால்
தகித்துக் கிடக்கும் சாலைப் பரப்பாய் மனசு...
பொங்கிப் பெருகும் கண்ணீர்
கொதிப்பேறிக் காய்கிறது சடுதியில்
தன்மானக் காய்ச்சல் மிகுந்து
கொப்புளித்துப் பரிதவிக்கிறது
உடம்போடு உயிரும்...
நினைவுப் பானையில் புரண்டெழுந்து
வெந்து தணிகிறது
அறுந்து கிடக்கும் மின்கம்பியாய்
ஆகிப் போன
கடந்த காலத்துப் பிரியங்களின் ஊர்வலம்.
அறவியலா அலைப்புறளில் நம் தொப்புள் கொடி உறவு...
துவண்டாலும் துளிர்க்குமொரு காலமென
நம்பிக்கையில் நகர்கிறது நாட்கள்...

29 கருத்துரைகள்:

 1. ஒதுக்கப்பட்டதன் கசப்பை உங்கள் கவிதை சொல்லவிட்டதை அந்தப் பிஞ்சின் கண்கள் சொல்லிக் கசியவைக்கிறது சொல்லவியலா உளைச்சலை.நெகிழ்ச்சி நிலாமகள்.

 1. Vel Kannan said...:

  படித்தவுடன் (படம்)பார்த்தவுடன் .. வலிக்கிறது நிலா மகள். தலைப்பில் சொன்னது போல் தொடர்பு எல்லைக்கு வெளியே ... சென்றுவிடலாம் போலிருக்கிறது.

 1. vasan said...:

  ம‌ர‌ண‌த்தை விட‌ கொடூர‌மான‌து, புற‌க்க‌ணிப்பு. தொட‌ர்பு எல்லைக்க‌ப்பால் இருந்தால், அது கூட‌ இதை விட‌, ஒருவ‌கை ஆறுத‌ல் தானோ?

 1. வலி மிகுந்த கவிதை.

 1. @சுந்தர்ஜி...
  'ஒதுக்கப்பட்டதன் கசப்பை கவிதை சொல்லவிட்டதை...'

  கவிதையை திருத்தியிருக்கிறேன். இப்போது பரவாயில்லையா... பகிர்வுக்கு நன்றி ஜி!

 1. @வேல் கண்ணன்...
  புறக்கணிப்பின் உயிர்வலியை அனுபவிப்பவர்கள் முதியோர் இல்லங்களிலும், அநாதை இல்லங்களிலும் மட்டுமல்ல...
  சமயங்களில் அருகிருக்கும் உறவுகளிலும் காணக்கிடைக்கிறார்களே... என்ன செய்வது வேல் கண்ணன்?

 1. @வாசன்...
  முதல் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி ஐயா!

 1. @வாசன்...
  கனன்று எரிக்கும் பிரிவின் கொடுந்துயர் சமயங்களில் நம்மை நாமே புடமிட்டுக் கொள்ளவும் ஏதுவாகி விடுகிறதோ...

 1. @கமலேஷ்...
  வாங்க கமலேஷ்... நலமா...?!

 1. ஹேமா said...:

  படமே கவிதையாய் கண்களுக்குள் நிறைந்திருக்கும் வார்த்தைகள் மௌனமாய் பேசுகிறதே நிலா !

 1. @ஹேமா...
  வழக்கமாய் பதிவிற்கு மணிக்கணக்கில் image -ல் படம் தேடுவேன். சடுதியில் கிடைத்தது இப்பதிவுக்கு! எல்லோரையும் நெகிழ்த்தி விட்டது அந்த பாப்பாவின் ஏக்கம் நிறைந்த விழிகள்!! நன்றி தோழி... பகிர்தலால் பாதியாகிறது வலி.

 1. நிலா மகள்.... முதன்முறையாய் உங்கள் கவிதைப் புசிக்கிறேன். இதயத்தின் வலி இடம்மாறி கண்ணீராய் கொப்பளிக்கிறது. பிரியம் மிகும் வேளையில் பிரிய நேர்ந்த உறவு தரும் வேதனை......, வார்த்தைகளில்லை.
  தங்களின் வருகைக்கு நன்றி... தொடருங்கள்...

 1. ஹையோ நான் சொன்ன அர்த்தம் அதுவல்ல.எல்லாக் கவிதைகளிலும் எழுதாது நிரப்ப் வெற்றிடமுண்டு.அதைத்தான் சொன்னேனே தவிர பொருட்குற்றமோ சொற்குற்றமோ நான் காணவில்லை நிலாமகள்.தேர்ந்த கவிஞர் நீங்கள்.
  எப்படியாயினும் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டமைக்கு வருந்துகிறேன்.

  பழுக்கக் காய்ந்த இரும்பாய் தகிக்கிறது புறக்கணிப்பின் அனல் இப்போது.

 1. நினைவுப் பானையில் புரண்டெழுந்து
  வெந்து தணிகிறது
  கவிதை முழுமையுமே இந்த வெப்பம் அனலடிக்கிறது..உயிர்மூச்சாய்.

 1. நல்லா இருக்குங்க.

 1. இப்பவும் மன்னிப்பைக் கோர வேண்டியது நான்தான் ஜி... எல்லையற்ற இவ்வாழ்வில் தங்கள் பாதங்களை நெருடியவையும், நெகிழ்த்தியவையும் ஏராளமாயிருக்கும். நீங்கள் அமைக்கும் கவிதைப் பாட்டையை பற்றித்தொடரும் சிற்றெறும்பு நாங்கள் . சிற்பியின் செதுக்கலாய் தான் தங்கள் வார்த்தைகளைப் பார்க்கிறேன். தங்கள் கரங்கள் பூச்சொரிந்த போது புளங்ககித்ததை மறப்பேனா நான்?!பற் சீரமைப்பு செய்த பெண்ணாய் மாறிவிட்டதே இப்போது கவிதை...! மகிழ்வோம் நாம்!!

 1. @தமிழ்க் காதலன்...
  முதல் வருகைக்கும், நெகிழ்வான அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தோழர்.

 1. @ரிஷபன்...
  உணர்தலுடனான ஒத்தட வார்த்தைகளால் காய்கிறது கசிதல்.

 1. @செல்வராஜ் ஜெகதீசன்...
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...

 1. இவ்வார கல்கி (10-10-2010) இதழில் உங்கள் கவிதை வெளிவந்திருப்பதை
  அறிவீர்கள் என்று நினைக்கிறேன். (வாழ்த்துக்களும்).

 1. @செல்வராஜ் ஜெகதீசன்
  நன்றி ஐயா... தகவலுக்கும், வாழ்த்துக்கும்...

 1. அருமைங்க.. திருகலற்ற வார்த்தைகள்..
  ஒரு நிராகரிப்பு (அ) புறக்கணிப்பின் வலி தெரிகிறது பிஞ்சின் கண்களில்.. வணக்கங்களும் வாழ்த்துகளும்..!

 1. //எனதன்பின் உதிரம்//

  ;)

  nice.

 1. வினோ said...:

  / நெருங்க விடாமல் அடைகாக்கிறாய் உன் நேசத்தை ... /

  மனதை சிலையக்கிய வரி...

 1. @சிவாஜி சங்கர்...
  புரிதலுக்கு நன்றி சிவாஜி!

 1. @நர்சிம்...
  வாங்க நர்சிம் ! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

 1. @வினோ...
  வாங்க வினோ... ! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

 1. Harani said...:

  இரண்டு வரிகளில் நிகழ்ந்திருக்கிற அற்புதம் இது. பலரின் வாழ்க்கை இன்னும் தொடர்பிற்கு வெளியே தொலைந்துபோயே விட்டது நிலாமகள். படைப்பாளிகள்தான் அதனைப் பொறுப்புடன் வெளிக்கொணரும் கடப்பாட்டில் இருக்கிறார்கள். பொறுப்பும்கூட. கண்களில் உங்கள் கவிதைவரிகளைச் சொட்டவிடும் அழகாக தேர்வு செய்துள்ள படம். நெகிழவைக்கிறது உண்மையும் உண்மையும்.

 1. @Harani...
  தங்கள் கருத்துரை பெருமூச்சையும், மன உறுதியையும் ஒருங்கே ஏற்படுத்த வல்லதாய்... மிக்க நன்றி ஐயா...!!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar