நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

நவம்பர் மாத மழையில் ...

Saturday, 16 November 2013
       நவம்பர் மாத மழை,  ஈரப் படுத்திக் கொண்டிருக்கிறது அப்பாவின் நினைவுகளை . தீராத்  துயரமாய் ஆண்டுக்காண்டு பொங்கிப் பெருகும்படியாக அவரது நினைவு நாள் நெருங்குகிறது. நம்மோடு இல்லை எனினும் நம்முள் நிறைந்திருக்கிறார் என அறிவுமனம் உணர்வுமனத்தை ஆற்றுவிக்கிறது. தோழமைக் கவிஞர் கண்மணி ராசா இராஜபாளையத்தில் இருந்து அனுப்பித் தந்த இந்த கவிதை ஒவ்வொரு அப்பாவின் மேன்மையையும் உரக்கப்  பறைசாற்றுகிறது. அப்பாவுக்கு மாற்றாய் வாழ்வில் பந்தப் பட்ட மாமனாரும் மற்றொரு நவம்பரில் தான் உயிர் துறந்தார் என்பதும் நவம்பரை கனப்படுத்துகிறது.

அப்பா

அப்பாவைப் போலொரு
அழகான வனத்தை
எப்போதும் கண்டதில்லை...
இப்போது நினைத்தாலும்
நிறைக்கிறார் மனத்தை
என்னுள்ளே காட்டு முல்லை.

காட்டாற்று வெள்ளம் தான்
அப்பாவின்ன் கால்கள்
எப்போதும் ஓய்ந்ததில்லை...
கரைகொண்ட மரம்தான்
அப்பாவின் தேகம்
எப்போதும் சாய்ந்ததில்லை...

உறைந்த நதிதான்
அப்பாவின் பாசம்
கண்களில் பட்டதில்லை...
ஒழுகும் வெயில்தான்
அப்பாவின் கோபம்
ஒருபோதும் சுட்டதில்லை...

ஊமத்தம் பூதான்
அப்பாவின் துயரம்
வெளியே மணத்ததில்லை...
ஒற்றை இதழ்தான்
அப்பாவின் ஆசை
சற்றேனும் கனத்ததில்லை...

உதிர்ந்த இலைதான்
அப்பாவின் மரணம்
ஒருபோதும் அழிவில்லை...
மண்ணோடு ஒன்றாய்
கலந்திருப்பார்...
மறுபடி எங்கோ
மலர்ந்திருப்பார்!

           -இராசை.கண்மணி ராசா
            இராஜபாளையம்.


8 கருத்துரைகள்:

 1. உதிர்ந்த இலைதான்
  அப்பாவின் மரணம்
  ஒருபோதும் அழிவில்லை...
  மண்ணோடு ஒன்றாய்
  கலந்திருப்பார்...
  மறுபடி எங்கோ
  மலர்ந்திருப்பார்!

  இப்படித்தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது ..!

 1. ஊமத்தம் பூதான்
  அப்பாவின் துயரம்
  வெளியே மணத்ததில்லை...
  ஒற்றை இதழ்தான்
  அப்பாவின் ஆசை
  சற்றேனும் கனத்ததில்லை...

  வரிகள் ஒவ்வொன்றும் மனதோடு பேசுகின்றன..

 1. அனைவருக்கும் பொருந்தும் அழகான கவிதையை எழுதியுள்ளவருக்கும், அதை இங்கு வெளியிட்டுள்ள தங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

 1. என்ன ஒரு கவிதை!
  //ஊமத்தம் பூதான்
  அப்பாவின் துயரம்
  வெளியே மணத்ததில்லை...
  ஒற்றை இதழ்தான்
  அப்பாவின் ஆசை
  சற்றேனும் கனத்ததில்லை...//
  அருமையான வரிகள்!

 1. //உதிர்ந்த இலைதான்
  அப்பாவின் மரணம்
  ஒருபோதும் அழிவில்லை...
  மண்ணோடு ஒன்றாய்
  கலந்திருப்பார்...
  மறுபடி எங்கோ
  மலர்ந்திருப்பார்!
  //

  நிச்சயம்.....

  அருமையான கவிதை... அப்பாவின் நினைவுகள்......

 1. ஆள்விழுங்கி நவம்பர் மாதம் பற்றி சமீபத்தில் எழுதியிருந்தேன்.
  உங்கள் நினைவில் நிற்கும் உணர்வாய் தந்தையின் அன்பு.. உங்களுக்காக மகிழ்கிறேன்.

  உறைந்த நதியும் ஊமத்தைப் பூவும் போல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதில் என்ன பயன்?

 1. உண‌ர்வு மனதை அறிவு மனம் ஆற்றுவிக்கிறது என்ற அழகிய வரியில் உங்களின் பிரிவுத்துயரம் மனதை நெகிழ்த்துகிறது. கவிஞரின் கவிதை தந்தைகளின் மேன்மையை அழகாய் கெளரவிக்கிறது!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar