‘கொக்காம் பயிர்’ கவிதைத் தொகுப்புக்கான வாசிப்பனுபவம்
கட்டுப்பாடற்ற அறிவுத்
துறையாகிய இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, புதினம் போன்ற படைப்பிலக்கியத்தின் ஆதார
மூலக்கூறுகளான பேசுபொருள், வடிவம், சமூகப் பயன்பாடு மற்றும் கலாச்சாரப் பின்னணி
எப்படியாயினும் படைப்பாளியும் படிப்பாளியும் ஒன்றிணையும் புள்ளியான ஒத்த அனுபவத்தை
தர வல்லவை காலத்தால் நிலைக்கின்றன.
படைப்பின் சொற்கள் வர்ணனைகள் குறியீடுகள்
படிமங்கள் போன்றவை மொழியின் வழி கற்பனையைத் தூண்டி நம் ஆழ் மனதைப் பாதிக்க
அனுமதிப்பதே இலக்கிய வாசிப்பின் ஆகச்சிறந்த பயன்பாடாகிறது.
புத்தக வாசிப்பு நம் மனவீட்டின் மேலதிகமான
சாளரங்களாகி அறிவு வெளிச்சத்தைத் தர வல்லதாகின்றது. ஒவ்வொரு வரியும் சிந்தனைத்
திறப்பாகி பலவித தத்துவார்த்தங்களை உணர்த்தி சக மனிதர்களுடன்- சமூகத்துடன் ஆன பிடிவாதங்கள், வக்கிரங்கள், அடாவடிகள் எல்லாம் தணிந்து மனம் பண்பட, அறிவைத் தெளிவாக்கிட பெரும் துணையாய் இருக்கிறன.
நதிநீர் இணைப்புத் திட்டச்
சிக்கல்களைத் தாண்டி காலகாலமாய்
சாத்தியமற்ற சில உறவு இணைப்புகள் உண்டு, உறவுகள்
யாவற்றிலும் கண்ணாடிப் பொருளைக் காட்டிலும் கவனமாகக் கையாள வேண்டியிருப்பது
மாமியார் மருமகள் உறவே எனலாம். பாதரசம் போன்று பாதுகாத்துப் பயன்பெறத் தக்கது
இவ்விணைப்பு என்றும் கொள்ளலாம்.
இக்கற்பிதத்தை உடைக்கும் விதமாக,
கவிதையுலகில் தன்
தாயையும் தாரத்தையும் களமிறக்கியுள்ள தோழர் செந்தில்பாலாவை சற்றும் தடுமாறாமல்
பின்னொற்றியுள்ளனர் இருவரும்!
குடும்ப வாழ்வில் இரு தலைமுறைப் பெண்களின்
அனுபவங்களை, வலிகளை, புரிதல்களை, மகிழ்தருணங்களை
வெளிச்சமிடுகின்றன தொகுப்பின் கவிதை வரிகள்.
‘அம்மா சொன்ன கதை'களில் வட்டார மொழியில் அனாயசமாகக் கவிதைபல
தந்தவர், அம்மாவின்
கவிதைகளை- அவருக்கிணையான மனைவியின் கவிதைகளை ஒரே தொகுப்பாக்கி நமக்குப்
படையலிடுகிறார் ஹேவிளம்பி வருடத்து (2018) தைப்பொங்கலில்! சுவை கூட்டும் நெய்யாக
விரவியிருக்கின்ற மெல்லிய நகைச்சுவை
வாசிப்பை ருசியாக்குகிறது.
மாமியார் மெனை:
விவசாயத்தில் களை எடுப்பது, நடவு நடுவது, புடைப்பது, சலிப்பது இன்ன பிறவற்றை பெரும்பான்மைப் பெண்கள்
அனாயசமாக செய்தாலும் அறுவடையில் ஈடுபடுவது சிறுபான்மைப் பெண்களே.
பாலாவின் அம்மா பொழுதுக்கும் நெல் அறுத்து,
வீடு வந்து தினை குத்திப்
புடைத்து, உலை கூட்டி பின் முருங்கைக் கீரை ஆய்ந்து சமைத்தவர், சாப்பிடாமல் சோர்ந்து படுத்திருக்கிறார். வயிற்றுப்
பசியை விஞ்சிய உடல் அசதி! ‘சாப்பிட்டுப் படு'
என்பதில் அவரின் மாமியார்
அம்மாவாகிறார். எப்படியிருந்தவர் ...?
80 வயதிலும் முக்கி முணங்கி தள்ளாமையுடன் சமைத்து
மகன் வந்தால் தானே பரிமாறிய மாமியார்!
புகுந்த வீட்டில் தன் சகிப்புத்
தன்மையாலும் தளராத உழைப்பாலும், பொறுமையைக்
கவசமாக்கி, கல்லையும்
கரைக்கும் வல்லமை கொண்ட மருமகள் மாமியாருக்கு மகளாகிவிடும் சூட்சுமம் காட்டும்
கவிதையிது.
‘விடும்மா தூங்கட்டும். பசிச்சா சாப்பிடப் போறா'
என்ற கணவனின் சொல்லைக்
கரிசனமாக எடுத்துக் கொள்வதும் பரிவற்றதாக எடுத்துக் கொள்வதும் வாசிப்பவரின் மனப்
பாங்கிற்கு ஏற்ப மாறுபடும். ஏனெனில், பெண் தன் சுய உழைப்பில் கிடைத்த நெல்லை
கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்கும் சுதந்திரம் அற்றவள் என்ற கணவனையும், மகனின்
வெள்ளாமையில் கடலை பறித்தாலும் தன் கூலி தனி என்றும் எண்ணம் கொண்ட தந்தையையும் முந்தைய பக்கங்களில் கடந்ததால்.
முந்தைய தலைமுறைப் பெண்களின் உடல்
ஆரோக்கியத்தைப் பதிவிடும் இதே கவிதையில் பொழுதுக்கும் நெல் அறுத்தாலும் தினை பாதி
நெல் பாதியாக சமைத்து உண்ணவேண்டிய பொருளாதார நெருக்கடியும் பதிவாகிறது. அவரது
தலைமுறையில் நின்றும் குனிந்தும் அமர்ந்தும் தொடர்ச்சியான வேலைகளுக்கிடையே ஓய்வென்பது
மாறுபடும் வேலையாக மட்டுமே இருந்திருக்கிறது.
தலைமுறை இடைவெளியில் இட்டு நிரப்பப் படும் இவ்வாறான பல நுட்பங்களும்
கவிதைகளில் புதைந்திருக்கின்றன.
வெத்தல, பொயல வாங்கப் போய் வெத்தல பாக்கு
வாங்கிவிடுவதாய் சிரிப்பூட்டி உலகியலை ரசிக்க வைக்கின்றது. ஆயாவும் பேரனும்
அடித்து விளையாடும் கவிதை சிரித்துவிட்டு சிந்திக்கத் தூண்டுகிறது கலைவாணர்
நகைச்சுவை போல்.
உடலளவில் தனித்திருக்கும் பல சமயங்களிலும்
மனசில் நிறைந்திருக்கும் நேசம் மிக்கவர்களால் தனிமையின் வெறுமையற்றுப் போவதுண்டு
நமக்கும். மகனுக்கும் மகளுக்கும் போன் பேசி மனசுக்குள் அவர்களை மடியில் போட்டு
தூங்கப் போகும் கவிதையில் தாயன்பின் நெகிழ்வூட்டும் மகத்துவம் இதமானது.
இருப்பினும் மாமியார் காலத்து மொத்த வாழ்வும்
விரல் விடும் சொற்களில் அடங்கிப்போன இராமாயணம். இன்னும் பல பெண்களின் கதையும்
அப்படித்தான். இக்கவிதையை சமர்ப்பணக் கவிதையுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால்,
ஆண்-பெண் இணைந்த
வாழ்வியல், சமூக வட்டத்துக்குள் பொதிந்து கொள்ளும்
சமச்சதுரமாகிறது. அவர்கள் நமக்காக... நாம் அவர்களுக்காக!
மருமகள் மெனை:
பிறந்த வீட்டுப் பெருமைகளையும் புகுந்த
வீட்டுப் புகார்களையும் தாண்டி கடைசியில் வரும் ஒற்றை ரூபாய், காத்திருக்கும் ஆறடி என்றெல்லாம் தத்துவம்
பேசுவதில் வயசுக்கு மீறிய பக்குவம் புரிகிறது. இதன் உச்சமாகவே துணியில்
ஒட்டியிருக்கும் மிச்ச அழுக்கை மனசுடன் ஒப்பிடுவது.
பத்திருபது வரிகளில் ஒற்றைச் சொல்
கவித்துவமாவதும் மூன்றே வரியில் சொல்லுக்குச் சொல் விளக்க விளக்க விரிவதும்
படைப்பியலின் விந்தை.
தன் தேவைக்குப் பிறரை யாசிப்பதின் வலி
சொல்லுமிரு கவிதையின் உள்ளரசியல் பற்றி பேசப் பேச விரியும்.
‘கலர் கலராயிருக்கு' என்றதன் நெரிக்கும் எள்ளலும், ‘நீ மட்டும்தான் வந்தாயா?' என்றதன் பின் வெடித்த அழுகையும் அவ்வாறே.
‘கல்லிலிருந்து சிலையாக, சிலையிலிருந்து கல்லாக' என்றது ‘அண்டமே பிண்டம்; பிண்டமே அண்டம்’ என்பதன் சுருக்க விளக்கம்.
மலையுச்சியில் உடைபட்டு உருண்டு வரும் பாறைச் சிதறல் வழுவழுப்பான கூழாங்கல்லாவது
போலல்லவா மானுட வாழ்நிலை!
அக்காவை விட அதிக மதிப்பெண் பெற்ற கவிதையில் தன்னம்பிக்கை,
விடாமுயற்சி, வைராக்கியம் இதுவே சாதிக்க வைக்கும் என்ற
சிறுகுறிப்பு.
‘உயிருள்ளது தான் தூங்கும்' என்ற கவிதை சிறு பிள்ளைக்குப்
புரியாமலிருக்கலாம். இலைமறை காயாக இருப்பது உரியவர்களுக்குப் புரிந்தால் போதும்.
இரு மெனைகளையும் நட்டுக் கரையேறிய சாந்தாம்மாவின்
மகனாக, ஆதிலட்சுமியின் கணவனாக 'கொக்காம்பயிர்' போட்ட செந்தில்பாலா அறிமுகப்படுத்தப் படும் நாள், நம்மை மகிழ்விக்கும் பெருநாள்!
0 கருத்துரைகள்