விதைகள் முளைக்கவும் மொட்டுக்கள் மலரவும்
மலர்கள் கனியவும் உள்மறைந்து துணைநின்று ஊக்குவிக்கும் பிரபஞ்ச சக்தியின்
மறுவுருவாய், ஒவ்வொரு பெண்ணும்
குடும்ப அமைப்பின் ஆணிவேராய்.
ஆண் என்னும் பித்தளையோ, குடும்பம் எனும் செப்புக் குடமோ, சமூகம் எனும் வெண்கலமோ எதுவானாலும் பெண் எனும்
ஈயம் பூசப்பட்டாலன்றி இவை யாவும்
பயன்படுத்த முடியாமல் உபயோகமற்று விடும் என்கிறார் நம் தோழி ஹுசைனம்மா.
பெண்சாதி....
மனிதர்கள் ஆண், பெண் என இரு சாதியாகிறார்கள். ‘இட்டார் பெரியோர்; இடாதோர்
இழிகுலத்தோர்'என்ற முன்னோர்
வாக்கும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
“பெண்ணுக்கு சாதி அமைப்பு வாழ்க்கை முறையில்
எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பெண் சாதியை ஒரு விஷயமாக எடுத்துக்
கொள்வதில்லை. சாதி, தந்தை சார்ந்து
வருகிறது. ஆணுடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருக்கிறது. அவனுக்கு பெருமையைத்
தருகிறது. கெளரவத்துக்காக பெயருக்குப் பின் சாதிப் பெயர் சேர்ப்பவர்களும்
ஆண்களே.பெண் ஒடுக்கப்பட்ட சாதியிலும் மிகக் கீழான நிலையிலும் இருக்கிறாள். இங்கே
எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதி பெண் சாதிதான். இந்த ஆழ்மன உளைச்சலால்தானோ துணிந்து
கலப்புத் திருமணம் செய்கிறாள்! பெருகி வரும் கலப்புத் திருமணங்களின் அடிப்படை
இந்தப் புள்ளியில் தான் துவங்குகிறது.
தன் ஆதங்கங்களை காது கொடுத்துக் கேட்கவும்
ஆளற்றுப் போய்தான் கோயில்களையும் பலவகை தெய்வங்களையும் பரிகாரங்களையும்
பிரார்த்தித்து சுமை குறைக்க அலையாய் அலைந்து தவிக்கிறாள். ஓரறிவு ஈரறிவு
உயிர்களைவிடவும் சந்தோஷம் குறைந்தவளாகிறாள்.” நண்பர் சண்முகவேல் சொல்வதையும் நாம்
சிந்திக்கத் தான் வேண்டியிருக்கிறது.
“இந்த உலகம் ஆண்களுக்கானது. அதில் பெண்களுக்கான
இடம் கழிப்பறை போல... அவர்களின் கடன்களைக் கழிக்க...” தன் சிறுகதையொன்றில் பாரதிக்குமார் சொல்லிச்
செல்வது நம் சிந்தையை கிள்ளிச் செல்கிறதல்லவா...!
பெருகி வரும் விவாகரத்து செய்திகள் ‘பெண்கள் முன்பு போலில்லை' என்ற அங்கலாய்ப்பை முதியோரிடம்
ஏற்படுத்தியுள்ளது. ஆம்! உண்மைதான்! கணவனிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு,
சாராயம், சிகரெட் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு
குழந்தைகளைக் காரணம் காட்டி வாழ்க்கையை தியாகம் செய்யும் பெண்கள் இன்று இல்லைதான்!
பணியிடங்களில் ஆண்-பெண் நட்பு விபரீதமாகி
விடுகிறது பலநேரங்களில். வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வு இன்றி அல்லல்
படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் சிக்கல். ஆணின் ஆசை நிராசையாகி
ஏமாற்றப்படும் போது விளைவுகள் பெண்ணுக்கு எதிரானதாகவே முடிகின்றன. அவதூறு தொடங்கி
பலாத்காரம் வரை ஏமாற்றத்தை ஈடு செய்ய வக்கிர மனம் பரிதவிக்கிறது.
பெண் என்பவள்
ஆணுக்காகவே படைக்கப் பட்டவள் என்பதும், திருமணம், குடும்பம்,
குழந்தை பெறுதல் எனும்
தளைகளால் பிணைக்கப் பட்டவள் என்பதும், கணவனை இழந்தால் பின்பற்ற வேண்டிய கொடூர சடங்குகளும் சம்பிரதாயங்களும்
எந்தளவுக்கு உறுத்தலாய் இருந்திருக்கின்றன? உடன்கட்டையேறியவர்களையெல்லாம் கேள்விப்படும்
நாம் படிப்படியாக கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வெட்ட வெட்டத்
துளிர்க்கும் முருங்கையாய், வேரோடிய அருகு
நீர்ப்பசை கண்டதும் துளிர்ப்பதுபோல் கண்ணுக்குப் புலனாக மூக்கணாங்கயிறுகள்
கணக்கற்று வெளிக்கிளம்பியபடிதான். மாற்றத்தை ஏற்கிற
மனோபாவம் அனைவருள்ளும் உள்ளது.
வாழ்க்கை தரும்
ஒவ்வொரு வலியும் அந்தந்த நேரத்துக்கான வலியின் ரணம்தான். ஆனால் மிச்சமிருக்கும்
வாழ்க்கைக்கான பக்குவம் ஒவ்வொரு வலியிலும் பரிசாகக் கிடைக்கிறது” மேலாண்மை வகுப்புகள் எடுக்கும் மோகன்ஜி சொல்வதுதான் என் நினைவுக்கு வருகிறது.
“இன்பங்களை விட துன்பங்களே; செல்வத்தை விட வறுமையே; புகழ்மொழிகளை விட ஏமாற்றங்களே மனித ஆற்றலை
வெளிக் கொணர்கின்றன” சுவாமி விவேகானந்தர் கூட இதைத் தான்
சொல்லியிருக்கிறார். மரங்கள் காற்றை சுத்தம்
செய்கின்றன. நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது.
சிறுமை கண்டு பொங்கவும், முதலடி எடுத்து வைக்கவும் துணிவுதான் வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் படிக்கிற, அதிகமாக வேலைக்குச் செல்கிற, பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக வாழ முடிகிற இந்நாட்களில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றவியல் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன.
படிப்பும்
வேலையும் பெண்ணுக்கு சுய மதிப்பை வழங்கியிருக்கின்றன. இவ்வளவு காலமும் அப்பாவிப்
பெண்களின் தியாகத்தில் தான் குடும்பம் என்ற ஒன்று இருந்ததென உணரும் போது
சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வருகின்றன.
எந்த ஆடும் வயது
முதிர்ந்து நோயுற்று இறப்பதில்லை; எந்தப் பெண்ணும்
வாழ்நாளெல்லாம் நிம்மதியுடன் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்
ஒவ்வொரு காலகட்டத்தில் சிக்கல்கள். நிதானித்து முடிச்சவிழ்ப்பவர்கள் நினைக்கத்
தக்கவர்களாகின்றனர். ‘பெண்ணாகப்
பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி' எனும் வரிகள் அச்சமூட்டினால், ‘மங்கையராய்
பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' எனும் வரிகள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
ஆறாம் அறிவுடன் பிறந்த நாம் நம்மைச் சுற்றி இயங்கிக்
கொண்டிருக்கும் மனிதர்களை, நிகழ்வுகளை
அவதானித்தபடியே வாழ்கிறோம். வாசிக்கும் பழக்கத்தால் பல செய்திகளும் நம்முள்
வசப்படுகிறது. மொழியெனும் பெரும் ஊடகத்தால் சக மனிதர்களுடன் அளவளாவி பலவற்றை
அறிந்து கொள்ள புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வாழ்ந்திருக்கும் சொற்ப
காலத்தில் உடல் நோயற்றிருக்கவும் மனம் கவலையற்றிருக்கவும் உயிர் பிறருக்கு
உதவியாயிருக்கவும் முயலலாம். இதில் ஆணென்ன பெண்ணென்ன?
அன்பே அனைவருக்கும் பொது.
# மகளீர் தின வாழ்த்துக்கள்!
அருமையான மகளிர்தின சிறப்பு பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அன்பே அனைவருக்கும் பொது
ReplyDeleteஅருமை.
அன்பு செய்து வாழ்வோம்.
வாழ்த்துகள் சகோதரி
ReplyDeleteகோமதி அரசு ...
ReplyDeleteசிவகுமாரன் ...
ரமேஷ் ராமர்...
வருகைக்கும் கருத்துக்கும் தங்கள் மூவருக்கும் மிக்க நன்றி!