நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

"பொம்பளைங்க பத்தி எளுத என்ன இருக்கு?!"

Friday, 21 July 2017
அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ மற்றும் ‘வெளிப்பாடு’ பற்றிய வாசிப்பனுபவம்...
      கதைகளோ காவியமோ புனைவு எனும் வகைப்பாட்டில் கொண்டாலும் படைத்தவருக்கும் படிப்பவருக்கும் இடைப்பட்ட ஒரு நட்பை, ஒரு உறவை ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது. வாழ்வியலின் பாதையெங்கும் அறத்தின் சாரம் நிறைந்துள்ளதால் எந்தவொரு கதைசொல்லியும்  தன் கதைமாந்தர்களின் பேச்சாலும் செயலாலும் ஏதோவோர் அறத்தை நிறுவவே தலைப்படுகிறார். கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கும் பலதரப்பட்ட சமூகச் சீர்கேடுகளின் ஆரம்பப் புள்ளி தேடிப் பயணித்தால், அங்கு ஒரு தனிமனிதனின் அலட்சியமும் அத்துமீறலும் காணக் கிடைக்கிறது.      
          தான் சார்ந்த சமூகத்தை மேம்படுத்தவும் தன் படைப்பை வாசிப்பவர் மனதைப் பண்படுத்தவும் விழையும் நோக்கும், மாற்றங்களை, மறுமலர்ச்சிகளை, தெளிவுகளையும் புரிதல்களையும் கொண்டிருக்கும் எழுத்தின் வீச்சும் கொண்டிருப்பதே படைப்பாளியின் ஆகச் சிறந்த பேராற்றல்.

     32 பக்கங்கள் விரிந்த அம்பையின்  ‘சிறகுகள் முறியும்’ (கணையாழி மே – ஜூன் 1972) கதையில் தொடக்கம் முதல் இறுதி வரை கதை நாயகி சாயா தன் மனச் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து பலப்பல சட்டங்களை அரங்கேற்ற, வாசிக்கும் நமக்குத் தோன்றுகிறது ‘ஓ! இவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ!’ என்று. ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்றவன் அவன்தானே!
     கதைப் போக்கில் சாயாவின் நிலைமை புரிபடுகிறது. ரோமங்கள் அற்ற வழவழத்த மார்பும், வெற்றிலைக் காவியேறிய நசுங்கிய தகரம் போன்ற பற்களுமாக, பார்யாள் எந்த பொருளுக்கேனும் ஆசைப்பட்டால் பர்ஸை இறுக்கிப் பிடித்துக் கொள்கிற அகமுடையான் அவளுக்கு! தன் உடைகளுக்கான சலவை செலவுக்குக் கூட கருமித் தனம் பண்ணும் பாஸ்கரன், தங்கை குழந்தைகளுக்கு சாயா தைத்துத் தரும் துணிகளுக்கும் நூல் செலவாகுமே என்பவன். சாயாவின் நேர்த்தியான சமையலையோ வேலைகளையோ ஒருநாளும் பாராட்டியதில்லை அவன். தனக்கான பாராட்டில் எவ்வுயிருக்கும் ஒரு சிலிர்ப்பிருக்கும் என்றுணராதவன்.              
        தனக்கான பாராட்டை எதிர்பார்க்கும் மனவிழைவே நம்மைப் பலவீனப் படுத்தும் காரணிகளில் தலையாயதாக அமைகிறது பல நேரங்களில். எதிர்பார்ப்பு கை கூடாத ஏமாற்றம் தொடர்ந்து ஆதங்கத்தின் பாரத்தை நம் மேல் ஏற்றுவதை தவிர்க்கமுடிவதில்லை யாராலும்.
      உடலெங்கும் அடர்ந்த முடிகளை ஆண்மையின் சின்னமாக தான் கண்டு மகிழ்ந்த திரைப்படங்களின் தொப்பையுடைய நாயகன் மூலம் மனதில் பதிந்திருக்கிறது போலும் அவளுக்கு. ஆனால், அவனது அதிகார உறுமல்கள் ஒரு ஆண் நாயைத் தான் பிரதிபலிக்கிறது அவளுள். தான் பெற்ற பிள்ளையிடம் கூட மென்மையாகப் பேசத் தெரியாத அவனைப் போன்றவர்களுக்கு கட்டாய வாசக்டமி சட்டம் சரிதான் என்றுதான் நாமும் அவள் எண்ணத்தை ஆமோதிக்கிறோம்.
         இவனை மாப்பிள்ளையாக வரித்த காலத்தில் தோற்றப் பொருத்தமில்லை என்ற அம்மாவின் மெல்லிய குரல் அப்பா மற்றும் மாமாவின் அதட்டலில் அடங்கிப் போனது. அந்தக் காலத் தொப்பை குலுங்க ஆடும் தமிழ்ப் பட நாயகர்களின் பிரமையில் இவளும் சம்மதித்தாள். 
       சரளமான உரையாடல் நடை கதைத் தளத்தில் நம்மையும் இருத்தி விடுகிறது. கிடைக்கும் தையல் கூலியில் கதாநாயகன் செத்தொழியும் படம் பார்க்க விரும்பும் சாயாவை அனுதாபத்தோடுதான் நம்  மனம் அணுகுகிறது. அறியாப் பருவத்தில் அவனின் அருவருப்பான தொப்பை தவிர்த்த கற்பனைகளைப் பெருகச் செய்த திரைப்பட மோகம் அல்லவா அது!
          பெண்கள் தம் பிறந்தகத்தில் அதிகாரமாக, செல்லமாக வாழ்ந்து விட முடிகிறது. ருசி நாக்கை வளர்க்க நம் அம்மாக்களின் தியாகம் அதிகமே. புக்ககத்தில் பெரும்பாலும் தனக்கான, தன் மனசுக்குப் பிடித்தமான பலவற்றை வெறுத்து ஒதுக்கும்படி ஆகிவிடுகிறது. அந்த விரக்தியை பெண்ணானவள் தம் மனசுக்குள் புதைத்துக் கொள்கிறாள். அதில் துளிர்க்கும் நிராசை, வன்மம், ஆதங்கம் எல்லாவற்றையும் வெளிக்காட்ட முடியாத, காட்டியும் பலனற்ற பெருமூச்சுகளால் பொசுங்கிப் போகிறது.  நினைத்தவுடன் சட்டையைக் கழற்றிப் போடுவதுபோல் உயிரை எடுத்துவிட முடியாத இயலாமையினால் வாழும் பல்லாயிரம் கோடிப் பெண்களில் அவளும் ஒருத்திதானே. உடுத்தவும் சாப்பிடவும் தானே உழைக்கிறோம் என்ற தெளிவுடைய, கதையில் வரும் எதிர் வீட்டு ரஞ்சிதம்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.
      சாயாவால் முடிந்தது தீபாவளிக்கு பட்டு தான் வேண்டும் என வலுக்கட்டாயமாக அவனுக்கு செலவு வைப்பது ஒன்றுதான். பெரிய பழி தீர்த்த நிம்மதி அதில். தம் ஒட்டுமொத்த அடிமைத் தனத்தையும் பெண்கள் இந்தப் புடவை நகைகளில் தானே புதுப்பித்துக் கொள்கிறார்கள்!
      எதிர்வீட்டு மோகன் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுகிறான்.  தன் அப்பா சுபாவமறிந்தவன், தன் சேமிப்பான இரண்டு பத்து காசுகளைப் பெருக்கி தானும் இருசக்கர சைக்கிள் வாங்கிக் கொள்வேன் எனத்திட்டமிடுகிறான் மகன். அடம் பிடிக்கும் சிறுபிள்ளைத்தனம் கூட இல்லாத  சேகரைப்  பார்த்து வெம்பும் சாயாவின் மனவோட்டங்கள் நம்மையும் பாதிக்கின்றன.
    நண்பன் வீட்டுப் பூணூலுக்கு மொய் வைக்காமல் இரண்டு வேளை சாப்பிட விழையும் பாஸ்கரன், மகனின் சைக்கிள் செலவை மாயாவின் தையல் கூலி சேமிப்பில் வாங்கித் தரச் சொல்லி ஏளனம் செய்வது கேவலத்தின் உச்சமாகிறது. அவனின் கஞ்சத் தனம் தன் பண மோகத்தை பெருக்கி விட்டதோ எனப் புழுங்கும் மாயா, தாராளமாகக் கண்ணீர் விடுகிறாள் இருட்டின் துணையில்.
       அந்நிலையிலும் தன்னை உறவுக்கு அழைக்கும் கணவனை என்ன செய்ய முடிகிறது அவளால்?
அவள் மன அரங்கில் போடும் சட்டம் போல கல்யாணத்துக்கு  முன் காம ஸூத்ரா பயின்றாலும் நிஜ வாழ்வில் பெண்ணானவள் அந்தரங்க தருணங்களில் தன் கண்ணியம் குறையாமல் விருப்பு வெறுப்புகளைப் பிரகடனப் படுத்த இயலாத எழுபதுகளில் எழுதப்பட்ட இக் கதையில் சாயா சொல்வது போல் இப்படி எண்ணியதற்கே செம்மண் தேய்த்துக் குளித்து பவித்திரமாக வேண்டியிருக்கும்!
      கல்யாணமான புதிதில் தோழி ஒருத்திக்கு சிறு பண உதவி செய்ததால், அவளின் பிறந்தகத்திலிருந்து வரும் கடிதத்தைக் கூட பாஸ்கரன் பிரித்து படித்த பின் தான் தருகிறான். சாயாவின் தன்மானம் வெகுவாக அடிவாங்குகிறது. ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டுவிட்டால் பெண்ணானவள் தனக்கென்ற ஒரு மனசோ அதில் உணர்வுகளோ இல்லாமல் அவனின் கைப்பாவையாக இருந்தால் தான் பதிவிரதையாக முடியுமென்பது எழுதப்படாத சட்டமாக அல்லவா ஆகிப் போனது!         
            ‘என்னுடையது’ என்று சொந்தம் கொண்டாடும் உரிமையெல்லாம் கல்யாணத்துக்கு முன் இருந்திருக்கலாம். இனியெல்லாம், ‘என்னுடையது மாதிரி’.
     தங்கையைப் பெண்பார்க்க வருவதாகவும் அன்று சாயாவையும் வரச் சொல்லி கடிதம் எழுதியிருக்கிறாள் அம்மா. போக்குவரத்து செலவைக் காட்டி பயணம் மறுக்கப் படும்போது இவனை விட்டொழித்து ஏதாவதொரு பள்ளியில் வேலை தேடிக்கொண்டு, இருக்கும் தையல் மிஷினில் எஞ்சிய நேரம் கூலிக்குத் தைத்துக் கொண்டு மகனுடன் அக்கடாவென வாழ்ந்திட மாட்டோமா என்ற ஆதங்கம் பெருகி வெடிக்கிறது அவளுள். கணநேரத்தில் நிகழுலகம் திரும்பும் அவளுக்கு அந்தக் கற்பனை செய்யுமளவு தனக்கு தைரியம் வந்ததா என்று வியக்கிறாள். சரசரவென அவள் விலாவில் முளைத்த சிறகு சடசடவென முறிந்து விழுகிறது.
             கதை முடியவில்லை.
     திருமணம், தாம்பத்தியம், பெண்ணின் பெருமை பற்றிய கற்பிதம் போன்ற பாரம்பரியப் பெருமைகளை எல்லாம் கேள்விக்கு உட்படுத்தி கதாசிரியர் எழுதிச் செல்வது ஒவ்வொரு சொல்லும் அப்பட்டமான உண்மை.
    இறுதியில் அம்மா வீட்டுக்குத் தங்கையைப் பெண் பார்க்கும் படலத்துக்காக அடுக்களை சேமிப்பு இரண்டு ரூபாய் சொச்சத்தை எடுத்துக் கொண்டு மகன் தேர்ந்தெடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு  கிளம்புகிற சாயாவுக்கு எதிர்வீட்டிலிருந்து ஒரு ரோஜாப்பூ கேட்டு வாங்கி வந்து தருகிறான் சேகர்.
     அப்பாவின் உடைமைப் பொருளாக இருக்கும் அம்மா சாயாவின்  திருமணப் புகைப்படங்களை பார்த்து மனம் வெதும்பி அடுக்களை மூலையில் சோகம் ததும்ப அமர்ந்திருந்த காட்சி நினைவில் ஓட, தங்கையின் வரன் பற்றி விசாரிக்கிறாள் சாயா. தனக்குப் பொருத்தமானவனை தங்கை  தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி என்றாலும் தன் நிலைமை அப்பட்டமாக முகத்தில் அறைகிறது. அப்போது தான் சாயா தன் தவறை உணர்கிறாள்.
          காலம் கடந்த தெளிவு. ‘கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்’ என்று இதுகாலம் வாழ்ந்து கழித்திருந்தாலும், மீள  முடியா சூனியத்தில் தானிருப்பது புரிந்த கணம் அது.
     ஐஸ் கிரீம் வாங்கக் காசு கேட்டு அடுக்களை வரும் சேகர் மேல் எரிந்து விழ வைக்கிற இயலாமை. சாயாவின் அம்மா நிலைமை புரிந்து, தாயின் சிடுசிடுப்பில் வாடிப்போன சேகருக்கு பணம் தந்து ‘சிநேகிதர்களுக்கும் வாங்கித் தந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு வந்து ஜில் என்ற கையால் பாட்டியை தொடுவாயாம்’ எனக் குழந்தையை மனம் தேற்றும் தருணம் குழந்தைகளுக்கும் பாட்டிகளுக்குமான பாசப் பிணைப்பின் உச்ச கட்டம்.  தன் மனைவியிடம் அதீத அதிகாரம் காட்டும், அடிமைப்படுத்தும் ஒவ்வொரு ஆணும் தாயென்றும், பாட்டி என்றும், சகோதரி என்றும்  பெண்ணினத்தின் பேரன்பைப் பெற்றே வளர்பவர்கள் தானே!
      திருமணமாகி பாஸ்கரின் கருமித்தனம் பற்றி உணர்ந்த சாயா, திருத்திப் பார்க்கலாம் என்ற முனைப்பில் பலதும் சொல்லியும் செய்தும் பார்த்ததுண்டு. பேசாமல் கூட இருந்ததுண்டு. அவளே வலியப் போய். ஐஞ்சு நாளா பேசலை ஏன் தெரியுமா? என்றால், ‘பேசலையா என்ன?’ என்ற சொல்லடியால் வாசிக்கும் நாமும் அவனை முற்றாக உணர்கிறோம். ஆம். சின்னவயசுக் கஷ்டங்கள் மாத்திரம் அவனை இப்படியாக்கவில்லை. ‘தான் ஆண்; ஆளப் பிறந்தவன்!’ என்ற அகந்தையும் தான்.
      விளைவாக அவர்களுள் கணவன் மனைவி என்ற ரசவாதமே இல்லாமல் ஒரு மூன்றாம் மனிதனுக்கு செய்யும் உபசாரமாய் அவள் செயல்கள். ‘பக்கத்து வீட்டு நாய் மழையில் நனைந்து வந்தால் காட்டும் இரக்கம்’ என்ற வார்த்தைப் பிரயோகம் ஆணவ அதிகாரத்துக்குக் கிடைக்கும் பிரதிபலனை வெளிச்சமிடுகிறது.
      தன்னை ‘அழகா இருக்கேம்மா’ என்ற மகனின் சொற்கள், ஒருநாளும் பாஸ்கரன் வாயால் கேட்காத  சாயாவின் மனசின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது. அந்தரங்கமான தருணங்களில் கூட அவன் தன் தேவைகளுக்கானவள் என்ற உரிமையில் மட்டுமே வாழ்ந்திருக்கிறான்.
      பூச்செண்டு போல் நாலைந்து குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் ஆசைப்பட்டு பத்து வருடங்களாக சேகரை மட்டுமே பெற்றிருந்த சாயா, தங்கை பெண்பார்க்கப்படும் நாளில் தன் வயிற்றின் புதுவரவை உணர்கிறாள். கொல்லைப்புற துவைக்கும் கல்லில் ஆயாசமாக அமர்ந்த அவளை ஆட்கொண்ட மயக்கமும் அதிலிருந்து அவள் விழித்தெழுவதும் மிக நுட்பமாக, தத்ரூபமாக வர்ணிக்கப் படுகிறது. கதைக் களத்தில் இருக்கும் நாம் சாயாவாகவே மாறி விடுகிறோம். அர்த்தமற்ற இவ்வாழ்விலிருந்து விட்டு விடுதலையாக வேண்டுமென்ற எண்ணம் கூட இனிக் கூடாது என்று துடைத்துப் போடுகிறது காலக் குரூரம். அவளது நிராசைகளையும் ஏக்கங்களையும் தன் தோளிலும் மடியிலும் ஏந்திய அம்மா தேற்றி அனுப்புகிறாள்.
              கதை முடியவில்லை.
      சாயாவின் கண்ணீர் நனைத்த தன் தோள்புறத்தை தொட்டுப் பார்த்து, ‘இந்த ஈரம் பலர் நெஞ்சில் இருந்தால் என் சாயா இப்படி கலங்க வேண்டாமே’ என்று கசியும் அம்மாவின் வாழ்க்கைக் கதையிலும் பெருகிய கண்ணீர் நம் முன் ஆறாய் ஓடத் தொடங்குகிறது தன் வீடு வரும்வரை சாயாவின் எண்ண ஓட்டத்தில்!
      அம்மா வீட்டு மூலையில் தூசி படிந்த வீணை பற்றிய கதை அது. ‘உன்னுடையது எல்லாம் என் ஒருவனுக்கே சொந்தம்’ என்ற ஹரிகாம்போதிக்கும் மோகனத்துக்கும் வித்தியாசம் புரியாத அப்பாவின் மூர்க்க சொல், அம்மாவை தாலியை அறுப்பது போல் வீணை தந்தியை அறுத்தெறிய வைத்தது.
மனசின் சுமையும் சேர, தளர்வாய் வீடு வரும் சாயா, அன்றிரவு தாய்மையின் பரவசம் துளியுமின்றி இன்னொரு வரவை பாஸ்கரன் பாணியில் சொன்னால், இன்னொரு செலவைப் பற்றிப் பிரகடனம் செய்கிறாள் காலில் இடரும் கல்லைத் தூக்கி எறியும் பாவனையில். சிறகொடிந்த பறவையாய் படுக்கையில் முடங்குகிறாள். சிறகுகள் உதிர்வது இயல்பு. அவை முறிவதும் ஒடிவதும்...?
கதை முடிகிறது.
      கதையோடு பயணித்த நாம் ஓ’வென்று பெருங்குரலெடுத்து அழுவதால் தீர்வதில்லை பெண்ணாய் பிறந்தால் படும் வேதனைகள். ஆயினும், அம்பை எனும் எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப் பட்டு மட்டுமிருந்த எனக்கு அவரது படைப்பு ஒன்றை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு இருவருக்குமிடையே ஒரு நட்பை, ஒத்த உணர்வை, சிந்தனைகளை கிளர்த்தக் காரணியாக ஆனது.

அடுத்து, ‘வெளிப்பாடு’ சிறுகதை பற்றி...
      
     ஒரு பேருந்து நிலையத்தில் துவங்குகிறது கதை. நிலையக் காட்சிகள், வர்ணனைகள் ஒரு திரைப்படக் காட்சி போல் கேவலின் உச்ச கட்ட ஒலிசெத்த நிலையில் ரெட்டை குச்சிப் பெண்ணின் பிளந்த வாயில் ‘ஃப்ரீஸ்’ ஆகி நிற்கிறது.
      சிதம்பரம் எனும் பெயருடையவன் அவளுக்கு உதவும் பொருட்டு காலை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்தது முதல் இப்போது அவளுக்குமாக டிக்கெட் வாங்க கண்டக்டரிடம் நிற்கிறான். பெண்ணாக இருந்தும் வேகமாக நடப்பதை வியப்பவன். பெட்டியை தூக்கி நடக்கவும், டிக்கெட் வாங்கவும் ஆணாகிய தான் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருப்பவன். அவனது ஊர்ப் பெண்கள் சர்வ சகஜமாக ஆற்றில் குளிப்பது போல் அவளால் முடியாது எனத் தெரிந்து, தனக்குத் தெரிந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.
      நாலே வரியில் தன் வாழ்க்கைக் கதையை சொல்லிவிட முடிகிறது அந்த வீட்டுப் பெண்ணால். வயது ஐம்பது ஆனாலும் அவளின் வெள்ளந்திப் பேச்சு அப்படியே இருக்கிறது. புகைப்படத்தில் பார்த்த கடலை நேரில் பார்க்கும் ஆசையைக் கூட கணவனின் ஒரு அறையில் விட்டவள். பதினாலு வயசில் கல்யாணம் கட்டியதிலிருந்து இன்று வரையான அவள் சுட்ட தோசை, இட்லி, வடை, இத்யாதிகள், வடித்துக் கொட்டிய அரிசி அளவு எல்லாம் கணக்கிட்டால் அப்பப்பா!
      இவள் வருகையின் நோக்கம் பெண்களைப் பற்றி எழுத என்று தெரிந்தவள், கேட்கிறாள் ஒரு கேள்வி...
‘பொம்பளைங்க பத்தி எளுத என்ன இருக்கு?’
      பஸ் டிக்கெட்டோடு வந்த சிதம்பரம் தனியாக அவள் போவதைப் பற்றி அக்கறைப் படுகிறான். நீங்க சொல்றது சரிதான் அம்பை. பாதுகாப்பும் ஒரு அடக்குமுறைதான்.
               போன வேலை முடிந்து இப்போது கணபதி வீட்டில் தங்கல். டெல்லிக்காரர்களுக்கு டீதான் பிடிக்குமென்று தெரிந்து வைத்திருக்கும் கணபதி தங்கையுடன் பழக வாய்ப்பு.
      எப்பவாவது திருவிழா, கோயில் என அண்ணன் அண்ணியுடன் வெளியே போக வாய்க்கும் அந்த தங்கைக்காரிக்கு விறுவிறுவென வேகமாக நடக்கும் ஒத்தையா எங்கும் போய்வரும் இவளைப் பார்த்து பெருவியப்பு. நல்ல கொணமானவனை கட்டிகிட்டு தெருவில் தினம் நடக்க, தானே புடவை பார்த்து வாங்க, ஓட்டலில் சாப்பிட, சினிமா பார்க்க, நிறைய ஊருக்குப் போக என கண் நிறைய கனவுகளின் பட்டியல் கொண்டவள். இவள் கிளம்பிய போது, தன் ஊரின் பெயர்பெற்ற அல்வாவை மறக்காமல் வாங்கித் தரும்படி அண்ணனுக்கு நினைவு படுத்துகிறாள் அந்தத் தங்கை. 
      அங்கே கையில் வாழையிலைப் பொட்டலத்துடன் வரும் சிதம்பரம் முதலில் குளித்துக் கிளம்பிய வீட்டு அக்கா, போகும் வழியில் சாப்பிடக் கொடுத்ததாகச் சொல்லிக் கொடுக்கிறான். கணபதி அல்வாவுடன் வருகிறார்.
      இரு பெண்களும் அத்தனைக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் வாழ்ந்தாலும் உற்சாகமாக இருக்கின்றனர். தமக்கு விதிக்கப்பட்டவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர். தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தும் தாங்கள் சார்ந்த ஆண்களுக்கு பரிபூரணமாக சமர்ப்பிக்க எந்தவொரு மனத்தடையும் அற்றிருக்கின்றனர்.
      எல்லாம் தாண்டி அவர்களால் யாரிடமும் அன்பும் பாசமும் காட்ட முடிகிறது. பெண் என்பதைத் தாண்டி ‘தாய்மை’ இழையோட அவர்களின் ஒவ்வொரு செயலும் பரிமளிக்கிறது. உலக உயிர்களுக்குப் பசியாற்றும் அன்னபூரணியின் அவதாரமாக ஒவ்வொரு பெண்ணும் இருக்கின்றனர். இவர்களை வைத்துப் பராமரிப்பதாக நினைத்துக்கொள்ளும் ஆண்களை ரட்சித்துக் காப்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பழக்கப்படுத்திய யானை பாகனுக்கு வசப்படுவதைப்போல் வாழ்கின்றனர்.
      
   அம்பையின் கதைகள், புதுமையாக, புரட்சியாக, பொதுவுடைமை சித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்த, அநீதிகளுக்கு எதிராக போராட, அக்கிரமக்காரர்களைத் தட்டிக் கேட்க எனப் பலவாறு இருந்தாலும், ஏதேனுமோர் வரிகளோ வார்த்தைகளோ என்னை துலக்கிக் கொள்ள உதவியதால் என்னவோ என் மனசுக்கு நெருக்கமாகவே இவ்விரு கதைகளும் அமைந்துள்ளன. இப்போது எங்கோ இருக்கும் அம்பையும் நானும் நெருங்கிய உறவாகிறோம் என்பது இலக்கியத்தின் அதியற்புத உன்னதம்.

நன்றி: வாசிக்க வாய்ப்பளித்த கிருஷ்ணப்ரியாவுக்கு.                                            4 கருத்துரைகள்:

  1. //எல்லாம் தாண்டி அவர்களால் யாரிடமும் அன்பும் பாசமும் காட்ட முடிகிறது. பெண் என்பதைத் தாண்டி ‘தாய்மை’ இழையோட அவர்களின் ஒவ்வொரு செயலும் பரிமளிக்கிறது. உலக உயிர்களுக்குப் பசியாற்றும் அன்னபூரணியின் அவதாரமாக ஒவ்வொரு பெண்ணும் இருக்கின்றனர்.//

    அருமையாக சொன்னீர்கள்.

    கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.

  1. @கோமதி அரசு
    மகிழ்வும் நன்றியும் சகோ.

  1. நல்லதொரு அறிமுகம் சகோ. நன்றி.

  1. அம்பையின் எழுத்துபற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதைப்படித்திருக்கிறேன். அவரது கதைபற்றிய தெளிவான விமர்சனம் இங்கு காணக்கிடைத்தது. நன்றி

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar