நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பயணச் சுவை

Wednesday, 23 February 2011
ஏறியதும் தேடிப்பிடித்து
யாருமற்ற முழுநீள இருக்கைகளில்
ஆளுக்கொன்றாய் அமர்ந்தோம்.
இருவருக்குமான சன்னலும்
ஏகாந்த தனிமையுமாக
சுகமாய் தொடங்கியது பயணம்.
நிறுத்துமிடங்களில்
ஏறுபவர்கள் ஆக்கிரமிக்க

கொஞ்சம் கொஞ்சமாய்
நகர்ந்து நகர்ந்து
நெருக்கியடித்து
அமரும்படியாய் சுருங்கியது
எங்கள் இராஜியத்தின் எல்லை.
படிக்கவும், எழுதவுமாய்
அவரவர்க்கான உலகில்
தன்னிச்சையாய் நடைபோட்ட
இதுவும் வெகு சுகமாய்தான்...

----------------------------------------------------------

சன்னலோர வேடிக்கை
கையிலொரு புத்தகம்
சுகமான நித்திரை
அலைபேசியரட்டை
ஏதுமற்ற இறுக்க அமர்வென
அவரவர் உலகில்
அவரவர் ஆழ்ந்திருந்த
புகைவண்டிப் பயணத்தில்
ஒரு வயதும் நிரம்பாத மழலையொன்று
தன் விசித்திர ஒலிகளாலும்
கைகாலசைப்பாலும்
எதிர் இருக்கை
சந்தனப் பொட்டுக்காரரை
தன்பால் ஈர்த்து
ஒழுகும் எச்சிலால்
சுவையேற்றிற்று.
அவரவர் வேலையைப்
புறந்தள்ளி தத்தம்
விழிகளால் மொய்த்தனர்
அக் குழந்தையை...
உற்சாகமெடுத்துக்
கூவியது வண்டியும்.
-------------------------------------------------------------------

இரயிலேற்றி விடும்போது
மாமன்காரன் திணித்த ரூபாயை
சுருட்டி மடக்கி
இறுக்கிப் பிடித்திருந்தாள்
சிறுமியொருத்தி.
இறங்கியதும் குளிர்பானம்
இல்லையில்லை... பெரிய்ய மிட்டாய்
எத்தனையோ கற்பனைகள்...
கொஞ்ச தூரம் போவதற்குள்
கண்செறுகி தூங்கி விழ,
கையிருப்பு நழுவி விழ
துணைவந்த பாட்டியிடம்
பதுங்கியது பணம்.
கற்பனைகள் கனவாக
புன்னகையில் விரிகிறது
அப்பேதை முகம்.
----------------------------------------------------------

காணொலியற்ற பாடகன்
தள்ளாத யாசகர்
சுண்டல், முறுக்கு,
சோளக்கதிர் விற்பனையாளர்
யாரும் வராத வரை
களைகட்டாமல்
சோம்பி வழிகிறது
புகைவண்டிப் பயணம்.
--------------------------------------------------------------------------------

நின்று கிளம்பும் இடங்களிலெல்லாம்
இறங்கியேறுவது
சிலருக்கு
வேடிக்கையான வாடிக்கை.
இது கண்ட சிறுவனும்
அடுத்தடுத்த நிறுத்தங்களில்
இறங்கியேறினான்.
துணைவந்த பாட்டியும்
கடிந்து கொண்டாள்
‘பெரிய மனுஷனாடா நீ?'
சக பயணிகளின்
பரிதாபப் பார்வையில்
சுருங்கிப் போனான் அவன்.
அவன் காலிலிருந்து தலை வரை
பார்வையால் அளந்துவிட்டு
‘என்னைவிடப் பெரியவனாய்தான்
இருக்கிறாய் நீ!'
என்கிறது குட்டிப்பெண்...
பாட்டிக்கு அணைவாயும்,
அண்ணன்காரனுக்கு இதமாயும்!
-----------------------------------------------------------------------

21 கருத்துரைகள்:

 1. இத்தனை மெருகூட்டத்தான் இத்தனை நாள் தள்ளிப்போடலோ?

  காத்திருப்பு வீண்போகவில்லை.

  ஐந்து பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பயணம் இன்னும் முடிவதாயில்லை என் தண்டவாளங்களில்.

 1. ஒரு புகைவண்டிப் பயணத்தை மேற்கொண்ட உணர்வு .
  //கற்பனைகள் கனவாக
  புன்னகையில் விரிகிறது
  அப்பேதை முகம்//
  ...அநேகமாய் எல்லோரும் எதிர்கொண்ட நினைவுகள். நல்ல கவிதை.

 1. Harani said...:

  ஒவ்வொரு கவிதையும் எனக்குச் சொந்தமானது நிலாமகள். தினமும் இக்காட்சிகளையும் இன்னும் ஏராளமான சுவாரஸ்யங்களுடன் எனது ரயில்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நீண்டிருக்கிறது. இப்பயணங்களில் எப்போதும் குழந்தைகள்தான் சிறு பாவாடையுடன் வெட்கப்படும் பெண் குழந்தைகள்தான்...அதிகம் சுவையூட்டுகிறார்கள் வாழ்தலின் அர்த்தத்தை மனதில் அழுத்தமாக ஊன்றியபடி. அருமை நிலாமகள்.

 1. வினோ said...:

  ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பயணத்துடன் இணைத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... :)

 1. ஐந்து பெட்டிகள் கொண்ட புகை வண்டியில் நாமும் பயணித்ததைப் போன்ற அநுபவத்தைத் தந்தது கவிதை.

  பாராட்டுக்கள்!!


  //கொஞ்சம் கொஞ்சமாய்
  நகர்ந்து நகர்ந்து
  நெருக்கியடித்து
  அமரும்படியாய் சுருங்கியது
  எங்கள் இராஜியத்தின் எல்லை.
  படிக்கவும், எழுதவுமாய்
  அவரவர்க்கான உலகில்
  தன்னிச்சையாய் நடைபோட்ட//

  அவரவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இது பொருந்திப் போகுமோ தோழி?

 1. ஐம்பதாய் பதிவிட்டதை ஐம்பத்தொன்றாய் மாற்றச் செய்தது மகனின் கருத்துக்கிணங்கி. என்ஜின் அறையில் நீங்களிருக்க எத்தனை கோர்க்கவும் தயாராய் நாங்களிருக்கிறோம் ஜி...

 1. @ சைக்கிள் ...

  வாங்க வாங்க ... சிலாகிப்பில் மகிழ்கிறேன். நன்றி!

 1. @ ஹரிணி...

  கொடுத்து வைத்தவர்களுக்கு தினம் தினம் வாய்க்கும் போலும் இத்தகைய சலிப்பற்ற சொகுசான பயணம்! எப்போதாவது கிடைக்கும் ரயில் பயணத்தை தவற விடுவதேயில்லை நாங்கள். எங்கள் குழந்தைகளின் சிறு பிராயத்தில் இரயிலில் போகும் அனுபவச் சுவைக்காகவே கிளம்பிய தருணங்கள் நினைவில் என்றும் பசுமையாய்... நன்றி ஐயா!

 1. @ வினோ...

  மிக்க மகிழ்ச்சி வினோ!

 1. @மணிமேகலா...

  தங்கள் பாராட்டுகள் என்னை ஊக்குவிக்கின்றன தோழி... நன்றி.

  தன் சுய அனுபவச் சாயல் தெறிக்கும் எந்த படைப்பிலும் வாசக மனம் திருப்தியடைகிறதோ...

 1. நல்ல கவிதைகள். ரயில் பயணங்களில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் சுகானுபவம்தான்!

 1. என்னைவிடப் பெரியவனாய்தான்
  இருக்கிறாய் நீ!'
  என்கிறது குட்டிப்பெண்...
  பாட்டிக்கு அணைவாயும்,
  அண்ணன்காரனுக்கு இதமாயும்!
  என்ன அழகாய் இதமாய் வரிகள்..
  பயணம் எத்தனை சுவாரசியமோ அத்தனை சுவாரசியமாய் கவிதைகளும்.. மனசுக்கு நிறைவாய்

 1. அழகான காட்சிகளை காட்டுகின்றது உங்கள் கவிதை..நிலாமகள்.

 1. அருமையான ஹைக்கூ....

 1. ஒவ்வொரு பயணமும் விதவிதமான அனுபவங்களைத் தரும் என்பதை அழகான வரிகளில் வெளிபடுத்தியுள்ளீர்கள்.

 1. vasan said...:

  'காணொலியற்ற பாடகன்'
  இந்த‌ வ‌ரியை நானும்,
  இரயிலேற்றி விடும்போது
  மாமன்காரன் திணித்த ரூபாயை
  சுருட்டி மடக்கி
  இறுக்கிப் பிடித்திருந்த
  சிறுமியொருத்தியாய்,
  தூக்க‌த்திலும் ந‌ழுவ‌விடாது பிடித்துக் கொள்கிறேன்.

  அரை ச‌த‌ம் தாண்டிய‌ ப‌திவுக்கு வாழ்த்துக்க‌ள்.

 1. Vel Kannan said...:

  கவிதை தட.... தட... வென்று ஓடுகிறது
  இன்னும் நின்ற பாடில்லை ... கடந்த பாடில்லை

 1. manichudar said...:

  வசப்பட்டிருக்கும் வார்த்தைகளில் விரவியிருக்கும் அனுபவ சிதறல்கள் மிளிரும் கவிதைகள்.

 1. நிலாமகளே! இரயில் பயணக்கவிதை சலனப் படுத்திவிட்டது. அருமை. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

 1. வணக்கம் சகோதரி, இன்று தான் முதன் முதல் உங்கள் வலையகத்திற்கு வந்தேன், கவிதையினை- புகை வண்டிப் பயணத்தினைக் கமராக் கண் கொண்டு செதுக்கியுள்ளீர்கள்.

  ஒரு புதுவித மொழி நடையைக் கவிதையில் கையாண்டுள்ளீர்கள். பயணச் சுவை அனுபவங்களின் வெளிப்பாட்டை, அப்படியே மொழிகளாக்கித் தரும் வார்த்தைகளின் வரணஜாலம். keep it up.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar