நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மழை

Friday, 20 August 2010

வாசலில் வந்த தூறல்
என்னை வா வா என்றது...

நீட்டிய கையில்
பொட்டென ஒரு துளி
படியிறங்கிய போது
கழுத்தில் கையில்...
சிலிர்த்துச் சிரித்தேன் மகிழ்வாய்...

தலையுயர்த்தி வாய் திறக்க
தாகமற்ற தொண்டையில்
துளிகளின் பரவசம்

வலுத்த மழையில்
நனைந்தன துணிகள்

கும்மாளமாய்க்
குதித்து ஆடினேன்
கப்பல் விடக் காகிதம் தேடினேன்

அடுப்படியிலிருந்து
அவசரமாய் வந்து
உலர்த்திய துணிகளை
உருவிய அம்மா

ஓட்டமாய் வந்து
போட்டாள் முதுகில் பலமாக

கப்பல் விடும் ஆசை கனவாகிட
விசும்பலில் வலி கரைத்தேன்

தலை துவட்டித் துணி மாற்றியபடி
விரல் பதிந்த என் முதுகு தடவி
அழுகிறாள் அம்மா மழை போல!

6 கருத்துரைகள்:

 1. ரொம்ப அழகா இருக்குங்க...

  இதை போன்ற மெல்லிய,நுண்ணிய தருணங்களை கவிதையாக்குவது அரிது.
  கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.

  ஏற்கனவே பெய்து முடிந்த ஒரு பழைய மழை
  மனசுக்குள்ள மீண்டும் தூரத் துவங்குகிறது.
  உங்களின் கவிதைக்குள் இருக்கும் அம்மாவை போலவே ஒரு அம்மா
  கவிதைக்குள் அழும் மழையை போலவே மீண்டும் அழத்துவங்குகிறாள் என் மனதிற்குள்.

 1. மனசை நனைக்கும் வரிகள்..
  தலையுயர்த்தி வாய் திறக்க
  தாகமற்ற தொண்டையில்
  துளிகளின் பரவசம்
  மழை நீர் சுவைக்க மனசு பரபரக்கும் இயல்பை அப்படியே படம் பிடித்த வரி.
  மழை பிடிக்காத மனசு உண்டா..

 1. @கமலேஷ் ...
  படிப்பவரின் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பின் வீரியம்தான் படைப்பின் வெற்றியை நிர்ணயிப்பதாக சொல்லிக்கறாங்க கமலேஷ்...
  நான் பார்த்து வியந்து நிற்கும் படைப்பாளியான தங்கள் மனம் அசைத்தது மிக்க மகிழ்வாய் உள்ளது. நன்றி நன்றி...!

  @ரிஷபன்...
  உஷாவின் மழைக் கவிதைகளுக்கு முன் இது ஒரு சிறு தூறல் எனலாமா ... மழையை பிடிக்காதவர்கள் யாருமில்லைதான்.... குளிர்வேற்றுவதில் பாராட்டும் அப்படியே... நன்றி நன்றி... உற்சாகப் படுத்துவதற்கு!

 1. Priya said...:

  அழகான மழை கவிதை. படிக்கும் போது சிறுவயதில் இதேபோல் மழையில் நனைந்தது, கப்பல் விட்டது.... எல்லாம் என் நினைவில் வந்து போனது.

  கடைசி வரியில் அம்மாவின் கண்ணீரை மழையுடன் ஒப்பிட்டு இருப்பது ரசனையா இருக்கு!

 1. @பிரியா...
  ஆமா பிரியா... சில நினைவுகள் மீள் தருணங்கள் மிகச் சிலாக்கியமானதாகிறது. உற்சாகம் தருகிறது தங்கள் பின்னுட்டங்கள் .

 1. ஓர் அழகிய மென்மையான தருணம் ஒன்று - சிதைக்கப்படும் அந்த நுட்பமான தருணத்தைக் காட்சிப் படுத்தியதில் தெரிகிறது உங்கள் 'கவித்துவக் கமறா'.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar