நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

நல்லாசிரியர்!

Thursday, 5 September 2013
திருமதி.கோமளா பத்மநாபன் , M .A ., M.Ed.
(எனதினிய ஆசிரியர்களுள் முதன்மையாய்  இவர்.பின்னொரு நாளில் இவர் பற்றிய நினைவுகளை 'அசை' போடுவேன் உங்களுடன்)

குலனரு டெய்வங் கொள்கை மேன்மை

                                 கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
                                 நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
                                 உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
                                அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (26)
                                                 
                                                                        -பவணந்தியார், நன்னூல்.
தெளிவுரை: 
       நற்குடிப் பிறப்பு, அருள், இறைவழிபாடு என்ற இவற்றால் அடைந்த மேன்மையும், பல நூல்களில் பழகிய தெளிவும், நூலின் பொருளை மாணாக்கர் எளிதில் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வன்மையும், நிலம், மலை, துலாக்கோல், மலர் போன்ற குணங்களும், உலக நடையை அறியும் அறிவும், இவை போன்ற உயர்ந்த குணங்கள் பிறவும் நிரம்ப உடையவர் ஆசிரியர் எனப்படுவர்.

(நிலத்தின் மாண்பு)
தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே. (27)

தெளிவுரை:
     மற்றவரால் அறியப்படாத வடிவத்தின் பெருமையும், தன் மேல் பொருந்திய சுமையால் கலங்காத வன்மையும், தன்னைச் சார்ந்த மக்கள் தோண்டுவது போன்ற குற்றங்களைச் செய்தாலும் பொறுக்கும் பொறுமையும்,பருவ காலத்தில் உழவர் செய்யும் முயற்சியின் அளவுக்கு ஏற்ப பயனைத் தருதலும் நல்ல நிலத்தின் சிறந்த குணங்களாகும்.

 (மலையின் மாண்பு)
     அளக்க லாகா வளவும் பொருளும்
      துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
      வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. (28)

தெளிவுரை:
     அளவிட முடியாத வடிவத்தின் அளவும், அளவிட முடியாத பலவகைப் பொருளும், எத்தனை வன்மையுடையவராலும் அசைக்கப்படாத வடிவத்தின் நிலையம், நெடுந்தொலைவில் உள்ளவராலும் காணப்படும் உயர்வும், மழை பெய்யாமல் வறண்ட காலத்திலும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர் வளத்தைக் கொடுக்கும் கொடையும் மலைக்குப் பொருந்திய குணங்களாகும்.

     (நிறைகோல் மாண்பு)
      ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
      மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (29)

தெளிவுரை:
     நிறுக்கப்பட்ட பொருளின் அளவை ஐயம் நீங்கக் காட்டுதல், உண்மை பெற இரு தட்டுகளுக்கும் நடுவாக நிற்றல் ஆகியவை துலாக்கோலின் குணங்களாம்.

      (மலரின் மாண்பு)
       மங்கல மாகி யின்றி யமையா
       தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
       பொழுதின் முகமலர் வுடையது பூவே. (30)

தெளிவுரை:
      நல்வினைகளுக்கு உரிய பொருளாகி, ஏதொன்றும் தான் இன்றி முடியாததாகி, கண்டவர் அனைவரும் மகிழ்ந்து தன்னைச் சூடிக் கொள்ள மென்மையான குணம் உடையதாகிப் பூப்பதற்கு உரிய காலத்திலே முகம் விரிதலை உடையது பூவாகும்.

       அகத்தியம், தொல்காப்பியத்துக்கு அடுத்ததாய் எழுந்தது பவனந்தியாரின் நன்னூல். மேலிரண்டினும் எளிமையாய் உள்ளதுமாம்.  800 ஆண்டுகளுக்கு முன் சொன்ன ஆசிரியர் இலக்கணம் பொருந்த நம்மை அறிவேற்றும ஆசிரியர்களை வாழ்த்தி வணங்குவோம்!


9 கருத்துரைகள்:

 1. அருமையான அழகான பதிவு. பாராட்டுக்கள்.

  ஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.

 1. அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

 1. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

 1. அன்புடன் அழைக்கின்றேன்...

  தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

 1. அறிவேற்றும ஆசிரியர்களை வாழ்த்தி வணங்குவோம்!

  இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

 1. அருமையான பதிவு.
  ஆசிரியர் தினத்திற்கு.
  வாழ்த்துக்கள்.

 1. Ambal adiyal said...:

  எடுப்பான தோற்றத்தில் புலமையங்கே தெளிவுற நிற்கும் காட்சி தந்து
  மிக அருமையாக இன்றைய ஆசிரியர் தின வாழ்த்தினைப் பதிவு செய்துள்ளீர்கள்.அருமை !!...வாழ்த்துக்கள் தோழி .

 1. கருத்துள்ள பாடல்கள்! நல்ல விளக்கம்!
  இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

 1. ஆசிரியரைக் குறித்து வாசிக்க காத்திருக்கிறோம் தோழி.

  குருவே சரணம்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar