நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

தும்பைப் பூ சட்டை

Saturday, 25 September 2010
பனித்துளி தாங்கிய பூக்களைப் போல் காதல் தாங்கிய மனம் பேரழகாகிறது. அதனால்தானோ கவியெழுதப் பழகிய பெரும்பாலோர் தத்தமது அனுபவக் காதலை தொகுப்பாக்கத் தவறுவது இல்லை. அவரவர் கைப்பக்குவத்துக்குப் பிரத்யேக ருசி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நமது இன்பங்களின் சாவியாகவும், சில துன்பங்களின் பூட்டாகவும் காதலே காரணமாவது வியப்புக்குரியது.


அம்மன் திருவிழாக்களில் முறையுள்ளவர்கள் மேல், மஞ்சள் நீரூற்றி விளையாடுவது கிராமத்துக் காதலுக்கு அரிச்சுவடி. திருவிழாவற்ற நேரத்தில் மனம் கவர்ந்தவர் கவனம் கவர, கண்ணில் பட்ட நாவற்பழத்தை விட்டெறிகிறாள் ஒருத்தி. அம்மாவிடம், சகோதரியிடம் அரட்டி உருட்டி வெளுத்துப் போட்ட தும்பைப்பூ சட்டை கறையாகிப் போனது. கோபம் வரவேண்டிய இடத்தில் குதூகலம். வீட்டின் புறக்கடையில் விரிசல் விட்டு, உபயோகமற்றுக் கிடக்கும் ஓட்டைப்பானையில் அவளின் கண்சிமிட்டலோடு, கசக்கிச் சுருட்டித் திணித்து நேரம் கிடைத்த போதெல்லாம் எடுத்துப் பார்த்து நெஞ்சு நெகிழ்கிறானவன். எதற்கும் உதவாத ஓட்டைப் பானையும் வாழ்கிறது ஒரு மனதுக்கினிய நினைவு பொத்தி...! காதலின் மாயையை என்ன சொல்ல...?!

பனியொத்த குளிர்ச்சியும், கனமற்ற வார்த்தைகளும், துக்கத்தில் அவனையே மூழ்கடிக்கும் கனத்த மெளனமுமாயிருக்கிறாளவள். எதற்கும் ஒரு மாற்று இருந்து விடுகிறது. அவள் வராத நாட்களில் அவனது கொஞ்சல், மடியில் கிடக்கும் கொன்னைப் பூக்களோடு.

ஊர் உலக நடப்பு, கள்ளச் சாராயம், சூதாட்டம், மலரும் நினைவுகள், ஒடுக்கப் பட்டோர் அவலம், தாய்மையின் தெய்வீகம் போன்றவையும் குறுக்கிழையாய் நெய்யப் பட்டுள்ளது இந்தத் தும்பைப் பூச்சட்டையில்!

குறிகேட்கும் மூடத் தனம் பற்றிய நையாண்டி ஒரு கவிதையில்...

‘கோழிதல கடிச்சி

ஆயிரம் ரூவா தட்சணை வாங்கி

... .... இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம்

இல்லேன்னா இதேப் போல வர்றண்டா...'

கிராமத்து திருவிழாக்களில் புராணக் கூத்து தொலைந்து, சினிமாப் பாடல் கூத்து களைகட்டுவதை ஒரு கவிதையில் சாடுகிறார்.

சூதாட்டத்தின் அவலம் சுள்ளென்று உறைக்கும் படி ஒரு கவிதை...

‘யார் வீட்டுத் திண்ணையிலோ

அப்பா உருட்டும் தாயத்தில்

நெளிந்து கிடக்கும்

எங்கள் பசி.'

மலம் அள்ளுபவர்களுக்குப் பரிந்து பேசுமிடங்கள் இரண்டு...

‘என்னென்னவோ உருண்டோடும்

சாக்கடையில் மூழ்கி

அதன் அடைப்பை எடுக்க

யப்பா... இன்னா வாங்கினே என ஓடிவந்து காலைக்கட்டி

ஏக்கமுடன் கேட்கும் குழந்தையின் முகமொன்றே

போதுமானதாயிருக்கு...'

ஆம்... அவர்களுக்கும் குடும்பம், குழந்தையிருக்கிறதே... குழந்தைகள் எங்கும் குழந்தைகள் தானே... பரிவு சுரக்கிறது படிக்கும் நம் நெஞ்சில்.

தனது சிறுவயது விளையாட்டுப் பொழுதுகள் வீடு தாண்டிய வயல்வெளியும் பிணைந்திருந்ததை பரவசமாய் அசை போட்டு,

‘இனி

எவருக்கும் கிடைக்கப் போவதில்லை

வயலெல்லாம் வீடு...'

எனப் பெருமூச்செறிகிறார். குழந்தைகள் விளையாட்டு உலகம் இன்று நான்கு சுவற்றுக்குள் கம்ப்யூட்டரும் டி.வி.யுமாகி விட்டது பரிதாபம்.

இயற்கை பற்றிய அழகிய கற்பனைக் கவிதையொன்றுள்ளது. அதற்கே தகும் நாம் தரும் நூலுக்கான விலை.

‘காற்று இடறி

கவிழ்த்து விட்டது பனிமது நிரம்பிய

மலர்க்கோப்பை

குனிந்து அள்ளுமுன்

குடித்தே விட்டன புற்கள்.'மனித இயல்பு பற்றிய எள்ளல் ஒரு கவிதையில்...

‘ஆட்டு மந்தை ஓட்டிப் போகையில்

மூத்திரக் கவிச்சி அடிப்பதாய்

ஒதுங்கி நின்றவர்கள்தான்

விருந்தின் போது

ஆட்டின் உடம்பை

நக்கி நக்கித் தின்றார்கள்.'வயலில் அறுவடையான நெற்கட்டை சுமந்து வருகிறாளொரு ஏழைத் தாய்.குத்திய முள்ளின் வலிச் சுமையோடும் களம் சேர்ந்தாள். களத்து நிழலில் பழம்புடவைத் தூளியில் பசித்தழுகிறது குழந்தை. வாரியெடுத்து பசியாற்றி அமர, காலில் குத்திய கருவேல முள்ளை ஊக்கால் நிரடி, முனங்கியபடி எடுக்கிறாள். கவிஞர் கேட்கிறார் தன் கவிதையில்...

‘நீ அம்மாவா... சாமியா...?!

ஆம். தன்னலம் கருதாத தாய்மைதான் வையகம் தழைக்க அடிநாதம்!

விடியும் பொழுதெல்லாம் வயது கூடுகிறது நமக்கு. விட்டுப்போகவும், எடுத்துப் போகவும் ஏதுமற்ற கவிமனம் நட்புக்கும் காதலுக்கும் தான் தவிக்கிறது. மரணம் கண்டு மனிதர்கட்கு நடுக்கம்தான். இவரோ...' காதலியின் மென்மையான அணைப்பைப் போல மரணத்தின் தழுவல்' எனச் சொல்லுகையில், கைகூடிய காதல் தரும் மனநிறைவு, சாவையும் சந்தோஷமாக வரவேற்கும் பக்குவம் தருமெனப் புரிகிறது. தொகுப்பின் பெரும்பாலான பக்கங்களில் நிறைந்துள்ள எழுத்துக்களற்ற வெற்றிடங்களை, நம் கட்புலனுக்கெட்டாத காதல் நிரப்பி நிற்கிறது எழிலுடன்...!

வகைப்பாடு: கவிதைத்தொகுப்பு

படைப்பு : த.வே. விக்ரமாதித்யன்
வெளியீடு : எழிலரசி பதிப்பகம்
8.கிழக்கு மாட வீதி,
திருவத்திபுரம், செய்யாறு-604 407.
விலை : ரூ.35/-

6 கருத்துரைகள்:

 1. இந்த விக்ரமாதித்யனை ஒரு கூட்டத்தில் செய்யாறில் பார்த்தேன்.எழுத்துப் போலவே வாழும் அபூர்வமான எளிய மனிதர்.இவரின் கவிதைகளில் நீங்கள் சிலாகித்திருக்கும் வரிகள் அனைத்து அற்புதம்.எல்லோரும் அறியாத எத்தனை எத்தனை பேர் இப்படி நட்சத்திர எளிமையுடன் வாழ்ந்து மணத்து மறைகிறார்கள்? பாராட்டுக்கள் நிலாமகள்.

 1. கவிதையாகவே விமர்சனமும். முதல் மூன்று பாராக்களில் அப்படியே லயித்துப் போய் விட்டேன்.
  கவிதைகள் - எடுத்துச் சொல்லப்பட்டவை.. கவிஞரின் ஆற்றலைக் காட்டுகிறது.. அழுத்தமாகவே.

 1. வெகு தொலைவில் இருப்பதால் தான் சில நட்சத்திரங்கள் மினுங்கலாய் தெரிகிறதாமே... நெருங்கிப் பார்த்தால் சூரியனையும் விஞ்சும் ஒளியுடையவை இருக்கிறதாம்... சொல்கிறார்கள். அப்படியானவர்கள் வீச்சை அடையும்படியான தேடலும் கண்டடைதலும் சித்திக்கட்டும் நமக்கு. உத்வேகமளிக்கும் பாராட்டுக்கு நெகிழ்கிறேன் ஜி!

 1. @ரிஷபன்...
  சிறு செடியின் வளர்ச்சிக்கு போடப்படும் ஊட்டமாய் தங்கள் பின்னுட்டங்களின் ஊக்குவிப்பு... நன்றி சகோ...

 1. ஹேமா said...:

  நிலா...உங்கள் எழுத்துக்கோர்வை ரசிக்க,பிரமிக்க வைக்கிறது.விடாமல் வாசிக்க வைக்கும் விமர்சனம்.

 1. உற்சாகமளிக்கிறது தங்கள் பாராட்டு. நன்றி தோழி!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar