நல்ல தாய் தந்தையாக இருப்பது எப்படி?

 “செயல்களில் உறுதியாகவும், உள்ளத்தில் மென்மையாகவும்
   இருக்கும் தந்தை...
  செயல்களில் மென்மையாகவும், உள்ளத்தில் உறுதியாகவும்
   இருக்கும் தாய்...
  இவர்களே சிறந்த பெற்றோர்கள்!”

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...
      
       குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். பெற்றோர் தான் அவர்களின் முதன்மையான வழிகாட்டி. குழந்தைகள் பெற்றோரின் நடவடிக்கைகளை, பழக்க வழக்கங்களை கவனித்து, அந்த பண்பு நலன்களை நினைவில் கொள்கின்றனர்.
 ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையான மதிநுட்பமும், புதிய சாதனைகளைப் படைக்கும் தன்மையும் கொண்டவராக உள்ளது. உங்கள் குழந்தையின் செயல்களைப் பாராட்டவும், பராமரிக்கவும் உங்களால் மட்டுமெ முடியும்.


குழந்தைகளின் பரிமாண வளர்ச்சியில் முக்கியமான விஷயங்கள்:

1. சுய நம்பிக்கை பெறுவது.
2. மனதிடம் உடையவனாக இருப்பது.
3. வாழ்வின் சவால்களையும், சங்கடங்களையும் நிதானமாக அணுகுவது.
    உங்கள் குழந்தையின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் உங்கள் வலிமையை குறைவாக மதிப்பிட வேண்டாம்.

சுடர் விளக்காயினும் தூண்டுதல் வேண்டும்:
        பிறந்த பின்னும் வளர்ச்சியடையும் ஒரு உறுப்பு மூளை. இது நான்கு வயது வரை தொடர்கிறது. பிறந்த குழந்தையின் மூளையில் கோடிக்கணக்கான நரம்புத் திசுக்கள் உள்ளன. இவற்றிற்கிடையே உள்ள இணைப்புகள் சிறப்பாக அமைந்திட அக்குழந்தை கல்வியில் சிறப்படைகிறது. இந்த இணைப்புகள் சிறப்பாக அமையத் தேவைப்படுவது உந்துதல். உந்துதல் அதிகமாக அதிகமாக இணைப்புகளின் பலம் அதிகரிக்கிறது. அறிவுஜீவிகள் உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது. தொடுதல், பார்த்தல், கேட்டல், புரிதல் போன்றவற்றின் மூலம் உந்துதல் கொடுக்கப் படுகிறது.
 மொழி வளர்ச்சி ஐந்து வயதுக்குள்ளாக அமைகிறது. குழந்தை பேசக் கற்றுக் கொள்வது தாய் தந்தையிடமிருந்துதான். பேசுவதன் மூலம், படித்துக் காண்பிப்பதன் மூலம் பேச்சு வளர்ச்சிக்கு நாம் உதவலாம். அறிவுப் பூர்வமான உரையாடல் மொழி வளத்தை அதிகரிக்கிறது. சீக்கிரமாகவும் திருத்தமாகவும் பேசி வளருகிற குழந்தைகள் பின்னாளில் மொழிப்பாடங்களிலும் அதன் மூலம் ஏனைய பாடங்களிலும் பிரகாசிக்கின்றன.

குழந்தை கற்றுக் கொள்ளும் திறமைகள்:
*  தன்னொத்த வயதினருடன் பழகுதல், நட்பு வளையத்தில் ஒருவராகுதல்.
*  கொடுத்து வாங்குதல், பகிர்ந்து கொள்ளுதல், தன் முறை வரும்வரை காத்திருத்தல், முடியாது என்ற பதிலை ஏற்றுக் கொள்ளுதல்,     தன்   பொருட்களுக்கும், செய்கைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்.
*  விளையாட்டுகளின் மூலம் உடல் வலிமையைப் பெறுதல், ஊசியில் நூலைக் கோர்ப்பது, ஒரு பொருளின் கலைத்துப் போடப்பட்ட பாகங்களை அளவாக முறையாக அடுக்குவது, பாட்டிலில் சிந்தாமல் நீர் நிரப்புவது போன்ற செயல்களால் கண்- கை ஒருங்கிணைப்பை அதிகரித்துக் கொள்ளுதல்.
*  பாடுதல், நடனம், நாடகம் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல்.
*  உணர்வுகளை எண்ணங்களைப் பேச்சாலும், எழுத்தாலும் வெளிப்படுத்துதல் (உறவு முறைகளைப் பலப்படுத்திக் கொள்ள இது தேவை)
* ஒற்றுமை, தியாகம், உதவும் மனப்பான்மை, சேர்ந்து வாழ்தல், நேரம் தவறாமை போன்ற நற்பண்புகளைக் கற்றுத் தேர்தல்.

நான் வளர்கிறேனே அம்மா:

       குழந்தைகள் உடலால் மட்டுமல்ல. மனதாலும் வளர்கின்றனர். உடல் வளர்ச்சியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளுமளவிற்கு மன வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
        பெற்றோரிடமிருந்து குழந்தைக்குக் கிடைக்கும் உடல், மனநல அமைப்புகள், வளரும் சூழ்நிலை, சுய மதிப்பீடுகள் போன்றவை குழந்தையின் மன வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன.
        ஐந்து வயதிலேயே பகுத்தறியும் திறனும், தன்னைப் பற்றியும்,  பிறரைப்  பற்றியும் ஓரளவிற்குப் புரிந்து கொள்ளும் திறனும் ஏற்பட்டு விடுகின்றன. அறிவுப் பூர்வமான, மன ரீதியான பல திறமைகள் விடலைப் பருவம் வரை உருவாகி, வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.
        நல்ல குணமுள்ள பெரியவர்களாக வாழ்வதற்கு குழந்தைகளின் ஆரம்ப கால வாழ்வு நிகழ்வுகள் இனிமையானதாக அமைய வேண்டும்.

குழந்தையின் நண்பனாக வீடு இருக்கட்டும்:
         குழந்தைகள் விரும்பும் சூழலை வீட்டில் நாம் உருவாக்க வேண்டும். இனிய ஒலிகள், அழகிய படங்கள், பெரியவர்களின் அருகாமை, பிற குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பு என்றவை இருக்கட்டும்.
          குழந்தைகளின் பல ஆராய்ச்சிகள் வீட்டிலிருந்துதான் தொடங்குகின்றன.
          நாம் பேச்சுக் கொடுத்தால், குழந்தை உற்றுக் கவனிக்கிறது. பேச முயற்சிக்கிறது. கவனித்தல் கற்றலின் முதற்படியல்லவா! கற்றலென்பது வீட்டில் ஆரம்பமாகிறது. தாய் தந்தையரே குழந்தையின் முதல் ஆசான்.
         பாதுகாப்பு உணர்வுதரும் குடும்பச் சூழ்நிலை, இளந்தளிர்களின் முழுமையான மன வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தந்தையானவர் தாய்க்குக் கொடுக்கும் மரியாதையைக் கவனிக்கும் குழந்தைகள் அன்புடன் பழகுதலைக் கற்றுக் கொள்கின்றனர். அன்பும், பண்பும் நிறைந்த பெற்றோர், அந்த எண்ண அலைகளை வீடு முழுவதும் பரப்புவர். அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் அப்படிதானே இருப்பர்!
         நல்ல குழந்தைகள் உருவாகும் இடம் வீடு. குறைகள், தவறுகள் பொறுத்துக் கொள்ளப்படக் கூடிய இடம் வீடு. அன்பு, அரவணைப்பு, ஆதரவு, உரிமைதரும் இடமும் அதுவே. முன்கூட்டி திட்டமிடுதல், தன்னம்பிக்கை, பிறருடன் ஒத்துழைத்தல், சுயமாக பொறுப்பேற்று வேலைகளை முடித்தல் ஆகிய திறமைகள் வளருமிடம் வீடு தான்.
           ஐந்து வயதிற்கு முன், பல வகையான விளையாட்டுகளின் மூலம், குழந்தையின் புத்திசாலித்தனத்தையும், கைத்திறனையும் நாம் செம்மைப் படுத்த முடியும். மனதை ஒருமைப்படுத்தக் கற்றுக் கொடுத்தால், பிற்காலத்தில் பள்ளி வேலைகளைக் கவனம் சிதறாமல் செய்ய உதவியாயிருக்கும்.
 நிறைய அனுபவங்கள் உள்ள குழந்தைகள், இசை, கலை, வார்த்தை வளம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவர். எண், எழுத்து, சிந்தனைத் திறன் இவற்றில் வல்லவராக இருப்பர்.
         பெற்றோருடன் உறுதியான பாசமான உறவு முறைகள் உள்ள குழந்தைகள் சிறந்த அறிவாளிகளாகவும், வாழ்க்கையில் வெற்றியாளராகவும் விளங்குவர்.
நன்றி: கடலூர் மாவட்ட இந்திய குழந்தைகள் நல மருத்துவக் குழுமம் .

                                                                                                                                                                                                              சொல்ல இன்னுமிருக்கிறது....
17 கருத்துரைகள்
  1. நல்ல பயனுள்ள அனைவரும் அவசியம்
    தெரிந்துகொள்ளவேண்டிய விஷயத்தை
    அழகான பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான கட்டுரை. குழந்தைகள் வளர்ப்பில் தாய் தந்தையின் பங்கை ஒவ்வொரு கட்டத்திலும் எடுத்துரைக்கும் விதம் அருமை.

    குழந்தைகள் பெற்றோரை மதிக்காதக் காரணமே பெற்றோர் தங்களுக்குள் பரஸ்பர மரியாதையைப் பேணாமையே என்னும் கருத்து மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. நல்லதொரு கட்டுரை. தொடரட்டும்.

    ReplyDelete
  3. “செயல்களில் உறுதியாகவும், உள்ளத்தில் மென்மையாகவும்
    இருக்கும் தந்தை...
    செயல்களில் மென்மையாகவும், உள்ளத்தில் உறுதியாகவும்
    இருக்கும் தாய்...
    இவர்களே சிறந்த பெற்றோர்கள்!”//

    பயனுள்ள ஆக்கம்.

    ReplyDelete
  4. சொல்ல இன்னுமிருக்கிறது....//

    எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  5. அனைத்துமே நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.

    // பெற்றோருடன் உறுதியான பாசமான உறவு முறைகள் உள்ள குழந்தைகள் சிறந்த அறிவாளிகளாகவும், வாழ்க்கையில் வெற்றியாளராகவும் விளங்குவர்.//

    ஆமாம். மிகச்சரியான வார்த்தைகள். ஆனாலும் குழந்தைகள் இதை உணரவேண்டும்.

    //செயல்களில் உறுதியாகவும், உள்ளத்தில் மென்மையாகவும்
    இருக்கும் தந்தை...
    செயல்களில் மென்மையாகவும், உள்ளத்தில் உறுதியாகவும்
    இருக்கும் தாய்...
    இவர்களே சிறந்த பெற்றோர்கள்!”//

    இயற்கையாகவே பெரும்பாலான பெற்றோர்கள் இதுபோலவே தான் உள்ளனர்.

    நல்ல பகிர்வு. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. எதிர்கால இந்த பூமி பந்தின் தூண்களான குழந்தைகள் வளர்ப்பு குறித்தான உங்களின் இந்த இடுகை மிகவும் சிறப்பானது தேவையானது உளம் கனிந்த பாராட்டுகள் தொடர்க

    ReplyDelete
  9. நல்ல விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. remba arumaiyaana pathivu..........

    vaazhthukal nila makal!

    ReplyDelete
  11. நல்ல குழந்தைகள் உருவாகும் இடம் வீடு. குறைகள், தவறுகள் பொறுத்துக் கொள்ளப்படக் கூடிய இடம் வீடு. அன்பு, அரவணைப்பு, ஆதரவு, உரிமைதரும் இடமும் அதுவே. முன்கூட்டி திட்டமிடுதல், தன்னம்பிக்கை, பிறருடன் ஒத்துழைத்தல், சுயமாக பொறுப்பேற்று வேலைகளை முடித்தல் ஆகிய திறமைகள் வளருமிடம் வீடு

    பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதைப் பார்த்து பிள்ளைகள்.. வீடு என்பது ஒரு குட்டி உலகம்தான். அருமையான பதிவு.

    ReplyDelete
  12. பயனுள்ள ஒரு பகிர்வு.தொடர்ந்தும் அறிய ஆவல் நிலா.

    ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதையைப் போல.பெற்றோரும் வீடும் சூழலும் பள்ளிக் கூடமும் விதை முளையாகும் சுவாத்தியங்களைப் போல.

    விதையின் வீரியம் அதன் தனிப்பட்ட சொத்து.அது தனக்குத் தேவையானவற்றைத் தன் சூழலில் இருந்து பெற்று வளர்வது போல தோன்றுகிறது.

    நேற்று இது பற்றி தோழியர் கூடி உரையாடி இருந்தோம்.ஒரு வீட்டில் பிறந்திருந்தாலும் எப்படி இரு வேறு குண இயல்புகளோடு குழந்தைகள் வளர்கின்றன என்ற சுவாரிசமான தலைப்பாக அது இருந்தது.

    மகிழ்ச்சி தோழி.

    ReplyDelete
  13. நல்ல குழந்தைகள் உருவாகும் இடம் வீடு.

    மிக அழகாக வாழ்க்கைக்குத் தேவையான கருத்தைப் பதிவுசெய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. குழந்தைகளுக்கு நாம் எல்லா வகையிலும் துணை நிற்கலாம்.

    ஆனால் அவர்கள் சிந்தனைக்கு வாய்ப்பும், தக்க சூழலும், முன்னுரிமையும் தரவேண்டும்!

    ReplyDelete
  15. தள வடிவமைப்பும், வண்ணங்களும் பாராட்டதக்கதாக உள்ளது.

    ReplyDelete
  16. மிக அருமையான தொகுப்பு

    ReplyDelete