நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-3

Saturday, 3 September 2011
குழந்தைகளுக்கு
       சந்தோஷத்தைப் பரிசளியுங்கள்.
       நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.
       பல அனுபவங்களைக் கிடைக்கச் செய்யுங்கள்.
       உலகின் நீள அகலங்களைப் புரிய வையுங்கள்.

தந்தை என்னும் அற்புத உறவு:

       குழந்தை எதிர்கொள்ளும் முதல் ஆண் அப்பாதான். அப்பாவின் பாதுகாப்பு தரும் நன்மை, தூண்டுதல் தரும் நடவடிக்கை இரண்டும் குழந்தை வளரத் தேவைப்படுகிறது. பிறரின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுவது, மற்றவர்களுடன் பேசும் லாவகம், தலைமைப் பொறுப்பு ஏற்பது போன்ற திறமைகளை குழந்தையிடம் வளர்ப்பது தந்தையால் மட்டுமே முடியும். வெளி உலகை அறிமுகப்படுத்துபவர் தந்தையே! விளையாடுவதற்கு, தந்தையின் அருகாமையைத் தான் குழந்தைகள் விரும்புகிறார்கள். நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளை விட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத் தான் குழந்தைகள் விரும்புகின்றனர்.


அப்பாக்களே! பிள்ளைகளுக்காகக் கொஞ்ச நேரம்...

       குழந்தைகளுக்கு அப்பாவின் உருவமே அரணாக, உந்து சக்தியாக இருக்கிறது. உங்கள் எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், நீங்கள் உங்கள் குழந்தையுடன் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், புத்திசாலியான குழந்தையை உருவாக்க உதவுகிறது. தொடுதல், புன்னகை, அன்பான வார்த்தை, மனமார்ந்த பாராட்டு ஆகியவைகள் குழந்தையின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வதன் மூலம் பொறுப்புணர்ச்சியை உருவாக்குங்கள். நேர்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய  குணங்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள். குழந்தைகளின் செயல்கள், சிந்தனைகளில் உள்ள நல்லதைப் பாராட்டி ஊக்கப்படுத்தவும், தவறானதைச் செய்யும் போது கண்டித்துத் திருத்தவும் வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஒழுங்கைக் கற்றுத் தரமுடியும். ஆதிக்கம் செலுத்தாத, குறுக்கீடுகள் செய்யாத தந்தை, குழந்தை வெற்றிகரமாக இலக்கை அடைய உதவுகிறார்.

நல்ல அப்பாவாக இருப்பது எப்படி?

1. உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
   உங்கள் மனைவி மீது நீங்கள் கொண்டிருக்கும் நேசம், மறைமுகமாக உங்கள் குழந்தையை அடைகிறது. பரஸ்பரம் புரிதலும், மனம் ஒத்தலும் உடைய பெற்றோர் குழந்தைகள் மனதிற்கு இனிமையானவர்கள்.

2. குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்
   நீங்கள் நிறைய பொறுப்பு உள்ளவர்தான். ஆனால் குழந்தையைப் புறக்கணித்து அதை நிறைவேற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களிடமிருந்து அன்பையும், நேரத்தையும் பெற அவர்கள் விரும்புகிறார்கள். தந்தையின் நேரடிக் கண்காணிப்பு இல்லாத குழந்தை கல்வியில் பின் தங்கியவராக இருப்பர்.

3.குழந்தைகள் என்ன சொல்கிறார்களென காது கொடுத்துக் கேளுங்கள்.

4. வெற்றி பெரியதோ, சிறியதோ முழு மனத்துடன் பாராட்டுங்கள். தந்தையின் உற்சாகமான வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமையுண்டு.

5. நல்ல அப்பா நிறைவேற்ற முடியாத வாக்குறுதியைக் கொடுக்க மாட்டார். நம்பிக்கையான அப்பா, வாக்குறுதி கொடுக்காத காரியத்தையும் செய்து தருவார். குழந்தையின் அன்றாட வாழ்வில் உற்சாகமான ஈடுபாடு ஒரு நல்ல தந்தையின் அடையாளம்.

6. திறந்த மனம், வளைந்து கொடுக்கும் தன்மையும் உள்ள தந்தையாக இருங்கள். உங்களால் மட்டுமே பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண முடியும்.

7. சின்னஞ்சிறு செயல்களின் மூலம் உங்கள் குழந்தையை பிரத்யேகமானவர் என்று உணர வைக்க முடியும். சான்று: படுக்கை நேரத்தில் சொல்லப் படும் கதைகள். இவைகளை அவர்கள் மறப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் தந்தை கொடுத்த இணக்கத்தையும் அன்பையும் ஞாபகத்தில் வைப்பர்.

வேலைக்குப் போகும் அம்மா, அப்பாக்களுக்கு...

       அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போகும் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பிரச்சினைகள் என்ன? அதற்கான தீர்வு என்ன?

உங்கள் வேலையைப் பற்றி விவாதியுங்கள்:

       வேலையின் தன்மை என்ன, வேலை செய்யுமிடம் எப்படியிருக்கும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். இல்லையெனில் தினமும் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதே அவர்களுக்குப் புரிவதில்லை.
வேலை நேரத்தில் மட்டும் வேலை செய்யலாமே...

       நல்ல பெற்றோராக இருப்பதை விட வாழ்க்கையில் வெற்றியாளராக இருக்க விரும்புபவர்கள் அலுவலக வேலையை நேரம் காலமின்றி செய்வதுடன், வீட்டிலும் சுமந்து வந்து செய்வது வழக்கம். தத்தம் புத்திசாலித்தனத்துக்கு கிடைக்கும் பாராட்டிற்காக கடின உழைப்பில் ஈடுபடுபவர்கள் குழந்தைகளின் மனநிலையை உணரத் தவறி விடுகிறார்கள். ஆதங்கமும், புறக்கணிக்கப் படுவதான ஆத்திரமும் அக்குழந்தைகளிடம் எதிர்விளைவுகளை விதைத்து விடுகின்றன. பலமணி நேரம் கழித்துப் பார்க்கும் தம் பெற்றோர் தம்மிடம் கவனமாகி தான் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டுமென்ற நியாயமான ஆசையை புறந்தள்ளாதீர்கள்.

        பணியிடத்து மன அவஸ்தைகளை வீட்டிற்கு வெளியே காலணிகளோடு கழற்றி விடுங்கள்:

       வேலையிடத்தில் நடந்த பிரச்சினைகளை வீட்டிற்குள் கொண்டு வராதீர்கள். அந்தக் கசப்பு உணர்ச்சிகளுடன் குழந்தையைக் காயாதீர்கள். உங்களைப் போலவே அவர்களும் இன்று பிரச்சினைகளைச் சந்தித்து விட்டு வந்திருக்கலாம். அதைப் பற்றி உங்களுடன் பேச ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கலாம். எதிர்பார்த்தபடி உங்கள் ஆதரவான வழிகாட்டல் இல்லையெனில், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். எனவே, பணிச்சோர்வு நீங்க சில நிமிடங்கள் ஓய்வோடு உற்சாகமான பெற்றோராக மாறுங்கள். குழந்தையின் தோழமையைக் கொண்டாடி வீட்டை சந்தோஷமாக்குவது உங்கள் கையில்.

       உங்கள் இருதயம் மென்மையானதாக இருக்கட்டும்;
       உங்கள் அணைப்பு ஆறுதல் அளிப்பதாக இருக்கட்டும்;
       உங்கள் சுபாவம் சோர்வடையாததாக இருக்கட்டும்!

நன்றி: கடலூர் மாவட்ட இந்திய குழந்தைகள் நல மருத்துவக் குழுமம்
-சொல்ல இன்னுமிருக்கிறது...

16 கருத்துரைகள்:

 1. அருமையான பதிவு. அவசியமான பதிவு. அனைவருக்கும் தெரிய வேண்டிய பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். Voted 2 to 3 in Indli - vgk

 1. பயனுள்ள பதிவு... குறிப்பாக வேலைக்கு செல்லும் கணவன் மனைவி தெரிந்துக்கொள்ள வேண்டியது...

 1. நல்ல அறிவுரைகள்.

 1. Ramani said...:

  அருமையான பதிவு
  இப்படி பயனுள்ள விஷயங்களை
  மிக அழகாக நேர்த்தியாகச் சொல்லிப் போகும்
  பதிவுகள் பதிவுலகில் அபூர்வமே
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி
  தொடர வாழ்த்துக்கள்

 1. நல்லதொரு பகிர்விற்கு

  மிக்க நன்றி நண்பரே..

  நட்புடன்
  சம்பத்குமார்

 1. Rathnavel said...:

  அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

 1. சான்று: படுக்கை நேரத்தில் சொல்லப் படும் கதைகள். இவைகளை அவர்கள் மறப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் தந்தை கொடுத்த இணக்கத்தையும் அன்பையும் ஞாபகத்தில் வைப்பர்.

  என் நண்பர் சோம.வள்ளியப்பன் ஒரு முறை என்னைக் கேலி செய்தார் இது தொடர்பாக. என் மகன் கதை கேட்பான்.. எனக்கோ தூக்கம் வரும் என்றேன். அதற்கு ‘ஆமா.. நீங்கள்ளாம் கல்கி கதை கேட்டாத்தான் தருவீங்க.. பையன் கேட்டா சொல்லுவீங்களான்னு’.
  படுக்கை அறை அந்த நிமிடங்களில் 10 க்கு 10 ல் எத்தனை பேருக்கு இடம் அளித்து விடுகிறது.. மனிதர்கள்.. தேவதைகள்.. மிருகங்கள்.. பறவைகள்.. என. பிள்ளையும் அப்பாவும் தூங்கியபிறகே சிறகுகளால் போர்த்திவிட்டு சத்தமின்றி மறுநாள் இரவின் வருகைக்காக விடை பெற்று போகின்றன.. கதை கேட்டு தூங்கிப் போகும் பிள்ளையின் முகத்தை (தூங்கும் போது பார்க்கக் கூடாதென சாஸ்திரம்.. இருந்தாலும் விட்டுத்தள்ளி) பார்த்தால் தெரியும்.. அந்த ஆனந்தம் வேறெதிலும் இல்லை..

 1. //குழந்தைகளுக்கு
  சந்தோஷத்தைப் பரிசளியுங்கள்.
  நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.
  பல அனுபவங்களைக் கிடைக்கச் செய்யுங்கள்.
  உலகின் நீள அகலங்களைப் புரிய வையுங்கள்.//

  நல்ல ஆரம்பம்...

  தொடர்ந்து சொல்லிய கருத்துகள் அனைத்தும் அருமை...

  நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

 1. suryajeeva said...:

  ஆண்களுக்கு பாசத்தை காட்ட தெரியாது, அவனுக்கு பாசத்தை காட்ட வார்த்தைகள் தான் தேவை படுகிறது..
  காதலிக்கு கவிதை எழுதினால் தான் அவனிடம் உள்ள காதல் காதலிக்கே தெரிகிறது..
  ஆனால் உண்மையான பாசம் புரிந்து கொள்ளப் படுவது உண்டு..
  உண்மையான பாசத்தின் அடித்தளம் நம்பிக்கை என்பதால்.. கண்மூடித்தனமான நம்பிக்கையே ஒருவன் பாசம் வைத்திருப்பதை உணர்த்துகிறது..
  என் தந்தையிடம் ஒருவன் நான் சிகரட் அடிக்கிறேன் என்று சொல்லிய பொழுது என் தந்தை சொல்லியது ஞாபகம் இருக்கிறது...
  அவன் என் பையன் பா, அடிக்க மாட்டான் என்று..
  இன்று வரை அதை நான் தொட்டதில்லை..

 1. கீதா said...:

  தந்தையர் தின சமயத்தில் தந்தையர்க்கான பதிவு. சொல்லியிருக்கும் அத்தனைக்கருத்துகளும் உண்மை. குழந்தைகள் தாயின் அணைப்புக்கு நிகராக தந்தையின் அணைப்பையும் எதிர்பார்க்கிறார்கள்.

 1. http://gopu1949.blogspot.com/2011/09/2-of-2_05.html
  ”முதிர்ந்த பார்வை” பகுதி 2 of 2 வெளியிடப்பட்டுள்ளது.
  Just for your information, only.

 1. நல்லதொரு பயனுள்ள பதிவு. பாராட்டுகள்.
  தொடருங்கள் வந்து கொண்டு இருக்கிறோம்.

 1. அண்மையில் இவ்வளவு அவசியமான நெறி போற்றும் பதிவை நான் பார்க்கவில்லை. ஆச்சரியமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்...

  வானவில்லுக்கு வந்தா 'ஜானு'வைப் பார்க்கலாம்!

 1. Harani said...:

  மிகமிகப் பொறுப்பான பதிவு நிலாமகள். பிள்ளைகளை முழுதாக தொலைததுவிட்ட ஒரு உலகில்தான் இருக்கும் விதிவிலக்கு மனிதர்களிடையே நாமும் நம்மை இருதத்திக்கொண்டு வாழ்கிறோம். வாழ்த்துக்கள்.

 1. நிலாமகள் அவர்களே! கடிதங்கள் குறித்த எனது 'மறக்க முடியாத நினைவுகள்' வலைப்பக்கதிற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை இன்றுதான் காண நேர்ந்தது. மிகவும் அருமையான தலைப்பிலான பதிவுகள். இனிதான் வாசிக்க வேண்டும்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar