நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

இருக்கிற சிக்கல்களில் ‘முடி'யுமா?

Wednesday, 25 December 2013


    பனிக்காலம் வந்தாலே சிலருக்கு தோல் வறண்டு தலையில் பொடுகுத் தொல்லையும் வந்துவிடும். வைத்தியரிடம் தருவதை வாணியரிடம் தந்து ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோரெல்லாம் நிழற்படங்களினுள்ளிருந்து நம்மைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.
    நம் வாழ்விடத்தின் தட்பவெப்பத்துக்கும் நமது உடல்வாகுக்கும் ஏற்றதாய் உணவும் பழக்கவழக்கங்களும் கொண்டிருந்த அவர்களெல்லாம் பழமைவாதிகளாகி விட்டனர், மேலைநாகரீக மோகத்தில் மூழ்கிய இன்றைய தலைமுறையினருக்கு...!
    தலையில் எண்ணெய் தடவிய கையோடு கைகால்களை வருடிக்கொண்ட(கைகுவித்து எண்ணெய் ஊற்றி தலையில் தேய்த்தவர்கள் அவர்கள்) அந்நாளைய ஆசாமிகள் பற்றிப் பேசினால் கேலிப்பொருளாகிறோம் நாம். எண்ணெயை ஸ்ப்ரே செய்து கொள்ளும் காலத்திலல்லவா வாழ்கிறோம்!

பொடுகு+முடி உதிர்தல்=வழுக்கை:    தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியடியில் பலமணி நேரம் அமர்ந்து பணி புரியும் பெரும்பாலோருக்கு இன்றைய பெரும் பிரச்சினை இது. எத்தனை இளைஞர்களின் திருமணம் இதனால் பாதிக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?  வீண் செய்த இயற்கையை எத்தனை பிரயாசைப்பட்டும் எத்தனை செலவழித்தும்...
சமன்செய்துவிட முடிவதில்லை செயற்கை முறைகளால்.


    முடியைப் பராமரிப்பது எப்படியென்று பார்க்கும் முன் இதன் தோற்றுவாயைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம்.

    முடி உறை(Follicles) எனப்படும் சின்னஞ்சிறு பைகளிலிருந்து உற்பத்தியாகும் முடிகளின் எண்ணிக்கை நபருக்கு நபர் மாறுபடுகிறது. (அடர்த்தியின் காரணம் புரிகிறதா?) ஒவ்வொரு முடிஉறைக்கும் அதற்கேயுரிய கால சுழற்சியுண்டு.

    ஒவ்வொரு முடியுறையிலிருந்தும் ஒருகொத்து தலைமுடி வளர 3 முதல் 4 ஆண்டுகள் தேவை. அப்படி வளர்ந்தது ஒருசில மாதங்களே தலையில் தங்குகிறது. பின் உதிர்ந்துவிடுகிறது. மற்றொரு முடிக்கொத்து தோன்றும்வரை உதிர்ந்த முடிகளிருந்த முடியுறை ஓய்வெடுக்கிறது. ஆக, தலைமுடி அடர்ந்து செழித்து வளர வேண்டுமானால் முடியுறைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் சாத்தியம்.
    அடிப்படையில் ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்வது சகஜம். (பாருங்க, இந்த அளவுகோல் சில வருடங்களுக்கு முன் 30லிருந்து 40 வரை என்றிருந்தது)

முடி உதிர சில காரணங்கள்:

    1. சுரப்பிநோய்கள்(Hormonal diseases), ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) போன்ற மருத்துவக் காரணங்களால் முடி உதிர்வதுண்டு.  சுரப்பிகளில் ஏற்படும் சமச்சீரின்மை(Hormonal Imbalance) முடி உதிர்தலை துரிதப் படுத்துகிறது. கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறு முதலிய உடலியல் நிலைகளால் சுரப்பிகளில் ஏற்படும் சமச்சீரின்மையும் இதனுள் அடங்கும்.
    வீரியமுள்ள நோயெதிர்ப்பு மருந்துகள்(Strong antibiotics) முடியை உதிர்க்கும் தன்மையுள்ளவை. நோய் தீர்க்கத் தரப்படும் அந்த மருந்துகளுக்குப் பின்வினை(After effect) அது. கார்சினோமா(Carcinoma) நோயாளிகளுக்கான கீமோதெரபியின்(Chemotherapy) பின்விளைவாகவும் முடி உதிரும்.
    2. மண்டை மீது ஏற்படும் வளைப்புழு தொற்றால்(Ring Worm) மற்றும் பேன் தொல்லையால் முக்கியமாக முடி உதிர்தல் ஏற்படும்.

    மருத்துவத் தொடர்பற்ற காரணங்களால் நேரும் இந்தப் பிரச்சினையின் முக்கியக் காரணி உணவுப் பழக்கமே. அதாவது சமச்சீரற்ற சத்துக் குறைவான உணவு. துரித உணவுப் பழக்கம்(fast food).  பிசாக்கள், கோலாக்கள், வறுவல்கள் இல்லாமல் ஒருநாளும் கழிவதில்லையே பெரும்பாலோருக்கு! வாய்க்கு ருசியாக தின்பதற்கு சுலபமாக வயிற்றை நிரப்ப உதவும் இவற்றின் சத்து மதிப்பீடு பற்றி அக்கறைப்பட யாருக்கு நேரமிருக்கிறது? உடலுக்கு அத்தியாவசியத் தேவையான பல்வேறு சத்துப் பொருட்கள் உண்ணும் உணவிலிருந்து விடைபெற்றதால் அவற்றின் வெற்றிடங்கள் உடல் எனும் முழு அமைப்பில் பல குறைபாடுகளைத் தோற்றுவித்து விட்டன. அவற்றில் ஒன்றே, தலைமுடியின் வலிமை, இயற்கையான அடர்த்தி, பளபளப்பு ஆகியன குன்றிப்போனது.
    3. மற்றொரு முக்கிய காரணம் மன அழுத்தம்.(Stress). குறிப்பாக உணர்ச்சி அழுத்தம்(Emotional Stress). திடீரென ஏற்படும் கடும் மன அழுத்தம் முடியையும் பதம் பார்த்துவிடுவதாய் இருக்கிறது.
    4. இன்னொரு தலையாய காரணி, தலைச்சுகாதாரம். போதிய அளவு கசக்காமல் விடுவது அல்லது அளவு மீறிக் கசக்குவது மற்றும் கழுவுவது இரண்டுமே முடியை உதிரச் செய்யுமாம்!
    அதேபோல், செயற்கை மின் உலர்த்தி(dryer) மூலம் ஈர முடியை உலர்த்துவது, தீங்கு மிக்க இரசாயனங்களான ஹேர் டை, ஷாம்பு போன்றவற்றை உபயோகிப்பது, வெயிலில் நெடுநேரம் காய்வது போன்றவை தலைமுடியின் வலிமையைக் குறைக்கப் போதுமானதாக இருக்கிறது.
    அழுத்தமாக சீப்பைச் செலுத்தி முரட்டுத் தனமாக தலைவாருவதும் முடியை உதிர்க்குமாம்!

அலோபேசியா(Alopecia):

    முடி உதிர்வதற்கான மருத்துவப் பெயர் இது. இதில் பலவகையுண்டு. முக்கியமான மூன்றைப் பற்றிப் பார்க்கலாம்.
    1. அலோபேசியா ஏரியாடா(Alopecia Areata)
    2. ஆண்ட்ரோஜெனிக் அலோபேசியா(Androgenic Alopecia)
    3. ட்ராக்ஷன் அலோபேசிய(Traction Alopecia)

1. அலோபேசியா ஏரியாடா(Alopecia Areata)

    இது ஒரு ஆட்டோ இம்யூன் நோய்(Auto immune disease) மண்டையின் மீதுள்ள முடி கொட்டிவிடும். இதன் தாக்கம் கடுமையானால், உடல் முழுவதும் உள்ள ரோமங்களும் கொட்டத் துவங்கும்.

பாதிக்கப் பட்ட முடியுறைகள் உடலின் செல்களால் தாக்கப் படுவதால், முடி வளரும் நிலை முற்றிலும் நின்று விடுகிறது.

மண்டையின் மீது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிறுசிறு வட்டமான மிருதுவான வழுக்கைத் திட்டுக்களாக அவை தொடங்கும். வழக்கமாக குழந்தைப் பருவத்திலேயே இது தொடங்கி விடும். எனினும் எல்லாக் காலத்திலும் எந்தப் பருவத்திலும் எந்த இனத்திலும் இது நேரலாம்.

2. ஆண்ட்ரோஜெனிக் அலோபேசியா(Androgenic Alopecia)

    இந்த வகை ஒரு குடும்ப மரபாக காணப்படுகிறது. 20 வயதிற்கு மேல் தொடங்கும் முடி உதிர்தல், நாட்பட நாட்பட அதிகரித்துக் கொண்டே செல்லும். பெண்களிடம் முடி அடர்த்தி குறைந்து வருமேயொழிய வழுக்கை பெரும்பாலும் காண்பதில்லை.

ஆண்களுக்கு நெற்றி உச்சியில் முதலில் முடி உதிர்தல் தொடங்கும். தலை உச்சியில் வழுக்கை வட்டம் சிறிதாகத் தொடங்கி பெரிதாகிக் கொண்டே போகும். வயது முதிர்ச்சி மற்றும் மரபுக் கூறுகள் (Genetic disposition) ஆகியவை இதன் காரணமாகின்றன.

3. ட்ராக் ஷன் அலோபேசியா(Traction Alopecia)

    வெவ்வேறு வகைப்பட்ட தலையலங்காரங்களை செய்வதால் வருவது. முடியை இறுக்கிக் கட்டுவது, நெடுநேரத்துக்கு ஒரே விதமாக அவிழ்த்து விடாமல் இருப்பது, சீப்பினால்  அழுந்த வாருவது போன்றவை இதற்கான காரணங்கள்.


    பொடுகு என்பது எங்கிருந்து எவ்வாறு தோன்றுகிறது? அதன் விளைவுகள் என்ன? அடுத்த பதிவில்....


8 கருத்துரைகள்:

 1. ADHI VENKAT said...:

  பயனுள்ள பகிர்வு... படங்களையும், தகவல்களையும் படிக்கும் போதே நாம் எப்படிப்பட்ட நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது...:((

  தொடருங்கள்.. தொடர்கிறேன்..

 1. நல்ல பகிர்வு.

 1. பயனுள்ள பகிர்வு. பலரின் தலையாயப் பிரச்சனைகளை தங்கமாக, வைரமாக [யானை முடி கொண்ட வைர மோதிரமாக] எடுத்துச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். ;) பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

 1. பயனுள்ள‌ பகிர்வு நிலா! நல்லெண்ணையும் கஞ்சி, சீயக்காயுமாய் முடி வளர்ந்து செழித்த அந்த நாட்களை நினைத்தால் பெருமூச்சு வருகிறது!

 1. தலையாய பிரச்சினைக்கு அருமையான தீர்வு தான் ..!

 1. எனக்கு இந்தக் கவலையில்லை.

 1. நம்முடைய வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமும் மாறிவருவதுதான் நம் உடல்நலக் குறைவுகளுக்கு முக்கியக் காரணம் என்பது மிகவும் சரி. முடியைப் பேண நீங்கள் தந்திருக்கும் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. நன்றி நிலாமகள்.

 1. நல்ல பகிர்வு.....

  தலை முடி உதிர்ந்து பலர் படும் அவஸ்தைகள்.....

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar