நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

‘கூஸ்பெர்ரிஸ்' - ஆண்டன் செக்காவ் & அ.முத்துலிங்கம்

Monday, 30 March 2015
அ. முத்துலிங்கம் எழுதிய ‘ஒன்றுக்கும் உதவாதவன்' தொகுப்பு யதேச்சையாக உறவுக்காரர் வீட்டில் கண்டெடுத்தேன். நானும் கணவரும் அவரது எழுத்தின் ரசிப்புக்காரர்கள். எங்களிடமுள்ள அவரது புத்தகங்களில் இத்தொகுப்பு விடுபட்டிருந்தது.

  விலை கொடுத்து வாங்கிய புத்தகங்கள் வீட்டில் குவிந்திருந்தாலும் சிலநேரம் இரவல் கேட்டேனும் படித்துவிடும் அவாவை சில புத்தகங்கள் கிளப்பிவிடும்.

எங்களுடன் வீடுவந்தது தொகுப்பு. 2011 -ல் உயிர்மை வெளியீடு.

பக்கத்திலமர்ந்து  உரையாடும் மதிநிறை நண்பனைப்போல் அவரின் எழுத்து நடை நம்மை சிநேகிக்கும். சம்பவங்களை சுவைபட ஆங்காங்கே பொடி வைத்து சொல்லி படிப்பவருக்கு பேரின்பம் தர வல்லவை அவரது படைப்புகள். நுட்பமாக அவர் சொல்லிச் செல்பவை நம்மை அசைபோட வைத்து விடும். சர்வசாதாரணமாக வாழ்வின் பெரிய பெரிய ஆழங்களை கைபிடித்து காட்டிச் செல்வதில் சமர்த்தர் அ.மு.

58 தலைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பில் ஒவ்வொன்றிலும் நமக்கொரு உணரத்தக்க வெளிச்சமிருக்கிறது. 18வதாக இடம்பெற்றிருக்கும் ‘கூஸ்பெர்ரிஸ்' பற்றி இன்றைய பதிவின் பகிர்வு.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொகுப்பில் மனம் நிறைத்தவற்றை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம்?

       ஆண்டன் செக்காவ் எழுதிய ‘கூஸ்பெர்ரிஸ்' சிறுகதையை முதன்முறை  20 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறார் அ.மு. சமீபமாய் நண்பரொருவர் அச்சிறுகதை பற்றி தொலைபேசியில் அழைத்துப் பேச, மறுவாசிப்பு செய்தபோது செக்காவின் ஆகச் சிறந்த சிறுகதை என்ற எண்ணம் இவருக்கும் வருகிறது.
கதையில் சொல்லப்படும் கூஸ்பெர்ரி பழம் சாப்பிட்டுப் பார்க்க ஆசை வருகிறது. கனடாவில் தான் வழக்கமாக பழங்கள் வாங்கும் சூப்பர்மார்க்கெட்டில் அடிக்கடி விசாரிக்கிறார். ஆண்டின் மிகச் சில நாட்களே அது குறைந்த அளவில் விற்பனைக்கு வருமென அறிகிறார். ஒருநாள் மார்கெட் மேனேஜர் இவரையழைத்து கூஸ்பெர்ரி வந்திருப்பதாகச் சொல்கிறார். மிக விருப்பமுடன் வாங்கி விடுகிறார் அ.மு. தான் கற்பனை செய்தது போலில்லை அப்பழம். றம்புட்டான் பழ வடிவில், பச்சைநிற கோதுடன் உரித்தால் சிவந்த உருண்டையாக இருந்தது அது. விதையற்ற அப்பழம்  முதலில் புளிப்பும் வாயில் கரைகையில் இனிப்பும் விழுங்கும் போது கைப்புமாக முச்சுவையில் இருந்தது.

கூஸ்பெர்ரிஸ் கதைச் சுருக்கம்:

இவானும் அவனது நண்பனும் ஒரு பண்ணை முதலாளி வீட்டில் இரவைக் கழிக்கின்றனர். இவான் தன் தம்பியின் கதையைச் சொல்கிறான்.
ஏழைக்  குடியானவர்களாகிய இவானும் தம்பியும் பண்ணைச் சூழலில் வளர்ந்தவர்கள். தம் 19வது வயதில் சிறிய வேலையொன்றில் அரசாங்கத்தில்  சேர்ந்த தம்பிக்கு  மறுபடியும் பணக்காரப் பண்ணை வாழ்வுக்குத் திரும்பிட விருப்பம். ஒரு பண்ணை வீடு. அதில் பெரியகுளம். அதில் நீந்தும் வாத்து. தோட்டத்தில் நிறைய கூஸ்பெர்ரி மரங்கள். அதில் காய்த்துத் தொங்கும் பழங்கள். இதுவே அவன் கற்பனை லட்சியம். இதற்காக சிக்கனமாய் பணம் சேர்த்து வந்தான்.
தன் 40 வயதில் செய்தித்தாள் விளம்பரம் பார்த்து ஒரு பணக்கார அழகற்ற வயதான விதவையை மணந்தவன் அவள் இறப்புக்குப் பின் அவளது மொத்த சொத்துக்கும் அதிபதியாகிறான்.  ஐந்து வருடம் தேடி 300 ஏக்கர் பண்ணை வீட்டை வாங்குகிறான். அதில் குளமில்லை. நீந்த வாத்து இல்லை. கூஸ்பெர்ரி தோட்டமில்லை. ஆனால் ஆறு இருந்தது. கூஸ்பெர்ரி தோட்டமொன்றை உருவாக்கினான். கிழப்பருவம் எய்திவிட்டாலும் மிக மகிழ்வாக இருந்த அவனே அப்பிராந்தியத்தின் அரசன் போலிருந்தான். அவனுக்குள் தைரியமும் துணிவும் அகந்தையும் மிகுத்திருந்தது அவனது செல்வம்.
இவான் கடந்த வருடம் அவனைப் பார்க்கப் போனபோது பின்மதியத்தில் படுக்கையில் தூங்கிக் கிடந்தவன் வயோதிகனாகி கொழுத்து தளர்ந்திருந்தான். இருவருமாக மாலைச் சிற்றுண்டி அருந்திய போது அவன் தோட்டத்தில் முதன்முதல் பழுத்த கூஸ்பெர்ரி பழங்கள் பரிமாறப்பட்டது. உற்று அப்பழங்களையே சிறிது நேரம் கண்கள் நீர் துளிர்க்க பார்த்தவன், பழங்களை உண்ணத் தொடங்கினான். ஒரே புளிப்பு. ஆனால், தம்பி ரசித்து ரசித்து சாப்பிடுகிறான், பின்னிறவிலும் நினைத்து நினைத்து உணவு மேசைக்கு வந்து.
தம்பியின் கதையை சொல்லி முடித்த இவான், “என்னுடைய தம்பியின் இன்றைய வாழ்வில் சோம்பேறித்தனமும் அகந்தையும் இருந்தது. எங்கள் இளம்பருவத்தில் சுற்றியிருந்த ஏழைக் குடியானவர்கள் தலைமுறைகள் பல கடந்தும் அறியாமையுடன் விலங்குகள் போன்ற கேவலமாய், வாழ்நாள் குடிகாரர்களாய், தம் குழந்தைகள் பசியில் இறப்பதை சரிசெய்யவியலா அவலவாழ்வில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தம் செல்வத்தால் ஒரு நன்மையும் கிடைக்கச் செய்யாத தம்பி மேல் வெறுப்பே மிஞ்சுகிறது.”
நண்பனையும் பண்ணை முதலாளியையும் நோக்கி இவான் சொல்கிறான், “நீ செல்வந்தனாக இளம் வயதினனாக இருக்கும் போதே நல்லது செய்யத் தவறாதே. ஏதாவது பெரிதாகச் செய்; மிகப் பெரிதாக.”
மூவரும் மெளனமாக தத்தம் படுக்கைக்குச் செல்கின்றனர். மற்ற இருவரும் இழுத்துப் போர்த்தி தூங்க, அவர்களறையின் சுங்கானிலிருந்து கிளம்பிய புகைமணம் நண்பனை வெகுவாக தொந்தரவு செய்ய எங்கிருந்து அந்த மணம் வருகிறது என்று தெரியாமலே தூங்காமல் உழல்கிறான் நண்பன் மட்டும். கதை முடிகிறது.

தொடர்ந்து அ.மு. விவரிக்கிறார். ஜோர்டன் நாட்டில் மடபா நகரில் ஒரு கருத்தரங்கில் இக்கதை விவாதத்துக்கு வந்தது. அதை 25 புத்திஜீவிகள் அரைநாள் விவாதித்தனர். “உலகத்தில் ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஏழைகள் இருக்கும் சமுதாயத்தில் செல்வந்தர்களும் இருப்பார்கள். அவர்கள் கடமை ஏழ்மை நிலையை உயர்த்துவது. ஆனால் சின்னச்சின்ன உதவிகளால் பிரயோசனமில்லை. ஈகைக்கு வயது தடையில்லை.” இதுவே அவர்களின் முடிவு.
விவாதத்தில் ஒருவர் சொன்னாராம், “இவானின் சுங்கானிலிருந்து கிளம்பிய புகை நண்பனின் அறையடைந்து அவனைத் தொந்தரவு செய்தது. அவனால் தூங்க முடியவில்லை. ஆனால், எங்கிருந்து அந்த மணம் வருகிறதென்று அவனுக்குத் தெரியவில்லை. ஒருவருடைய இன்பம் மற்றவருக்குத் துன்பம். அது எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததுதான் ஆகப்பெரிய அவலம்.”
இதைத்தான் பாரதியார் ‘கஞ்சி குடிப்பதற்கிலார். அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்' என்றார் என அ.மு. பொருத்திப் பார்க்கிறார். தொடர்ந்து, ‘தேவைக்கு அதிகமாக உன்னிடமிருந்தால் அது மற்றவர்களிடமிருந்து திருடியது' என ரோல்ஸ்ரோய் சொன்னதைத்தான் காந்தியும் சொன்னார் என்பவர், மேலும்
ஒரு நல்ல சிறுகதை வாசிக்க வாசிக்க புதிய பொருள் கொடுக்க வேண்டும். மனதிலே வாழ்க்கை பற்றிய விசாரணையை எழுப்பியபடியே இருக்க வேண்டும். ஆவிபடிந்த கண்ணாடியைத் துடைத்து விட்டது போல் ஒரு சிறுகதையைப் படித்து முடித்ததும் மனது துலக்கமாக வேண்டும். அதை இந்தச் சிறுகதை செய்கிறது எனும் அ.மு., தான் வாங்கிய கூஸ்பெர்ரிகளை கட்டணம் செலுத்துமிடத்தில் இருந்த கடைக்காசாளர் வியந்து பார்த்ததையும், அ.மு.விடம் பழத்தைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டதையும் சொல்கிறார். ஒரு சிறுகதையைப் படித்து அதிலிருந்து எப்படியிருக்கும் என்றறியவே தேடித் தேடிப் பெற்றதாக அ.மு. சொல்ல, காசாளர் இத்தனைக்காலம் கடையில் வேலை செய்தும் தனக்கு இப்பழம் பற்றி அறியமுடியாமலிருந்ததே என்ற ஆதங்கத்தில் விலையைப் பார்க்க, இன்னும் 10 ஆண்டுகள் தம் சம்பளத்தை மீத்து வைத்தால் கூட  வாங்க சாத்தியம் இல்லை என்று தெரிந்து சோர்வாகிறார்.
இதைத்தான் செக்காவ் 110 வருடங்களுக்கு முன் எழுதி வைத்தார் எனச் சொல்லிக் கிளம்புகிறார் அ.மு.

       படித்து முடித்த நான் நினைத்துக் கொண்டேன்...“அந்தக் காசளருக்கு ஒரு பழம் தந்துவருமளவு சம்பாதிக்கும் சமயம் அ.மு.வுக்கு வாய்க்கட்டும்”
4 கருத்துரைகள்:

 1. வணக்கம்

  படித்த போது படிக்க வேண்டும் என்ற அவா எங்களுக்கும் வருகிறது படித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி ..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 1. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாய் போற்றப்படும் இந்தக் கதையை உங்கள் வாசிப்பினுடே நினைவுகூர்தல் இரட்டை மகிழ்ச்சி. ஏழ்மை ,இறைவனின் குரூரமான விளையாட்டு என்று தோன்றுகிறது. பல உன்னத படைப்புகள், இல்லாமையின் உப்புக்கண்ணீர் கொண்டே எழுதப்பட்டது . எழுதப்படும் .

 1. ஈகைக்கு வயது தடையில்லை... மனதும் தடையில்லாமல் இருக்க வேண்டும்...

 1. ezhil said...:

  ஒரு நல்ல கதையின் விமர்சனம் அருமை...

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar