நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பொக்கைவாயழகி முன் வெக்கையின் தோல்வி...

Sunday, 3 April 2011
உருக்கிடும்  வெயிலின் உக்கிரம்
தார்ச்சாலை முழுக்க...
வாகனங்கள் கிளப்பிய
புழுதி எழுந்து கண்மறைக்க
வரண்ட நாவும் தொண்டையும்
நீருக்குத் தவிக்க
தூரத்துக் கானல்நீர் கண்மயக்க
தேய்ந்த செருப்பு மீறி
கால்வழி மேலேறும் கனல்தகிக்க
தள்ளாமை தந்த தடுமாற்றம் மீறி
கைமாற்றிச் சுமந்து செல்லும்
பைநிரம்பி வழிந்தது
முறுக்கும் அதிரசமும் எள்ளடையும்
இன்னபிறவுமாக...
வழிந்தோடும் வியர்வை
அவள் உடற்சூட்டை தணிக்க
படும் பாடு பெரும் பாடு
தூ...ரத்தில் தென்பட்ட மகன் வீடு
நெருங்கியது அவளின் வேகநடையில்.
வயல் வரப்பும் வாய்க்காலும் தோப்புமாக
இருமாதம் இறக்கை கட்டும்
ஏகாந்த கற்பனையின் துள்ளலோடு
கும்மாளமிட்டு
குதித்தோடி எதிர்வந்தனர்
பாட்டியுடன் பயணப்படத் தயாராய் 
பரீட்சை முடித்த பெயரனும் பெயர்த்தியும்
வெக்கை எல்லாம் பறந்தது
பொக்கைவாயழகிக்கு
சுட்டெரித்த சூரியனும்
ஒளிகிறான் மேகத்திரையுள்
காட்டாற்றில் கால் நனைத்த சிலிர்ப்புடன்
மலர்ந்து சிரிக்கும் அவளது
சுருங்கிய தசைகளனைத்தும்
இப்போது சூரியனுக்கே சவாலாய்...

11 கருத்துரைகள்:

 1. ம்..இயற்கைக்கே சவாலாக எங்கள் ஊர்ப் பாட்டிகளை உங்கள் கவிதையால் காட்டியிருக்கிறீர்கள்.
  ரசித்தேன். பொக்கைவாயழகி.. எம் சமூகத்தின் யதார்த்தத்தை உணர்த்தும் கவிதையாக நிதர்சனமான உணர்வினைச் சொல்லி நிற்கிறது.

 1. ஹேமா said...:

  சுட்டெரிக்கும் சூரியனையும் தன் அன்பில் இளைப்பாற வைக்கும் தாய்மை.இன்று இலண்டனின் அம்மாக்கள் தினம்.வாழ்த்துகள் தோழி !

 1. ஹேமா said...:

  எங்கே என் கவிதைப் பக்கம் நிலாவைக் கனநாளாக் காணோம் !

 1. பரீட்சை முடித்த பெயரனும் பெயர்த்தியும்
  வெக்கை எல்லாம் பறந்தது
  பொக்கைவாயழகிக்கு
  தாத்தா, பாட்டி என்கிற உறவு மட்டும் இல்லாவிட்டால் இந்த புவனம் அஸ்தமித்து போய் விடும்..
  நிஜமாகவே அழகான பதிவு.. அதுவும் உணர்வு பூர்வமாய்..
  வாழ்த்துகள்.

 1. உலகத்து அழகில் ஒன்று அந்தப் பாட்டியின் புன்னைகை.அபூர்வமாக ஒளிர்விடும் ஒன்றைப் படம் பிடித்திருக்கிறது உங்கள் கமறா.

  அழகு!

 1. அழகான கவிதை.

 1. vasan said...:

  பாட்டின்றி அமையாது நிக‌ழ்வு
  பாட்டியின்றி சுவைக்காது வாழ்வு.

  பாட்டியின் வ‌ளர்த்த‌ காதுக‌ளை
  ஸ்ப‌ரிசித்த‌ குழ‌ந்தையாய் ம‌றுப‌டியும்

 1. Harani said...:

  சுவை.மேலும் சுவை. அதிரசம் போலவே. மரபு நினைத்த பதிவு.

 1. எந்தக் கங்கையும் எதிர்கொள்ளும் எங்கள் கிழவிகளின் ஈரம். அழகாய் வந்திருக்கு.

 1. பெயரனும் பெயர்த்தியும்// ஆஹா திரிபு சொற்களாகிவிட்டனவா இவை

  இந்த கவிதையே கிராமப்புற பேச்சு வழக்கில் வந்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்..!

 1. கால்வழி மேலேறும் கனல்தகிக்க
  தள்ளாமை தந்த தடுமாற்றம் மீறி
  கைமாற்றிச் சுமந்து செல்லும்
  பைநிரம்பி வழிந்தது
  முறுக்கும் அதிரசமும் எள்ளடையும்
  இன்னபிறவுமாக...
  வயோதிப காலத்திலும் எங்கள் பாட்டிகள்
  வடித்துக் கொட்டிய பாசஉணர்வு,கடந்தகால
  நினைவுகளை மறுபடியும் உணரவைத்த
  அழகிய கவிதை வாழ்த்துக்கள்!.....

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar