நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

'விளையும் பயிர்'

Wednesday, 10 December 2014
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ஊரென்றால் பிறந்த ஊர். குறியாமங்கலம்.

அரசர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட வகையில் (சதுர்வேதி மங்கலம்) 'குறிக்கப் படாமலே விடப்பட்ட ஊர்' என்ற பொருள் பொதிந்ததோ பெயர்க்காரணம்.... தெரியவில்லை.

புவனகிரியிலிருந்து ஐயப்பன் கோயிலை வளைந்து நெளிந்து சென்றால் இடைப்படும் பெரிய வாய்க்காலைப் பிடித்துக் கொண்டே செல்ல வேண்டியது தான்.  வலப் பக்கம் வாய்க்கால். இடப் பக்கம் வயல்வெளி. கரை புரளும் நீரோட்டமும் பச்சைப் பசேல் நெல் வயல்களும் பயணத்தை சுகமாக்கும்.


ரெண்டு மூணு கிலோ மீட்டருக்கு இப்படியேதான். பாதையோர குத்துச் செடிகளிலோ மரங்களிலோ கதிர் முற்றி காற்றில் சிலுசிலுத்துக் கிடக்கும் பயிர்களிலோ விதவிதமான பறவைகள் சிறகசைப்பதைப் பார்த்தபடி செல்வது கூடுதல் குதூகலம்!

கம்மாய்க்கட்டை பாலத்தில் வாய்க்காலுக்கு பிரியா விடை கொடுத்து திரும்பினால் ஒரு கிலோமீட்டரில் ஆயிபுரம். ('ஆயர் புரம்' ஆக இருந்திருக்கலாம். 'ஆயி' என்பது மகமாயியையும் குறிக்கலாம்) அடுத்த ஒரு கிலோ மீட்டரில் குறியாமங்கலம். பேருந்து வழித் தடத்திலிருந்து உள்ளுக்குள் ஒவ்வொரு ஊரும் சுமார் ஆயிரமாயிரம் வீடுகளைக் கொண்டது.

கம்மாய்க் கட்டையில் திரும்பாமல் வாய்க்காலோடு சென்றால் நேராக
கீழ மணக்குடி  போய்விடலாம். அதிலிருந்து தச்சக்காடு வழியாக கடலூர் மெயின் ரோட்டை பிடித்து விடலாம். கடலூருக்கு இப்படியொரு வழித்தடம் வர வாய்ப்பிருப்பதாக எங்க சின்ன வயசிலிருந்தே ஒரு பேச்சு உண்டு.
அண்ணாமலை நகர் - கீழ மணக்குடி வழித் தடமாக நான்கு பேருந்துகளால் இன்றுவரை ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறார்கள் எம் மக்கள்.

கீழ மணக்குடி பற்றி ஒரு சிறு குறிப்பு பார்த்து விட்டு பதிவுக்கான நாடியைப்  பார்க்கலாம்.

குடி என்பது கோயிலைக் குறிக்குமல்லவா ... இந்தக் குடியிலும் முற்காலத்தில்  ஒரு பெரிய பெருமாள் கோயில் இருந்திருக்க வேண்டும் என்பது எஞ்சியிருக்கும் துவஜஸ்தம்பத்தின் உச்சியை கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கும் போது தோன்றும். அதன் கீழ்ப் பகுதியின் நான்கு புறமும் செதுக்கப் பட்டிருக்கும் சக்கரத் தாழ்வார் , சங்கு சக்கரம், அனுமன் போன்றவற்றால் உறுதிப்படும். அருகில் உள்ள பெரிய குளத்தில் ஏழு கிணறுகள் உள்ளதாக செவிவழிச் செய்தி. முகலாயர்கள் படையெடுத்து வந்தபோது, சாமிகளை பாதுகாக்க (!) விழைந்த மக்கள் சிலைகளை எல்லாம் அக்கிணறுகளில் போட்டு விட்டதாகவும் பேசிக் கொள்வர்.

நாளடைவில் குளம் தூர் வாரப் பட்ட போதெல்லாம் கண்டெடுத்த சிலைகளை (சீதேவி,பூதேவி சமேத பெருமாள், சக்கரத்தாழ்வார், தேசிகர், என ஏராளமான சிலைகள் ) மக்களால் ஒரு ஒற்றை அறை கட்டி கொலுப்படி போல் ஒரே மேடையில் அடுக்கி, பராமரிக்கப் படுகிறது. எப்போது கோயில் புதுப்பிக்கப் படுமோ... அபய கரங்கள் ஓய்வின்றி அருள் பாலிக்குமோ...

அதிலும் குளத்தில் கண்டெடுக்கப்பட்டு,  அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் வீற்றிருக்கும் பிரம்மாண்டமான சிவலிங்கத்தைப் பார்க்கும் போது அதை செதுக்கியவரும் செதுக்கச் செய்தவரும் எந்தப் புண்ணியவானோ என்று எண்ணிக் கொள்வேன்.

வாழ்ந்து கெட்ட சோகம் புலப்படும் அச்சிலைகளில் .

சிலைகள் மட்டுமல்ல... மூன்று போகம் விளைந்த வயல்களின் கதியென்ன தெரியுமா இப்போது...?!

ஏர் ஓட்டி, டிராக்டர் ஓட்டி பயிர் செய்தவர்கள்; மாட்டு சாணத்தையும் கிடை ஆட்டுப் புழுக்கைகளையும் பசுந்தாள் உரங்களையும் மட்டுமே வயலுக்கு தீனியாக்கியவர்கள்;

மனித உழைப்பில் கதிர் அறுத்து கட்டு கட்டி களத்தில் கதிரடித்து கட்டுப்படியாகாமல் அறுவடை இயந்திரம் வைத்து அறுத்து நெல்லைக் குவித்தவர்கள்;

இயந்திரம் மூலமே நடவும் நட்டு, களைக் கொல்லிகளால்- இரசாயன உரங்களால்- நவீன முறைகளால் விழி பிதுங்கியவர்கள், பாசனத் திறப்பில் பங்கில்லாத வானம் பார்த்த வாய்க்காலாக மாறியதால் மற்றும் ஆட்கூலி ஆளை விழுங்குவதால்   ரியல் எஸ்டேட் மாயையில் பலியாகி விட்டனர்.

எஞ்சிய விளைநிலங்கள் எத்தனை காலம் தாங்குமோ தெரியவில்லை.

எட்டு பத்து குழந்தைகளுக்கு குறைவில்லாமல் பெற்றுக் கொண்ட காலத்தில் எந்த வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்தடையும் கூட்டுக் குடும்ப வாழ்விருந்த காலத்தில் வசிப்பிடங்களுக்காக இவ்வளவு நிலங்கள் வளைக்கப் பட்டதில்லை. ஒன்றுக்கு மேல் பெறத் தயங்கும் இக்காலத்தில் மனைகளும் வீடுகளும்  சொத்து மதிப்பின் உச்சத்தில் இருக்கின்றன.

எத்தனை வாங்கிச்  சேர்த்தாலும் ஆடி அடங்கிட ஆறடி போதுமென்ற நியதி மட்டும் இன்னும் மாறவில்லை. அங்கும் சொந்தம் கொண்டாட முடிந்தால் மயானங்களும் பல்கிப் பெருகிவிடும்.

வீடு வந்து விட்டது. மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பும். தினசரி கல்லூரி கிளம்பும் போது பேசும் வாடிக்கை அழைப்பு தான். பேச்சிடையே இருமியவனை  "மாத்திரை போட்டியா?" என்றேன். மாத்திரை விழுங்குவதை கூடியவரை தவிர்ப்பது அவன் வழக்கம். தூரமாய் விடுதியில் இருக்கும் பிள்ளை உடல்நலம் குறைந்தால் செய்வதறியாமல் 'மாத்திரையையாவது போடட்டும்' என்று வற்புறுத்துவது என் பழக்கம்.

"இல்லைம்மா, மணி அவன் அறையில் வளர்க்கும் கற்பூர வல்லி செடியின் இலை ரெண்டு கொடுத்து மென்னு சாப்பிடச் சொன்னான். நாளைக்கும் ரெண்டு சாப்பிடுவேன், குறைஞ்சிடும்" என்றான்!

விளைந்து வாழ்வளித்த நிலங்களை கட்டடங்களால் சமாதியாக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் கிடைத்த டப்பாவில் மண் நிரப்பி தன் கல்லூரி விடுதி அறையில் மணிகண்டன் ஒரு மூலிகை செடி வளர்த்துப் பயன்படுத்தவும்   அதை தன் நண்பனுக்கும் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது!

தன் அப்பா தாத்தாவிடமிருந்த உழவூக்கம் மட்டுமல்ல; சக மனிதனை நேசித்து பரிவு காட்டவும் மரபணுவில் மணி கண்டனுக்குள்ளும் எஞ்சியிருக்கிறது! தன் பரம்பரை நிலத்தை மணி நிச்சயம் விலைநிலமாக மாற்றாமல் விளைநிலமாகவே நிலைப்படுத்திக் கொள்ள சாத்தியம் இருக்கிறது.

ஒரு விவசாயியின் மகளான  நான் பெருமிதமடைந்தேன் மணியை எண்ணி!

வீட்டு வாசலில் என்னை எதிர்கொண்டு வரவேற்ற  அக்கா மகன் கணேஷ் குமாரும் இயற்கையை- விவசாயத்தை -சக மனிதர்களை நேசிப்பதால் தான், தன் எம்.டெக். படிப்புக்கு ஏ .சி. அறையில் வேலை செய்து கைநிறைய சம்பளம் வாங்க விரும்பாமல்  இயற்கை உரங்களை தயாரித்து விற்பனையும் செய்வதில்  முனைப்பாய் இருக்கிறான்.

சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றி அங்கலாய்ப்பதை விட அவரவரால் ஆனதைச்  செய்ய விழைவது தானே ஆரோக்கியமானது!

கணேஷ் போல மணி போல 'விளையும் பயிர்'கள் நமது நம்பிக்கை முனைகள்.


10 கருத்துரைகள்:

 1. பழமையில் ஆர்வம் கொண்ட மணியும் புதுமையில் முனைப்பு காட்டும் கணேஷும் நிச்சயம் அருமையான விளையும் பயிர்கள் தான்!!

 1. Durai A said...:

  ஒரு போட்டோ ஒரே ஒரு போட்டோ பிடிச்சோ பிடிக்கச்சொல்லியோ போட்டிருக்கலாமே்? உங்க ஊரையும் ஊருக்கான வாய்க்கால் வரப்பு பாதையையும் பாத்திருப்பமே?

  குடும்பம் சிறுத்தும் வீடுகள் பெருத்தும் வருவதன் முரண் எதைத் தேடுகிறோம் என்று யோசிக்க வைக்கிறது.

 1. கணேஷ் அவர்களின் எண்ணங்கள் மேலும் சிறக்கட்டும்...

 1. Ramani S said...:

  கணேஷ் அவர்களின் சீரிய முயற்சி
  வெற்றி பேற உச்சம தொட
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

 1. //ஒரு விவசாயியின் மகளான நான் பெருமிதமடைந்தேன் மணியை எண்ணி!//
  //சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றி அங்கலாய்ப்பதை விட அவரவரால் ஆனதைச் செய்ய விழைவது தானே ஆரோக்கியமானது!

  கணேஷ் போல மணி போல 'விளையும் பயிர்'கள் நமது நம்பிக்கை முனைகள்// அருமை நிலா.

 1. எட்டு பத்து குழந்தைகளுக்கு குறைவில்லாமல் பெற்றுக் கொண்ட காலத்தில் எந்த வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்தடையும் கூட்டுக் குடும்ப வாழ்விருந்த காலத்தில் வசிப்பிடங்களுக்காக இவ்வளவு நிலங்கள் வளைக்கப் பட்டதில்லை.//

  ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை.

  கணேஷ் போல மணி போல 'விளையும் பயிர்'கள் நமது நம்பிக்கை முனைகள்.
  நம்பிக்கை முனைகளுக்கு வாழ்த்துக்கள்.

 1. கணேஷ் குமார் போன்று பலர் வந்தால் தான் இந்த சோகம் தீரும்.....

  படம் எடுத்திருக்கலாமே உங்கள் ஊரை....

 1. அழகான விவரணைகளுடன், அருமையான கட்டுரை நிலா...
  இப்போது ஏசி ரூம்களில் அமர்ந்து வேலை செய்வதை விடவும், கிராமங்களில் இருந்து, உயிர்ப்பான வேலை செய்வதை விரும்பும் இளைய தலைமுறையினர் அதிகரித்து வருவது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
  அதை உங்களைப் போல் சிலர் வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இன்னும் ஆக்கபூர்வமான காரியம்...
  வாழ்த்துக்கள் உங்களுக்கும் அந்த மணி மற்றும் கணேஷுக்கும்

 1. ADHI VENKAT said...:

  இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

  http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_4.html

  முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.

 1. rajendran said...:

  மனதிற்கு இதமான கட்டுரை. மனிதமும், விவசாயமும் மாண்டு போகாது. ஆனால் அதற்கு நாமும் நம் சந்ததியினரும் கொடுக்கவேண்டிய விலை மிக அதிகமாக இருக்கும்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar