கடந்த டிசம்பர் கடைசி வாரத் தொடக்கம். வார இறுதியில் துணைவரும் நானும் நெல்லூர் சென்று மகனுடன் புத்தாண்டை கொண்டாட முடிவு செய்திருந்தோம். புறப்படும் நாள் நெருங்க நெருங்க டிசம்பர் 31 அன்று ஆந்திராவில் உருவாக இருக்கும் புயல் நாகப்பட்டினத்தில் கரைகடக்க இருப்பதாக வேலையிடத்தில் கேள்விப்பட்டு வந்து சொன்னார். (எங்க வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாததால் தொலைக்காட்சி நீள் உறக்கத்திலிருக்கிறது)
நெல்லூரிலிருந்து மகன் தொலைபேசினான் வழக்கம் போல். புத்தாண்டுக்கு ஒரு நாள் தான் அவனது கல்வி நிறுவனத்தில் விடுமுறையெனினும், பெற்றோர் வந்தால் ஓரிரு நாள் முன்னதாக வீட்டுக்கு அனுப்புவார்களாம்; அதனால் ‘நீங்க மட்டும் வந்து கூப்பிட்டுப் போங்கப்பா' என்று. இவன் பிறந்ததும் ஒரு ஆங்கிலப் புத்தாண்டில் தான் (1996) என்பதால் எங்கள் கொண்டாட்ட கிழமைகளில் புத்தாண்டுக்கு சிறப்பிடம். (அவனுக்காக சிறப்புப் பதிவு எழுத மகள் துணையுடன் கணினியிலிருந்து சேகரித்த அவன் தொடர்பான படங்கள் 'தானே' கூத்தில் தடம் பிரியாமல் இருக்கிறது)
தானே வந்து செல்லும் பிள்ளை, கூப்பிடவும் இவரும் உடனடியாக வேலையிடத்தில் விடுப்புக்கு ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பினார் வியாழன் இரவு (29.12.2011).
மகளுடன் இரவு மூன்று மணிவரை ஏதேதோ கதைகள் பேசிவிட்டு, உறக்கத்துக்கு ஆட்பட்டேன். படார், திடீர் என சப்தம் கலைத்தது தூக்கத்தை. விழித்தால் மின்சாரம் தடைபட்டிருந்தது. எழுந்து வெளிச்சமூட்ட சோம்பலுடன் படுத்திருந்த என்னை, திறந்திருக்கும் சாளரங்களின் கதவுகள் கிளப்பின. மணி மூன்றரை ஆகியிருந்தது.
உருவற்ற காற்று அனைத்தின் மீதேறி ஊழித் தாண்டவமாடத் தொடங்கியது. சத்தமின்றி தொட்டுச் செல்லும் தென்றலை மட்டுமே அறிந்த நாம், அதன் மதிப்பையறியவோ என்னவோ, பெரும் விசையுடன் சுழற்றியடித்தது. ‘விர் விர்' ரென்ற அதன் ஆங்கார ஒலி துரத்தியடித்தது செவிகளை.
நெய்வேலி மக்களுக்கொரு பழக்கம். எந்த வகை குடியிருப்பாயிருந்தாலும், சொந்த செலவில் அரசுக் குடியிருப்பு வீட்டை பெரிதுபடுத்திக் கொள்வார்கள். வேலையில் இருக்கும் வரை உபயோகித்துக் கொள்ளலாம். (‘போகும்போது' ‘எது'தான் கூட வரப்போகிறது?!) பெரும்பாலும் மேற்கூரையாக சிமெண்ட் ஷீட் அல்லது தகர ஷீட் இருக்கும் அந்த விஸ்தரிப்பில். காற்றின் பேயாட்டத்தில் சுவரோடு இணைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களோடு இந்த ஷீட்கள் பறக்கத் தொடங்கின. கொஞ்சநஞ்ச பிடிமானம் இருந்தவை ஆளுயரத்துக்கு எழும்பி தடால் தடாலென சுவற்றில் படிந்தன.
ஒரு ஐந்து ஐந்தரை மணிக்கு பயணத்தில் இருப்பவர் நிலையறிய அலைபேசியில் தொடர்பு கொண்டோம். சென்னையில் நெல்லூர் பேருந்து ஏறிவிட்டதாகவும், மழைமட்டும் வலுவாக பெய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். இங்கிருக்கும் நிலைமையை சொல்லி திரும்பி வரும்போது கவனமாக வரச் சொன்னோம்.
வெளிக்கிளம்பிய ஆதவனை மேகங்கள் மூடிமறைத்தாலும் விடிவிளக்கு போல் மங்கிய வெளிச்சம் மக்களுக்கு சு(சூ)ழலின் கனம் காட்டியது. புழுங்கித் தவித்த கோடைப் பொழுதுகளில் எத்தனை முறை இறைஞ்சியிருப்போம், சபித்திருப்போம் இம்மர இலைகளசைவை வேண்டி ... எல்லாவற்றுக்கும் பிராயச்சித்தம் போல் மரங்களெல்லாம் சுற்றிச் சுழன்றாடியது. அவற்றின் குழுநடன வேகத்தில் காற்றும் விசிலடித்தது.
இந்த மரங்களில் வசித்த பறவைகளெல்லாம் என்ன கதியாகும்...? மனசுக்குள் மத்தளமிட்டது கவலை.
‘வலியது வாழும்' என்ற கோட்பாடு பொய்த்துப் போனது புயலின்முன். பெரிய பெரிய மரங்கள் தன் கிளைகளை உதிர்த்து (கோடையில் இலையுதிர்ப்பது போல்) வேருடனான தன்னுறவை தக்கவைத்துக் கொள்ளப் போராடின. தோற்றவையெல்லாம் வேர் பெயர்த்து சாய்ந்தன. காற்றின் வேகத்தில் அவை வீழ்ந்த சுவர்களும் மேற்கூரைகளும் நடுநடுங்கிப் பிளந்தன. தரையிலிருந்து நான்கைந்தடி உயரமிருந்த தாவரங்கள் தப்பின. நிறைகள் குறையாகவும், குறைகள் நிறையாகவும் மாறிப்போன தருணமது.
மனிதர்கள் விஷயத்தில் இது நேரெதிரானது. பலமான கட்டிடத்தில் இருந்தவர்களும், தினசரி வாழ்வில் பஞ்சமில்லாதவர்களும் பாதுகாப்பாகவே இருந்தனர். எளிய மக்களும், யாதுமற்ற பராரிகளும் திண்டாடித் தெருவில் நின்றனர். அடுத்த வேளை உணவும் கேள்விக் குறியானது அவர்களுக்கு. சிலருக்கு அடுத்த அடி எடுத்து வைக்கவும் திசையற்று திகைத்து நின்றனர்.
வீட்டினருகே உள்ள பெருமாள் கோயிலில் வரவிருக்கும் வைகுண்ட ஏகாதசித் திருநாளுக்கு ஏற்பாடுகள் நடந்திருந்தன. சிறு வியாபாரிகள் தெருவோரம் இடம் பிடித்து தங்கத் தொடங்கியிருந்தனர். ஒரு பலூன் விற்கும் குடும்பம் வெகு பரிதாபம். பலூன் காரரின் மனைவிக்கு பிரசவமாகி ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும். மூத்த பெண் ஆறேழு வயதில். கோயில் வாசலில் இரவுத் தங்கலில் இருந்த அக்குடும்பம், புயலன்று கைப்பிள்ளையை இருக்கும் துணிகளை சுருட்டி பொத்திக் கொண்டு நின்ற காலில் நின்ற கோரம் பார்ப்பவர் மனதை உருக்க வல்லது. பல்லக்கு தூக்கவும், பல்லக்கில் போகவும், நின்று பார்க்கவுமாக பலதரப்பட்ட மனிதர்களை படைத்தபடியே தான் இருக்கிறது உலகியல். அக்குடும்பத்துக்கு அப்போதைய தேவையாக பழந்துணிகளும், சிறிது சோறும் தரமுடிந்த செளகர்யத்திலிருந்ததற்கு பெருமாளுக்கு நன்றியோடிருக்க வேண்டும்தான் நான்.
இயற்கை யாவர்க்கும் பாரபட்சமின்றி இருப்பது போல் புயலும் கடவுள் உறைவிடங்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லாக் கோயில்கள், மசூதிகள், சர்ச்கள் அனைத்திலும் நாற்பதிலிருந்து அறுபது வயதுடைய மரங்கள் இருந்தன. நிலக்கரிக்காக கிராமங்களை கையகப்படுத்தி நெய்வேலி நகரமாக கட்டமைத்தாலும், மரங்களை அப்படியே விட்டு வைத்திருந்தனர் நிர்வாகத்தினர். முந்தைய நிஷா, லைலா புயல்களைவிட பிரம்மாண்டமான ‘தானே' அம்மரங்களை ‘ஒருகை' பார்த்துவிட்டது.
வாசல் கதவின் இடைவெளி வழியே வீட்டினுள் வந்து நடுங்கி நின்றதொரு தவிட்டுக் குருவி. அடுப்படியிலிருந்த (எது எப்படியிருந்தாலும் நாமிருக்கும் இடம் அதுவல்லவா...!) என்னை அழைத்துக் காட்டினார் மாமியார். தொப்பலாக நனைந்து, சின்னஞ்சிறு மணிக்கண்களில் பயமும் பரிதவிப்புமாக அதன் கோலம் மனதைப் பிசைந்தது. தினம் தினம் வாசல் திண்ணையில் அரிசி தின்ற பழக்கத்தில் எங்களை அதற்குப் பரிச்சயமே. பாவம், பசியாயிருக்குமென கொஞ்சம் அரிசியள்ளி அதனருகே சென்று வைத்தேன். சற்று நகர்ந்து சென்ற அது, அரிசியை சட்டை செய்யாமல் மறுபடி கதவின் இடைவெளி வழியே வெளியே பறந்தது. அதன் பீதி என்னை யோசிக்க வைத்தது.
ஏன் பயந்து பறந்தது என்ற மனதைத் துளைத்த கேள்விக்கு சிறிது நேரத்தில் புத்தி பளிச்சென விடை சொன்னது . அக்குருவி நகர்ந்த திசையிலிருந்ததொரு கூண்டு. குழந்தைகளின் அன்புப் பரிசான காதல் சிட்டுக்கள் இருந்த கூடு அது. சிட்டுக்களற்ற அதை ஒரு ஞாபகார்த்தமாக வைத்திருந்தேன். அதனுள்ளோ ‘டாக்கிங் பேரட்' எனப்படும் பஞ்சவர்ணக் கிளி பொம்மையொன்றிருந்தது. அது, இறந்து போன எனது மாமனார் என் குழந்தைகளுக்கு (குழந்தைகளாயிருந்த போது) வாங்கித் தந்தது. அவரை நினைவூட்ட பலதும் உண்டு இது போல். காதல் சிட்டுக்கள் இருந்த காலத்திலேயே, அரிசி பொறுக்க உள்வரை வரும் குருவிகளை சினேகிக்க சிட்டுகளின் பேச்சுவார்த்தைகளைக் கேட்டு, அவசரமாய் வெளிப்பறந்து தமக்குள் கீச் மூச்செனப் பேசிக் கொள்ளும். எத்தகைய நெருக்கடியிலும் நுட்பமாக தன் சிற்றறிவைக் கொண்டு முடிவெடுக்கும் அதனை வியப்பதா... அதன் பேதமையை எண்ணி வருந்துவதா?!
புயல் நின்ற மதியத்திலிருந்து எங்கோ பதுங்கியிருந்த பறவைகள் உயர எழும்பிப் பறந்தபடி சேதாரங்களை கண்ணுற்றன. எந்த ‘நிவாரண'த்துக்கும் காத்திராமல், தத்தம் குடியிருப்புகளை சீரமைக்கத் துவங்கிவிட்டன. தம்மொழியில் ஏதேதோ கதைத்தபடி தம் உணவுத் தேடலைத் துவங்கிவிட்டன.
நெல்லூர் சென்று மகனைக் கூட்டிக் கொண்டு சென்னை வந்து, சென்னையிலிருந்து நெய்வேலிக்கு ஐந்து மணி நேரத்துக்குள் வரும் தூரத்தை, பன்னிரெண்டு மணி நேரம் சுற்றியடித்து சனிக் கிழமை (31.12.2011) அதிகாலை ஒருவழியாய் வந்து சேர்ந்தார்கள். தாம் கிளம்பிய போதிருந்த நெய்வேலி முற்றிலும் மாறிப்போனதை அதிர்வும் வருத்தமுமாக பார்த்தனர்.
மனிதர்கள் மட்டுமல்ல; ஊரும் கூட நேற்றிருந்தது இன்றில்லாமல் போகும் போல! ‘மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதன் மற்றொரு நிரூபணமல்லவா இது! ‘உலகம் நிலையாது; யாக்கை நிலையாது' என சொன்னவர் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஓரோர் சமயத்தில்.
விழுந்த மரக்கிளைகளூடே துருத்திக் கொண்டிருந்த சிறுசெடிகள் தம் நுனியில் புதுத் தளிர்களை துளிர்த்தன. தப்பிய செம்பருத்தி செடிகள் தம் மொக்குகளை மலர்வித்து வாழ்வின் மீதான பிடிப்பை உறுதிப் படுத்தின. முறிந்த கிளைகளிலிருந்த பசிய இலைகள் சருகாகி உதிரத் தொடங்கின.
ஆயிற்று... மின்சாரம் நம் வாழ்வை எத்துணை ஆக்கிரமித்திருக்கிறதென அது இல்லாத போது தானே தெரிகிறது. உயிர் போனால் கூட நிவாரணம் ‘எண்ணி' இருப்பவர்கள் ஆற்றியிருப்பார்கள் போல. தண்ணீர் இருப்பு இருந்தவர்கள் இரண்டொரு நாள் சமாளித்துக் கொண்டனர். துன்பத்திலும் இன்பம் காண்பது போல் காதைத் துளைக்கும் வீட்டு உபயோக மின்சாதனங்களின் ஒலி, மற்றும் கோயிலின் ரெக்கார்ட் (மார்கழி மாதமாச்சே... 'திருப்பள்ளி எழுச்சி'யில் திளைக்கும் குருக்களுக்கு வரும்படி போச்சு! ) கூச்சல் இல்லாமல் காதுகள் திருப்தியாய் இருந்தன. வயிற்றைப் பற்றியும், மனசைப்பற்றியும் அதற்கென்ன கவலை? சக மனிதர்களின் உபாதைகளைக் கேட்ட போது மட்டும் துக்கித்துக் கிடந்தது காது. கண்களின் துன்பம்தான் காணப் பொறாதிருந்தது.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பை தரிசிக்க சொற்பமானவர்களே வந்திருந்தனர்.உடைந்ததும் பறந்ததும் பக்தி சிரத்தையை ஓரம் கட்டி விட்டது போல. அலைந்து திரிந்து தண்ணீர் தேடி பகல் பொழுதில் பெரும்பாலானோர் பெருமாளை கண்டு கொண்டு சென்றனர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டது. போக்குவரத்து தடங்களும் முற்றிலும் தடைபட்டிருந்தன. அலைபேசியிலிருந்த பேட்டரி சார்ஜ் சேமிப்புக்காக, வரும் அழைப்புகளை மட்டுமே ஏற்றோம். புத்தாண்டுக்காக நினைவாக வாழ்த்திய நல்நெஞ்சங்களுடன் மகிழ்வைப் பகிர முடியாமல் போனது. செய்தித் தாள்கள், பத்திரிகைகள், தொலைகாட்சி நிலையங்கள் எல்லோரின் அறிதலும் கடலூர், விழுப்புரம், சிதம்பரம் மட்டுமேயானது. நெய்வேலி தொடர்பெல்லையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.
நகர நிர்வாகம், முதலில் எல்லாப் பகுதிகளுக்கும் தண்ணீர் விட்டது. வைகுண்ட ஏகாதசி புண்ணியம் கட்டிக் கொண்டதால், கோயில் மற்றும் தொடர்புடைய மின் கம்பங்கள் சீராக்கப் பட்டன. பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் அறுந்து விழுந்து சேதமடைந்திருந்ததால், எல்லா இடங்களிலும் மின் தொடர்பு தர ஆறேழு நாட்களாகின. வியாபார தலங்கள் முன்னணி சலுகை பெற்றன. பிறகு தொலை தொடர்புத் துறையினர் தம் வேலைகளைத் துவங்கினர்.
சுற்றுப் புற கிராம மக்கள், தம் நன்செய் புன்செய் நிலங்களின் சேதாரங்களால் வயிறெறிந்து கிடந்தனர். அவர்கள் கதவை சாத்திய இயற்கை, சாளரம் திறந்தது போல் நெய்வேலியில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் வேலையை ஏற்படுத்தித் தந்தது. எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை இலாபமென அவர்களும் படைபடையாய் கிளம்பி, வாய்க்கு வந்த தொகையை கூலியாக கேட்டு கிடைத்தைதை குதூகலமாக எடுத்துச் சென்றனர். எல்லா வீட்டு ஆண்களும் அரிவாள், கோடாரி பிடித்து வேலை செய்ய வைத்தது புயல். வீட்டு வாசலுக்காவது வழி ஏற்படுத்தும் போர்க்கால அவசரம்! குனியாத பெண்களும் குடம் தூக்கி நீர் பிடித்தனர்.
மரம் அறுக்கும் மரவாடிப் பெரும் இயந்திரங்களுக்கு மாற்றாய் கையடக்கமாய், பெட்ரோலில் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள் புதிது புதிதாக வாங்கப் பட்டு, பக்கத்து கிராமங்களிலிருந்து இரண்டு மூன்று பேர் கூட்டணியில் இருசக்கர வாகனத்தில் வரிகயிறு வகையறாவுடன் தெருத்தெருவாய் சுற்றத் தொடங்கினர். நெய்வேலியெங்கும் மரம் அறுக்கும் சப்தம் கேட்டபடியிருக்கிறது.
மின் கம்பங்களருகே இருந்த மரங்களை வருடாவருடம் ஒப்புரவாய் வெட்டியிருந்தால் இவ்வளவு கம்பங்கள் வீழ்ந்திருக்காது. வருடாந்திர ஒப்பந்த வேலையில் ஒப்புக்கு கழித்துச் சென்றவர்கள் இப்போது யோசிப்பார்களா? கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்! வயதான மரங்களை அவ்வப்போது கணக்கெடுத்து ஏலம் விட்டிருந்தால் அதுவும் ஒரு வருமானமாகியிருக்கும் நிர்வாகத்துக்கு. குடியிருப்பவர்கள் கிளை கழிக்கவும் தடை செய்திருந்த நிர்வாகம், பேரழிவின் விளிம்பில், மூன்று கோடி ரூபாய்க்கு வீழ்ந்த மரங்களை ஏலம் விட்டிருக்கிறது.
எத்தனை கோடி கொடுத்தாலும் இழந்ததை மீட்க முடியாது. பலாவும் முந்திரியும், நெல்லும் கரும்புமல்ல... வருடங்கள் பல ஆகும் மறுபடி மகசூல் பெற. நன்செய் விவசாயி ஆண்டுக்காண்டு மழை, வெள்ளம், புயலென வாரிக் கொடுத்துவிட்டு வயிற்றில் நெருப்போடு அலைவது போதாதென புன்செய் மரங்களையும் வாரிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இயற்கை. உலக மயமாக்கலில் எல்லோரும் கைகட்டி அலுவலக வேலை பார்த்தால் ஊதியம் மட்டுமே கிடைக்கும். விலைவாசி இன்னும் உச்சத்தில் ஏறிவிடும். வயிற்றுக்கு சோறிடுவதற்கு மாற்றாய் விட்டமின் மாத்திரைகளைத் தான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.
புயலென அறிந்து அன்பர் வெற்றிப் பேரொளி மின்னஞ்சலில் தந்த ஆறுதல் மொழிகள் இவை....
“தென்னகத்திற்கே மின்வெளிச்சம் கொடுக்கும் நெய்வேலியே இருளில் மூழ்கிக் கிடந்தது இயற்கையின் முரண்விளையாட்டன்றி வேறென்னவாம்? மனிதர்களின் மீதான கோபத்தை மரங்களின் மீது காட்டியிருக்கும் ‘தானே'வை என்னவென்று சொல்வது? இயற்கையைச் சார்ந்தும் மீறியும், இயங்குவதுதான் வாழ்க்கை . வாழ்வோம் ... வற்றா அன்புடன்”.
எப்போதோ படித்தது இப்போதும் நினைவில்-
வாழ்க்கை...
கொட்டும் மழையில் குவிந்த நீர்க்குமிழ்
வெட்டும் மரத்தில் விரிந்த மணப் பூ
மேலும் கீழுமாய் கீழும் மேலுமாய்
நாளும் சுற்றும் இராட்டினத் தொட்டில்
அறியாப் பிள்ளை ஆசை மிகுதியால்
தெரியாது ஊதிடும் சிறிய பலூன்
புரியா மனிதர் புவனக் காற்றில்
திறந்து வைத்த தைல பாட்டில்.
முடிந்தால் பாருங்கள்: தொடர்புடைய அனைத்து காணொளிகளையும்.
http://www.youtube.com/watch?v=7Knx6w2fHAg&feature=related
உங்கள் வீட்டு ஜன்னலுக்குள்ளால் ஒரு புயல்காட்சியை முழுமையாகப் பார்த்து விட்டேன் நிலா.அத்தனை தத்ரூபமான காட்சி விபரிப்பு! அப்பப்பா!
ReplyDeleteமனித வலுவை விட வலிமை வாய்ந்தது இயற்கை என்பதை அது ஆக்கிரோஷமாகச் சொல்லிச் சென்றிருக்கிறது போலும்!
நீங்கள் எல்லோரும் பத்திரம் என்பது மிக்க ஆறுதல்.காலம் தாண்டிப் போனாலும் என்ன மகனாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மிக்க ஆறுதலும் நன்றியும் நிலா.
தானேயின் கோரத் தாண்டவத்தை தங்கள் பதிவின் மூலம்
ReplyDeleteதெளிவாக அறியவும் மனச் சங்கடத்துடன் உணரவும் முடிந்தது
இயற்கை முரண்படில் மனிதன் என்னதான் செய்ய இயலும்
யோசிக்கச் செய்து போகும் பதிவு
விரிவான பதிவுக்கு நன்றி
புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருக்கிறது பதிவு. மொழியை வியப்பதா.. அல்லது இழப்பில் துக்கிப்பதா.. புரியவில்லை.
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்.. என்றே ஆறுதல் தேடச் சொல்கிறது மனசு. இயற்கைக்கு முன் மனிதர் வெறும் தூசி.. அது மட்டும் இப்போது எதிரொலிக்கிறது உள்ளுக்குள்.
நன்கு எழுதப்பட்ட பதிவு.
ReplyDeleteவேதனையாக இருக்கிறது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மீண்டு வர பிரார்த்திக்கிறோம்.
நன்றி.
புயற்காற்றுடன், மழைத்தூறலுடன், பயத்துடன் தவிக்கும் தவிட்டுக்குருவியுடன் பரிதவிப்புடன் நானும் பயணம் செய்து களைத்துப்போனது மாதிரி இருக்கிறது!
ReplyDeleteதுக்கத்தையும் தூய தமிழின் அழகு மாறாது வெளிப்படுத்திய விதத்தைப் பாராட்டுகிறேன். சேதம் கணக்கிலடங்காது போனாலும் அதையும் மன உறுதிகொண்டு மீண்டு வரும் மனித உள்ளங்களுக்கு மகத்தான பாராட்டுகள். இங்கே இந்தப் பதிவில் தாய்மையின் தவிப்பு, உபகாரகுணம், மாமனாரின் மீதான மரியாதைக்கான சான்றுகள், பறவைகள் மீதான பாசம், அடுப்படி ராஜ்ஜியத்தின் மீதான அலுப்பு, சக மனிதர்களின் செயல்பாடுகளை நேர்த்தியாய் விமர்சிக்கும் பாங்கு, நண்பர்கள் மேல்வைத்த நேச உணர்வு, ஊழிக்காற்றையும் வாழ்க்கையையும் ஒப்பிட்ட விதம், இப்படி நுண்ணிய மன உணர்வுகளின் வெளிப்பாடாய் அமைந்த அத்தனையும் உங்கள் இடத்திலிருந்து எம்மைப் பார்க்கவும் உணரவும் வைத்தன.
ReplyDeleteஅழிவிலிருந்து மீண்ட மனம் அதிர்விலிருந்தும் மீள பிரார்த்திக்கிறேன்.
புயலின் வீச்சை மீண்டும் புரிந்து கொண்டோம். நி.த. நடராஜ தீக்ஷிதர், நெய்வேலி http://natarajadeekshidhar.blogspot.com
ReplyDeleteபுயல் அடித்து ஓய்ந்து விட்டது... அதன் வடுவைச் சுமந்தபடி இன்னும் நெய்வேலி மக்கள்.... பதிவிலேயே நம் மக்களின் நிலை புரிகிறது....
ReplyDeleteமனம் நொந்த நிகழ்வுகளையும் தீந்தமிழில் பகிர்ந்த அழகைப் பாராட்டியே ஆகவேண்டும். பாராட்டுக்கள் நிலாமகள். அழிவிலிருந்து மீண்ட மனம் அதிர்விலிருந்தும் மீள பிரார்த்திக்கிறேன்.
ReplyDelete