நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மகிழ்தலும் மகிழ்வித்தலும்

Thursday, 15 July 2010
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும், விருந்துகளும் கேளிக்கைகளும் நம் சலிப்பூட்டும் தினசரி நடவடிக்கைகளின் மாற்றாக நம்மிடையே அமைந்துள்ளன.

மகிழ்தலும் மகிழ்வித்தலுமே கொண்டாட்டங்களின் அடிப்படை. சமீப காலமாக புத்தாண்டு, தீபாவளி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தேர்தலில் வெற்றியடைந்த கட்சிக் கொண்டாட்டங்கள் போல மனம் போனவாறு ஆடம்பர ஆர்பாட்டங்களோடு, அடுத்தவர்களின் அவஸ்தைகளை பொருட்படுத்தாது, யாருக்கும் எந்தப் பயனுமின்றி, வெற்றுப் பொழுது போக்காக விரய செலவாக கொண்டாடப்படுகின்றன.

இந்தப் போக்கைக் கைவிட்டு, நம்மிலும் எளியோர் வறியோர்க்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதாய் நம் கொண்டாட்டங்களின் செலவுதிட்டத்தை அமைத்துக் கொண்டால் நன்று.

உபதேசிக்கும் முன் உதாரணமாய் வாழ்தல் அவசியம் அல்லவா... எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள். திருமண நாள், நினைவு நாள் போன்ற நாட்களில் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப் படும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கும், உடல் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கும் (மெய்ப்புல அறைகூவலர்) நேரில் சென்று, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய எங்கள் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப் பட்ட தொகையில் பெரும்பகுதியை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.(எனவே இப்பதிவை இட அருகதை இருப்பதாகக் கொள்ளலாம்)

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த எங்கள் மகள், உற்சாகப் படுத்தலுக்காக ஏதேனும் வாங்கித் தரும் உத்தேசத்தில் என்ன வேண்டுமெனக் கேட்க, 3 மாதத்துக்கு முன் சென்ற அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவும், அவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் ஏதேனும் வாங்கித் தந்தால் போதும் என்று சொன்ன போது ஈன்ற பொழுதினும் பெரு உவப்பாய் இருந்தது உண்மை. பதினோராம் வகுப்புக்காக பள்ளி திறக்கும் முன் அப்பாவும் பெண்ணுமாக கடலூர் சென்று, விடுதியிலிருந்த 25 குழந்தைகளுக்கு மதிய உணவும், திறனறி ஊக்குவிப்பாக படம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ வேண்டிய உபகரணங்களும் வழங்கி, நாள் முழுதும் அவர்களுடன் பொழுதைக் கழித்து உற்சாகம் நிரம்ப வீடு திரும்பினர்.

உடல் மன உளைச்சல் நீங்க இறைவனை வேண்டி பிராத்தனை செலுத்துவது காலங்காலமாக நம்மிடையே நிலவிவரும் பழக்கம். என் மாமியார் தன் கண்பார்வைக் குறைவினை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது செலுத்திய பிரார்த்தனை என்ன தெரியுமா? பார்வையற்ற, ஊனமுற்ற குழந்தைகள் பள்ளிகளுக்கு தன் சேமிப்பிலிருந்து பெருந்தொகையை நன்கொடையாக அளித்தது தான்! மன நிறைவும் தெய்வ கடாட்சமும் பரிபூரணமாகக் கிடைத்தது!

மாதந்தோறும் நம் உறவினர், நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர் அல்லது நம் குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் வந்து கொண்டுதான் உள்ளன.நேரில் சென்று வாழ்த்தவும் பரிசளிக்கவும் எப்போதும் முடியும் என்று சொல்ல முடியாது. ஒரு போன் செய்து குடும்பத்தோடு அரை மணி(குறைந்த பட்சம்) அரட்டையுடன் முடிப்பதும் உண்டு. இதற்கு மாற்றாய் அவரவர்க்கு அருகாமையிலுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு இயன்றதொகை அளித்து மகிழலாம். அதற்கும் நேரமற்றவர்கள் அன்றைய பொழுதில் எதிர்ப்படும் எளியோர்க்கோ வயோதிகருக்கோ தன்னாலியன்ற உதவிகளை செய்து அதன் பலனை கொண்டாட்டக்காரருக்கு அர்ப்பணிக்கலாம். இந்த ஜுலை மாதம் எங்கள் மகளோடு, ஜீலையில் பிறந்த உறவுக் குழந்தைகள் பிறந்த நாட்களை முன்னிட்டு இத்தகைய பள்ளிக்குச் சென்று, குழந்தைகளுடன் கொண்டாடினோம். பட்டும் ஆபரணமும் பட்டாசும் ஊர்சுற்றலும் தாண்டிய பிரம்மாண்டமான உற்சாகத்தை, ஊக்கத்தை அளிக்கவல்லதாய் இருந்தது அந்நிகழ்வு.9 கருத்துரைகள்:

 1. good attitude, உணவு இல்லாதவங்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து அவர்கள் பசியாற வைப்பது மிகப்பெரும் ஆனந்தம் சகோ..

  முடிவு வரிகள் சரியே...!

 1. ரொம்ப சந்தோசம் சகோதரரே..
  உடனுக்குடன் படித்து , பின்னூட்டம் அளித்து உற்சாகப் படுத்துவதற்கு நன்றி!

 1. மனம் நிறைந்து வழிந்து பயனடைந்தோர் பக்கம் நின்று உங்கள் குடும்பத்தினரை வணங்குகிறேன்.

  வேறெங்கிருந்து வந்திருக்கப் போகிறது உங்கள் மகளுக்கு இந்த நற்பண்பு உங்கள் இருவரையும் தவிர்த்து?

  இப்போது உங்கள் பக்கத்தின் நிறம் அழகாக அமைந்துவிட்டது-படிக்க இடையூறின்றி.

 1. கடற்கரையின் சிறு மணல் துகள் நாங்கள் ... கடக்க வேண்டியதும் கற்க வேண்டியதும் ஏராளம் ஏராளம் ...
  நெகிழ்வும் மகிழ்வும் அளித்தன தங்கள் வார்த்தைகள்... எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி ஜி!
  வலைதள அமைப்பின் முழு பெருமையும் அருமை மகன் சிபிகுமாரை சாரும்.

 1. Priya said...:

  படிக்கும்போதே மன நிறைவை கொடுத்தது. முதலில் உங்க மகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதா, அல்லது அவரை பெற்ற உங்க இருவருக்குமா... இல்லை உங்க மாமியாருக்கா?,,
  மொத்த குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்.

  நேற்றுதான், வரப்போகும் எனது பிறந்த நாளைக்கு இப்படி ஏதாவது செய்ய வேண்டுமென்று என்னவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.இன்று உங்களின் பதிவை படித்த பின்பு நிச்சயமா செய்தாக வேண்டுமென தோன்றுகிறது.

 1. Priya said...:

  'நிலா மகள்'... பெயர் அழகாக இருக்கிற‌து!

 1. முதல் வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கும் எனது மகிழ்வும் நன்றியும் பிரியா...
  அடி மண்ணில் காய்ந்து கிடக்கும் அருகம் வேர் , சிறு மழைக்கும் சிலிர்த்துக் கிளம்பிடுமே தளிராக...
  அதுபோல, ஏதேனும் செய்யலாமென்ற தங்கள் எண்ணத்தை மேம்படுத்துமாறு இப் பதிவின் வாசிப்பில் ஏதேனும் ஒரு கணம் துண்டியிருந்தால் ,
  அது போற்றுதலுக்குரியது... உங்க வலைதளம் பார்த்தேன்... பெரிய ஆள்தான்... ம்ம்ம் ... சந்தோசம்!

 1. மனப்பூர்வமாய் வழிமொழிகிறேன்.. ஏனெனில் அதில் கிட்டும் ஆனந்தம் எந்தக் குறைபாடும் இல்லாதது..

 1. மிக்க நன்றி சகோதரரே... தொடர்ந்த பினுட்டங்களினால் உற்சாகமடைகிறேன்

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar