நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

எரியூட்டிய இரவு

Sunday, 11 July 2010

வீடு முழுக்க சிதறிக் கிடந்த
உறவுக் கூட்டம்.
சொல்லவும் கேட்கவும்
தத்தம் செய்திகளோடு.

யார் யாரோ வந்து என்னென்னவோ பேச்சு...
எனக்கோ
கழுவி விட்ட வீட்டின் தரையாய்
வெறிச் என மனசு.

காதுகளின் வழி புத்தியில் தங்காத குரல்கள்
வீட்டின்
கட்புலன் மீறிய சூனியத்தை நிரப்பவியலாமல்
திறந்து கிடக்கும் வீடு வழியே
வீதி நிறைத்தது.

பேசியே ஆக வேண்டிய கட்டாயம்...
அலை-தொலை பேசிகளின்
ஓயாத விசாரிப்புக்கு.

எல்லோருக்கும் பசி.
நச்சரித்துத் திணித்தனர் எனக்கும்.
நெஞ்சடைத்தது.
மரத்திருந்த நாக்கில் ருசியேயில்லை
குரல்வளை இறுக மூடி, கண்களில் மழை.

சளசளப்பு அருகி
உறக்கப் பிடியில் ஒவ்வொருவராய்...

கனவுகளற்ற தூக்கத்துக்குக்
கடவுளை வேண்டித் திருநீறிட்டு
நான் தூங்கும் வரை தலைவருடும்
அம்மாவின் விரல்களுக்காய்
காத்திருக்கும் எனதுறக்கம்...

கனவில் வருவதற்காய்
காத்திருக்கிறாளம்மா மயானத்தில்...

9 கருத்துரைகள்:

 1. கவிதை காட்சிகளாக விரிகிறது

  அதிலும் கழுவிவிட்ட வீட்டின் தரையாய் வெறிச்சென்ற மனசு...

  சூப்பர்ப் ரைட்டிங்..

 1. பாலா said...:

  எதைக்கொண்டும் ஈடு செய்யமுடியா இழப்பு தொப்பூள் கொடி வழி உதிரம் பாய்ச்சியவளினுடையது .
  லேசான எழுத்துக்கள் ஆனால் விஷயம் கனம்.

 1. உங்கள் தளத்தை இப்போதுதான் பார்த்தேன்.எல்லாச் சோறுமே பதமாகத்தான் இருக்கின்றன பானையில். நிதானமாகப் படிக்க ஆசை.

  தளத்தின் வடிவமும் நிறமும் இன்னும் நெருங்கவேண்டும் போலத் தோன்றுகிறது.

 1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே !

 1. வணக்கம் ஜி! நலம் தானா? தலைமையாசிரியரைக் கண்ட வகுப்பறை போல் ஆனது மனசு. மிக்க மகிழ்ச்சி.

 1. கனத்துப் போனது மனசு..

 1. வாங்க வாங்க! வணக்கம்... நலம் தானா... முதல் வருகைக்கு நன்றி!

 1. /திறந்து கிடக்கும் வீடு வழியே
  வீதி நிறைத்தது./

  ஆஹா!!

 1. manichudar said...:

  அகலாத, அணுகாத உறவின் வழியாக அம்மாவை நான் காண்பது பிரமிப்பாய் . வாழ்வின் போராட்டங்களுக்கு முகம் கொடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்ட போராளியாகவே என்னுள் நிலைத்திருக்கிறார் அம்மா .அம்மாவின் அன்பில் தோய்ந்ததை விட அறிவில் நிலைத்திருந்த கணங்களே அதிகம் , நன்றி நிலாமகள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar